Published:Updated:

புத்தம் புது காலை : ஓர் உலகம்... ஓராயிரம் குரல்கள்! | World Voice Day #6AMClub

சர்வதேச குரல் தினம்
சர்வதேச குரல் தினம்

"நம்ம கஷ்டத்துக்கு யாராவது குரல் கொடுக்கும்போது சந்தோஷப்படுறோம் இல்லையா? அதேசமயம், நம்ம குரலுக்கு ஏதாவது கஷ்டம் வந்திடக் கூடாதுன்னு இதுவரை யோசிச்சிருக்கோமா நாம்..?"

குரல்..! மனிதனின் இன்றியமையாத அடையாளம்... எஸ்பிபியை, ஸ்வர்ணலதாவை, எம்ஜியாரை, சிவாஜியை, ஜெயலலிதாவை, கலைஞரை, தென்கச்சி சுவாமிநாதனை என இன்னும் எத்தனையோ பேரை இறந்தபிறகும் அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது அவர்கள் குரல்களும்தான்.

பிறக்கும்போது வெறும் அழுகையாக மட்டுமே வெளிப்படும் குழந்தையின் குரல், படிப்படியாக சிரிப்பொலி, பிறகு அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் துவங்கி ஓரிரு வார்த்தைகள், சொல்வதை திரும்பச் சொல்லி, கேள்விக்கு பதில் சொல்லி என குழந்தைகள் வளர்வதைப் போலவே அவர்களது மொழியும், குரலும் வளர்ந்து பிறகு சிந்தித்துப் பேசும் நிலையை எட்டுகிறது.

சர்வதேச குரல் தினம்
சர்வதேச குரல் தினம்

"மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு" என்கிறது பைபிள். ஆசிரியர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் போன்றவர்களுக்கு குரலின் அருமை தெரியும். ஆனால் பேசும்நிலையை எட்டியபிறகு வாழ்வின் இறுதிமூச்சு வரை பேசிக் கொண்டேயிருக்கும் சாதாரண மனிதன், அந்தப் பேச்சுக்கு அடிப்படையான குரலைப் பாதுகாக்க எந்தவொரு முயற்சியும் எடுப்பதே இல்லை என்று வருத்தத்துடன் கூறும் மருத்துவர்கள், சூடான பானம், குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், விடாத சிகரெட் என எத்தனையோ காரணிகள், குரலை பாதிக்கும் என்பதை நமக்கு நினைவுப்படுத்தவே அதற்கான விழிப்புணர்வு தினமாக, இன்றைய தினத்தை 'சர்வதேச குரல் தினம்' என அனுசரித்து வருகின்றனர்.

குரலைப் பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளும் முன்னர், குரல் உருவாகும் முறையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.

பொதுவாக மனதின் ஓசை தான், மனிதக் குரலாக வெளிப்படுகிறது என்றாலும், இந்தக் குரல் உருவாகும் உடலியங்கியல் மிகவும் சிக்கலானது. உண்மையில் குரலுக்கு என்று தனி உறுப்பு என்று எதுவும் இல்லை என்பதுடன், குரலின் ஒலி உருவாவதற்கு வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்றுத் தசைகள் என அனைத்தின் உதவியும் தேவைப்படுகிறது. இதில் குரல்வளை என்ற லேரிங்க்ஸ், மற்றும் அதன் குரல் நாண்கள் என்ற வோக்கல் கார்ட்ஸ் தான் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்று, குரல் நாண்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி, அங்கிருந்து மேலே பயணித்து, தொண்டை, மூக்கு ஆகியவற்றிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி, மேல் அன்னம், நாக்கு, பற்கள், உதடுகள் வழியாக வெளிவரும்போது குரலாக உருப்பெறுகிறது.

பாடகர்
பாடகர்

பிறக்கும்போது ஒரேபோல இருக்கும் இந்த குரல்வளை, பருவமடையும்போது ஹார்மோன்களின் காரணமாக, ஆண்களுக்கு சற்று அதிகம் விரிவடைந்து ஆடம்ஸ் ஆப்பிளாக வெளித்தெரிவதுடன், ஆண்-பெண் குரல்களில் பருவகால மாற்றங்களையும் நிகழ்த்துகிறது. அதனால் தான் ஆழமான குரலை ஆணுக்கும், மென்மையான குரலை பெண்ணுக்கும் அளித்துள்ளது இயற்கை.

இப்படி உருவாகும் உன்னதக் குரல் தான் நம் அன்றாட உரையாடல்களாக, பாடலாக, பேச்சாக, அழுகையாக, தனித்துவம் பெறுகிறது என்றாலும், வெகு எளிதில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் உறுப்புகளாகவும் குரல்தான் விளங்குகின்றன.

புத்தம் புது காலை :  பிடில் வாசித்த நீரோக்களும், சில ஹீரோக்களும்! - #6AMClub

காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்று, தொடர்ந்து பேசுவது அல்லது பாடுவதால் ஏற்படும் அழற்சி (vocal nodules), புகைப்பிடித்தல், நச்சுக்காற்று, அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் என குரல்வளத்தை பாதிக்கும் காரணங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால், பாதிக்க ஆயிரம் காரணிகள் இருப்பதுபோலவே அதற்கான பாதுகாப்பு முறைகளும், சிகிச்சை முறைகளும் ஏராளம் உள்ளன என்று கூறும் குரல் நிபுணர்கள், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இன்றைய தினத்தன்று, "ஓர் உலகம்... ஓராயிரம் குரல்கள்" அழைப்புவிடுக்கின்றனர்.

பேச்சு
பேச்சு

ஆம்... பேச்சுப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உணவுக் கட்டுபாடு, புகை மற்றும் மதுவைத் தவிர்த்தல், தக்க பரிசோதனைகள், உரிய சிகிச்சைகள் என பலவகையான குரல் பாதுகாப்பு முறைகள் உள்ளன என்று நம் குரலுக்காக குரல் கொடுக்கின்றனர் குரல் நிபுணர்கள்.

காது கொடுப்போம் வாருங்கள்..! ஏனெனில், குரலைக் காட்டிலும் சிறந்த மற்றொரு அடையாளம் மனிதர்களுக்கு இல்லை!

அடுத்த கட்டுரைக்கு