பெற்றோரைத் தவிக்கவிட்டு சம்பளத்தை புகுந்த வீட்டுக்கு கொடுப்பது சரியா? - ஆதங்கப் பதிவு #MyVikatan

பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவிக்கும் நடுத்தர குடும்பத்துப் பெண்ணின் ஆதங்கப் பதிவு!
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
25 வருடங்களாக பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, திருமணமாகி வேறு இல்லம் சென்றேன். இத்தனை நாள்களாக என்னை வளர்த்த அம்மாவுக்கு 3 மாதங்களாக என் சம்பளத்தின் சிறு பகுதியைக் கொடுத்துவருகிறேன். திடீரென வீட்டில் சண்டை. இந்த மாதத்தில் நான் வேலைக்கு விடுப்பு எடுத்ததால் சம்பளத்தில் குறைக்கப்பட்டது. ஆனால், என் அம்மா வீட்டுக்கு வழக்கமான சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, இங்கே குறைவாகக் கொடுத்ததனால் "சம்பளம் கம்மியா வந்தாகூட, எனக்கு குடுக்கறதுலதான கம்மி பண்ற. உங்க அம்மாக்கு கரெக்ட்டா தந்துர்ற" என்றார் என் கணவர்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இத்தனை வருடங்களாக என்னை ஆளாக்கியது அம்மா-அப்பாதான். என் படிப்பு முடிந்து வேலை கிடைத்தபோது, இப்போது வாங்கும் சம்பளத்தைவிட பலமடங்கு குறைவாக வாங்கினேன். வேலைக்குச் சேர்ந்து, முதல் 6 மாதம் சம்பளம் இல்லாமல் வேலை கற்றுக்கொள்ளவேண்டிய சூழல். அந்த 6 மாதமும் தங்கும் இடத்திற்கு வாடகை, சாப்பாடு மற்றும் போய்வர ஆகும் செலவு என எல்லாம் அம்மா-அப்பா தான் செய்தார்கள்.
நாங்கள் நடுத்தரக் குடும்பம் என்று சொல்ல முடியாத அளவுக்கு பணக் கஷ்டத்தில் இருந்தோம். அந்தச் சூழலிலும் எனக்கு அந்த 6 மாதமும் பணம் அனுப்பிவைத்தார்கள். என் தம்பி, தங்கை படிப்புச் செலவு ஒருபுறம். அம்மா, பல நாள்கள் சரியா சாப்பிடாமல்கூட வேலைபார்ப்பார்கள்.

பயிற்சி முடிந்து, அடுத்த 6 மாதம் ரூ.6,500 தான் என் சம்பளம். இதில் தங்குமிடம், சாப்பாடு என என் செலவே ரூ.5,000. மீதத்தில் வீட்டுக்கு போய் வரவே சரியாக இருக்கும். அந்த 6 மாதத்தில், நான் அவர்களுக்குக் கொடுத்த சின்ன நிம்மதி என்னுடைய செலவு அவர்களுக்கு இல்லாமல் பார்த்துக்கொண்டதுதான். அதன்பிறகு திருமணம் செய்து வைத்தார்கள். "இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை வளர்த்த அம்மா-அப்பாவுக்கு என் சம்பளத்தின் 20% தருவது தவறா?"
புகுந்த வீட்டில் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்னைகளால், இனி வீட்டுக்கு எதுவும் அனுப்ப வேண்டாம் என்று கோபத்தில் தோன்றும். ஆனால், நான் அனுப்பும் அந்த சின்னத் தொகை, அம்மாவின் கடன்களைக் கொஞ்சம் குறைக்கும் என்று நினைக்கும்போது கோபம், ரோஷம் பறந்துவிடுகிறது.

"நாங்க என்ன கல்யாணத்துக்கு அப்பறம் எங்க வீட்டுக்கு கொடுத்துட்டா இருந்தோம்" என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில், பெண்கள் பெரும்பாலும் அதிகம் படிக்கவில்லை. 10-வது, 12-வது முடித்துவிட்டு வேலைக்குப் போவார்கள். திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளைப் படிக்கவைக்க பெற்றோர் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கட்டணங்கள் வானளவு உயர்ந்துவிட்டன. பெரும்பாலும் கல்விக்கடன் வாங்கித்தான் படிக்கவைக்கிறார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகள் படித்துமுடித்து உடனே வேலைக்குச் சென்று அந்தக் கடனை அடைக்கிறார்களா என்றால் இல்லை. குறிப்பாக, பெண் பிள்ளைகள் கல்விக் கடனை அப்படியே விட்டுவிட்டு திருமணமாகிச் சென்றுவிடுகின்றனர். ஆகமொத்தம், கஷ்டம் முழுவதும் பெற்றோருக்குத்தான்.

பெண்கள் சம்பாதிக்கும் முழுச் சம்பளமும் புகுந்த வீட்டுக்குதான் என்று சொல்வது சரியா? இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். மற்றொரு புறம், திருமணமானதும் மாமனார் மாமியாரைத் தனியாக விட்டுவிட்டு, தன் கணவரை தனிக்குடித்தனம் கூட்டிச்செல்லும் பெண்களும் பெருகி வருகிறார்கள். அதுவும் தவறு.
"என்ன யோசித்து என்ன பிரயோஜனம். குற்ற உணர்ச்சியோடவே வாழவேண்டியதுதான். ஏற்கெனவே இருக்கும் கஷ்டத்துல, என்னுடைய கல்யாணக் கடன் வேற..." என்று நினைவுகள் வட்டமிட வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.
-சுபா பிரியா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.