Published:Updated:

Motivation Story: பில் ஷூமேக்கர் - ஆயிரம் வெற்றிகள் கற்றுத்தராத பாடத்தைக் கற்றுத்தந்த ஒரு தோல்வி!

பில் ஷூமேக்கர்

அன்றைய பந்தயத்தில் இருவரின் குதிரைகளும் மைதானத்தில் புழுதியைக் கிளப்பியபடி பறந்தன. இருவரும் சரிசமான இடைவெளியில் குதிரைகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். சிலர் `இரண்டு குதிரைகளுமே முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

Motivation Story: பில் ஷூமேக்கர் - ஆயிரம் வெற்றிகள் கற்றுத்தராத பாடத்தைக் கற்றுத்தந்த ஒரு தோல்வி!

அன்றைய பந்தயத்தில் இருவரின் குதிரைகளும் மைதானத்தில் புழுதியைக் கிளப்பியபடி பறந்தன. இருவரும் சரிசமான இடைவெளியில் குதிரைகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். சிலர் `இரண்டு குதிரைகளுமே முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

Published:Updated:
பில் ஷூமேக்கர்
`கவனமா இருந்துக்கப்பா...’, `ஜாக்கிரதை...’, `பத்திரம்...’ இவற்றில் ஒன்றை யாரேனும் ஒருவர் சொல்வது தினமும் நம் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த சாதாரண வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. நம்மில் பலரும் அதை ஆழமாக உணர்ந்துகொள்வதில்லை. பல தோல்விகளுக்கும், இழப்புகளுக்கும் முக்கியக் காரணமே கவனமின்மைதான்.

கவனக்குறைவால், பல உயிர்களை பலி வாங்கும் சாலை விபத்துகள் நிகழ்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். 58 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இரவில் நெடுஞ்சாலையில் விரையும் பேருந்து ஓட்டுநர் லேசாக கண்ணசந்தால் ஏற்படும் விளைவை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பாடத்தில் கவனம் குவிக்காத மாணவனால், தேர்வில் ஜொலிக்க முடியாது; எத்தனை பெரிய ஆசிரியர் டியூஷன் எடுத்தாலும் அவனால் தேற முடியாது. எந்தத் தொழிலாக இருந்தாலும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, மார்கெட் நிலவரம் என்ன, வாடிக்கையாளரின் நாடித்துடிப்பு இவற்றையெல்லாம் கவனிக்கவில்லையென்றால் அந்தத் தொழிலே முடங்கிப்போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு ஏன்... கவனக்குறைவோடு சமைத்து, அரை டீஸ்பூன் உப்பு அதிகமானால்கூட குழம்பை நம்மால் ருசிக்க முடியாது.

 பில் ஷூமேக்கர்
பில் ஷூமேக்கர்

`மற்றவர்களின் கவனம் நம்மீது திரும்ப வேண்டும்’ என்று நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது காதையும் கண்களையும் திறந்துவைத்துக்கொண்டு, எதையும் கூர்மையாக அவதானிப்பதுதான். `Attention’ என ஆங்கிலத்தில் அறியப்படும் கவனம் நம் எல்லோருக்குமே முக்கியமானது. விமான நிலையமோ, ரயில் நிலையமோ, பெரிய பேருந்து நிலையமோ... `யுவர் கைண்ட் அட்டென்ஷன் ப்ளீஸ்...’ என்கிற அறிவிப்பைக் கேள்விப்பட்டிருப்போம். பள்ளிகளிலும், காவல்துறையிலும், ராணுவத்திலும் பரேடு, கூட்டம் போன்ற நிகழ்வுகளில் `அட்டேன்ஷன்...’ என்கிற கட்டளை உரத்து ஒலிப்பதையும் பங்கேற்பாளர்கள் நிமிர்ந்து நின்று அடுத்த கட்டளையைக் கேட்கத் தயாராவதையும் பார்த்திருப்போம். ஆக, கவனம் மிக முக்கியம்.

எதிலும் கவனமாக இருப்பவர்கள், எந்த விஷயத்திலும் சறுக்குவதே இல்லை. கவனத்தை ஒன்றில் குவியவைப்பதின் உச்சம்தான் தியானம் என்கிறார்கள் ஞானிகள். இன்றைக்கு உலகம் முழுக்க `மெடிட்டேஷன்’ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதன் தேவையை, அவசியத்தை எல்லோரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். மேற்படிப்புக்காகவோ, வேலை நிமித்தமோ வெளியூர் செல்லும் பிள்ளைக்கும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போகும் பெண்ணுக்கும் பெற்றோர் அறிவுறுத்தும் வாக்கியம்... ``கவனமாக இருந்துக்கப்பா...’’ என்பதுதான். ஒரு நொடி கவனக்குறைவு எப்பேர்ப்பட்ட தோல்வியை ஏற்படுத்தும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. பிரபல பந்தயக்குதிரை வீரர் (Jockey), பில் ஷூமேக்கர் (Bill Shoemaker) வாழ்வில் நடந்த சம்பவம், இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இவரை `வில்லி’, `தி ஷூ’, `பில்’ என்றெல்லாம் செல்லப் பெயரில் அழைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஃபேன்ஸ் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தவர் பில் ஷூ மேக்கர். பிறக்கும்போது சராசரி அளவைவிட குட்டிக் குழந்தையாக இருந்தார் பில். ``நைட்டு வரைக்கும் குழந்தை உயிர் பிழைச்சிருக்கறதே கஷ்டம்’’ என்று மருத்துவர்களும் கைவிரித்தார்கள். அவன் (Oven) மேல் ஒரு ஷூ பாக்ஸை வைத்து, அதற்கு மேல் குழந்தையைக் கிடத்தி, உடம்பை லேசாகக் கைகளால் வருடி சூடாக்கி எப்படியோ பில்லை பிழைக்க வைத்துவிட்டார்கள் அவரின் பெற்றோர். ஆனால் வளர்ச்சி அதிகமில்லை. இளைஞராக வளர்ந்த பிறகும்கூட அவரின் உயரம் 4 அடி, 10 இன்ச்சுகள்தான். ஆனால், அந்த உடல்வாகுதான் பல வெற்றிகளைக் குவிக்கக் காரணமாக இருந்தது என்று பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

Jayne Mansfield with jockeys Johnny Longden, Eddie Arcaro and Willie Shoemaker at Jockeys' Ball in Los Angeles, Calif., 1957
Jayne Mansfield with jockeys Johnny Longden, Eddie Arcaro and Willie Shoemaker at Jockeys' Ball in Los Angeles, Calif., 1957

ஆதிகாலம் தொட்டு ஆப்பிள் ஐபோன் காலமான இன்றுவரை குதிரைச் சவாரியை விரும்பாத இளைஞர்கள் இருக்க முடியாது. குதிரையில் ஏறி விரைவதே ஒரு சாகசம்தான். உலகம் முழுக்க குதிரைப் பந்தயங்கள் பணம் புழங்கும் ஒரு விளையாட்டாக மாறியிருந்தாலும், நிமிடத்துக்கு நிமிடம் குதிரைகள் மைதானத்தில் பறப்பதைப் பார்ப்பதே பரவச அனுபவம்தான். அதைப் பார்த்து எழும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரமே இதற்கு சான்று. பில்லுக்கும் குதிரைச் சவாரி பிடிக்கும். குதிரையில் ஏறி ஒரு போர்வீரனைப்போல் கண்மண் தெரியாமல் சவாரி செய்வது பிடிக்கும். அந்த ஆர்வம், டீன் ஏஜ் பருவத்திலேயே அவரை ஒரு பந்தயக்குதிரை வீரனாக உருவாக்கியது. சதா குதிரைகளோடும் மைதானத்திலும் தவம்கிடந்தார். 1949, மார்ச் 19. அன்றுதான் குதிரை ஜாக்கியாக அவர் கலந்துகொண்ட முதல் பந்தயம் நிகழ்ந்தது. அதில் வெற்றி. அதற்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான குதிரைப் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் கோப்பைகளையும் அள்ளியிருக்கிறார். ஒரு பந்தயக்குதிரை வீரராக அவர் நிகழ்த்திய சாதனை மலைக்கவைப்பது. ஆனால், அவரும் ஒரு போட்டியில் தோற்க நேர்ந்தது.

உலக அளவில் பிரபலமான குதிரைப் பந்தயம் அமெரிக்காவின் லூயிஸ்வில்லியில் நடைபெறும் கென்டகி டெர்பி (Kentucky Derby). ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அதில் நான்கு முறை வெற்றியைக் குவித்திருந்தாலும், ஒரே ஒரு முறை தோல்வியைத் தழுவினார் பில். அது அவருக்கு வாழ்நாளிலேயே மறக்க முடியாத அனுபவம். 1957... கென்டகி டெர்பி குதிரைப் பந்தயம் நடந்தது. அன்றைக்கு அந்தப் பந்தயத்தைப் பார்க்கிற ஒவ்வொருவருக்குமே தெரியும்... இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டி என்பது. ஒருவர் பில் ஷூமேக்கர். இன்னொருவர், பில் ஹார்டேக் (Bill Hartac).
பில் ஹார்டேக்
பில் ஹார்டேக்

அன்றைய பந்தயத்தில் இருவரின் குதிரைகளும் மைதானத்தில் புழுதியைக் கிளப்பியபடி பறந்தன. இருவரும் சரிசமான இடைவெளியில் குதிரைகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களெல்லாம் யார் முன்னால் வரப்போவது என்று ஆர்வம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் `இரண்டு குதிரைகளுமே முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லைக்கோடு நெருங்க நெருங்க மைதானத்தில் பதற்றமும் பரபரப்பும் அதிகமாகின.

குதிரைப் பந்தயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஓர் எல்லை இருக்கும். அதை `Quarter Pole', `Eighth Pole' என்றெல்லாம் கம்பங்களை நட்டு, குறியீடு போட்டு வைத்திருப்பார்கள். முடிகிற எல்லைக்கோட்டுக்கு அருகிலும் அப்படி ஒரு `Pole' இருக்கும். அதுதான் குதிரைப் பந்தய வீரர்களுக்கு அடையாளம். அன்றைக்கு வேகமாக குதிரை ஓட்டிவந்த பில் ஷூமேக்கர், எல்லைக் கம்பத்துக்கு அருகில் வந்ததும் கவனக்குறைவாக தான் எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்டதாக நினைத்துவிட்டார். வெற்றிபெற்றுவிட்டோம் என்கிற பரவச உணர்ச்சியில் குதிரையின் லகானைப் பிடித்து நிறுத்திவிட்டார். ஒரே ஒரு கணம்தான். பில் ஹார்டேக்கின் குதிரை அவரைத் தாண்டிக்கொண்டு பறந்தது. சுதாரித்துக்கொண்ட பில் ஷூமேக்கர், சேணத்திலிருந்து இறங்காமல் தன் குதிரையை விரட்டிப் பார்த்தார். ம்ஹூம்... அவரால் வெற்றிபெற முடியவில்லை. நூலிழையில் தவறவிட்ட வெற்றி. அப்படியே குமைந்துபோனார் பில்.

பில் ஷூமேக்கரின் குதிரையின் பெயர் கேலன்ட் மேன் (Gallant Man). அந்தக் குதிரையின் பயிற்சியாளர் ஜான் நெருட், அன்றைக்குப் பத்திரிகையாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்... ``அவர் ஏன் குதிரையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் என்று எனக்குப் புரியவே இல்லை. உலகின் தலைசிறந்த பந்தயக்குதிரை வீரர்களில் ஒருவர் பில் ஷூமேக்கர். அவர் இப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.’’

பில் ஷூமேக்கர்
பில் ஷூமேக்கர்
இதற்கு மிக எளிய பதில் பில் ஷூமேக்கர் லேசாக கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்பதுதான். வாழ்க்கையும் ஒரு குதிரைப் பந்தயம் போன்றதுதான். அதில், வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி என்பது நூலிழை அளவு. கவனம் சிதறினால் வெற்றி, தோல்வியாக மாறும் என்பது பில்லுக்கு நடந்த இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மை!