Published:Updated:

`வேலையை ரிசைன் பண்றேன்; பம்பர் லாட்டரி விழுந்துருச்சு!'-நேரலை உற்சாகத்தால் நிம்மதியிழந்த செய்தியாளர்

நடாலியா என்னும் பெண் பத்திரிகையாளரும் களத்திலிருந்து லாட்டரி தொடர்பான செய்திகளை நேரலையில் வழங்கிகொண்டிருந்தார்.

பத்திரிகையாளர் நடாலியா
பத்திரிகையாளர் நடாலியா

ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடக்கும் லாட்டரி குலுக்கல் மிகப் பிரபலம். அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கலாக இது அறியப்படுகிறது. நேற்று முன்தினம் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதை ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தனர்.

லாட்டரி
லாட்டரி

நாட்டின் அனைத்து முக்கிய ஊடகங்களும் இதுதொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தன. அப்படித்தான் நடாலியா என்னும் பெண் பத்திரிகையாளரும் களத்திலிருந்து லாட்டரி தொடர்பான செய்திகளை நேரலையில் வழங்கிகொண்டிருந்தார்.

` 30 ஆண்டுகளாக அதே சீரியல் நம்பர்!' -  60 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற லாட்டரி மேன்

இந்த கிறிஸ்துமஸ் லாட்டரிச் சீட்டு சற்று வித்தியாசமானது. ஒரே எண் கொண்ட பல சீட்டுகள் விற்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எண்களை எத்தனை நபர்கள் வாங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்படும். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்படும் எண் கொண்ட லாட்டரிச் சீட்டை ஒரு நபர் மட்டும் வாங்கி இருந்தால் மொத்தப் பணமும் அவருக்கே கிடைக்கும். ஆனால், ஆண்டின் பெரிய குலுக்கல் என்பதால் பலரும் பல சீட்டுகளை வாங்குவதால், ஒருவர் மட்டுமே வெற்றியாளராக வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு.

லாட்டரி குலுக்கல்
லாட்டரி குலுக்கல்

இந்த நிலையில்தான் சுமார் 4 மில்லியன் யூரோ மதிப்பிலான லாட்டரியின் வெற்றியாளருக்கான எண் அறிவிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 32 கோடி ரூபாய் பரிசுக்கான எண் அது. அந்த எண்ணைப் பார்த்த சிலர் தங்களிடம் அந்த சீட்டு இருப்பதைப் பார்த்து கொண்டாடத் தொடங்கினர். இதே எண் தன்னிடம் இருப்பதைக் கவனித்த பத்திரிகையாளர் நடாலியாவும் உற்சாகம் அடைந்தார்.

கொண்டாட்டம்
கொண்டாட்டம்

இந்த உற்சாகத்தில் தொலைக்காட்சி நேரலையிலேயே, ``நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெரும் தொகை எனக்குக் கிடைத்துள்ளது. நான் நாளை முதல் வேலைக்கு வரமாட்டேன். எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்” என அறிவித்தார்.

டி.வி நிலையத்தில் இருந்த சக ஊடக நண்பர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தவண்ணம் நின்றுகொண்டு இருந்தனர். ஆனால், இதெல்லாம் உண்மையான பரிசுத் தொகை என்னவென்று நடாலியா அறிவதற்கு முன்னர் நடந்தது. உண்மையில் வென்றவர்களின் எண்ணிக்கையின்படி நடாலியா வென்ற தொகை, 5000 யூரோ. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ருபாய்.

சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் நேரலையில் தோன்றிய நடாலியா, உண்மையை உணர்ந்துவிட்டதாகவும் எமோஷனல் மனநிலையில் அவ்வாறு செயல்பட்டதாகவும் கூறினார். மேலும் தான் 25 வருடங்கள் பத்திரிகையாளர் பணியைத் திறம்படச் செய்ததாகவும் அதற்கு தான் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்ட அவர், `இந்த ஒரு விஷயத்தைக் கொண்டு பொய்யான தகவல்களை அளிப்பவர் என நினைக்க வேண்டாம்' என்றவர், தவறான தகவல்களை அளித்ததற்காக மன்னிப்பும் கோரினார்.