Published:Updated:

கண்கள் தெரியாத நிலையிலும் தச்சுத் தொழிலை நுட்பமாய்ச் செய்யும் 72 வயது பெருமாள் ஐயா!

குட்டிக் கலப்பையுடன் பெருமாள் ஐயா
குட்டிக் கலப்பையுடன் பெருமாள் ஐயா ( சாய்தர்மராஜ் )

இரு கண்களும் தெரியாத நிலையில் தச்சு வேலையில் அசத்தும் பெரியவர்.

'கண்ணும் கருத்துமா தொழிலைச் செய்' என்று கிராமங்களில் சொல்வதைக் கேட்டிருப்போம். அதுவும் சிற்பம், தச்சுப் போன்ற நுட்பத்துடன் செய்ய வேண்டிய தொழில் எனில், கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். அதற்கு கண் பார்வை என்பது மிக முதன்மையானது. ஆனால், இங்கே ஒருவர் இரு கண்களும் தெரியாத நிலையிலும் வெகு நேர்த்தியாகத் தச்சுத் தொழில் செய்து வியக்க வைக்கிறார்.

பெருமாள் ஐயா
பெருமாள் ஐயா

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை அடுத்த மருதங்குடி கிராமத்தில் பாரம்பர்யமாகத் தச்சு வேலை செய்துவருபவர் பெருமாள் ஐயா. அந்தப் பகுதியில் இவரின் கைத்திறனால் அழகுற விளங்கும் வீடுங்கள் ஏராளம். அவரைத் தேடிச் சென்றபோது, சீரான இடைவெளியில் ஒலித்த சுத்தியல் சத்தமே வீட்டை எளிதாக அடையாளம் காட்டிவிட்டது.

லுங்கியும் சட்டையுமணிந்து தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த பெருமாள் ஐயாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

"சரி... உங்களுக்கு என்ன வேணும்... ஜன்னலா, நிலையா?" என்றார்.

"அதெல்லாம் வேணாங்கய்யா, உங்களைப் பற்றித் தெரிஞ்சுக்க வந்தோம்" என்றதும், சிரித்துக்கொண்டே, "பெருசா சொல்றதுக்கு என்னா இருக்கு" என்றவரிடம் பேச்சைத் தொடர்ந்தோம்.

மகன் குமாருடன், பெருமாள் ஐயா
மகன் குமாருடன், பெருமாள் ஐயா

"என்னுடைய பெயர் பெருமாள். இப்போ 72 வயசாயிடுச்சு. மருதங்குடிதான் சொந்த ஊர். தாத்தன், பாட்டன் காலத்திலேயிருந்தே தச்சு வேலைதான் எங்க குலத்தொழில். ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அதற்குப் பிறகு, தச்சு வேலைதான்னு ஆயிடுச்சு நமக்கு. வேலை செய்யற இடம் எவ்வளவு தூரம்னாலும் சைக்கிள்லதான் போவேன்.

கூட வேலை செய்யறவங்களோட சைக்கிள் மிதிச்சா தூரமும் தெரியாது; கால் வலியும் தெரியாது. அது ஒரு காலம். அப்படியே வாழ்க்கை வேகமாக ஓடுச்சு. பிறகு, கல்யாணமானுச்சு. ஒரு ஆண் குழந்தையும் பொறந்து வாழ்க்கை நிம்மதியா போயிட்டு இருந்துச்சு.

ஏர் கலப்பை செய்யும் பணி
ஏர் கலப்பை செய்யும் பணி

திடீர்னு ஒருநாள் கண்ணுக்கு ஒண்ணும் புலப்படவில்லை; எதிர்க்க இருக்கிறது எதையும் பார்க்க முடியல. தடுமாறி கீழ விழுந்துவிட்டேன். ஆஸ்பத்திரிக்குப் போனால் டாக்டர், "உங்க  கண்ணுக்கு மூளையில் இருந்து வரும் நரம்புல பாதிப்பு இருக்கு"னு சொன்னார். அதைச் சரி செய்ய முடியாதும்னு சொல்லிட்டார். அதுக்கப்பறம் வீட்டில் முடங்கிடக்கறது பிடிக்காம மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

முன்ன மாதிரி வேலை செய்ய முடியாட்டியும் மனசைத் தேத்திக்கிட்டு முடிஞ்சளவு வேலைகளைச் செய்தேன். கொஞ்சம், கொஞ்சமா தச்சு அளவுகளைக் கை அளவாகப் பழகிகிட்டேன். இருந்தாலும் கண் இல்லாம வேலை செய்கிறது சிரமமாத்தான் இருந்துச்சு. தொடர்ச்சியாகப் பழகினதால, நல்ல விதமாக வேலை செய்ய முடிஞ்சுது.

பார்வைச் சவால் கொண்ட பெருமாள் ஐயா.
பார்வைச் சவால் கொண்ட பெருமாள் ஐயா.
135 வருடங்களுக்குப் பிறகு தன் வேர்களைத் தேடி கரூர் வந்த தென்னாப்பிரிக்க தமிழச்சி!

சரி, பொழப்பைப் பார்ப்போம்னு நினைச்சிட்டு இருந்தப்ப, அடுத்த அடியாக என் மனைவிக்குப் புற்றுநோய்ன்னு நெஞ்சுல இடி விழுந்துச்சு. கொஞ்ச நாள்ல அவள் இறந்தும்போய்விட்டாள்." என்றவர் சில நிமிடங்கள் மெளனமாக இருந்துவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

"எனக்குக் கண்ணாக இருந்த மனைவியும் இறந்ததைத் தாங்கவே முடியல. அப்பதான் கண் தெரியாம போயிடுச்சுன்னு உணரவே ஆரம்பிச்சேன். வாழ்க்கை வெறுத்துப்போன சமயத்தில் என் பேத்தி, பேரன்களோட அன்புதான் என்னை நடமாட வெக்குது. வீட்டை ஒட்டியே தச்சு வேலையை, என் மகனுடன் சேர்ந்து செஞ்சிகிட்டு இருக்கேன்.

தச்சுப் பணி
தச்சுப் பணி

இருந்தாலும் வேலை செய்துகிட்டு இருந்தாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும். மகனும் மருமகளும் என்னை நல்லாத்தான் கவனிச்சுகிறாங்க. நாங்க பரம்பரை பரம்பரையா விவசாயம் சார்ந்த தச்சு வேலை அதிகமாகச் செஞ்சுகொடுப்போம். ஏர் கலப்பை, பறம்பு, மண்வெட்டி, களை வெட்டினு எல்லாமும் செய்வோம். என் பேரன் ஆசையா கேட்டதால கை அளவுக்கு கலப்பை செஞ்சுக்கொடுத்தேன்.

இப்படி, யாராவது ஆசையாகக் கேட்டால் சின்னச் சின்ன கலை நயமிக்க பொருள்களைச் செய்வேன். இப்பவும் என்னால கலப்பை, இடியாப்பக் கட்டை, தயிர் மத்துனு எல்லா விதமான கலை பொருள்களையும் செய்ய முடியும். எங்க வீட்டு கதவை நானும் என் மகனும்தான் சேர்ந்து செய்தோம். எனக்குக் கணக்கு வழக்கு நல்லாத் தெரியும் என்பதால். ஒவ்வொரு பொருளையும் நேர்த்தியாகச் செய்வேன். 'மரவேலை இன்ஜினீயர்'னு ஊர்க்காரங்கச் சொல்வாங்க.

பெருமாள் ஐயா செய்த அவர் இல்ல கதவு.
பெருமாள் ஐயா செய்த அவர் இல்ல கதவு.
``ஒரு வாரத்தில் 1 கோடி செலவு செய்யச் சொல்கிறார் கலெக்டர்!” கொதிக்கும் தேனி காளவாசல் உரிமையாளர்கள்!

என் பேரன் ஆர்க்கிடெக்சர் படிக்கிறான். அவனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட என்கிட்ட போனில் கேட்டு தெரிஞ்சுப்பான். இப்போ, வயசாயிடுச்சு இல்லையா... முன்ன மாதிரி சுறுசுறுப்பா வேலை செய்ய முடியறதில்ல. கை வழுக்குத் தக்கன செய்றேன். காலை 8 மணிக்கு ஆரம்பிச்சா, சாயந்தரம் 6 மணி வரைக்கும் வேலை செய்வேன். நுணுக்கமான திறமையைக் கொடுத்த கடவுள், பார்வையைப் பாதியிலேயே எடுத்துக்கிட்டான். ஆனாலும், நான் துவண்டுபோல!" என்றார் பெருமாள் ஐயா உற்சாகமாக.

அடுத்த கட்டுரைக்கு