2019 -ன் ரெசல்யூஷன் கதை என்னாச்சி! இந்தாண்டு எப்படி? - விகடன் சர்வே முடிவு! #VikatanInfographics

உங்களைச் சரிசெய்துகொள்ள, பாராட்டிக்கொள்ள, சின்னத் தூண்டு சக்தியாக ரெசல்யூஷன் இருக்கலாம். நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க.... கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் சந்தோஷமா கொண்டாடுங்க.
2019-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். சில நாள்களில் 2020-ம் ஆண்டு வரவிருக்கிறது. ஒவ்வொரு புதுவருடமும் பல எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கும். இந்த எதிர்பார்ப்பில் முக்கியமான ஒன்று, நியூ இயர் ரெசல்யூஷன். நம்மிடம் இருக்கும் சின்னச் சின்னத் தவறுகளைத் தூசித்தட்டி சரி செய்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள் மட்டுமே ரெசல்யூஷன் எடுக்கிறார்கள்.

இந்த வருடத்திலிருந்து ஜிம்முக்குப் போகணும், குடிக்கக்கூடாது, செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் எனப் பல ரெசல்யூஷன் எடுத்தாலும், ஜனவரி முடிவதற்குள் நாம ரெசல்யூஷன் எடுத்தோமா என்று யோசிக்க வைத்து விடும். நீங்க எடுத்த ரெசல்யூஷன் என்ன ஆச்சு பாஸ் எனக் கேட்டா, 'ஜெயிக்குறமோ, இல்லையோ முதல்ல சண்ட செய்யணும்-னு' தனுஷ் மாதிரி டயலாக் பேசிட்டு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் பாஸ் எனச் சொல்கின்றவர்கள் பலர்.
2020 வரப்போகுது... உங்களின் நியூ இயர் ரெசல்யூஷன் என்ன?, என விகடன் இணையதளத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், 'இந்த 2019-தோடு ஏதேனும் ஒன்றை விட்டுவிடவேண்டும்' என்று 61.1 சதவிகிதம் பேர் தீர்மானம் எடுத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதில், 18.1 சதவிகிதம் பேர் புதிதாக அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரெசல்யூஷன் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதேபோல், பணத்தை அதிகம் சேமிக்க வேண்டும். கடனை அடைக்க வேண்டும் என்பதே பலரின் ரெசல்யூஷனாக உள்ளது. 2019-ல் முடிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆரம்பிக்கவேயில்லை என்று 47.3 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். மேலும், எடுத்த தீர்மானங்களைச் சரிவர முடிக்காததற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு, ஏனென்று எனக்கே தெரியவில்லை என்ற பதிலை 39.3 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. நடந்த அனைத்தும் நன்மைக்கே என ஏற்றுக்கொள்வதே நாம் எடுக்கும் சிறந்த முடிவாகும். தேவையற்ற பழக்கங்களையும், பயனில்லாத கொள்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, உங்களைச் சரிசெய்துகொள்ள, பாராட்டிக்கொள்ள, உந்துசக்தியாக ரெசல்யூஷன் அமையலாம்.
நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க.... வரவிருக்கும் ஆண்டை சந்தோஷமா வரவேற்று மகிழுங்கள்.