Published:Updated:

`இணைய பூம்பூம் மாடுகள் யார்?' -கேள்விகள் எனும் சிறகுகளை எப்போது விரிக்கப் போகிறோம்? #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

அனைவராலுமே சுலபமாகக் கேள்வி கேட்டுவிட முடியாது என்பதுதான் உண்மை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உங்களுக்குக் கேள்வி கேட்கப் பிடிக்குமா.. அல்லது பதில் கூறப் பிடிக்குமா? என்று உங்களிடம் யாரேனும் கேள்வி கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்!

பெரும்பான்மை மனிதர்களின் விருப்பமான பதில், கேள்வி கேட்பதாகவே இருக்கும். ஆனால் கேள்வி கேட்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

அனைவராலுமே சுலபமாகக் கேள்வி கேட்டுவிட முடியாது என்பதுதான் உண்மை.

அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய வித்தை வினவுதல் எனும் கேள்வி கேட்டலே.

வினவுதல், உசாவுதல், வினா எழுப்புதல் எனப் பல்வேறு சொற்கள் கேள்வி கேட்டலுக்கு வழங்கப்படுகின்றன.

Representational Image
Representational Image

ஏன்? எதற்கு? எப்படி? என வினாக்கள் எழுப்பப்பட்டு, அதன் மூலமாகவே அறிவியலும் நாகரிகமும் வளர்ந்துள்ளன.

கோடானகோடி கண்டுபிடிப்புகளின் ஆணிவேராக இருப்பதும், மனித நாகரிகத்தின் அடிநாதமாய் இருப்பதும் அவ்வப்போது யாரோ எழுப்பிக்கொண்டிருக்கும் வினாக்களே!

மனித வாழ்க்கையேகூட யாருமே பதில் தர முடியாத கேள்விதான் என்பார்கள்.

குழந்தைகள் கேள்வி கேட்கும்போது அவர்களின் அறிவு வளர்கிறது. அறிஞர்கள் கேள்வி கேட்கும்போது அறிவியல் வளர்கிறது. நமது சிந்தனை எனும் பெட்டியில் சேர்க்கப்படும் செல்வமாக வினாக்கள்தான் எப்போதுமே அமைகின்றன.

இன்று நம் கண்முன் உள்ள கண்டுபிடிப்புகள், தத்துவங்கள் அனைத்தும் யாரோ ஒருவரின் கேள்வியால் உருவாக்கப்பட்டவையே.

ஆயிரம் பேர் முன்னிலையில் தன்னுடைய கேள்விகளை தைரியமாகக் கேட்கக்கூடிய ஒருவன் எத்தனை தன்னம்பிக்கை மிகுந்தவனாக இருக்க வேண்டும்? தன்னம்பிக்கை இல்லாதவர்களால் கேள்விகள் கேட்கவே இயலாது.

Representational Image
Representational Image

அறிந்துகொள்ளும் ஆர்வமுடையோர்க்குக் குறிப்பிட்ட நேரத்தில்தான் கேள்விகள் தோன்றும் என்பதில்லை. இரவில் உறங்கும்போதுகூட கேள்விகள் தோன்றலாம். கிடைத்த வேலையைச் செய்பவர்களைவிட, பிடித்த வேலை செய்பவர்களுக்கு அதிகப்படியான வினாக்கள் உருவாவது இயல்பே.

அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறு வகையான வினாக்கள் இருப்பதாய் நன்னூல் சுட்டுகிறது.

யாருக்கெல்லாம் சிந்தனையாற்றல் இருக்கிறதோ, யாரெல்லாம் சுயமாகச் சிந்திக்கிறார்களோ, யாருக்கெல்லாம் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வினா கேட்பவர்களாகவே இருக்கின்றனர்.

கேள்விகளைக் கருக்கலைப்பு செய்யும் ஒரு பயங்கரமான ஆயுதம் பயம். பயமுற்ற ஒருவரால் ஒருபோதும் எதையும் கேட்கவோ, சிந்திக்கவோ இயலாது.

இன்று நாம் சமூக வலைதளங்களில் வரக்கூடிய பெரும்பான்மையான செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்வதோடு நின்றுவிடாமல் அவற்றை மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்யும் போஸ்ட்மேன் வேலையையும் கவனமாகவே செய்கிறோம்!

Representational Image
Representational Image

நம்மிடமோ, பிறரிடமோ அல்லது இணையத்திலோ நாம் வினாக்கள் கேட்பதன் மூலமாகவே வலைதளங்களில் நமக்கு வரக்கூடிய தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியும். ஒரு தகவலை நாம் பகிர்கிறோம் என்றால் அந்தத் தகவலின் உண்மைத்தன்மைக்கு நாம்தான் முழுப்பொறுப்பும் என்பதை மறந்துவிடக்கூடாது.

வாய்ப்பு கிடைக்கும்போது வினாக்கள் கேட்பவர்களை விட வாய்ப்புகளை உருவாக்கி வினவுபவனே அறிவாளி ஆகிறான். ஒருவர் வினவும் தோரணையை வைத்தே அவர் அறிவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்துவிட முடியும்.

கேள்விகள் என்பவை சிறகுகள் போன்றவை. அந்தச் சிறகுகளைத் தொடர்ந்து சுருட்டி வைத்துக்கொண்டிருக்க நம் குழந்தைகளுக்குப் பழக்குகிறோம்.

சிறகுகளை விரித்தால் மட்டுமே குழந்தைகளால் அறிவு வானில் பறக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

வினாக்கள் மூலமே பல பல புரட்சிகள் நடந்தன; விடுதலைகள் கிடைத்தன; கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. வினாக்களை எழுப்பியே மனித நாகரிகம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.

கேள்விகள் மனித கண்டுபிடிப்புகளின் அகரங்கள். மனித வளர்ச்சியின் சிகரங்கள்.

புறச்சூழலின் தேவைக்காகப் பிறக்கும் வினாக்களை விட, அகத்தூண்டலால் உருவாகும் வினாக்கள் மிகவும் வலிமையானவை. மாபெரும் விளைவுகளை உண்டாக்க வல்லவை.

Representational Image
Representational Image

ஒரு முட்டாள் ஆயிரம் பதில்களிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தை விட, ஒரு அறிவாளி ஒரு கேள்வியிலிருந்து கற்றுக்கொள்வதன் வீச்சு அதிகம்.

யார் என்ன சொன்னாலும் அவற்றை சரி...சரி... எனத் தலையை ஆட்டும் இணைய பூம்பூம் மாடுகளாக நம்முடைய இளைய தலைமுறை வளர்ந்து வருவது சற்று வருத்தத்திற்கு உரியது.

கேள்விகள் என்பவை பிறரிடம் பதில்களை எதிர்நோக்கியே என்றுமே கேட்கப்படுவதில்லை. சுய அறிதலுக்காகக் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்க சற்று தாமதம் ஆனாலும், பதில்கள் கிடைப்பது கடினமாக இருந்தாலும் பதில்களின் வீச்சு அதிகம்.

ஒன்றைத் தெரிந்துகொள்வதற்காகக் கேட்பது தகவல். அறிந்துகொள்வதற்காக கேட்பது அறிவு. புரிந்து கொள்வதற்காக தனக்குத்தானே கேட்டுக் கொள்வதே ஞானம்.

மனிதனது சிந்தனையைக் குளமாகத் தேங்க விடாமல், ஆறாக ஓடி பெருக்குவதிலும், கடலாகப் பல்கிப் பெருகுவதிலும் பெரும் பங்கு வகிப்பவை வினாக்களே!

மனதின் அடியாளத்திலிருந்து எழும் சிற்சில கேள்விகள் நம்மை உறங்கவிடாமலும், குற்றவுணர்வை அதிகரிக்கவும் செய்யவல்லவை.

கேள்வி கேட்டல் சிந்தனையாளர்களின் அடிப்படை மொழி. குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வழி!

வினாக்கள் கேட்டலே கற்றலின் ஆரம்பம்.

ஒரு வகுப்பில் உள்ள குழந்தைகளிடம் ஆசிரியர் வினாக்கள் கேட்டு, அவற்றிற்கு மாணவர்களை விடைகளைக் கூறச் சொல்வதைவிட, மாணவர்களையே வினாக்களைக் கேட்க வைக்கும்போது அவர்களுடைய கற்றல் திறனும், சிந்தனை ஆற்றலும் மேலும் மேலும் வளரும் என்பது உறுதி.

இன்று மெக்காலே கல்வி முறையின் அடிப்படையில் தேர்வுகளில் மாணவர்களுக்கு வினாக்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் விடைகளை எழுதுகிறார்கள். ஆனால் உண்மையான செயல்வழிக் கற்றல் முறையிலேயே மாணவர்களுக்கு வினாக்கள் கேட்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பதில் அளிப்பதைவிடகேள்வி கேட்பதே அவர்களின் கற்றலை வளப்படுத்தும்.

Representational Image
Representational Image

நமக்கு பதில் தெரியாது என்பதாலேயே, நமது குழந்தைகள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் அபத்தமான கேள்விகளாக மாறிவிடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது குழந்தைகளைத் தொடர்ந்து கேள்விகள் கேட்க ஊக்குவிப்போம்.

தினமும் இத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்று வரையறை கூட வைத்துக்கொள்ளலாம். சிறப்பான வினாக்களுக்குப் பரிசுகளும் அளிக்கலாம்.

குழந்தைகளால் கேட்கப்படும் கேள்விகள் ஆரம்பத்தில் முட்டாள்தனமான, அபத்தமான கேள்விகளாக இருந்தாலும் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் என்பதே சிந்திக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி.

அபத்தமான, முட்டாள்தனமான கேள்விகள் குழந்தைகளிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டே இருக்காது. ஒரு சில நாள்களில் அத்தகைய கேள்விகள் வருவது நின்றுவிடும். அறிவார்ந்த, தனது தேவைக்குரிய கேள்விகள் மட்டுமே குழந்தைகளால் உங்கள்முன் வைக்கப்படும். அப்போது பதில்கூற நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

எல்லா கேள்விகளுக்கும் வெளியிலிருந்து பதில் கிடைக்கும், பிறர் பதில் கூறுவார்கள் என்ற மனநிலையைத் தவிர்த்து, தமது கேள்விகளுக்கு தாமே பதில் தேட வேண்டும் எனும் மனநிலையை நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கிறது என்பதற்கான அடிப்படையான ஆதாரமே அங்கு குழந்தைகள் வினாக்கள் கேட்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதே. எனவே நம்முடைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற வேண்டி நமது குழந்தைகளை வினாக்கள் கேட்க ஊக்குவிப்போம்.

ஒரு சில பதிலற்ற கேள்விகள் வாழ்நாள் முழுதும் நம்மைத் தொடர்ந்து, வாழ்க்கை மீதான நமது விருப்பத்தை பெருங்காதலாய் மாற்றவல்லவை!

கண்டுபிடிப்புகளின் தாயாய்,

மாற்றங்களின் சேயாய் இருந்து வாழ்வை வசீகரமூட்டுபவை வினாக்களே! தொடர்ந்து வினவுவோம்!வாழ்வை வசீகரப்படுத்துவோம்!

கேள்விகள் எனும் சிறகுகளை விரித்து முழு உலகையும் அளப்போம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு