Published:Updated:

காய்கறிகள், பழங்கள், மரங்கள், பொம்மைகள்... வங்கி ஊழியரின் அசத்தல் `ரப்பர்’ கலெக்‌ஷன்ஸ்!

ரப்பர் கலெக்‌ஷன்களுடன் ராமச்சந்திரன்
News
ரப்பர் கலெக்‌ஷன்களுடன் ராமச்சந்திரன்

ராமநாதபுரத்திலுள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வரும் ராமச்சந்திரன், பல்வேறு வகையிலான ரப்பர்களை கடந்த 16 ஆண்டுகளாக சேமித்து வருகிறார். அவர் சேமித்து வைத்திருக்கும் ரப்பர்களில் பல ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமச்சந்திரன். கமுதியில் இவர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்து, "அசிஸ்டென்ட் மேனேஜர் ராமச்சந்திரன் வீடு எங்க இருக்கு?" எனக் கேட்பதை விட, "ரப்பர் கலெக்‌ஷன் ராமச்சந்திரன் வீடு எங்க இருக்கு?" எனக் கேட்டால் சட்டென வீட்டை அடையாளம் காட்டி விடுகிறார்கள்.

வீட்டின் வரவேற்பறையில் பென்சில் அழிப்பானான ரப்பர்களில் காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், வீட்டு உபயோகப் பொருLகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பொம்மைகள், செடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மிட்டாய் வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என பல பொருட்களின் வடிவங்களில் மொத்தம் 786 ரப்பர்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

ரப்பர் கலெக்‌ஷன்ஸ்
ரப்பர் கலெக்‌ஷன்ஸ்

ரப்பர் சேமிப்பிற்கான காரணம் குறித்து அவரிடமே கேட்டோம். "என்னோட சொந்த ஊரு மதுரை. நாலாம் கிளாஸ் படிச்சப்போ ரப்பர் வாங்குறதுக்காக ஸ்டேஷ்னரி கடைக்குப் போனேன். ‘ரப்பர் இருக்காண்ணே’ன்னு கடைக்கார அண்ணன்கிட்ட கேட்டேன். அதற்கு அவர், ’இதுல எந்த ரப்பருப்பா வேணும்?’னு நாலஞ்சு ரப்பரை எடுத்துக் காட்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வழக்கமா மஞ்சள் நிற கண்ணாடித்தாள்ல செவ்வக வடிவத்துல இருக்குற வெள்ளை ரப்பருடன் பேட், பந்து, வாழைப்பழம், ஆப்பிள்னு வேற வேற வடிவத்துல உள்ள ரப்பர்களைக் காட்டினார். பென்சில்ல எழுதினதை அழிக்கிறதுக்காக வெள்ளை ரப்பரையும், ஆசைக்காக மற்ற ரப்பர்களையும் வாங்கினேன். அன்னையில இருந்து திண்பண்டம் வாங்குறதுக்காக அம்மா, அப்பா கொடுத்த காசுகள்ல விதவிதமான ரப்பர்களை வாங்கி சேகரிச்சேன். கோயில் திருவிழா, உறவினர்கள் வீடுன்னு, எந்த ஊருக்குப் போனாலும் முதல்ல, அங்க இருக்குற ஸ்டேஷ்னரி கடைக்குப் போயி ரப்பர்களைத்தான் வாங்குவேன்.

ரப்பர்களுடன் ராமச்சந்திரன்
ரப்பர்களுடன் ராமச்சந்திரன்

சேர்த்து வச்சிருந்த ரப்பர்கள்ல ’கார்’ ரப்பரை எடுத்து அழிச்சதுக்காக அண்ணங்கிட்ட மூணு மாசம் பேசாம இருந்திருக்கேன். வீட்ல ரப்பர்களை யாரும் எடுத்துடக்கூடாதுன்னு தினமும் ஒவ்வொரு இடத்துல மாத்தி மாத்தி வைப்பேன். எல்லா ரப்பரும் சரியா இருக்கான்னு எண்ணி வெச்சப்பிறகுதான் தூங்கப் போவேன். ’கைக்குழந்தை’ வடிவ ரப்பரை தொலைச்சதுக்காக நெருங்கிய நண்பனை அடிக்கப் போயி, பெரிய சண்டையெல்லாம் வந்திருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருதடவை, ’சாக்கோபார்’ ரப்பரை ஒரிஜினல் ரப்பர்னு நினைச்சு, என்னோட தங்கச்சி ஃபிரிட்ஜ்ல வச்சு, கூலிங் ஏறுனதும் கடிச்சுப் பாத்து ஏமாந்துபோன காமெடியெல்லாம் நடந்திருக்கு. ஸ்டேஷ்னரி கடைக்குப் போனா கூட்டம் குறையுற வரைக்கும் காத்து நிற்பேன். கூட்டம் கலைஞ்சதும் கடைக்குள்ள போயி, ரப்பர் கேட்பேன். பெரும்பாலும் பத்து பதினஞ்சு ரப்பர்களைத்தான் காட்டுவாங்க. ”இருக்குற ரப்பரை மொத்தமா கொண்டாங்கண்ணே. நான் பார்த்து எடுத்துக்கிறேன்”ன்னு சொல்லுவேன். “என்னப்பா மொத்த ரப்பரையா வாங்கப் போறீங்க?” ன்னு கிண்டலாக் கேட்பாங்க.

வித்தியாசமான ரப்பர் கலெக்‌ஷன்ஸ்
வித்தியாசமான ரப்பர் கலெக்‌ஷன்ஸ்

கேக், செல்போன், மரம், நத்தை, பாம்பு, ஆமைன்னு 31 ரப்பர்களை வாங்கினேன். மும்பையில இதே வங்கியில் கிளார்க்காக வேலை பார்த்தப்போ ஞாயிற்றுக்கிழமை லீவுல ரயில் ஏறி ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி, அடுத்தடுத்த ஊர்களுக்கு ரப்பர் வாங்குறதுக்காவே போயிருக்கேன். எங்கிட்ட இல்லாத புது மாடல் ரப்பர் என்ன இருக்குன்னுதான் முதல்ல பார்ப்பேன். கம்ப்யூட்டர், லேப்டாப், கீ போர்டு, கிட்டார், வயலின், பழைய மாடல் போன், பழைய டேப் ரெக்காடர் கேசட், குடம், தட்டு, டம்ளர், பால் புட்டின்னு நிறைய வித்தியாசமான ரப்பர்கள் நிறைய இருக்கு. இதுல ’கிட்டார்’ ரப்பரை 300 ரூபாய் கொடுத்து ஒரு நண்பர்கிட்ட இருந்து வாங்கினேன்.

ஆரம்பத்துல அம்மா, அப்பா, சொந்தக்காரங்க எல்லாருமே ரப்பர்களை கலெக்ஷன் பண்றதுக்காக திட்டியிருக்காங்க. சிலர், கிண்டலாவும் பேசியிருக்காங்க. ஆனா, நான் எதைப் பத்தியுமே கவலைப்படலை. என்னோட இந்த ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு என்னை திட்டினவங்களும் அவங்க ஷாப்பிங் போகும்போது அவங்களுக்கு வித்யாசமா தெரியுற ரப்பர்களை வாங்கிக் கொடுத்திருக்காங்க. 8-ம் கிளாஸ்ல இருந்து இப்ப வரைக்கும் என்னோட பிறந்தநாளுக்கு ரப்பர்களையே பரிசா கொடுத்திருக்காங்க. கல்யாணத்துப் பிறகு என் மனைவியே நிறைய ரப்பர்களை வாங்கிக் கொடுத்திருக்காங்க.

சேகரித்த நாணயங்களுடன் ராமச்சந்திரன்
சேகரித்த நாணயங்களுடன் ராமச்சந்திரன்

’ரப்பர் ராமு’, ‘ரப்பர் கலெக்டர்’, ‘ரப்பர் பெட்டி’ இதெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு வச்ச செல்லப் பெயர்கள்”என்றவர், இறுதியாக, "ஸ்கூல், காலேஜ் தாண்டி பேங்க் வேலைக்கு வந்தும் கல்யாணம் ஆகியும் என்னோட ரப்பர் தேடல் தொடருது. இன்னும் தொடரும்” என்றார்.

ரப்பர்கள் மட்டுமல்ல... அஞ்சல் தலைகள், பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பழங்காலப் பொருட்கள், கடல் சிப்பிகள், பாரம்பர்ய விதைகள் என நீள்கிறது இவரது சேமிப்பு பட்டியல்.