Published:Updated:

`ஏர் ஹோஸ்டஸ் கனவை நோக்கிப் பயணிக்கிறேன்!' - 'மிஸ் கூவாகம்' திருநங்கை மெகந்தி

மிஸ் கூவாகம் மெகந்தி
News
மிஸ் கூவாகம் மெகந்தி ( தே.சிலம்பரசன் )

''ஒரு குழந்தை, திருநரா மாறுவது உடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படுத்தப்படணும். மிக முக்கியமா, அதை பெற்றோர்களுக்குப் புரியவைக்கணும். திருநர் பிள்ளைகளை பெற்றோர் கட்டாயம் ஏற்றுக்கொள்ளணும்னு சட்டம் கொண்டு வரணும்.''

Published:Updated:

`ஏர் ஹோஸ்டஸ் கனவை நோக்கிப் பயணிக்கிறேன்!' - 'மிஸ் கூவாகம்' திருநங்கை மெகந்தி

''ஒரு குழந்தை, திருநரா மாறுவது உடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படுத்தப்படணும். மிக முக்கியமா, அதை பெற்றோர்களுக்குப் புரியவைக்கணும். திருநர் பிள்ளைகளை பெற்றோர் கட்டாயம் ஏற்றுக்கொள்ளணும்னு சட்டம் கொண்டு வரணும்.''

மிஸ் கூவாகம் மெகந்தி
News
மிஸ் கூவாகம் மெகந்தி ( தே.சிலம்பரசன் )

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆலயத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வருவார்கள். அந்நேரம், திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்' அழகிப்போட்டி விழுப்புரத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கூவாகம் திருவிழா நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், இந்த வருடம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. "மிஸ் கூவாகம் - 2022" அழகியாக சென்னையை சேர்ந்த மெகந்தி அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை திருச்சியை சேர்ந்த ரியானா சூரி, மூன்றாவது இடத்தை சேலத்தை சேர்ந்த ஸ்வீட்டி ஆகியோர் பிடித்தனர்.

டாப் 3 திருநங்கைகள் - மிஸ் கூவாகம் 2022
டாப் 3 திருநங்கைகள் - மிஸ் கூவாகம் 2022
தே.சிலம்பரசன்

'மிஸ் கூவாகம் - 2022' பட்டத்தை வென்ற மெகந்தியிடம் பேசினோம். "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. நான் இப்போ பியூட்டிஷியனா இருக்கேன். ஐந்தாவது வரை இருபாலர் பள்ளியிலும், 6 - 12-ம் வகுப்பு வரை ஆண்கள் பள்ளியிலும் படிச்சேன். 8வது படிக்கும்போதே என்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர ஆரம்பிச்சுட்டேன். சக மாணவர்கள் சிலர் என்னை கிண்டல் செய்வாங்க, கலாய்ப்பாங்க. இப்படி நிறைய அனுபவிச்சிருக்கேன். அதனால தினமும் ஸ்கூல் முடியுறதுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடியே க்ளாஸ்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன். இந்தப் போராட்டங்களோடதான் ஒருவழியா 12வது முடிச்சேன்.

எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி முதன்முதல்ல அம்மாகிட்டதான் சொன்னேன். அதை அவங்களால ஏத்துக்க முடியாம அழுதாங்க. டாக்டர்களும் அதை உறுதிப்படுத்தினாலும், அம்மாவால அதை ஏத்துக்க முடியல. 'என் வாழ்க்கையை வாழவிடுங்க, நான் போறேன்'னு சொல்லி ஆறு மாசமா வீட்டுல அனுமதி கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா ஒத்துக்கல.

ஒரு கட்டத்துல, ஏதோ ஒரு நம்பிக்கையோடு நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். கையில காசு இல்ல, நைட் படுக்க இடம் இருக்காது. கடற்கரையோரத்துல படுத்திருப்பேன். சில நாள்கள்ல ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறதுகூட கஷ்டமா இருக்கும். கொஞ்ச நாள்ல, திருநங்கை சமூகத்தினருடன் சேர்ந்து வாழ ஆரம்பிச்சேன்.

மெகந்தி
மெகந்தி

வீட்டுக்கு போன் பண்ணி பேசும்போதெல்லாம், 'திரும்பி வந்துடு'னு சொல்லுவாங்க. ஆனா, இந்த சமூகத்தை நினைச்சு என்னை ஒரு திருநங்கை மகளா ஏத்துக்கத் தயங்குறாங்க. நான் வீட்டுக்கு வரும்போது, நைட்டு 12 மணி போல வந்துட்டு, காலையில 4 மணி போல கிளம்பிடணும்னு சொல்வாங்க. அப்படியே போனாலும், பெட்ரூமை விட்டு வெளியே வரக்கூடாது. பெத்தவங்க மேல இருந்த பாசத்துல நானும் ஒருமுறை வீட்டுக்குப் போனேன். ஆனா, அவங்களோட கட்டுப்பாடுகள் படியெல்லாம் நடந்துக்கிறது மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.

அதனால, 'இனி என்ன ஆனாலும் நான் இதுபோல நைட் நேரத்துல ஒளிஞ்சு எல்லாம் வரமாட்டேன். ஏன் மத்தவங்களை பார்த்து பயப்படுறீங்க? அவங்களால உங்களுக்கு எதுவும் ஆகப்போறது கிடையாது. அவங்க எல்லாம் என்ன பேசிடுவாங்களோனு பயந்து என்னை உங்களால வெளிப்படையா ஏத்துக்க முடியாதுனா, எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம். உங்க ரெண்டு பொண்ணுங்களைப்போல என்னையும் எப்போ பாக்குறீங்களோ அப்போ வீட்டுக்கு வர்றேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். என் ரெண்டாவது அக்கா எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருப்பாங்க. ஆனா, முதல் அக்கா என்கிட்ட பேசுறதுகூட இல்ல'' என்றவரின் குரல் கனக்கிறது.

கூவாகம் திருவிழா
கூவாகம் திருவிழா

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அழகிப்போட்டி அனுபவங்கள் குறித்துப் பேசினார் மெகந்தி. "மிஸ் கூவாகம் போட்டியை பொறுத்தவரை, எனக்கு இதுதான் முதல் முறை. இதுக்கு முன் ஒரு தடவை 'மிஸ் மெட்ராஸ்' அழகிப்போட்டி நடந்தப்போ, அதில் ஒரே ஒரு திருநங்கை போட்டியாளரா நான் கலந்துக்கிட்டேன். அப்போ எனக்கு 2-வது இடம் கிடைச்சது. மிஸ் கூவாகம் போட்டியில எனக்கு முதல் முறையிலேயே டைட்டில் கிடைத்திருப்பது ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.

முன்பெல்லாம் இதுபோன்ற வெற்றி எங்களுக்குள்ளான பேச்சோடு முடிந்திடும். ஆனா, இப்போ டெய்லி பேப்பர், இதழ்கள், டெலிவிஷன்கள்ல எல்லாம் செய்தியாகி, எல்லாரும் பாராட்டும்போது இந்த ஆதரவு எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமா இருக்கு. இதே மகிழ்ச்சியோடு அடுத்ததா 'மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இந்தியா' போட்டியில பங்கேற்கும் முயற்சியில் இருக்கேன். எனக்கு 'ஏர் ஹோஸ்டஸ்' ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

ஏர் ஹோஸ்டஸ் வேலையில, அழகா டிரெஸ் பண்ணிட்டு, எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கலாம். மேலும், எனக்குப் பயணங்களும் ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் இந்த வேலையை இலக்கா வெச்சிருக்கேன்.

அரசை பொறுத்தவரை, ஆதார் அட்டை, திருநங்கைகளுக்கான அட்டைகளில் திருத்தம் செய்வது எல்லாமே இப்போ எளிமை ஆக்கப்பட்டிருக்கு. முன்பு இருந்ததைவிட, இப்போ இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுறோம், அங்கீகரிக்கப்படுறோம்.

தமிழக அரசு
தமிழக அரசு

என்னுடைய 'மிஸ் கூவாகம்' கிரீடத்துடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் சாரை பார்த்து பேசணும்னு ஆசை. ஒரு ஆண் 'மிஸ்டர் இந்தியா' போட்டிக்கு போகும்போதும், ஒரு பெண் 'மிஸ் இந்தியா' போட்டிக்கு போகும்போதும் அவர்களுக்கு ஸ்பான்சர் கொடுக்கிறாங்க. ஆனா, திருநங்கைகள் அப்படி ஒரு போட்டிக்குப் போகும்போது யாரும் கண்டுக்கிறதில்ல. எனவே, 'எங்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஊக்கம் அளிக்க வேண்டும்'னு முதலமைச்சர்கிட்ட கேட்கணும்'' என்றவர், தன் வாழ்க்கை வலிகளைப் பகிர்ந்துகொண்டார்.

"என்னைப் போன்ற திருநங்கைகளை வீட்டில் பெற்றோர்கள் அரவணைப்போடு ஏற்றுக்கொண்டால் நாங்க நிறைய சாதிப்போம். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை பிறந்தாலும், மனவளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் திருநர்களா மாறினாலும் அதே மாதிரி ஏற்றுக்கொள்ளணும். நாங்க எந்த விதத்திலும் தவறு செய்திடவில்லை. மகனோ, மகளோ திருமணம் முடிந்ததும் அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிடுவாங்க. பிள்ளைகள் பெற்றோர்களை கனிவா பார்த்துக்கொள்வதும் குறைந்துவிட்டது. ஆனா, நாங்க பெற்றோரை கடைசிவரை உடனிருந்து பார்த்துக்குவோம்.

மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில்
மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில்

எங்களை பெற்றோர் முழுமனதோடு ஏற்றுக்கொண்டால், நாங்க வெளியில் வந்து கஷ்டப்பட வேண்டியதில்லை. பெற்றோர் சமூகத்துக்கு பயந்து வாழாம, பிள்ளைகளுக்காக வாழணும். ஒரு குழந்தை, திருநரா மாறுவது உடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படுத்தப்படணும். மிக முக்கியமா, அதை பெற்றோர்களுக்குப் புரியவைக்கணும். திருநர் குழந்தைகளை பெற்றோர் கட்டாயம் ஏற்றுக்கொள்ளணும்னு சட்டம் கொண்டு வரணும்'' என்றார் மெகந்தி.