லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஒவ்வொரு மரமும் எங்களுக்கு உசுரு! - பனை ஏறும் சகோதரிகள்

பனை ஏறும் சகோதரிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பனை ஏறும் சகோதரிகள்

#Motivation

“இன்னும் 50 வருஷம் கழிச்சு நான் இருப்பேனானு தெரியாது. ஆனா, நான் நட்டு வெச்சுருக்குற பனைமரம் என் பேரைச் சொல்லி ஓங்கி உசந்து நிக்கும். பனையை மத்தவங்க மரமா பார்க்கலாம். ஆனா, பனையை நம்பி இருக்குற எங்களுக்கு அதுதான் வாழ்க்கை” - 13 வயதாகும் கரிஷ்மாவின் வார்த்தைகளில் அவ்வளவு முதிர்ச்சி.

விழுப்புரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது நரசிங்கனூர் கிராமம். பனையின்மீது தீராத காதல் கொண்டவளாக நிற்கிறாள் கரிஷ்மா. வயிற்றிலும் தோளிலும் தென்னைநாரில் செய்யப்பட்ட வட கயிறு, தலை கயிறு அணிந்து, தென்னம்பாளை யால் ஆன பெட்டியில் அரிவாளை சுமந்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பனையின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்கு கிறாள். பனை மரத்தை மீட்டெடுக்க சிறு வயதிலேயே பனை ஏறியாக மாறியிருக்கும் கரிஷ்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு உணர்ச்சிகள்.

ஒவ்வொரு மரமும் எங்களுக்கு உசுரு! - பனை ஏறும் சகோதரிகள்

“எட்டு தலைமுறையா பனை ஏறுறது தான் எங்களுக்கு குடும்ப தொழில். எங்க கிராமத்துக்கு பனைதான் பிரதான தொழில். ஆனா, பனைத் தொழிலாளர்களை சாராயம் விக்கிறாங்கனு பொய் வழக்கு போட்டு போலீஸ் கைது செய்துட்டுப் போயிட்டாங்களாம். அதனால பலர் இந்தத் தொழிலைவிட்டே போயிட்டாங்க. எங்க தாத்தாவை போலீஸ் பிடிச்சுட்டுப் போனாதால் எங்க அப்பா படிச்சுட்டு வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. அப்புறமா பனையின் முக்கியத்துவம் புரிஞ்சு இந்தத் தொழிலுக்கு வந்தாங்களாம். இந்தத் தொழிலை நாம் ரொம்ப கெளரவமா செய்யணும்னு சொல்லிட்டே இருப்பாங்க” என்ற கரிஷ்மா பனை ஏற கற்றுக்கொண்டது பற்றி பேசத் தொடங்குகிறார்.

“எங்க வீட்டுல நான், அக்கானு ரெண்டும் பொம்பளைப் புள்ளைங்க. அப்பாக்கு அடுத்து பனை ஏற எங்க குடும்பத்துல யாரும் கிடையாது. அப்போதான் நானும் எங்க அக்காவும் பனை ஏற கத்துக்கிட்டோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறம் பழகிட்டோம். என்னை ஒரே பனை மரத்தில் அரை மணி நேரம் நிக்கச் சொன்னாலும் நிப்பேன். அந்தளவு பழகிடுச்சு. பொம்பளைப் புள்ளைங்களான நாங்க பனை ஏறுவதைப் பார்த்துட்டு எங்க ஊர் ஆம்பளைப் பசங்க நிறைய பேர், ‘பொம்பளப் புள்ள மரம் ஏறுது, நாமளும் ஏறணும்'னு பனை ஏற கத்துக்க ஆரம்பிச்சாங்க. எங்களைப் பார்த்துட்டு நிறைய பெண்களும் பனை ஏற ஆர்வம் காட்டுறாங்க. அவங்களுக்கு எங்க அப்பா பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க” - அப்பாவின் கரங்களைப் பற்றியபடி சொல்கிறாள்.

“நேசிக்கிற தொழில் எதுவா இருந்தாலும் அதுக்காக உசுரைக் கொடுக்கவும் தயாரா இருக்கணும்னு அப்பா சொல்லுவாங்க. எங்க பனங்காட்டுல இருக்குற ஒவ்வொரு மரமும் எங்களுக்கு உசுரு'' என்ற கரிஷ்மாவை தொடர்கிறார் அவரின் சகோதரி வீனஸ்.

“பனையை மீட்டெடுக்க வெளியூர்கள்லேருந்து வந்து பனை விதைகளை வாங்கிட்டுப் போறாங்க. ஒரு விதை ரெண்டு ரூபாய்னு கொடுக்கிறோம். அப்பா கூட சேர்ந்து நிறைய இடங்களுக்குப் போய் பனை விதைகளை விதைச்சுருக்கோம்.

பனை ஏறிகளை வளர்க் காம, பனை மரங்களை மட்டும் வளர்க்குறதுல எந்தப் பயனும் இல்லை. பனை ஏற ஆண், பொண்ணுன்னு வித்தியாசம் கிடையாது. பனையைக் காப்பாத்தணும்னு நினைக்கிற யார் வேணும்னாலும், ஒரே நாள்ல பனை ஏற கத்துக்க முடியும். மக்களுக்கு பனையின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க, பனையில் கைவினைப்பொருள்கள் செய்யுறது அதுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக் குறதுனு சின்ன சின்ன முயற்சிகளை முன்னெடுக்க ஆரம்பிச்சுருக்கோம்.

இப்ப எங்க கிராமத்துல நிறைய பேர் பனை ஏறிகளா உருவாகியிருக்காங்க. தமிழ்நாடு முழுக்க உருவாக்கணுங்கிறதுதான் எங்க ஆசை’’ கம்பீரமாக விடைபெறுகிறார்கள் சகோதரிகள்.