Published:Updated:

"சீக்கிரம் எழுந்து நடப்பேன்னு நம்பிக்கை வந்திருக்கு"- விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழ்ந்த அவினாஷ்

டாக்டர் அவினாஷ் மனைவியுடன் ( dev )

"பிறர் உதவி இல்லாம நடக்கிற அளவுக்குக் குணமாகிட்டா போதும். மறுபடியும் அரசு ஆஸ்பத்திரியிலேயே மக்களுக்கான மருத்துவப் பணியைச் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இலவசமாவும் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்."

"சீக்கிரம் எழுந்து நடப்பேன்னு நம்பிக்கை வந்திருக்கு"- விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழ்ந்த அவினாஷ்

"பிறர் உதவி இல்லாம நடக்கிற அளவுக்குக் குணமாகிட்டா போதும். மறுபடியும் அரசு ஆஸ்பத்திரியிலேயே மக்களுக்கான மருத்துவப் பணியைச் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இலவசமாவும் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்."

Published:Updated:
டாக்டர் அவினாஷ் மனைவியுடன் ( dev )

டாக்டர் தம்பதி அவினாஷ் - ஸ்ரீமதி, காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததுமே இரவில் காஞ்சிபுரத்திலிருந்து ஈரோடு நோக்கி காரில் பயணம் செய்தனர். விடியற்காலையில் இவர்கள் பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கியது. மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், காரை இயக்கிய அவினாஷுக்கு முதுகுத் தண்டுவடப் பாதிப்பு ஏற்பட்டது. அந்த விபத்தே இவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடக்க முடியாமல் வீல் சேரில் வீட்டிலேயே முடங்கினார் அவினாஷ்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்
dev

இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த அறுவைசிகிச்சை ஒன்று அவினாஷுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மேல் சிகிச்சைகளுக்குப் பல லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில், டாக்டர் தம்பதி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தனர். மனதை உருக்கும் இவர்களின் தற்போதைய நிலை குறித்த கட்டுரையை சமீபத்தில் விகடன் இணையதளத்தில் வெளியிட்டோம்.

வாசகர்கள் பலரும் தொடர்ந்து பண உதவி செய்து, மனித நேயத்தின் மகத்தான அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். தற்போதுவரை 5.38 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகர்கள் பலரும் பண உதவி செய்தது மட்டுமன்றி, டாக்டர் அவினாஷை தொடர்புகொண்டு விரைவில் குணமடைய வாழ்த்தியும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் அவினாஷ் - ஸ்ரீமதி தம்பதி மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் தற்போதுதான் சிறு துளி மகிழ்ச்சி மலர்ந்திருக்கிறது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அவினாஷ், தற்போதைய நிலை குறித்துப் பேசினார்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்
dev

“அந்த விபத்துக்குப் பிறகான சிகிச்சைகளுக்கு நிறைய செலவு பண்ணிட்டோம். அந்தக் கடனையே இன்னும் கட்டி முடிக்கலை. அதனால, சிப் வைக்கிற ஆபரேஷனுக்குப் பணம் இல்லாம தவிச்சு, சிகிச்சை எடுத்துக்கிறதையே ரொம்ப காலமா தள்ளிப்போட்டோம். பலரும் உதவினதால, சிப் வைக்கிற சிகிச்சை நல்லபடியா முடிஞ்சது. அதுக்கே 20 லட்சம் ரூபாய்வரை செலவாச்சு. பிறகு, இப்ப நடந்துட்டு இருக்கும் மேல் சிகிச்சைக்காகப் பணம் இல்லாம தடுமாறினோம். இந்த நிலையில்தான் கடவுள்மேல பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்தோம்.

அதே நேரத்துல விகடன்ல என்னைப் பத்தின பேட்டி வந்த பிறகு, பலரும் எனக்குத் தினமும் போன் பண்றாங்க. `கவலைப்படாதீங்க. நிச்சயமா குணமாகி இயல்புநிலைக்கு வந்திடுவீங்க. உங்களுக்காக பிரார்த்தனை செய்றோம்’னு சொல்றாங்க. இலங்கையில் இருந்து ஓர் அம்மா பேட்டியைப் படிச்சுட்டு என்கிட்ட ஆறுதலாகப் பேசினாங்க. என்னோட அம்மாவே பேசியதுபோல உணர்ந்தேன். தினமும் வாசகர்கள் போன் பண்றாங்க; வாட்ஸ்அப்பில் உரையாடுறாங்க. முன்பு நான் வேலை செய்த நீலகிரி மாவட்டம் கூடலூர் ப்ளாக் கிராம மக்கள் சிலரும், மருத்துவர்கள் பலரும் பேட்டியைப் படிச்சுட்டு நெகிழ்ச்சியாவும் தன்னம்பிக்கையாவும் என்னிடம் பேசினாங்க.

பண உதவி கிடைக்குது, இல்லைங்கிறதையெல்லாம் தாண்டி, எனக்காக நேரம் ஒதுக்கி, ஆறுதலா பலரும் பேசுறதே பெரிய விஷயம். இத்தனை பேரின் அன்பைச் சம்பாதிச்சதைதான் பெரிய கொடுப்பனையாக நினைக்கறேன். இதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை.
டாக்டர் அவினாஷ்

மகிழ்ச்சி, நெகிழ்ச்சினு விவரிக்க முடியாத உணர்வால் பெரும் நம்பிக்கை இப்பதான் கிடைச்சிருக்கு. எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என்கிற அவினாஷின் குரல் தளர்கிறது.

சற்று இடைவெளிவிட்டு ஆசுவாசமாகிப் பேசுபவர், “சிப்பை இயங்க வைக்க தினமும் ரெண்டு வேளையும் தொடர் சிகிச்சை எனக்குத் தரப்படுது. லேசான முன்னேற்றத்தை உணர்கிறேன். என்னோடு இருக்கும் மனைவிதான் என்னை முழுமையா பார்த்துக்கிறாங்க. மனைவியும் மருத்துவர் என்பதால, என்னோட உடல்ல ஏற்படும் மாற்றங்கள் எல்லாமே அவங்களுக்குத் தெரியும். அதனால, என்னைப் பார்த்துக்க நீண்டகால விடுப்பில் என்கூடவே இருக்காங்க. என்னால எங்கயும் வெளிய போக முடியாது. ஹாஸ்பிட்டல்லயேதான் இருக்கேன். மழை வந்தால் மட்டும் ஜன்னல் பக்கம் நின்னு மழையை ரசிப்பேன்.

டாக்டர் அவினாஷ்
டாக்டர் அவினாஷ்
dev

இப்ப நடக்கும் மேல் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைக்கும்னு நம்பறோம். பிறர் உதவி இல்லாம நடக்கிற அளவுக்குக் குணமாகிட்டா போதும். மறுபடியும் அரசு ஆஸ்பத்திரியிலேயே மக்களுக்கான மருத்துவப் பணியைச் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இலவசமாவும் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன். என்னைப்போல முதுகுத் தண்டுவட பாதிப்புள்ளவங்களுக்கும் என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன். அந்த நாளுக்காகக் காத்திருக்கேன். மேலும், எனக்குப் பண உதவி செய்த, அன்பாகப் பேசிய அனைத்து வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” - ஆனந்தக் கண்ணீர் இடைமறிக்க அமைதியாகிறார் அவினாஷ்.

கணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசும் ஸ்ரீமதி, ``முன்பு மருத்துவ நண்பர்கள் பலரும் உதவினதால முதல் கட்ட ஆபரேஷன் நடந்துச்சு. எங்ககிட்ட சேமிப்புனு எதுவுமில்லை. யார்கிட்டயும் இதுக்குமேல பண உதவி கேட்க முடியாத நிலை. நான் டாக்டர் வேலைக்குப் போனாதான் குடும்பத்தையே நிர்வகிக்க முடியும்ங்கிற சூழல். மேல் சிகிச்சைக்கான பணத் தேவைக்கு என்ன பண்றதுனு தெரியாம, தினமும் குழப்பத்திலும் கவலையிலும் இருந்தோம். எங்களைப் பத்தின பேட்டி வெளியான பிறகு, வாசகர்களின் உதவி கிடைக்க ஆரம்பிச்சதும் எங்க பாரமெல்லாம் குறைஞ்சுடுச்சு. இப்ப பலரின் உதவியால் கிடைச்சிருக்கும் நம்பிக்கைக்குப் பிறகுதான், அத்தையாலும் என்னாலும் நிம்மதியா தூங்கவே முடியுது.

டாக்டர் அவினாஷ் தாய், மனைவியுடன்
டாக்டர் அவினாஷ் தாய், மனைவியுடன்
dev

இப்ப கணவருக்கு நடக்கும் மேல் சிகிச்சை நல்ல முறையில் நடக்கப் போறதுக்கு, விகடன் வாசகர்கள்தாம் முக்கிய காரணம். இக்கட்டான கொரோனா பாதிப்புக்கு நடுவிலும் வாசகர்களின் இந்த உதவி பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கு. சிகிச்சை முடிஞ்சு இவர் நடக்கிற அளவுக்கு முன்னேற்றம் கிடைச்சா, அதை வீடியோ எடுத்து விகடன் வாசகர்களுக்குத் தெரியப்படுத்தி இருவரும் நன்றி தெரிவிப்போம். அந்த நாளுக்காக நாங்க ஆவலோடு காத்திருக்கோம். எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி” என்று கண் கலங்கக் கூறுகிறார்.