Published:Updated:

பேரம்! - ஒரு சராசரி பெண்ணின் ஆதங்கம் #MyVikatan

Representational Image
Representational Image

வேலைப் பளுவால் வாடிக் களைத்திருந்த முகங்களில் குறு புன்னகைக்கே ஆற்றல் போதவில்லை இதில் இதழ் விரியும் புன்னகைக்கு எங்கே போவது?

மாலைக் கதிரவன் செவ்வானப் போர்வைக்குள் தன்னை முழுவதும் மூடிக்கொள்ள எத்தணித்துக்கொண்டிருந்த அந்தி மாலை நேரமது... பேருந்தின் ஜன்னல் வழியே காண்கையில் நகரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கிடையே தன்னை ஒளித்தும் மறைத்தும் கண்களுக்கு விளையாட்டுக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மறைத்துக்கொண்டிருந்தது அந்திமாலை ஆதவன்.

Representational Image
Representational Image

வானமோ மேகங்களென்னும் குப்பைகளைக் கூட்டி செவ்வண்ணப் பொடி நீர் தெளித்து நட்சத்திரக் கோலமிடக் காத்திருந்தது, பறவைளோ வரிசை மாறாமல் கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாக குழுக்களாக சென்றுகொண்டிருந்தது, தென்றலோ பன்னீர் துளிகளை அள்ளி நம் மேல் தெளித்துக் கொண்டிருந்தது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கிடையே தன்னந்தனி ஒற்றை ராட்சசிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றுகொண்டிருந்த மரங்கள் அதன் கிளைகளை ஆவேசமாய் உலுக்கிக்கொண்டிருந்தது இதற்கிடையே, மனமோ சில்லென்ற வாடைக் காற்றில் தன்னை முழுவதும் நனைக்க எப்போது இறங்கும் இடம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது. சிலநேரம் பேருந்தில் உள்ள முகங்களை ஒவ்வொன்றாய் கண்கள் நோட்டமிட்டுத் திரும்பியது அலுவலகப் பேருந்து என்பதால் பேருந்தில் இருந்த பெரும்பாலான முகங்கள் மிகவும் பழக்கப்பட்டதாகவே இருந்தது.

நோட்டமிட்ட கண்கள் தெரிந்த முகங்களைச் சந்தித்தபோதெல்லாம் இதழ்விரியா குறுபுன்னகை பூத்துத் திரும்பியது. வேலைப்பளுவால் வாடிக் களைத்திருந்த முகங்களில் குறு புன்னகைக்கே ஆற்றல் போதவில்லை. இதில் இதழ் விரியும் புன்னகைக்கு எங்கே போவது? அது பணியின் களைப்போ? பயணக் களைப்போ? விரக்தியின் களைப்போ? யாதொன்றும் விளங்கவில்லை. ஆனால் எல்லோரின் கண்களும் மனதும் இறங்கும் இடமதை எதிர்நோக்கிக் காத்திருந்தது மட்டும் உண்மை. இறுதியாக நான் இறங்கும் இடம் வந்தது. மனதில் ஆரவாரமும் துள்ளி எழுந்தது பேருந்தில் இருந்து இறங்கியதும் கைகளைக் காற்றில் நீட்டி சில்லென்ற வாடைக்காற்றில் சிறுகுழந்தையாய் துள்ளிவிட மனம் கூக்குரலிட்டது எனினும் மனதின் கூக்குரலுக்கெல்லாம் யதார்த்தமும் நாம் பழக்கி வைத்த நாகரிகமும் செவி கொடுப்பதில்லையே. பேருந்தில் இருந்து இறங்கியதும் வானிலையையும் கண்டுகொள்ளாமல் வருவோர் போவோரையும் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் எனது வழியில் கால்கள் நடைபோடத் தொடங்கின.

Representational Image
Representational Image

சற்று குறுகலான அதேசமயம் நீளமான தெருதான் அது, அந்த தெருவைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால் எனது வீடு. ஆனால், அந்தத் தெருவைக் கடந்துசெல்வதும் அவ்வளவு எளிதல்ல... எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் தெரு. தெருவின் இருபுறமும் பெரிய ஹோட்டல்கள் மற்றும் கடைக் கட்டடங்கள் வானளவு உயர்ந்து நிற்கும் அதன் முகப்புகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஒன்றை ஒன்று உரசி நிறுத்தப்பட்டிருந்தன. தெருவின் முகப்பில் ஒரு டீக்கடை அமைந்திருந்தது. அந்த டீக்கடை முன்பு கூட்டம் எப்போதும் அலைபோல் படர்ந்து, அப்படியொரு தெரு அங்கு இருப்பதையே மறைத்து வைத்திருந்தது. அந்தக் கூட்டத்தைத் தாண்டி உள்ளே வந்தால் இருபுறங்களிலும் பானிபூரி, Fastfood, பழக்கடை வண்டிகள் என ஏராளமான மாலை நேரச் சிற்றுண்டி விற்கும் கடைகள் இருபுறங்களிலும் நடைபாதைக்கே இடமின்றி ஆக்கிரமித்திருந்தது... அதிலும் அத்தனை கூட்டங்களுக்கிடையேயும் நிமிடம் ஒருமுறை அத்தெருவில் அங்குமிங்கும் அலைமோதிக் கடக்கும் இருசக்கர வாகனங்களின் Horn சத்தமது மக்களின் ஆரவாரச் சத்தங்களோடு சேர்த்து காதுகளை செவிடாக்கி விடுமோ... என்றெண்ணத் தோன்றும். இதில் கார்களும் விதிவிலக்கல்ல... இத்தனை நெரிசலிலும் ஓரிரு கார்கள் இந்தத் தெருவின் வழியேதான் கடக்கும் அது கடந்து செல்வதற்குள் பெரும் புயலே வந்து போனதைப் போலாகிடும் இத்தனை காட்சிகளையும் ஒவ்வொன்றாய் நோட்டமிட்டு அந்த தெருவில் முன்னோக்கி நடந்துகொண்டிருந்தேன்...

திடீரென ஒலித்த Horn சத்தமதில் திடுக்கிட்டு ஒரு நொடி நடப்பது என்ன என்பதை அறியுமுன்னே, முன்னோக்கி வந்து கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் எனக்கு வெகு அருகில் நூலிடை இடைவெளியில் நிறுத்தப்பட்டது செய்வதொன்றும் அறியவில்லை மனமோ படபடத்தது. அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் என்னை திட்டிக்கொண்டிருந்தார், ``கண்ண எங்க வச்சுட்டு வர்ற" ``அறிவில்லையா, மாடு மாறி குறுக்க நடந்து போற, இது என்ன உங்க அப்பன் வூட்டு ரோடா........." "............................."

Representational Image
Representational Image

பேசிட வார்த்தைகள் ஏதும் எழவில்லை, சூழலை சமாளிக்க என்ன செய்யலாமென்று ஒரு கணம் மனம் யோசித்தது. கண்களில் தென்பட்டது எப்போதும் பழம் வாங்கும் அந்தப் பழக்கடைக் காரப் பாட்டியின் முகம். எதுவும் பேசாமல் அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் எனக்கானவை இல்லை என்பதைப்போல் அவ்விடம் விட்டு மெல்ல நகர்ந்தேன், பழக்கடைக்காரப் பாட்டியோ அந்தத் தெருவின் ஒரு ஓரத்தில் தரையில் இரு சாக்குகள் விரித்து அதன்மேல் பழங்களைக் கூறுகூறாக அடுக்கி வைத்து வியாபாரம் அதில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். எனக்கோ மனதின் படபடப்பு அடங்கியபாடில்லை. அக்கடையின் அருகே சென்று இரண்டொரு நிமிடம் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். கடையில் நடந்த உரையாடலும் அந்தத் தெருவின் மக்களின் ஆரவாரமும் மெல்ல மெல்ல என் காதுகளை எட்டியது,

``என்னமா.... மாதுளை இவ்வளவு விலை சொல்றீங்க, எப்போதும் இங்க தான வாங்குறேன், 50 ரூபாய்ன்னு குடுங்க"

``இல்ல கண்ணு... கிலோ 80 ரூபாய்க்கு விக்கறத 50 ரூபாய்க்கு கேக்குறீயே, எப்படி மா? உனக்காக 70 ரூபாய்ன்னு வேணும்னா தாறேன்"

``70 ரூபாயா? அதெல்லாம் முடியாது, போன வாரம் 40 ரூபாய்க்கு தான வாங்குனேன்"

Representational Image
Representational Image

``இப்போ பழம் எல்லாம் ரொம்ப விலை கூடிடுச்சு கண்ணு, மார்க்கெட்டுக்கே வரத்து குறஞ்சுடுச்சு... மார்க்கெட்டுலயே கிலோ 80 ரூபாய்க்குத்தான் குடுக்குறாங்க, இதுல எனக்கு லாபம்லாம் இல்ல கண்ணு..... இருட்ட வேற ஆரம்பிச்சுடுச்சு.... இருக்கறத வித்துட்டா... வெளிச்சத்தோட வீட்டுல போய் கஞ்சி காச்சணும், உனக்கு வாங்குன விலைக்கேதான் கண்ணு சொல்லிருக்கேன்..."

``என்ன பாட்டி இப்படிச் சொல்றீங்க... முடிவா, 60 ரூபாய்க்கு குடுத்தா குடுங்க இல்லனா, வேண்டாம்" என்று சொல்லி அந்தப் பெண் அவ்விடம் விட்டு நகர முற்பட்டாள்.

நடுத்தர வயது பெண் அவள், கழுத்தில் அணிந்திருந்த Office-Tag சொல்லியது அவள் பெரியதொரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவள் என்று, தோளில் Back Bag- ம் கையில் லன்ச் பையும் வைத்திருந்தாள். கணீர் குரலும் மிடுக்கான தோற்றமும் கொண்டிருந்தாள். அவள் வேண்டாம் என்று சொல்லி நகர முயன்றதும்" அந்தப் பாட்டி,

``இந்தாம்மா கண்ணு... சரி 65 ரூபாய் குடுத்துட்டு எடுத்துட்டு போ" என்று சொல்லி எதோ முணுமுணுத்தாள்.

அவள் திரும்பி ஒரு பெருமூச்சு விட்டு ``அதெல்லாம் முடியாது, இந்தாங்க பாட்டி 60 ரூபாய் என்று பணத்தை நீட்டி நிறுத்து வைத்திருந்த மாதுளைகளை தன் கையில் வைத்திருந்த பையில் வாங்கிக்கொண்டாள்.

பாட்டி பணத்தை வாங்கி விரித்து வைத்திருந்த இரு சாக்குகளில் ஒன்றன் விளிம்பின் அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்,

``என்ன கண்ணு…, என்ன வேணும், ரொம்ப நேரமா நிக்கிற...."

நடந்த உரையாடலில் திளைத்திருந்த நான் சட்டென்று சுயநினைவு பெற்று, ம்ம்ம்.... ஆரஞ்சு என்ன விலை" என்றேன்.

`கிலோ 80 ரூபாய்….., என்ன கண்ணு நாலு அஞ்சு நாளா ஆளயே பாக்க முடியல.... ஊருக்கு எதும் போயிருந்தியா....”

``இல்ல பாட்டி கொஞ்சம் உடம்பு சரியில்லை, லீவு போட்டுருந்தேன்"

Representational Image
Representational Image

``உடம்ப பாத்துகோ கண்ணு, இப்போல்லாம் என்னென்னமோ நோவெல்லாம் வருது.... எங்க... இந்தக் காலத்துப் புள்ளங்க சத்தானது எதத்தான் சாப்பிடறீங்க..., பேருகூட வாயில நுழையாத எத எதையோ சாப்பிட்டுட்டு.... எல்லாம் நோஞ்சான் மாதிரி இருக்கீங்க.... ம்ம்ம்... ஒரு கிலோ ஆரஞ்சு நிறுக்கட்டுமா கண்ணு"

``ம்ம்ம்... குடுங்க பாட்டி"

கையிலிருந்த 100 ரூபாயை நீட்டினேன், பையில் ஆரஞ்சும் மீதம் 20 ரூபாயும் வாங்கிக்கொண்டு``வர்றேன் பாட்டி" என்று சொல்லி முன்னோக்கி நடந்தேன்.

கையிலிருந்த 20 ரூபாயை ஒருமுறை யதார்த்தமாகப் பார்த்தேன், மனம் என்னுள் கேள்விகள் பலவற்றைத் தொடுத்தது, இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களின் மனம்தான் என்ன? கடையில் பேரம் பேசிய அந்தப் பெண், பார்ப்பதற்கு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாகத்தான் தோன்றினாள். அதுவும் அவள் அணிந்திருந்த Office-Tag-ல் பார்த்த நிறுவனத்தின் பெயர் ஐடி துறையில் மிகவும் பிரபலமான பெரிய நிறுவனம் என்பது அனைவரும் அறிந்தது. எனவே நல்ல சம்பளத்தில் பணிபுரிபவளாகத்தான் இருக்க வேண்டும். ஆதலால் அவளுக்கு 20 ரூபாய் என்பது ஈட்ட முடியாத சமாளிக்க முடியாத பெரும்தொகையாக இருக்க வாய்ப்பே இல்லை எனினும் அவள் அத்தனை கராராய் பேரம் பேசி விலை குறைப்பாளேன்.

சாதாரணமாகவே ஐடி நிறுவனம் என்றால் மாதம் ஒருமுறையேனும் Team Lunch என்ற பெயரில் ஏராளமான விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்து அதை நாகரிகம் என்ற பெயரில் பாதி சாப்பிட்டு மீதி வீணாக்கும்போது ஏற்படும் நட்டத்தை விடவா? இந்த 20 ரூபாய் நட்டம் அதிகமாயிருக்கும். அதைவிட எத்தனையோ மால்களில் கண்கவர் காட்சிகளாக அடுக்கி வைக்கப்பட்டு மின்னும் விளக்குகளால் கானல் காட்சிகளாக பிரகாச வெளிச்சத்தில் பொருள்களை இரண்டு மடங்கு விலையேற்றி அதற்கு அரை மடங்கு Offer-ம் கொடுக்கும்போது அடடே... இவ்வளவு குறைந்த விலையா!!! என்று தேடிப்போய் அலைமோதும் மக்கள் கூட்டத்துக்கு இடையே அதை வாங்கும்போது ஏற்படும் நட்டத்தை விடவா? இந்த 20 ரூபாய் நட்டம் அதிகமாயிருக்கும், இதைவிட Birthday-Treat, Promotion-Treat மேலும் பல காரணமில்லாத Treat-கள் என செலவு செய்து Cash Card-களை அளவில்லாமல் Swipe செய்யும்போது ஆகும் நட்டத்தை விடவா? இந்த 20 ரூபாய் நட்டம் அதிகமாயிருக்கும்.

Representational Image
Representational Image

நினைப்பதையெல்லாம் கைக்கருகில் என்று தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் Super\Hyper Market-களில் மாதம் இருமுறை பொருள்கள் வாங்குகையில், வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விலைப்பட்டியலில் என்ன விலையோ, உதாரணமாக ஒரு பொருளின் விலை 146 ரூபாய் 82 பைசா என்றால் நமக்கும் அதே 146 ரூபாய் 82 பைசாவுக்கு வழங்கி, அதிலும் மொத்த தொகை 4,648 ரூபாய் 67 பைசா என்றால் அதை Cash Card-ல் செலுத்தினால் அதே தொகையான 4,648 ரூபாய் 67 பைசாவும் அதையே பணமாக செலுத்தினால் 4,649 ரூபாயையும் கெட்டிக்காரத்தனமாக வசூல் செய்யும் Super\Hyper Market-களில் நம்மில் இந்த பேரம் பேசும் எண்ணமும் கறாரான வார்த்தைகளும் எட்டிக்கூட பார்ப்பதில்லையே....

நம் மனதின் இந்த பேரம் பேசும் எண்ணமும் கறாரான வார்த்தைகளும்கூட செல்லுபடியாகும் இடங்களை நோக்கித்தான் வீசப்படுகின்றன, வீடு தேடி வந்து விற்பனை செய்யும் காய்கறிக்காரர்கள், தெருவோரம் கடை போடும் பழக்கடைக் காரர்கள், பஜார்களில் அலைந்து திரிந்து துணிகளை விற்கும் நபர்கள் என அன்றாடப் பிழைப்புக்காக தன் உடல் வருத்தி லாபம் மட்டுமே நோக்கமாய் இன்றி குடும்ப வறுமைக்காகவும் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபடவும் எண்ணி தினம் அல்லாடும் சாமானிய மனிதர்களிடம் மட்டுமே நம்மில் இந்த பேரம் பேசும் எண்ணமும் கறாரான பேச்சுக்களும் தலைதூக்கும், எனில் மனதின் இந்த எண்ணமது எவ்விதத்தில் நியாமோ?

Representational Image
Representational Image

பெரும்பாலும் மனதின் எண்ணமது வானவில்லின் வண்ணமாய் என்றும் எங்கும் தன்மை மாறாமல் பகுத்தறிவின் திறவுகோலாய் மட்டும் இருப்பதில்லை. சில நேரங்களில், ஏன் பெரும்பாலான நேரங்களில் தான் சேரும் இடத்தின் தன்மைக்கேற்ப தன்னை நிறம் மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியின் உற்ற நண்பனாகத்தான் திகழ்கிறது.

ஓடும் நீரின் பெருமை அது சேரும் இடம் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படும். அதன் இலக்கு சமுத்திரம் என்றால் ஒரு விதமாகவும் அதுவே அதன் இலக்கு சாக்கடையென்றால் வேறொரு விதமாகவும் அதன் பெயர், தன்மை அத்தனையும் அமையும். அதுபோலத்தான் தினம் நூறு வடிவில் உருவெடுத்து புதுப்புது வழிப்பாதை கண்டு ஓடும் நம் எண்ணங்களும் அது இறுதியாய் சென்றடையத் துடிக்கும் இலக்கை கொண்டுதான் சமுத்திரமா இல்லை வெறும் சாக்கடையா என்றும் நிர்ணயிக்கப்படுகிறது. எடை போடு மனமே...., துலாபாரமதில் மனதின் எண்ணத்தையும் அதன் நியதிகளையும் நிறுவையிடு, அந்த துலாபாரமது சொல்லும் இந்த 20 ரூபாய்க்கானது அவசியத்தின் குரலா..... அதிகாரத்தின் குரலா என்று.... புரியாத புதிர்களில் என்றும் அவிழ்க்க முடியாததாய் மனித மனதின் எண்ணங்கள், மற்றுமொரு புதிருடன் இன்றும்...

-ஐஷ்வர்யா சந்திரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு