Published:Updated:

"உங்களால் முன்பு மாதிரி நடக்க முடியாதென்று சொன்னார்கள். ஆனால்..." - மனம் திறக்கும் வெ.இறையன்பு

V.Irai Anbu IAS
V.Irai Anbu IAS

"சில நேரங்களில் நாம் விரும்பியவற்றை அடைய முடியாமல் போவதுமுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இந்தக் குறளை நினைவுபடுத்திக்கொண்டு, நம்முடைய முயற்சியும் வலிமையாக இருக்குமேயானால், விதியைக்கூட வெல்ல முடியும்."

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்... தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு செய்பவர். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து வருபவர். தொலைக்காட்சி, பத்திரிகைகள் எனப் பலவற்றில் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சிக் கட்டுரைகளைக் கதை நயத்துடனும் கலைநயத்துடனும் எழுதி வருபவர். 'வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம், அப்போது அவர் கூறிய ஆக்கபூர்வமான கருத்துகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

Irai Anbu
Irai Anbu

வாழ்க்கை என்பது இருத்தலில் இல்லை, அது, நாம் நம்மை மேம்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது. அப்படி நான் வாசித்த அற்புதமான வாசகம்தான் திருக்குறளில் இடம்பெற்றிருக்கும்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய் வருத்தக்கூலி தரும்

என்னும் வரி.

திருவள்ளுவர் இந்தக் குறளை மிகவும் உன்னதமான நிலைக்கு மனிதனை உயர்த்துவதற்காக எழுதியிருப்பதாகவே நான் கருதுகிறேன். சில நேரங்களில் நாம் நமக்கு ஏதாவது ஒன்று நிகழாமல் போய்விட்டால் விதியின்படிதான் நடக்கும் என்று நினைப்பதுண்டு. சில நேரங்களில் நாம் விரும்பியவற்றை அடைய முடியாமல் போவதுமுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இந்தக் குறளை நினைவுபடுத்திக்கொண்டு முயற்சி வலிமையாக இருக்குமேயானால், விதியைக்கூட வெல்ல முடியும்.

Irai Anbu
Irai Anbu

இதை நான் இன்னலுறுகிறபோதெல்லாம் நினைத்துக்கொள்வேன். படிப்பில் தடுமாறுகிறபோது, பாடங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது, மிகவும் சிரமமான மனிதர்களிடம் பழகும்போது, முடியாது என மற்றவர்கள் சொல்கிற செயல்களைக் குறுகிய காலத்தில் செய்து முடிப்பதற்கு இந்தக் குறளை நினைவுபடுத்தி என் முயற்சிகளைத் திடப்படுத்திக்கொள்வேன்.

இரண்டு மணி நேரம் உழைப்பதை இன்னும் இரண்டு மணி நேரம் என்று பெருக்கிக்கொள்வேன். அதிகாலை 4 மணிக்கே எழுந்து படிக்கலாமென தூக்கத்தைத் துண்டித்துக்கொள்வேன். காலாற நடப்பேன். புத்துணர்ச்சி பெறுவேன். இன்னும் அதிகமாகப் படிப்பேன்.

என் முயற்சிகளில் தோல்வி அடைகிறபோதெல்லாம், 'எதனால் தோல்வி அடைகிறோம்' என்று என் முடிவுகளைப் பரிசீலிப்பேன். குடிமைப்பணித் தேர்வை முதன்முறை எழுதும்போது 227 வது இடத்தைத்தான் பிடித்தேன்.

Irai Anbu
Irai Anbu

அப்போது நான் எந்த இடத்தில் தவறினோம், எந்த இடத்தில் பிசகினோம் உழைப்பு போதவில்லையா, சரியான திக்கில் நான் பயணம் செய்யவில்லயா அல்லது முறையாக முயற்சிகளை எடுக்கவில்லையா என என் பலவீனங்களைப் பரிசீலனை செய்தேன். தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிட்டேன் அந்தக் காரணங்களை ஆய்ந்தேன். அந்தக் குறைகளைக் களைந்தேன்.

அடுத்த முறை நான் அந்தத் தேர்வை எழுதியபோது அகில இந்திய அளவில் 15 வது வரிசையையும் தமிழகத்தில் முதலிடத்தையும் நான் பிடித்தேன். இதை என்னுடைய சாதனைக் கதையாகச் சொல்லவில்லை. இதை நான் கடைப்பிடித்தேன் வென்றேன் என்பதற்காகச் சொல்கிறேன்.

Vikatan

வெல்வது என்பதுகூட ஒருவகையில் தோற்பதுதான். நாம் வெற்றியடைந்தோம் என்று சொல்கின்றபோது ஏதோ வென்றுவிட்டோம் என்பது போன்ற மாயை ஏற்படும். ஆனால், உண்மையில் எந்த வெற்றியும் நாம் பெறுவதில் இல்லை. முழுமையான வெற்றி என்பது நம்முடைய வெற்றியால் மானுடத்துக்கு என்ன நன்மை கிடைத்தது. மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது. கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் ஏழைக்கு இந்த வெற்றியால் பலனிருக்குமா... அபலையாகக் கவலையுடன் அலைந்துகொண்டிருப்பவருக்கு இந்த வெற்றியால் ஏதேனும் பயன் கிடைக்குமா என்பதில்தான் அது வெற்றியா தோல்வியா என்பது தீர்மானிக்கப்படும்.

வாழ்வை மாற்றிய வாக்கியம்! #IraiAnbu #IAS வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்.

Posted by Vikatan EMagazine on Sunday, September 22, 2019

2007-ம் ஆண்டு எனக்கு வெளிநாட்டில் விபத்தொன்று ஏற்பட்டது. உள்நாட்டில் ஏற்பட்டாலே கொடுமையானதுதான். கையில் ஏற்பட்டால்கூட பரவாயில்லை நடந்துசென்றுவிடலாம். காலில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும். மூன்று மாதங்கள் படுக்கையில்தான் பயணம் செய்துகொண்டிருந்தேன். அந்தச் சூழ்நிலையில் எனக்கு இந்த

''தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய் வருத்தக்கூலி தரும்''

என்னும் குறள்தான் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. கால்கள் சரியாக வேண்டுமென்றால் வலியைப் பொறுத்துக்கொண்டு நடந்துதான் ஆக வேண்டியிருந்தது. கால்களுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும் இவற்றையெல்லாம் செய்தால்தான், நடக்க முடியும் என்று டாக்டர் சொன்னார்.

`உன்னை நீயே பாராட்டிக்கிற மாதிரி, எதைச் செய்தாலும் சரி!' அனுபவம் பகிரும் கே.வி.ஆனந்த் #Motivation

ஆனால், நடக்க முடியாது என்று சிலர் சொன்னார்கள். நடக்கும்போது சாய்ந்து சாய்ந்துதான் நடக்கிறீர்கள் என்று சொன்னார்கள். உங்களால் முன்பு மாதிரி நடக்க முடியாதென்று சொன்னார்கள். ஆனால், நான் மேலே சொன்ன குறளை துணைக்கு அழைத்துக்கொண்டு கடுமையான பயிற்சிகளை விடாமுயற்சியுடன் செய்தேன் அதன் பலன் கடந்த 12 ஆண்டுகளாக நல்லமுறையில் நடக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு