Published:Updated:

தேனி: அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி - வைராக்கியம் வெல்லுமா?

முருகவேல்

"ஏன் சார், எல்லாரும் எங்களை அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்? மனிதனை மனிதனாக நினைத்தால் போதும். அந்தப் பார்வையே எங்களை பலவீனப்படுத்துகிறது." - முருகவேல்

தேனி: அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி - வைராக்கியம் வெல்லுமா?

"ஏன் சார், எல்லாரும் எங்களை அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்? மனிதனை மனிதனாக நினைத்தால் போதும். அந்தப் பார்வையே எங்களை பலவீனப்படுத்துகிறது." - முருகவேல்

Published:Updated:
முருகவேல்

சராசரியாக 5 அடி உயரம், 50 கிலோ எடையும் நல்ல கைகால்கள் வளர்ச்சி கொண்ட மனிதனே வாழ்வில் சவால்களை எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் 2 அடி உயரத்துடன் கை கால்கள் வளர்ச்சியின்றி, தவழும் நிலையில் உள்ள 31 வயது இளைஞர் ஒருவர் ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்த வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார் தெரியுமா?

முருகவேல்
முருகவேல்

அவரிடம் பேசினால் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கிறது, எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற உத்வேகம் கிடைக்கிறது. ஆனால் அவருக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? ”ஏன் சார், எல்லாரும் எங்களை அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்? மனிதனை மனிதனாக நினைத்தால் போதும். அந்தப் பார்வையே எங்களை பலவீனப்படுத்துகிறது” என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர்கள் வெற்றிலைத் தோட்ட கூலித்தொழிலாளிகள் அருணாச்சலம் (70), அழகம்மாள்(62). இந்தத் தம்பதிகளின் மகள்களுக்குத் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். மகன்களில் மூத்தவர் மில் தொழிலாளியாக உள்ளூரில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இளையவர் முருகவேல் (31). 2 அடி உயரம், கை கால் வளைவு காரணமாக நடக்க முடியாத தவழும் நிலையிலான மாற்றுத்திறனாளி.

முருகவேல்
முருகவேல்

வடுகபட்டியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, வீரபாண்டி சௌராஷ்டிரா கல்லூரியில் பி.காம்., சி.ஏ., முடித்துள்ளார். கடந்த 2014-இல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெரியகுளத்தில் கேஸ் கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராகப் பணியாற்றிக் கொண்டு அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற நோக்கில் போட்டித் தேர்வுக்குத் தயாராகிவருகிறார். இந்நிலையில் தேனி கலெக்டர் முரளீதரனைச் சந்தித்து தனக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரிடம் பேசினோம். ”எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி நான். குடும்ப வறுமை காரணமாக 2 சகோதரிகளாலும், சகோதரனாலும் படிக்க முடியாமல்போனது. எனக்கு படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்தப் பட்டத்தைப் பெற பல்வேறு சிரமத்தைத் தாண்டியதே பெரும் சாதனையாகப் பார்க்கிறேன்.

முருகவேல்
முருகவேல்

எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்குமான இடைவெளி கரடுமுரடானதாகும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அம்மா என்னை, பிறந்த குழந்தையைப் போல இடுப்பில் வைத்து தூக்கிச்சென்று வகுப்பில் விடுவார். ஆனால் தொடர்ச்சியாக அவரால் அதைச் செய்யமுடியாமல் சோர்வடைந்தார். ஏனென்றால், வீட்டு வேலையும், தோட்ட வேலையும் செய்து, என்னைக் குளிப்பாட்டி, சோறு ஊட்டி, டிரஸ் போட்டுக் கிளப்பி விடுவது மட்டுமல்லாமல், தூக்கிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் அழைத்து வர வேண்டும். இதனால் 6ஆம் வகுப்பு முதல் நானே வீல்சேரில் பள்ளிக்குச் செல்லத்தொடங்கினேன். பத்தாம் வகுப்பு வரை வீல்சேரிலேயே பள்ளிக்குச் சென்று வந்தேன். பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆட்டோவில் சென்றேன். ஆட்டோ செலவைத்தான் சமாளிக்க முடியாமல் திணறினோம்.

ஒருவழியாக பள்ளிக் காலத்தை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றேன். இலவசமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கல்லூரிக்குச் செல்ல பேருந்துக் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. அப்பாவுக்குப் பெரிதாக தோட்டத்தில் வேலையும் இல்லை. உழைக்க உடலில் திறனும் இல்லாமல்போனது. அண்ணனின் சொற்ப வருமானமே குடும்பத்தை நடத்த உதவியது. ஒருவருடைய வருமானத்தால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. இதனால் கல்லூரி முடித்த உடனே நான் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டேன். மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் கிடைக்கிறது.

தேர்வுக்குப் படிக்கும் முருகவேல்
தேர்வுக்குப் படிக்கும் முருகவேல்

எனக்கு தாசில்தார் ஆக வேண்டும் என்பதே இலக்கு. அதற்காக கல்லூரி முடிந்த உடனே தயாராகத் தொடங்கினேன். ஆயக்குடியில் அரசுப் போட்டித் தேர்வுக்குத் தயாராக வழங்கப்படும் மெட்டீரியல்களை பி.டி.எப் வடிவில் பெற்றுப் படிக்க ஆரம்பித்தேன். என் பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி, பள்ளிப் பாடப் புத்தகங்களை வாங்கிப் படித்தேன். ஆனால் காலை எழுந்து கிளம்பி ஆட்டோ அல்லது பஸ் பிடித்து வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்புவதே பெரிய விஷயமாக இருந்தது. இதனால் போட்டித் தேர்வுக்கு முழு வீச்சில் தயாராக முடியவில்லை. கல்லூரி முடித்தது முதல் குரூப் 2, 4 மட்டுமல்லாது, ரயில்வே போட்டித் தேர்வுகளைக்கூட எழுதினேன். அதில் தேர்ச்சி அடைய முடியவில்லை. வறுமை வாட்டாமல் இருந்தால்கூட முழுமையாக தேர்வுக்குத் தயாராகலாம். ஆனால் அதையும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கலெக்டரை அணுகி, கருணை அடிப்படையிலான வேலை கேட்டு மனு அளித்தேன்.

ஏற்கெனவே நான்கு சக்கர வாகனத்துக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அதற்கே பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். அதேபோலதான் இந்த மனுவும் ஏதோ ஒரு அதிகாரியின் மேஜையில் ஒதுங்கிக்கிடக்கும் என நினைக்கிறேன். இதுபோன்று அரசுத் துறையில் உள்ள அலட்சியத்தைப் பார்த்துதான் எனக்கு அரசுப் பணியில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு என்னால் முடிந்த வழிகாட்டுதல்களைக் கொடுக்க வேண்டும். எப்படி யாரை அணுகினால் அவர்களின் தேவை கிடைக்கும் என்பதையாவது தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு அதைக்கூட கேட்கவும் தெரியவில்லை. கேட்டால் யாரும் சொல்லவும் தயாராக இல்லை என்பதே உண்மை. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் தேவை என்னவென்று எனக்குத் தெரியும். அவற்றை என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

முருகவேல்
முருகவேல்

நான் மாற்றுத்திறனாளி என்றாலும்கூட வழக்கமான பள்ளி, கல்லூரிகளில்தான் படித்தேன். அங்கு யாரும் என்னை மாற்றுத்திறனாளியாக நினைத்து ஒதுக்கவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் என்னோடு அன்பாகப் பழகினர். தமிழரசன், மதன்குமார், சலீம்ராஜா, முத்துக்குமார் போன்ற நண்பர்கள் எனக்குப் பேருதவியாக இருந்தனர். ஏனென்றால், என்னால் யாருடைய உதவியும் இன்றி எங்கும் செல்ல முடியாது.

முருகவேல்
முருகவேல்

ஆனாலும்கூட எல்லோரும் அப்படியே இருக்கமாட்டார்கள் அல்லவா, என் அருகிலேயே வர அருவருப்புப்படுவோரும் உண்டு. பரிதாபத்தோடு கேவலமாகப் பார்ப்பவர்களும் உண்டு. அப்போதெல்லாம், என் அம்மாவுக்குப் பிறகான என் வாழ்க்கையை நினைத்து மிகவும் யோசிப்பேன். அதுவே எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். எல்லோரையும் போல கிரிக்கெட் விளையாடவும், டூர் செல்லவும் ஆசை இருக்கு. அம்மாவைப்போல அக்கறையோடும் அன்போடும் என்னை கவனிக்க துணை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. நானும் மனிதன் தானே..!”

இவ்வளவுக்கும் மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் முருகவேல் போன்றவர்களின் வாழ்வை மாற்ற சமூகம் துணை நிற்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism