உடல்நலப் பிரச்னையா... கூகுள் பக்கமே போயிடாதீங்க! ஏன் தெரியுமா?! #MyVikatan

ஒரு கேள்விக்கு எந்த செலவுகளுமின்றி நூறு பதில்கள் கிடைப்பதற்கான வாய்ப்பே நம்மை பல சங்கடங்களிலும் மாட்டிவிடுகிறது...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இணையவழி அறிவுசார் பரிமாற்றம் ஓர் உலகளாவிய சமூக புரட்சி. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தொழில்நுட்ப தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது இணையம்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை எனும் கதை இணையத்தின் முழுமுதல் கடவுளான கூகுள் ஆண்டவரிடம் எடுபடாது. தேடுதல் வேட்கை ஒன்றை மட்டுமே தவமாக்கி விசைப் பலகையை தட்டினால் போதும், முன்னால் இருப்பவரின் ஜாதி மத மொழி பிராந்திய பேதமெல்லாம் பார்க்காமல் தட்டிய கதவை உடனடியாகத் திறந்துவிடுவார் இந்த விஞ்ஞான ஆண்டவர்.

ஒரு சிறு தகவலுக்காக நாள் கணக்கில் அலைந்த காலம் போய் நினைத்த நொடியிலேயே நூறு தகவல்களை இணையத்தில் பெறும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு கேள்விக்கு எந்த செலவுகளுமின்றி நூறு பதில்கள் கிடைப்பதற்கான வாய்ப்பே நம்மை பல சங்கடங்களிலும் மாட்டிவிடுகிறது.
இணையத்தின் வளர்ச்சியையும் வீச்சையும் மிகச் சரியாக கணித்த தமிழ் தீர்க்கதரிசிகளில் முதன்மையானவராக எழுத்தாளர் சுஜாதாவை குறிப்பிடலாம். இணையத்தின் கட்டணமற்ற சேவைகளுக்கு விலையாக நாம் கொடுப்பது நமது Privacy என பல ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டவர், இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுப்பியதோடு இணையக்குப்பைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இணையச் செய்திகளின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது. காரணம், யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம்.
நாம் தேடுவதை வெளியிடும் வேகத்துக்கு ஈடாக உள்ளிடப்படும் தகவல்களையும் தணிக்கைகள் ஏதுமின்றி இழுத்துக்கொள்ளும் இணையவெளியில் எண்ணிலடங்காத தகவல் குப்பைகளும் சாகாவரம் பெற்று சுற்றிக்கொண்டிருக்கின்றன.

நமது ஒற்றை வார்த்தை தேடலுடன் ஒத்துப்போகும் இந்தத் தகவல் குப்பைகள் அனைத்தும் கணினித் திரையில் நிறைந்து வழியும் போது, இத்தனை ஆணிகளில் எந்த ஆணியை பிடுங்குவது என வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரை போல தலைசுற்ற தொடங்கி விடுகிறது.
இதயம் என்ற ஒற்றை வார்த்தைக்கு இதய நோய் நிபுணர் டாக்டர் செரியன் பற்றிய தகவல்கள் தொடங்கி, கொலஸ்ட்ரால் பிரச்னைகள், இதயம் நல்லெண்ணெய் விளம்பரம், ஏதோ ஒரு ரோட்டோர ரோமியோ எப்போதோ வரைந்து பதிவேற்றிய மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் படம் என அனைத்தும் வந்து விழும் வாய்ப்பிருக்கிறது.
"Too much information kills information " என்றார் பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆர்வலரும் அரசியல்வாதியுமான நோயேல் மாமேர். ஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம். இன்னும் எளிமையாக, நமது மண்ணின் எவர்கிரீன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு", இது இணையவெளிக்கு முற்றிலும் பொருந்தும். நாம் கூகுளில் உள்ளிடும் ஒற்றை வார்த்தைக்கு ஓராயிரம் விளக்கங்களும் தகவல்களும் வந்து விழும் இணையத்தின் தகவல் சுழியில் சிக்கிக்கொள்பவர்களுக்கு செய்தியின் முக்கியத்துவம் குறைந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சில வேலைகளில் திடுக்கிடும் தகவல்களும் விளக்கங்களும் வந்துவிடுவதுதான் பிரச்னை. அதுவும் நமது தேடல் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பற்றியது என்றால் வேறு வினையே வேண்டாம்.

பாட்டிகள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பேச்சையெல்லாம் அலட்சிய படுத்திவிட்டு, இப்போது தலைவலிக்கும் கால் கடுப்புக்கும் இணையத்தில் பாட்டி வைத்தியம் தேடும் அறிவுஜீவிகள், "அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இப்படி இழுத்தால் இந்த நோயாக இருக்கலாம்" என வந்து விழும் தகவல்களைப் படித்துவிட்டு மாரடைப்புக்கு உள்ளாகக்கூடிய அபாயம் இணையத்தில் உண்டு.
கூகுள் தகவல்களால் பதறும் நேரத்தில் நமது உடல்நிலையை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ள முடிந்தால் மதி. நமது உடல்நிலை பற்றி நன்கு அறிந்த அவர், முந்தைய இரவு முழுவதும் வாட்ஸ்அப் அளவளாவலில் லயித்ததால் வந்த தலைவலிக்கு சரியான தூக்கமே போதும் எனக்கூறி, ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டாமலோடு முடித்துவிடுவார்.
அதில்லாமல் அரசு மருத்துவமனைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு கூகுள் காட்டும் அதிநவீன கிளினிக்குக்கு சென்றுவிட்டால் நமது பர்ஸ் கணமானதாக இருக்க வேண்டியது முக்கியம். லட்சங்களைக் கொடுத்து படித்துவிட்டு கோடிகளில் கடன் வாங்கி மருத்துவ வியாபாரம் செய்பவர்கள் குடும்ப மருத்துவர் கூறிய அதே காரணத்தை கூறுவதற்கு முன்னர் எக்ஸ்ரே, ஸ்கேனர் என சிலபல ஆயிரங்களை கறக்கும் வாய்ப்புகளும் உண்டு.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பது மட்டுமல்லாமல்,
"ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்" எனும் சொலவடையும் கூகுளுக்குப் பொருந்தும்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்புவரை அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று அனைவருக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது. அந்தச் செய்திகள் உடல் ஆரோக்கியம் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.
தேடுவதற்கும், தகவல்களை ப்பெறுவதற்கும் தடைகள் ஏதுமில்லை என்றாலும், தவறாக கேட்ட வரமே சாபமாகி போன இந்திய இதிகாசக் கதைகள் விஞ்ஞான கூகுளுக்கும் பொருந்தும். அவர் சொன்னார் இவர் சொன்னார் என நம்புவதைவிட யார் சொன்னார் எதற்கு சொன்னார் என பகுத்தறிவது கூகுள் தேடலுக்கும் முக்கியம்!
- காரை அக்பர்
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.