Published:Updated:

இடம்... பொருள்... ஆவல்: தங்கச்சாலை - சென்னையில் பணம் அச்சடிக்கப்பட்ட தெரு இதுதான்!

தங்கச்சாலை தெரு
தங்கச்சாலை தெரு

சென்னை சென்ட்ரலில் தொடங்கி, பழைய ஜெயில் ரோட்டில் முடியும் இந்த இரண்டரை கிலோ மீட்டர் தெரு, சென்னையின் பொருளாதார, வணிக, கலாசார, ஆன்மிக மையமாக விளங்கியது.

சென்னையின் ஒவ்வொரு தெருவிலும் வரலாறு தளும்பத் தளும்ப நிறைந்திருக்கிறது. மகாத்மா காந்தி நடந்த தெரு; வள்ளலார் வாழ்ந்த தெரு; மவுண்ட் பேட்டன் உலவிய தெரு; மன்றோ நடந்த தெரு; ராபர்ட் கிளைவ் வந்திறங்கிய தெருவென சென்னையின் பல தெருக்களில் பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்திருக்கின்றன. காலத்தின் வேகத்தில், பழைமையின் பல சுவடுகளை உதிர்த்து மெல்ல மெல்ல புத்தியல்பை உடுத்திக்கொண்டிருக்கிறது சென்னை.

மெட்ராஸ் வரலாறு
மெட்ராஸ் வரலாறு

அப்படி சென்னையின் கறுப்பு-வெள்ளை வரலாற்றில் அழுந்தத் தடம் பதித்திருக்கும் ஒரு தெருதான் மிண்ட் ஸ்ட்ரீட் என்றழைக்கப்படும் தங்கச்சாலைத் தெரு. சென்னையை ஆளுமை செய்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் நாணயம் அச்சடிக்கும் கூடம் இந்தத் தெருவில்தான் இயங்கியது. இங்கு அச்சடிக்கப்பட்ட பணத்தையும் நாணயங்களையும்தான் இந்திய நிலப்பரப்பெங்கும் பயன்படுத்தியது கிழக்கிந்திய கம்பெனி.

சென்னை சென்ட்ரலில் தொடங்கி, பழைய ஜெயில் ரோட்டில் முடியும் இந்த இரண்டரை கிலோ மீட்டர் தெரு, சென்னையின் பொருளாதார, வணிக, கலாசார, ஆன்மிக மையமாக விளங்கியது. எழும்பூர் நதியின் கரையில் இருந்த இந்தத் தெருவில் வெள்ளையர்கள், சலவைத்தொழிலாளிகளைக் குடியமர்த்தி 'வண்ணார் சாலை' என்று பெயரிட்டார்கள். ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளின் ஆடைகளை வெளுப்பதே இந்தச் சலவைத் தொழிலாளிகளின் பிரதான பணி. காலப்போக்கில் துணி ஏற்றுமதி தொழில் வளர, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நெசவாளர்களும் துணிகளுக்கு சாயமேற்றும் தொழிலாளிகளும் இந்தத் தெருவை ஒட்டிய பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள்.

வண்ணார்
வண்ணார்

யூதர்களும் இந்தத் தெருவில் வாழ்ந்ததற்கான சான்றாக சில கல்லறைகள் இங்கிருந்தன. அந்தத் தடயத்தின்மேல்தான் இன்றைக்கு சென்னை நடுநிலைப்பள்ளி இயங்கிக்கொண்டிருக்கிறது. விஜயநகர நாயக்கர்களின் பிரதிநிதிகள், குஜராத்திகள், மார்வாரிகள் எனப் பல்வேறு சமூக மக்கள் இந்தத் தெருவில் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் பலமொழிகள் ஒலிக்கும் சமத்துவ தெருவாக இருக்கிறது தங்கச்சாலை.

17ம் நூற்றாண்டில் விஜயநகர நாயக்கர்களின் பிரதிநிதி வெங்கடாத்ரி நாயக்கரின் ஆளுமையில் இருந்தது சென்னை. விஷ்ணுவின் வராக அவதாரத்தைத் தாங்கி வெளியான விஜயநகர தங்க வராகன்களே அப்போது புழக்கத்தில் இருந்தன. அத்தருணத்தில் இந்நகருக்கு வந்திறங்கிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிகக்குழு, சென்னையின் நிலப்பரப்பை வணிகத்துக்கென்று விலைகொடுத்து வாங்கியது. அதோடு, தாங்களே நாணயம் அச்சிட்டுக்கொள்ளும் உரிமையையும் பெற்றது.

பழங்கால சென்னை
பழங்கால சென்னை
மெல்ல மெல்ல வணிகம் விரிய, சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ஒரு நாணயத் தொழிற்சாலையைத் தொடங்கியது கிழக்கிந்திய கம்பெனி. அங்கு தயாரிக்கப்பட்ட தங்கப்பணங்களையும், வெள்ளிப்பணங்களையும் புழக்கத்துக்குக் கொண்டுவந்து பொருளாதார ஆளுமையை விரிவுசெய்தார்கள் வெள்ளையர்கள்.

படிப்படியாக நிலப்பரப்புகளை தங்கள் வணிக வளையத்துக்குள் வீழ்த்தி பரவலாக்கிய வெள்ளையர்களுக்கு நாணயங்களின் தேவை அதிகரித்தது. 'எல்லா நாணயத் தொழிற்சாலைகளையும் ஒருங்கிணைந்து வண்ணார் சாலையில் பெரிய அளவில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கலாம்' என்று யோசனை சொன்னார் அப்போது பொருளாதார நிர்வாகத்தைக் கவனித்த டாக்டர் பானிஸ்டர். அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்த நாணயத் தொழிற்சாலைகளையும் வண்ணார் சாலைக்கு மாற்றியது கிழக்கிந்திய கம்பெனி. அணா, பைசா, ரூபாய் என எல்லாவிதமான நாணயங்களும் பணத்தாள்களும் இந்தத் தொழிற்சாலைகளில் அச்சடிக்கப்பட்டன. வண்ணார்சாலை மெல்ல மெல்ல தங்கச்சாலையாக மாறியது.

தங்கச்சாலை
தங்கச்சாலை

இந்திய நிலப்பரப்பெங்கும் தங்கள் ஆட்சிப்பரப்பை விரித்த கிழக்கிந்திய கம்பெனி பிறகு பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நாணயத் தொழிற்சாலைகளை தொடங்கியது. அதன்பிறகு சென்னை நாணயச் சாலையின் பயன்பாடு தேய ஆரம்பித்தது. 1869ம் ஆண்டு இந்த தொழிற்சாலையை மூடிவிட்டு ஆவணங்கள் அச்சடிக்கும் அச்சகமாக மாற்றியது கிழக்கிந்திய கம்பெனி. பிற்காலத்தில், தமிழக அரசு அதை தனது அதிகாரப்பூர்வ அச்சகமாக மாற்றிக்கொண்டது. இன்றும் பட்ஜெட் முதல் கடித உறைகள் வரை அனைத்தையும் அச்சடித்துத்தருவது இந்த அச்சகம்தான்.

பணம் அச்சடிக்கும் தங்கச்சாலை காலப்போக்கில் அச்சகத் தொழிலின் மையமாக மாறியது. ஈழத்து அறிஞர் ஆறுமுக நாவலரின் நாவல வித்யானுபால அச்சகம் இந்தத் தெருவில்தான் இருந்தது. திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற பல இலக்கியங்களை இந்த அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார் நாவலர்.

1900-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சாஸ்திர சஞ்சீவிநி அச்சகம் இன்றும் அந்தப் பெயரைத்தாங்கி தங்கச்சாலைத் தெருவில் நிற்கிறது. 1880-களில் 'தி ஹிந்து' பத்திரிகை வாரம் மூன்று முறை வந்துகொண்டிருந்தபோது, தங்கச்சாலையில்தான் அச்சடிக்கப்பட்டது. அன்று பிரபலமாக இருந்த நூற்றுக்கணக்கான தமிழ், தெலுங்கு பருவ இதழ்கள் இந்தத் தெருவில் அச்சாகியே தென்னகம் முழுவதும் சென்று சேர்ந்தன.

நாணய தொழிற்சாலை, அச்சகம் என முகம் தரித்த தங்கச்சாலைக்கு கலைமுகம் ஒன்றும் உண்டு. வணிகத்துக்காக மும்பை சென்றபோது, அங்கு நடந்த மேடை நாடகங்களைக் கண்டு வியந்த பொன்னேரி முருகேச முதலியார், மிண்ட் பகுதியில் உள்ள புனித சேவியர் தெருவில் இருந்த தன் பல்பொருள் அங்காடியை நாடக அரங்காக மாற்றி மெஜஸ்டிக் தியேட்டர் என்று பெயரிட்டார். அந்த அரங்கில் எஸ்.ஜி.கிட்டப்பா தொடங்கி, டி.கே.சண்முகம் சகோதரர்கள், காளி என்.ரத்னம் வரை பல முன்னோடி கலைஞர்கள் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

Kalidas
Kalidas

பிறகு சலனப் படங்கள் அறிமுகமானபோது, மும்பையிலிருந்து திரையிடல் கருவிகளை வாங்கிவந்த முருகேச முதலியார் நாடக அரங்கை திரையரங்காக மாற்றினார். படம் பார்க்க கட்டுக்கடுங்காத கூட்டம் அலைமோத, மெஜஸ்டிக் திரையரங்க வளாகத்திலேயே பிரின்ஸ் என்ற புதிய திரையரங்கத்தையும் கட்டினார் முருகேச முதலியார். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு அதற்கு உரிமம் தர மறுத்துவிட்டதால், தொடங்கிய வருடத்திலேயே மூடப்பட்டது. 1931-ல் சினிமா பேசத் தொடங்கியபோது மெஜஸ்டிக் திரையரங்கம், கினிமா சென்ட்ரல் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆரா, தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் தொடங்கி பல திரைப்படங்களை காட்சிப்படுத்திய கினிமா சென்ட்ரல் மதராசப்பட்டினத்தின் கனவுக்கூடங்களில் ஒன்றாக மாறிப்போனது. முருகேச முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் பரமசிவ முதலியார், தன் தந்தையின் நினைவாக முருகன் டாக்கீஸ் என கினிமா சென்ட்ரலுக்கு பெயர் மாற்றினார்.

மார்வாரிகள், குஜராத்திகள், ஜைனர்கள் என பல்வேறு இனக்குழுக்கள் வசித்த மிண்ட் தெருவில் கோயில்களும் பஜனை மடங்களும் நிறைந்திருந்தன. இன்றும் இருக்கின்றன. தங்கச்சாலையின் வரலாற்று அடையாளமாக அதன் வடக்கு எல்லையில் நிற்கிறது பழைமையான மணிக்கூண்டு. 60 அடி உயரமுள்ள இந்த மணிக்கூண்டு, 1948-இல் அப்போதைய மேயர் யு.கிருஷ்ணா ராவால் திறக்கப்பட்டது. இயங்காமல் இப்போது தூசி மண்டிக்கிடக்கும் இந்த மணிக்கூண்டில் தங்கச்சாலையின் வரலாறு உறைந்து கிடக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு