Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: நடைப்பயிற்சி செய்ய ஏற்ற இடம்... ஸ்டூடண்ட் சாலை நடைபாதைக்குப் போயிருக்கீங்களா?!

திருச்சி ஊர்ப்பெருமை: ஸ்டூடண்ட் சாலை

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு மட்டும்தான் இந்த இடம் என்றில்லை. ஓய்வை அமைதியான முறையில் செலவிட துடிப்பவர்களுக்கு ஏற்ற செலவே இல்லாத இடமாகவும் இது இருக்கிறது.

திருச்சி ஊர்ப்பெருமை: நடைப்பயிற்சி செய்ய ஏற்ற இடம்... ஸ்டூடண்ட் சாலை நடைபாதைக்குப் போயிருக்கீங்களா?!

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு மட்டும்தான் இந்த இடம் என்றில்லை. ஓய்வை அமைதியான முறையில் செலவிட துடிப்பவர்களுக்கு ஏற்ற செலவே இல்லாத இடமாகவும் இது இருக்கிறது.

Published:Updated:
திருச்சி ஊர்ப்பெருமை: ஸ்டூடண்ட் சாலை
திருச்சியின் பெரும்பாலான மக்கள், தங்களின் ஓய்வு நேரத்தை இயற்கையுடன், கூடவே கலகலப்புடன் செலவு செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது மாநகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்டூடண்ட் சாலை எனச் சொல்லப்படும் நீதிமன்ற வளாகத்தின் பின்புறமுள்ள சாலையைத்தான். மாநகரின் மையத்தில் மரங்கள் சூழ, அருகிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆறு என்றழைக்கப்படும் உய்யக்கொண்டான் என்னும் கால்வாயின் நீரும் பட, சில்லென்ற காற்று நம்மை வருடும் இந்த இடத்தை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உய்யக்கொண்டான் கால்வாய்
உய்யக்கொண்டான் கால்வாய்

கூடவே அரசும் இங்கே உடற்பயிற்சி உபகரணங்களை வைத்திருப்பதால், அருமையான இந்த இடம், மக்களைத் தன்னகத்தே தேடி வரவைக்கிறது. அப்படியான திருச்சி மக்களின் ஆஸ்தான இடத்தை நாம் பார்க்க வேண்டாமா என மனது கேள்வியெழுப்ப, விடிந்தும் விடியாத காலை நேரமாக அங்கே கிளம்பினோம்.

காலை நேர திருச்சியை பார்க்க இரைச்சல்கள் அற்று, சூரியனின் உக்கிரமும் இல்லாமல் அவ்வளவு அமைதியாக இருந்தது. இப்படியான ரம்மிய சூழ்நிலை நம்மை இன்னும் உற்சாகப்படுத்த, மகிழ்வான மனநிலையில் ஸ்டூடண்ட் சாலையை வந்தடைந்தோம். திருச்சியின் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம், பல வரலாற்றைத் தன்னுள்ளே வைத்து, அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் உய்யக்கொண்டானின் கரையில்தான் இந்த நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. பேட்டவாய்த்தலையில் இருந்து உய்யக்கொண்டான் கால்வாயாக ஓடிவரும் காவிரி நீர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒருசேர வளம் செழிக்க வைக்கிறது.

ஸ்டூடண்ட் சாலை
ஸ்டூடண்ட் சாலை

இப்படிப் பழம்பெரும் வரலாற்றை ஒளித்து வைத்திருக்கும் இதனின் கரையில் நடைமேடையும், சிறிய அளவிலான பூங்காவையும் அமைக்கலாம் என முடிவெடுத்து அரசு இவற்றை அமைக்க, தற்போது மக்கள் பலருக்கும் பேவரைட் ஸ்பாட்டாக இந்த இடம் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டும் பயன்படுத்த, தொடர்ந்து வளர்ந்த 250க்கும் மேற்பட்ட மரங்களும், நீரின் குளுமையும் அனைத்து மக்களையும் இங்கு தேடி வரவைத்தது. இது பாதுகாப்பான இடமாகவும் அமைந்திருப்பதால், எந்த விதமான பயமும் இல்லாமல், குழந்தைகளுடன் குடும்பமாக பெண்மணிகளும், முதியவர்களும், இளம் வயதினரும் போட்டிப் போட்டு வருகின்றனர்.

முக்கியமாகக் கரையின் சுவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் வெகு அற்புதமாக இருக்கின்றன. நாம் சென்ற நேரத்தில் நடந்து முடித்த களைப்பில் முதியவர்களும், பெண்மணிகளும் உய்யக்கொண்டானின் கரையில் அமர்ந்து தத்தமது கதைகளைச் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் நடை, ஓட்டம், உடற்பயிற்சி என பிஸியாக இருந்தனர். கூடவே நடைமேடையின் நடுவில் வளர்ந்த மரங்கள் நடப்பவர்களுக்கும், அமர்ந்திருப்பவர்களுக்கும் நிழலையும், காற்றையும் இலவசமாக வாரி இறைத்து கொண்டிருந்தன. நடைமேடையின் அருகிலேயே மூலிகைத் தேனீர், சூப்புடன் சிறுதானியங்கள் என விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருந்தது. மாநகரின் உள்ளே இப்படியான இடமா என ஆச்சர்யப்படுத்தும் வகையில், இங்கு வந்து அமர்ந்தால் நமக்கு அற்புதமான ஓர் அனுபவம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிறிது நேரத்திற்கே நம் மனது அமைதியடைந்து இயற்கையை ரசிக்க ஆரம்பித்தது.

ஸ்டூடண்ட் சாலை
ஸ்டூடண்ட் சாலை

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு மட்டும்தான் இந்த இடம் என்றில்லை. ஓய்வை அமைதியான முறையில் செலவிட துடிப்பவர்களுக்கு ஏற்ற செலவே இல்லாத இடமாகவும் இது இருக்கிறது. நாம் வெளியில் செல்லும்போது எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களில் முதன்மையாக இருப்பது மன நிம்மதிதான், கண்டிப்பாக இந்தச் சாலையில், உய்யக்கொண்டானின் கரையில் இருந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும். மக்களும், நண்பர்கள், குடும்பங்கள் என மாலை நேரங்களில் வந்திருந்து மனதை லேசாக்கித் திரும்புகின்றனர்.

இந்த இடத்தை குறித்து தன் நண்பர்களுடன் வந்திருந்த அபிலேஷிடம் பேசினோம். "எனக்கு ஆரம்பத்துல இப்படி ஒரு இடம் இருக்குறதே தெரியாது. ஹெல்த்துக்காக வாக்கிங் போகணும்ணு என் டாக்டர் சொன்னதுனால, எங்க போறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ என் அக்காதான் இந்த இடத்தைப் பத்தி சொன்னங்க. இங்க வந்தப்புறம், இது எனக்கு பிடிச்ச இடமா மாறிடுச்சு.

ஸ்டூடண்ட் சாலை
ஸ்டூடண்ட் சாலை

செடி, மரத்தோட ஜிம்மும் இருக்கறதுனால ரொம்ப உதவியா போயிடுச்சி. ரெண்டு வருசமா தவறாம காலையில இங்க வந்துட்டு இருக்கேன். முக்கியமா ஃப்ரெண்ட்ஸ் கூட எங்கயாவது போகணும்னா கூட இங்க வந்துடுவோம். ஏன்னா சிட்டிக்குள்ள இருக்குறதுல நல்ல பிளேஸ் இது. இதைவிட்டா 20, 25 கிலோமீட்டர் தாண்டிதான் எங்கனாலும் போற மாதிரி இருக்கும். இங்க வந்தாலே காரணமே இல்லாம மனசு ரிலாக்ஸ் ஆகிடும். இப்போகூட ஃப்ரெண்ட்ஸ் கூட வந்துருக்கேன். வாக்கிங் போயிட்டு, அரட்டை அடிச்சிட்டு அப்படியே கிளம்பிடுவோம்" என முடித்தார்.

காவிரியில் நீர் வரும் நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவு நீரும் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றமும், கொசுக்களின் பிரச்னையும் மட்டும்தான் இந்த ஸ்டூடண்ட் சாலையின் மைனஸ். அவற்றைச் சரி செய்தால் மாநகரின் உள்ளே அமைந்த அழகிய இடமாக இது மாறிவிடும்.