என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவங்கள கிண்டல் பண்றது தப்புதானே?! - கொடியேற்றிய திருநங்கை, குழந்தைகளின் அன்பு!

திருநங்கை சினேகா.
பிரீமியம் ஸ்டோரி
News
திருநங்கை சினேகா.

என்னை மாதிரி யாரையாச்சும் பார்த்தா, நீங்க யாரும் கிண்டல் பண்ணாதீங்க குழந்தைங் களா. அவங்களும் மனுஷங் கதான்னு கருணையோட நடந்துக்குங்க.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட்டது 72-வது குடியரசு தின விழா. திருச்சி, தென்னூரில் உள்ள அரசு உதவி பெறும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர் கொடியேற்றியபோது, மாணவர் களின் முகங்களில் உற்சாகத்துடன் கூடவே ஆச்சர்யமும்.

“எங்களைப் போன்றவர்களை எல்லாம் ஏளனமா பார்க்குற இந்தச் சமுதாயத்துல, என்னை அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்த தலைமை ஆசிரியருக்கு ரொம்ப நன்றி” எனச் சொல்லி பேசத் தொடங்குகிறார் திருநங்கை சினேகா. அசம்ப்ளி இப்போது அமைதியாகிறது. திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரியும் சினேகா, தன் கரடு முரடான கடந்த காலத்தைக் கதையாக அந்தக் குட்டி மனிதர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார்.

“எங்கூடப் பொறந்தது ரெண்டு அண்ணன், ரெண்டு அக்கா. பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே எனக்குள்ள உடல்ரீதியா கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சிச்சு. எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. எனக்கு அழுகை அழுகையா வரும். டாக்ஸி ஓட்டுற எங்க பெரிய அண்ணன், அவரோட வண்டிய எங்க வீட்டு வாசல்லதான் நிப்பாட்டுவாரு. நான் காலையில தினமும் அந்த வண்டியக் கழுவி சுத்தமா வைக்கணும். அதுதான் என்னோட வேலை.

தலைமை ஆசிரியர் ஜீவானந்தன்
தலைமை ஆசிரியர் ஜீவானந்தன்

ஒருநாள் எனக்கும் கார் ஓட்டணும்னு ஆச வர, காரை ஸ்டார்ட் பண்ணினேன். உடனே வீட்டுக்குள்ள இருந்து வந்த எங்க அண்ணன், ‘நீ இருக்குற கோலத்துல உனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம், ஒழுங்கா வீட்டுக்குள்ள இரு’ன்னு ரொம்ப எளக்காரத்தோட பேசு னாரு. எனக்கு அழுகையும் ஆத்திரமும் தாங்க முடியல. கார் ஓட்ட கத்துக்கிட்டு, யாரோட தயவும் இல்லாம இந்தச் சமுதாயத்துல சுயசம்பாத்தியத்துல வாழ்ந்து காட்டணும்னு வைராக்கியம் வந்துச்சு. என் சின்ன அண்ணன் மூலமா கடைகளுக்கு வேலைக்குப் போனேன். அதுல கிடைச்ச காசை வெச்சு தென்னூர்ல உள்ள டிரைவிங் ஸ்கூல்ல டிரைவிங் கிளாஸுக்குப் போயி கார் ஓட்டக் கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்குனப்ப எனக்குள்ள ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

ஒரு கட்டத்துல எல்லா திருநங்கை களையும்போல நானும் புடவை கட்டி, பூ வெச்சுனு மாறினப்போ, கேலிகள் அதிகமாச்சு. அதை நினைச்சு நினைச்சு ராத்திரி யெல்லாம் தூக்கமே வராது. அப்போயெல்லாம் சக திருநங்கை தோழிகள்தான் எனக்கு ஆறுதலாவும் ஆதரவாவும் இருந்தாங்க. அந்த நேரத்துல சமூக நலத்துறை அதிகாரி உஷா மேடம் ஒருமுறை எங்களை யெல்லாம் பார்த்தப்போ, ‘நீங்க யெல்லாம் வேலைக்குப் போனா என்னம்மா?’னு கேட்டாங்க.

‘மேடம் பிச்சை எடுக்கவோ, வேற எந்தத் தப்பான வேலையோ நான் செய்யல. டிரைவிங் லைசன்ஸ் வாங்கியிருக்கேன். எனக்கு ஒரு டிரைவர் வேலை வாங்கிக் கொடுங்க’னு உஷா மேடம்கிட்ட கேட்டேன். அது தொடர்பா தொடர்ந்து அவங்களை போய் பார்த்து உதவி கேட்டுட்டே இருந்தேன். ஒரு நாள் விரக்தியில நான் உஷா மேடம்கிட்ட, ‘மேடம் நீங்க வேலை வாங்கிக் கொடுக்கிறது இருக்கட்டும். முடிஞ்சா உங்க வீட்டுல எனக்கு பாத்திரம் தேய்க்கிற வேலையாவது கொடுங்க, எனக்கு வயிறு இருக்கே... நான் என்னதான் பண்ணுவேன்’னு சொன்னதுக்கு அப்புறம், மேடம் மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் பாபு சார் முயற்சி எடுத்து கலெக்டர் ராசாமணி ஐயா கிட்ட என்னை கூட்டிட்டுப் போனாங்க’’ - ‘ஐய்யோ பாவம்ல இந்த அக்கா...’ என்றபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். தொடர்ந்தார் சினேகா.

‘‘கலெக்டர் சார் என்கிட்ட, ‘கொடுக்குற வேலையைப் பொறுப்பா செஞ்சிடுவீங்களா?’னு கேட்டாரு. ‘தயவு பண்ணி ஒரு வாய்ப்புக் கொடுங்க சார், உங்க பேரையெல்லாம் நான் நிச்சயம் காப்பாத்துவேன்’னு சொன்னேன். உடனடியா, ஊரக வாழ்வாதார இயக்கத்துல தற்காலிக ஓட்டுநரா எனக்கு வேலை போட்டுக் கொடுத்தாங்க. மூணு வருஷமா எந்தப் பிரச்னையும் இல்லாம சிறப்பாக இந்த வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன். சம்பளம் குறைவுதான். ஆனாலும், நானே சம்பாதிச்சு வாழுற அந்த நிறைவு இருக்கே... அது போதும்’’ - கண்கள் கலங்கியது சினேகாவுக்கு.

‘‘எங்களையெல்லாம் இங்க எல்லாரும் எப்பவும் ஒதுக்கத்தான் செய்வாங்க. கேலி செய்வாங்க. கீழ்த்தரமா நடத்துவாங்க. விரட்டு வாங்க. எங்களுக்கு ஏதாச்சும் பாதிப்புனா கேட்கக்கூட யாரும் வர மாட்டாங்க. அதையெல்லாம் தாண்டி எங்கள்ல சிலர்தான் என்னைய மாதிரி ஒரு மரியாதையான வாழ்க்கையை ஏற்படுத்திக்க முடியுது. அதனால, என்னை மாதிரி யாரையாச்சும் பார்த்தா, நீங்க யாரும் கிண்டல் பண்ணாதீங்க குழந்தைங்களா. அவங்களும் மனுஷங்கதான்னு கருணையோட நடந்துக்குவீங்களா...” - இப்போது குழந்தைகளின் கண்கள் கலங்க, சினேகாவின் வார்த்தைகளுக்குச் சம்மதமாகத் தலையாட்டுகிறார்கள்.

அவங்கள கிண்டல் பண்றது தப்புதானே?! - கொடியேற்றிய திருநங்கை, குழந்தைகளின் அன்பு!

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தனிடம் பேசினோம். ‘‘திருநங்கைகள் பலர் தங்களோட காயங்களைக் கடந்து, தடைகளை மீறி, படிச்சு, வேலைவாய்ப்பு பெற்று செவிலியர், காவலர், மருந்தாளுநர், ஓட்டுநர், வழக்கறிஞர், ஆசிரியர்னு முன்னேறிட்டு வர்றாங்க. மேலும் இட்லி கடை, பூக்கடைனு வெச்சு சொந்தக்கால்ல நிக்கிறாங்க. பால் பண்ணை, ஆட்டுப் பண்ணைனு கூட்டா சேர்ந்து சுயதொழிலும் செய்றாங்க. ஆனாலும்கூட, திருநங்கைகள் எதிர்ல வந்தாலே முகம் சுளிப்பதும், விலகிச் செல்வது மான நிலைதான் இருக்கு. அந்த நிலைமை மாறணும்னா, மக்கள் மனசுல அவங்கள பத்தி இருக்குற பிம்பம் மாறணும். நாளைய சமுதாயமான இன்றைய குழந்தைகள் மனசுல அந்த மாற்றத்துக்கான ஆரம்பமாதான், சுய முயற்சியில தன்னை நிலைநிறுத்த தனியாளா பாடுபட்டு வரும் சினேகாவை சிறப்பு விருந்தினரா கொடியேற்ற அழைச்சோம்’’ என்றார்.

மாணவர்களிடம் பேசினோம். ‘‘சினேகா அக்கா மாதிரி இருக்குற வங்கள டிவியில, படத்துலயெல்லாம் பாத்திருக்கோம். எல்லாரும் கேலி பண்ணுவாங்க. எங்களுக்கும் சிரிப்பு வரும். ஆனா, சினேகா அக்கா எங்க ஸ்கூல்ல வந்து கொடியேத்துனப்போ, அவங்களும் நம்மள மாதிரிதான் புரிஞ்சது. அவங்க நிறைய கஷ்டப் பட்ட கதையை சொன்னப்போ பாவமா இருந்துச்சு. கடைசியா அவங்களுக்கு வேலை கிடைச்சதை சொன்னப்போ, எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க மேல மரியாதை வந்துச்சு. எல்லாரும் வீட்டுல போய், சினேகா அக்கா எங்க ஸ்கூல்ல கொடி யேத்துனதைப் பத்தி பெருமையா சொன்னோம். ஆனா ஏன் டிவியில, படத்துலயெல்லாம் அவங்க மாதிரி இருக்குறவங்களைக் கிண்டல் பண்றாங்க... அது தப்புதானே...” - அக்கறையுடன் கேட்கிறார்கள் குழந்தைகள்.

மாற்றத்துக்கான விதை சரியான இடத்தில் நடப்பட்டிருக்கிறது.