Published:Updated:

`பேச்சுப் பட்டறையில் வாய்பேசாத மாற்றுத் திறனாளி!'- மனங்களை வென்ற அதிசயம் #MyVikatan

காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி நபர் ஒருவர், தன் பெயரைப் போட்டிக்குப் பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் என்ன பேசப்போகிறார், எவ்வாறு பேசப்போகிறார் என்ற ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.

Representational Image
Representational Image

அண்மையில் எனது அலுவலகம் சார்ந்த ஒரு பேச்சுப் பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கே காதுகேளாத வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி நபர் ஒருவர், தன் பெயரைப் போட்டிக்குப் பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் என்ன பேசப்போகிறார், எவ்வாறு பேசப்போகிறார் என்ற ஆர்வம் என்னுள் மிகையாய் இருந்தது.

Representational Image
Representational Image

நான் பேச வைத்த குறிப்புகளை பயிற்சி செய்ய மறந்து அவரின் செய்கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய எண் ஆறு. ஏதோ ஒன்றைப் பேசிவிட்டு எட்டாவது எண்ணின் பேச்சுக்காகக் காத்திருந்தேன். ஆதித்யா என்ற பெயர் கொண்ட அந்த நபர் மேடை ஏறினார். கைவிரல்களில் எட்டைக் காட்டி தன் பதிவைத் தொடங்கினார். அவரின் கை சைகைகளால் பேச பின்னால் இருந்து அவரின் நண்பர் வாய்ஸ் ஓவர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

சிறுவயதிலிருந்து தான் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள் என்று சைகைகளை வைத்தே கூட்டத்தைக் கட்டிப் போட்டுக்கொண்டிருந்தார். அவரது கதையின் சாராம்சம் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

`காலையில் நமது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனாலே என்ன கொடுமைடா, இந்த உலகத்தில் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்?' என்று சலித்துக்கொள்கிற நாம் ஆதித்யா போன்றோர் கதைகளைக் கேட்டால் நாமெல்லாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று புத்துணர்வைப் பெற்றுவிடுவோம்.

அவ்வளவு கடினமான முட்களின்மேல் தினம்தினம் பயணம் செய்து வருகிறார். ஆதித்யா கூறிய கதையைப் போல் நாம் நம்மைச்சுற்றி எண்ணற்ற கதைகளைக் கேட்டு வந்திருப்போம். அந்த கதைகளைத் தாண்டி ஆதித்யா கூறிய ஒரு சிறிய வரி எனது மனதை அதிகமாக உறுத்தியது.

Representational Image
Representational Image

ஆதித்யா குறிப்பிடும்போது, ``நான் வாழ்க்கையின் பல நேரங்களில் மிக சவாலான சிக்கல்களைச் சந்தித்துள்ளேன். ஆனால் அந்தச் சவால்களைத் தாண்டி என்னை மிகவும் அச்சுறுத்தியது தனிமைதான். அதற்கு நான் எனது நண்பர்களையோ உறவினர்களையோ ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னுடைய மொழியும் அவர்களது மொழியும் வெவ்வேறானவை. எனது சைகை மொழி அவர்களது பேச்சுலகில் வெறுமையாகத் தோன்றும். அவர்களது பேச்சுமொழி எனக்குக் காற்றை போலவே இருக்கும். ஒரு புரிதல் நிகழாதிருக்கும்போது அவர்கள் உலகில் நான் என்னை எப்படி இணைத்துக்கொள்வது?" என்று அவர் கேட்ட கேள்வி என்னை அதிகம் பாதித்தது.

அனைத்துப் புலனும் குறைவில்லாமல் ஒன்றாகப் பெற்ற நாம், நமது நேரத்தை இணையத்தில் சோம்பேறித்தனமாக வீணடித்துக்கொண்டிருக்கிறோமே என்று கன்னத்தில் அறைந்தது போலவே இருந்தது. `போர் அடிக்குது.. நேரம் போகவே மாட்டேங்குது’, `ஸ்ட்ரெஸ் ஆக இருக்குது' , `உடம்பெல்லாம் அசதியாக இருக்கிறது', `எனக்கு மட்டும் ஒன்றும் நடப்பதில்லை’ என்று புலம்பாமல் உருப்படியாக ஒன்றைச் செய்யலாம் என்று எண்ணினேன்.

Representational Image
Representational Image

சோம்பேறித்தனமாக சுற்றித் திரிந்த அதே இணையத்தில் காது கேளாதவரின் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். ASL (American Sign Language), ISL (Indian Sign Language) என்று பல குறிப்புகளைத் திரட்டி வருகிறேன். நம்முடைய பொழுதுபோகாத நேரத்தை மற்றவர்கள் தனிமையின் தாகத்தைத் தீர்க்க ஏன் பயன்படுத்தக்கூடாதென்ற எண்ணம் என்னுள் வந்தது. சிறிதுசிறிதாக நானும் எனது நண்பர்களும் இந்த சைகை மொழியைக் கற்றுக்கொண்டு எனது அலுவலகத்தில் உள்ள அந்த நண்பரோடு இப்போது நட்பு பாராட்டி வருகிறோம் அவரது மௌன மொழியிலேயே...

இது அவருக்கு மட்டுமல்ல நமது எண்ணங்களையும் உள்ளார்ந்த வெற்றிடத்தையும் பூர்த்தி செய்கிறது. இதை அவர்களின் மேல் உள்ள பரிதாபத்தினால் செய்வதாய் இருந்துவிடக்கூடாது.

Representational Image
Representational Image

சகமனிதர்களாய் நாம் ஒருவரை ஒருவர் எவ்வாறு ஆதரித்துக்கொள்கிறாம் என்பதையே வெளிப்படுத்த வேண்டும். இந்த ஒரு உதாரணம் நான் கண்ட காட்சியின் சாட்சி. இதைப்போன்றே உங்களது நேரத்தையும் வீணாக்காமல் பிறருக்குப் பயன்படும்விதமாக அமைக்கப் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் போர் அடிக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்றால் சற்று இணைய பொத்தான்களை அழுத்தி சைகை மொழியைக் கற்று ஆதித்யா போன்ற நபர்களோடு பழகிப் பாருங்கள். உங்கள் எண்ணம், பார்வை, பேச்சு மேலும் விசாலப்படும்.

-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/