Published:Updated:

Motivation Story: கொள்ளைக்குள்ளான சூப்பர் மார்க்கெட்... 100 ரூபாயில் இளவரசி ஜெயகாந்த் ஜெயித்த கதை!

இளவரசி ஜெயகாந்த்
News
இளவரசி ஜெயகாந்த்

யார் கண்பட்டதோ, அந்தத் துயரச் சம்பவம் அவருக்கு நிகழ்ந்தது. 2011-ம் ஆண்டு. ஓர் இரவில் அவருடைய சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஒரு கொள்ளைக் கும்பல் கிடைத்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு போனது. கால்குலேட்டரிலிருந்து காய்கறிக் கூடை வரை வழித்தெடுத்துக்கொண்டு போனது.

Published:Updated:

Motivation Story: கொள்ளைக்குள்ளான சூப்பர் மார்க்கெட்... 100 ரூபாயில் இளவரசி ஜெயகாந்த் ஜெயித்த கதை!

யார் கண்பட்டதோ, அந்தத் துயரச் சம்பவம் அவருக்கு நிகழ்ந்தது. 2011-ம் ஆண்டு. ஓர் இரவில் அவருடைய சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஒரு கொள்ளைக் கும்பல் கிடைத்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு போனது. கால்குலேட்டரிலிருந்து காய்கறிக் கூடை வரை வழித்தெடுத்துக்கொண்டு போனது.

இளவரசி ஜெயகாந்த்
News
இளவரசி ஜெயகாந்த்
`உங்களால் முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறதா... நீங்கள் வெற்றியின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.’ முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்

இளவரசி ஜெயகாந்த்... தொழிலதிபர். `அஸ்வதி ஹாட் சிப்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ. அந்த நிறுவனத்தின் இணையதளப் பக்கத்துக்குள் நுழைந்தால், வண்ண வண்ண ரெசிப்பிகளின் படங்களுடன் நம்மை வரவேற்கும் வாசகம்... `இவை அன்போடு சமைக்கப்பட்டவை.’ உண்மைதானே! அக்கறையோடும் நேசத்தோடும் சமைக்கப்படும் சாதாரண ரசம்கூட அமிர்தமாகிவிடும். இந்தப் பக்குவம்தான் எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் இழந்திருந்த இளவரசி ஜெயகாந்த்தை, விருதுகள் வாங்கும் அளவுக்கு மிகப்பெரிய தொழிலதிபராக உயர்த்தியிருக்கிறது.

கேரளாவில் மிக முக்கியமான தொழிலதிபர் என அறியப்பட்டாலும், இளவரசியின் பூர்வீகம் தமிழ்நாடுதான். உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். ஏழு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தார். இனிப்பு, கார வகைகளை செய்து விற்பனை செய்வது பிரதான தொழில் அந்தக் குடும்பத்துக்கு. அதே சமயம், அந்த வருமானம் குடும்பத்துக்குப் போதவில்லை. சொந்த நிலம் இருந்தும் பயிர் செய்ய நீரில்லை. பருவத்துக்குப் பருவம் மழை தப்பிப்போக, அன்றாட ஜீவிதத்துக்கே நிலத்தை விற்கவேண்டிய நிலை. எத்தனை நாள்கள்தான் வீட்டிலிருக்கும் பொருள்களை அடகுவைத்து வாழ்க்கையை ஓட்ட முடியும்? பிழைப்புக்காக மூத்த அண்ணன், கேரளாவிலிருக்கும் திருச்சூருக்குக் கிளம்பிப்போனார்.

இளவரசி ஜெயகாந்த்
இளவரசி ஜெயகாந்த்

அண்ணன் செய்தது, அரிசி முறுக்கு தயாரித்து, கூடையில் சுமந்து சென்று தெருத்தெருவாக விற்கும் வியாபாரம். கடுமையான வேலை என்றாலும் அதில் கொஞ்சம் வருமானம் வந்தது. இனி குடும்பம் நிமிர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை பிறந்ததும், இளவரசியின் பெற்றோர் திருச்சூருக்கு இடம்பெயர்ந்தார்கள். அப்படி இளவரசி திருச்சூருக்கு இடம்பெயர்ந்து இப்போது 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஐந்தாம் வகுப்பு வரை திருச்சூரிலேயே படித்தார் இளவரசி. அவர்தான் அண்ணன் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தார். வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே, அண்ணன் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டார். இடையில் ஒரு தனியார் டுட்டோரியலில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு காமர்ஸ் பட்டப் படிப்பும் படித்தார்.

பல தலைமுறைகளாக இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்துவந்த குடும்பம் என்பதால் இயல்பாகவே இளவரசிக்கு சமைக்கப் பிடிக்கும். சிறுவயதிலேயே தாத்தாவும், பாட்டியும், அப்பாவும், அம்மாவும் செய்யும் பலகாரங்களின் செய்முறையை அறிந்திருந்தார். உணவு தயாரிப்பில் ஒரு நேர்த்தியைக் கடைப்பிடித்தார். புதுப்புது உணவு வகைகளை, பதார்த்தங்களை செய்து பார்த்தார். எல்லாவற்றையும்விட `நாம் செய்யும் இந்த உணவை யாரோ ஒருவர் சாப்பிடுவார். அவர் இதை ரசித்து, ருசிக்க வேண்டும்’ என்கிற அவருடைய அக்கறையும் பேரன்பும்தான், எத்தனையோ இடர்ப்பாடுகளெல்லாம் வந்தபோதும், அவற்றிலிருந்து அவர் மீண்டெழ அவருக்கு உதவின.

இளவரசி ஜெயகாந்த்
இளவரசி ஜெயகாந்த்

பல்வேறு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில், இளவரசி தன் வாழ்க்கைப் போராட்டக்கதையை விரிவாக விளக்கியிருக்கிறார். அப்பா இறந்த பிறகு, உறவினர் ஒருவரையே திருமணம் செய்துகொண்டார் இளவரசி. அப்போது அவருக்கு வயது 18. பிறகு, அண்ணன் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தன வாழ்க்கை. ஆனால், பரம்பரைத் தொழிலை அவர் விடவில்லை. அரிசி முறுக்கு, ஓலை பக்கோடா எனச் சின்னதாக ஸ்நாக்ஸுகளைச் செய்து அக்கம் பக்கத்தில் கொடுத்தார்; நண்பர்களின் வீடுகளுக்குப் போய் விற்பனை செய்தார்; அவர்கள் கைகாட்டிய வீடுகளுக்கெல்லாம் போய் வியாபாரத்தைத் தொடர்ந்தார். இளவரசியின் கைப்பக்குவமும், அவர் தயாரித்த ஸ்நாக்ஸுகளின் மணமும், ருசியும் சாப்பிட்டுப் பார்த்தவர்களை சொக்கவைத்தன. வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள். அவரைத் தேடிவந்து அவரின் ஸ்நாக்ஸுகளை வாங்கிப்போனார்கள். மெல்ல மெல்ல ஆர்டர்களும் வர ஆரம்பித்தன. அல்ல... குவிய ஆரம்பித்தன.

``எனக்கு பிசினஸ்ல பெரிய ஆளாகணும்னு ஆசை. அது உள்ளுக்குள்ளயே ஊறிப்போயிருந்தது. அதுக்கான நேரம் வந்துடுச்சுன்னு நினைச்சேன். என் கணவர்கிட்ட பேசிப் பார்த்தேன். கையில இருந்த காசையெல்லாம் போட்டு, வீட்டை அடமானம் வெச்சு லோன் வாங்கினேன். 50 லட்ச ரூபாய் லோன். தெரிஞ்சவங்ககிட்ட கொஞ்சம் கடன் வாங்கினேன். அதைவெச்சு ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சேன்’’ என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் இளவரசி ஜெயகாந்த்.

அது 2010-ம் ஆண்டு. கிட்டத்தட்ட 50 பேருக்கு வேலை கொடுத்தார். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் இளவரசியின் பிசினஸ் மாடல். `வாடிக்கையாளர்களுக்கு நம்ம பொருள் முதல்ல பிடிக்கணும். அதுக்கப்புறம்தான் வியாபாரம், லாபமெல்லாம்’ என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. கேரளாவின் அடையாளமான சிப்ஸில் ஆரம்பித்தார். நேந்திரங்காய், பலாப்பழம் எல்லாவற்றிலும் வித்தியாசமான சிப்ஸ் ரெசிப்பிகளை அறிமுகப்படுத்தினார். கூடவே அல்வா, கேக்குகளையும் தயாரித்து விற்பனை செய்தார். வெஜிடபுள்களையும், பழங்களையும் சேர்த்து அவர் செய்த புதுவகை கேக்குகள் பலரையும் கவர்ந்தன. இவற்றுடன் பழங்கள், காய்கறிகளையும் விற்க ஆரம்பித்தார். வியாபாரம் தூள்!

இளவரசி ஜெயகாந்த்
இளவரசி ஜெயகாந்த்

யார் கண்பட்டதோ, அந்தத் துயரச் சம்பவம் அவருக்கு நிகழ்ந்தது. 2011-ம் ஆண்டு. ஓர் இரவில் அவருடைய சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஒரு கொள்ளைக் கும்பல் கிடைத்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு போனது. கால்குலேட்டரிலிருந்து காய்கறிக் கூடை வரை வழித்தெடுத்துக்கொண்டு போனது. அவருடைய காரையும் களவாடிக்கொண்டு போனது. அடுத்த நாள் காலையில் விஷயம் கேள்விப்பட்டு வந்து பார்த்தவர் துடித்துப்போனார். ஒரு புயல் வந்து வாழைத் தோட்டத்தைக் குலைத்துப்போட்டது மாதிரி இருந்தது சூப்பர் மார்க்கெட். அந்தச் சம்பவம் அவர் மனதை மட்டுமல்லாமல், உடலையும் பாதித்தது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை.

இன்னொரு பக்கம், கடன் கொடுத்தவர்களும் வங்கியும், பணம் கேட்டு தினமும் வாசலில் வந்து நின்றார்கள். சுற்றிச் சுற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் கடன். இந்த நிலைமையில், ஒரு சாமானிய மனுஷியாக இருந்தால் இளவரசி தற்கொலை போன்ற தவறான முடிவைக்கூட எடுத்திருப்பார். ஆனாலும் அவருக்கு உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. `இவ்வளவு தூரம் வந்தாச்சு. இடையில ஒரு தடங்கல். அதுக்காக எல்லாத்தையும் விட்டுடணுமா என்ன...’

`அடுத்து என்ன செய்யலாம்... வாழணுமே... ஏதாவது செஞ்சுதான் ஆகணும்!’ வங்கியிடமும், பணம் கொடுத்தவர்களிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டார். அந்தக் கணத்தில் அவரிடம் கையிருப்பு என இருந்தது வெறும் 100 ரூபாய். அவர்மீது அன்பும் நம்பிக்கையும் இருப்பவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கினார். ஒரு தள்ளுவண்டிக் கடை போட்டார். ஏற்கெனவே அவர் ஸ்நாக்ஸ்களை ருசித்திருந்த வாடிக்கையாளர்கள் தேடிவந்தார்கள். வியாபாரம் மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு கடை காலியாக இருப்பதைக் கேள்விப்பட்டார். சிறிய முதலீட்டில் அங்கே கடை தொடங்கினார்.

``ரயில் பயணிகள், பயணத்தின்போது சிப்ஸ் மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு நினைப்பாங்க. அதனாலதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்துல கடையை ஆரம்பிச்சேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் இளவரசி ஜெயகாந்த். சுடச்சுட அவர் கடையில் கிடைக்கும் சிப்ஸும், வடைகளும் வாடிக்கையாளர்களைச் சுண்டி இழுத்தன. இன்றைக்கு அந்தக் கடை நான்கு கடைகளாக விரிவடைந்திருக்கிறது. தன் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டார் இளவரசி.

`அஸ்வதி ஹாட் சிப்ஸ்’ என்கிற அவருடைய இணையதளம், பல வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. சிப்ஸில் தொடங்கி ஊறுகாய் வரை விற்கிறார் இளவரசி. `International Peace Council UAE Award’ வழங்கும் `சிறந்த தொழில்முனைவோர்’ விருது உட்பட எத்தனையோ விருதுகளைப் பெற்றுவிட்டார் இளவரசி.

``நான் தடுக்கி விழுந்தபோதெல்லாம், அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். யாரெல்லாம் உங்களைக் கீழே தள்ள நினைக்கிறார்களோ, அவர்கள் உங்களுக்கும் கீழே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் யார், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் மேலும் மேலும் வளர விரும்பினேன். அதற்காகக் கடுமையாக உழைத்தேன். இன்றைக்கு என் தயாரிப்புகளை விற்பதன் மூலமாக மாதத்துக்கு 5 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்’’ என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் இளவரசி.

ஒரு தொழில்முனைவோராக ஜெயிப்பது அத்தனை சுலபமல்ல. தொழில் நடத்த ஒரு நல்ல ஐடியாவும், நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையும்தான் இளவரசி ஜெயகாந்த்தை ஒரு வெற்றியாளராக உயர்த்தியிருக்கிறது!