Published:Updated:

'வீதி வரை அல்ல; கடைசி வரை மனைவி!’- சாவிலும் பிரியாத மதுரை தம்பதி!

Sadhasivam - Saroja couple
Sadhasivam - Saroja couple

ரெண்டு பேரும் கடைசிக் காலத்துல ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்பா, அனுசரணையா இருந்தாங்க. மாத்திரையிலயிருந்து சாப்பாடுவரை ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கவனிச்சுப்பாங்க.

“இப்படி ஆகும்னு யாருமே எதிர்பார்க்கல. ஆனா, எங்கம்மா இப்படித்தான் ஆகணும்னு நினைச்சிருக்காங்க. அப்பா சடலத்தைப் பார்த்து அழக்கூட தெம்பில்லாத அளவுக்கு மனசுடைஞ்சு போயிருந்த எங்கம்மா, கடைசியில அப்பாகூடவே போயிட்டாங்க..!" - வயதான தங்கள் அப்பா-அம்மா இருவரையும் ஒருசேர இழந்துவிட்ட துயரத்தில் இருக்கிறார்கள் சதாசிவம் - சரோஜா தேவி தம்பதியின் பிள்ளைகள்.

Sadhasivam - Saroja couple
Sadhasivam - Saroja couple

உசிலம்பட்டி எழுமலை கிராமம், டி.கல்லுப்பட்டியில் அரசு நூலகராகப் பணியாற்றியவர், எழுமலை சதாசிவம். சின்னமனூரைச் சேர்ந்தவர் சரோஜா. 78 வயதான சதாசிவமும் 69 வயதான சரோஜாவும் அரை நூற்றாண்டு நிறைவான மணவாழ்க்கை வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு, மூன்று ஆண் பிள்ளைகள்; நான்கு பேரன்கள், மூன்று பேத்திகள். எல்லோரும் நன்கு செட்டிலாகி இருக்கிறார்கள்.

மூத்த மகன் சுதாகர், அடுத்தவர் பாஸ்கர், இளையவர் பிரபாகர் ஆகியோர் குடும்பங்களில், சுதாகர் குடும்பம் மட்டுமே உள்ளூரில் இருக்கிறது. மற்றவர்களின் குடும்பங்கள் சென்னையிலும் கோவையிலும் வசிக்கின்றன. நூலகப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சதாசிவம், தன் மனைவியோடு ஒவ்வொரு பிள்ளையின் வீட்டிலும் மூன்று மாதங்கள் எனத் தங்கி வந்திருக்கிறார். அதற்காக, தனது ஓய்வூதியத்திலிருந்து மகன்களுக்குப் பணம்கொடுத்தும் வந்திருக்கிறார். "இங்க இருக்கிற பூர்வீக வீடுகளும், எங்க படிப்பும், கடனில்லாத வாழ்க்கையும் அப்பா தன்னோட உழைப்பால எங்களுக்கு சேர்த்துக் கொடுத்த சொத்து.” என்று நன்றியும் நெகிழ்ச்சியுமாகச் சொல்கின்றனர் மகன்கள்.

சதாசிவம், சரோஜா தம்பதிக்கு கால் பாதிக்கப்பட்டதோடு இதய நோயும் சேர்ந்துகொள்ள, மிகவும் சுணங்கிப்போயிருக்கிறார்கள்.

சுதாகர் பேசும்போது, “அப்பாவுக்கு கடன் வாங்கவோ கொடுக்கவோ பிடிக்காது. பெத்த பிள்ளைங்களே ஆனாலும், எங்களை ஒத்தப் பைசாகூட அவருக்காகச் செலவழிக்க விடமாட்டார். ஒருமுறை வீட்டுக்கு யூ.பி.எஸ் வசதி செஞ்சோம். அதோட செலவுத் தொகையைத் தெரிஞ்சிக்கிட்டு, எங்ககிட்ட செட்டில் பண்ணிட்டார். திடீர்னு ஒரு மாசம், எங்களுக்கு கொடுக்கிற மாசப் பணத்தைக் கூட்டிட்டார். கேட்டா, ‘என்னோட பென்ஷன் பணம் கூடியிருச்சு’ன்னு சொன்னார். அவருக்கு ஹார்ட் சர்ஜரி பண்ணின லட்சப் பணத்தைக்கூட, தன்னோட பென்ஷன் பணத்தில் ரெண்டே வருஷத்துல பைசல் பண்ணிட்டார். நூலகம், வீடுன்னு எல்லா இடங்களிலும் கொஞ்சம் கறாராகவும் ரொம்ப அன்பாகவும் இருப்பார். எங்க மேல கொள்ளைப் பிரியம். இருந்தாலும், எங்க அம்மாதான் அவருக்கு எல்லாமே!'' - சுதாகருக்கு கண்கள் கலங்குகின்றன.

சதாசிவம், சரோஜா தம்பதிக்கு கால் பாதிக்கப்பட்டதோடு இதய நோயும் சேர்ந்துகொள்ள, மிகவும் சுணங்கிப்போயிருக்கிறார்கள். சிகிச்சைகளுக்குப் பிறகு அதிகம் நடக்க முடியாததால், சதாசிவம் படுத்த படுக்கையாகியிருக்கிறார். தனக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், சரோஜாம்மாதான் தன் கணவரை முழுமையாகக் கவனித்துவந்துள்ளார். கடைசி நாள்களில் நிலைமை தீவிரமாக, சதாசிவத்தைப் பேணுவதற்காக நர்ஸ்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர். "தாத்தா பாட்டியைப் பார்க்கலாம்னு எதேச்சையா கிளம்பினோம், தாத்தா இறந்துட்டாங்கன்னு நியூஸ் வருது...” என்று வருந்துகிறார் ஒரு பேரன்.

Sadhasivam - Saroja death poster
Sadhasivam - Saroja death poster

பாஸ்கர் பேசும்போது, "அம்மாகிட்ட சொன்னா தாங்க மாட்டங்கன்னு அவங்களுக்குத் தெரியாமலேயே அப்பாவுக்கு கடைசிகட்ட சிகிச்சைகளை எல்லாம் பண்ணினோம். ஆனாலும், எதுவும் பயனளிக்காம புதன்கிழமை காலை 11 மணியளவுல அப்பா தவறிட்டார். நாங்க எல்லோரும் வந்துட்டோம். இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகள் செய்துட்டிருந்தோம். உடலை மறுநாள் எடுக்குறதுனு முடிவு.

அப்பாவோட உடலுக்கு எதிரே உட்கார்ந்து, அப்பாவையே பார்த்தபடி இருந்தாங்க அம்மா. இரவெல்லாம், ‘அவர்கிட்ட போகணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நாங்க எல்லாம், ‘உன்னையும் விட்டுட்டு நாங்க என்ன பண்ணுவோம்’னு சொல்லித் தேற்றினோம். ஆனா, சொன்னபடியே செஞ்சுட்டாங்க அம்மா” என்கிறார் பாஸ்கர் கண்கள் நனைய.

சதாசிவம்-சரோஜா தம்பதியின் மருமகள்கள், “அவங்களோட பேரன்களில் ஒருத்தன் டாக்டரா இருக்கான். அவன் அத்தைக்கு பிபி செக் பண்ணினான். நார்மலாதான் இருந்துச்சு. ஆனாலும் அத்தை நார்மலா இல்லை. அதனால அவன் போய் கார்ல இருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்துட்டு வரப்போனான். வந்து பார்த்தா, அத்தையோட பல்ஸ் சுத்தமா நின்னுப்போயிருந்துச்சு. நாங்க எல்லாம் என்ன பண்றதுனே தெரியாம திக்கிச்சுப் போயிட்டோம். ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல இழந்துட்டு நிக்கிற வலியை என்னன்னு சொல்றது...'' என்று மருகுகிறார்கள்.

Sadhasivam - Saroja death
Sadhasivam - Saroja death

"துக்கம் ஒரு பக்கம் இருக்க, இறுதிச்சடங்கு எப்படிச் செய்யிறதுன்னு ஒரே குழப்பம். ஆணுக்கு ஒரு சடங்கு, பெண்ணுக்கு ஒரு சடங்கு. மகன்கள் எடுக்கிற முடிவுதான்னு ஊர்ப்பெரியவங்க சொல்லிட்டாங்க. இறுதி ஊர்வலத்தில ஒரே வண்டியில அப்பாவைக் கிடத்தி, அம்மாவை அமரவச்சுக் கொண்டுபோனோம். மயானத்தில அப்பாகூடவே அம்மாவையும் வச்சு சிதை மூட்டினோம்" என்கிறார், மூத்த மகன் நா தழுதழுக்க!

சுதாகரின் நண்பர் ராசியப்பன், "அம்மா எல்லார் மேலயும் பாசமா இருப்பாங்க. யாரு, எப்போ வீட்டுக்கு வந்தாலும் முகம் மலர்ந்து உபசரிப்பாங்க. அப்படியெல்லாம் இருந்தவங்க, உடம்புக்கு முடியாமப் போனதும் ரொம்ப உடைஞ்சிட்டாங்க. அப்பா இல்லாம அம்மா எப்படி இருக்கப்போறாங்கன்னு தெரியலையே எல்லோரும் நினைச்சோம். ஆனா, இப்படி நடக்கும்னு நினைக்கவேயில்ல...'' என்கிறார் அதிர்ச்சி விலகாதவராக.

சதாசிவத்தின் நண்பர் சுப்பிரமணி, “வீட்டுக்கு நான் வந்தா, சாப்பிட்டுட்டுதான் போகணும். இல்லாட்டி, ரெண்டு பேரும் வருத்தப்படுவாங்க. அதுவும் அந்தம்மா விடவே மாட்டாங்க. ‘போகிற தூரத்துக்குப் பசிக்கும், சாப்பிடு சுப்பிரமணி’ன்னு சதாசிவம் சொல்லும்போதே, அவங்க தட்டை எடுத்து வெச்சிடுவாங்க. ரெண்டு பேரும் அப்படி ஒரு ஜோடி'' என்று நினைவுகளைப் பகிர்ந்தார்.

Family picture (old)
Family picture (old)

பிரபாகர் பேசும்போது, “நூலகத்துக்கு வர்றவங்ககிட்ட அப்பாவோட அணுகுமுறை கண்ணியமா இருக்கும். குறிப்பா, குழந்தைகளை ரொம்ப எளிதா ஈர்த்துடுவார். எல்லோரையும் புத்தகம் வாசிக்க வைப்பார்'' என்று கூற, தங்கள் பெற்றோரின் நினைவாக அவர்களின் பூர்வீக வீட்டில் பொதுநூலகம் ஒன்றை அமைக்க விரும்புவதாகச் சொல்கின்றனர் சதாசிவத்தின் மகன்கள்.

அக்கம் பக்கத்தினர், "சாதி, மதமெல்லாம் எதுவும் பாக்காம தாயா புள்ளையா பழகுவாங்க அந்தம்மா. அய்யா அதிகமா எதுவும் பேச மாட்டார். ரெண்டு பேரும் கடைசிக் காலத்துல ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்பா, அனுசரணையா இருந்தாங்க. மாத்திரையிலயிருந்து சாப்பாடுவரை ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கவனிச்சுப்பாங்க. அய்யாவுக்கு ரொம்ப முடியாம ஆனதுக்கு அப்புறம், 'அவருக்கு ஏதாச்சும்னா அப்புறம் நான் எப்படி இருப்பேன்'னு கலங்குவாங்க அம்மா. இப்ப ரெண்டு பேரும் சேர்ந்தே போயிட்டாங்க'' என்கிறார்கள் துயரத்துடன்.

‘வீதி வரை அல்ல, கடைசி வரை மனைவி’ என்று சென்றிருக்கிறார் சரோஜாம்மா!

அடுத்த கட்டுரைக்கு