Published:Updated:

`சாப்பிட நம்ம குடிசைக்கு வந்துருங்க!' - குறிஞ்சி மைந்தனை நெகிழ வைத்த நெய்தல் நிலம் #MyVikatan

விகடன் வாசகர்

மனமெங்கும் குறிஞ்சி, முல்லை காடுகளை நினைத்துக்கொண்டு சுற்றியவனுக்கு சுறா அளவு இல்லாவிடினும் எறா அளவிற்குத் தீனி போட்டது நெய்தல் நில அலையாத்திக் காடுகள்தாம்.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

மனதில் எப்பொழுதும் மலைகளையும், காடுகளையும் சுமந்து கொண்டே திரிவதால், 26 வருடங்களுக்கு முன் ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் வேலை நிமித்தம் வந்து சேர்ந்த பிறகும் காடறியும் வேட்கை குறையவில்லை.

திருப்பதி வாசகன்
திருப்பதி வாசகன்

மனமெங்கும் குறிஞ்சி, முல்லை காடுகளை நினைத்துக்கொண்டு சுற்றியவனுக்கு சுறா அளவு இல்லாவிடினும் எறா அளவிற்குத் தீனி போட்டது நெய்தல் நில அலையாத்திக் காடுகள்தாம். மான்குரூவ் ஃபாரஸ்ட் எனப்படும் இவ்வகை காடுகள் நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும். பேக்வாட்டர் எனப்படும் நீர்கழிகளிலும் அதிகமாக இருக்கும். உப்புத் தண்ணீரில் ஆனந்தமாக வாழும் இத்தாவரங்கள்தான் கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான ஆதாரம். நன்கு பாதுகாக்கப்பட்ட இவ்வகை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கும்.

மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் இவ்வகையே. உலகத்தின் மிகப் பெரிய புலிகளான பெங்கால் டைகர்ஸ் வசிப்பது கடலோரக் காடுகளான இந்தப் பகுதிகளில்தான். தமிழகத்தில் பறங்கிப்பேட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதிகளில் இக்காட்டை காணலாம். இந்தக் காடுகளின் நடுவே காணும் கால்வாய்களில் சிறிய அளவு கப்பல்களையே மறைத்து வைக்கலாம். கடற்கரை மணலில் காட்டைத் தேடி அலைந்தவனுக்கு நல்ல தீனி போட்டது இக்காடுகள்! வேலை முடிந்து, ஓய்வு நேரங்களில் இக்காட்டிற்கு ஓடி வந்து விடுவேன். முதலில் சிறு சிறு தேன் கூடுகளை கண்டதும் ஆச்சர்யம்! பின்னர், ஒளி மங்கி மாலை மயக்கும் நேரங்களில் புதர்களிலிருந்து வரும் குள்ள நரிகளைக் கண்டவுடன் மனம் கூச்சலிட்டது.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

எங்கள் காடுகளில் செந்நாய்தான் உண்டு, நரியைக் கண்டதில்லை!இதன்பிறகு, ஓய்வு நேரங்களில் எல்லாம் அலையாத்திக் காடுகள்தாம்! சிறு சிறு முயல்கள், உடும்பு போன்றவற்றை கண்ட பிறகு சொல்லவே வேண்டாம். குறிஞ்சியே இடம்பெயர்ந்த உணர்வு! ஒருநாள் அறுவடை முடிந்து, மத்தியான வேளையில், வேப்ப மரத்தினடியில், நார்க் கட்டிலில், காலாட்டிக் கொண்டு படுத்திருந்தேன்! விருட்டென்று ஒரு சப்தம்! வாயின் இருபுறமும் கோரைப் பற்களோடு மின்னலாய்ப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது காட்டுப்பன்றி.

என் மனம் அதை முந்திக்கொண்டு ஓடியது புதருக்குள்! குறிஞ்சியின் மகனை பாலையில் கண்டதும் அத்தனை மகிழ்ச்சி. இங்கு, பண்ணைகளில், பறவைகள் வராதிருக்க நரிக்குறவர்களை வேலைக்கு வைத்திருப்பார்கள். அவர்கள் என் இனம் என்பதால் அவர்களோடுதான் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன்! ஒருநாள் எங்கள் மேலதிகாரிகள் கால்வாய்களை ஆய்வு செய்ய வந்த பொழுது அவர்களை அழைத்துக்கொண்டு காடுகள் ஓரம் சென்றிருந்தேன். நம் ஆட்கள், அதுதான் நம் குறவர்கள் வேட்டையில் இருந்தார்கள், நாரை, காடை, நண்டுகள் என நல்ல வேட்டை.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

என்னை பார்த்த மகிழ்வில், சார், ரவைக்கு சாப்புட நம்ம குடிசைக்கு வந்துருங்க என்று கத்திவிட்டார் கைகளில் கொழுத்த பச்சை நண்டை வைத்து ஆட்டியபடி! என் மேலதிகாரிகள் ஒரு மாதிரியாக என்னை பார்த்து விழிக்க, என் கங்காணிகள், குறவர்களை நோக்கிக் கத்தினர், யோவ் யாரை போய் கூப்பிடற, அலட்டாமல் சொன்னார் நம்மாளு, அட போங்க சாமி, அவரு எங்க கூட்டம், எங்கள வேட வேகமா மொசலு, உடும்பு பிடிக்கிறாரு! நீங்க வேற! நான் மகிழ்ந்த தருணங்களில் இதுவும் ஒன்று! அப்புறம் அன்னைக்கு ராத்திரி பனங்கள்ளு, நண்டு, நாரை, சொல்லவும் வேணுமா.

- தேக்கன் திருப்பதி வாசகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/