
இந்தியாவில் அதிக அளவில் அறிந்திடாத ‘போல் வால்ட்’ விளையாட்டில் இந்தியாவின் பெருமிதமுகமாக முத்திரை பதித்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான போல் வால்ட் வீராங்கனை ரோஸிமீனா பால்ராஜ்.
நாம், மற்றவரை நம்பி வாழ்வதற்கும் நாமே நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் வேறுபாடு உண்டு. முதலில் சொன்ன நம்பிக்கை, எதிர்பார்ப்பை வளர்க்கும். இரண்டாவது நம்பிக்கை, தன்னம்பிக்கை பாய்ச்சலை உருவாக்கும். அப்படிப்பட்ட மனிதர்களை ஒவ்வோர் ஆண்டும் அடையாளம் கண்டு `நம்பிக்கை விருது’களை வழங்கி கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன். இந்த கெளரவிப்பு, கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு வருடங்களாக அரங்கத்தில் நிகழாமல் இருந்த நிலையில், 2021 மற்றும் 2022 என இரண்டு ஆண்டுகளுக்கான டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்களை பிப்ரவரி 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து ஒரே நாளில் விருது அளித்துச் சிறப்பித்தது ஆனந்த விகடன்.
பிரமாண்ட மேடையில் நடைபெற்ற இந்த விழா வில் நம்பிக்கை விருது பெற்ற தன்னம்பிக்கை மகளிரில் தற்கொலைத் தடுப்புப் பிரசாரம், தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத் தாருக்கான மனநல ஆதரவு எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நந்தினி முரளிக்கு, டாப் 10 மனிதர் 2021-ம் ஆண்டுக்கான விருதினை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் (பி.ஜே.பி) வழங்கினார். தற்கொலையால் பாதிக்கப் பட்ட குடும்பங்களை மீட்கும் மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கும் நந்தினி முரளி, அதி லிருந்து தான் மீண்டு வந்த கதையைச் சொன்னபோது அரங்கம் அமைதியானது. ‘‘தற்கொலையால் இறந்த என் கணவருக்கு இந்த விருதை சமர்ப்பிக் கிறேன். தற்கொலை என்பது உலகளாவிய பிரச்னை. முதலில் நம் அருகில் இருப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்களின் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்று அரங்கத்தில் இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.

சிறு வயதில் பெற்றோரை இழந்து 15 வயதில் தொடங்கிய திருமண வாழ்க்கை, 18 வயதில் முடிவுக்கு வர, எதிர்காலம் புரியாமல் நின்றவர் மீனா சத்தியமூர்த்தி. இவர் தனக்கேற்பட்ட அத்தனை துயரத்தையும் துடைத்தெறிந்துவிட்டு கொரோனா காலத்தில் உறவற்ற சடலங்களை முறையாக அடக்கம் செய்தவர்; முகமறியா பல மனிதர்களுக்கு மகளானவர். இவருக்கு சென்னை மாநகர மேயர் பிரியா, டாப் - 10 இளைஞர் 2021 விருது வழங்கினார். ‘‘என் அப்பா அம்மாவை அடக்கம் செய்வதைப்போலதான் ஒவ்வொருவரின் சடலத்தையும் அடக்கம் செய்கிறேன். இதை வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து செய்யப் போகிறேன். எல்லா பெண்களுக்கும் ஒரு லட்சியம் இருக்கும்... அந்த லட்சியத்தை அடைவதே பெண் களின் இலக்காக இருக்க வேண்டும்’’ என்று கூறிய மீனாவின் வெள்ளந்திப் புன்னகை பலரின் மனதைக் கனக்கச் செய்தது.
12 வயதில் எல்லோருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா உமாஷங்கரின் கனவு அவரை 2021 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் மேடை வரை அழைத்துச் சென்றது. தன் தாயாருடன் இஸ்திரி கடைக்குச் செல்லும்போது, அந்தப் பெட்டியில் இருக்கும் கரியையும், அது வெளியிடும் வாயுக்கள் குறித்தும் சிந்தித்தவர், ஆறு மாத கால உழைப்பில், சூரியத் தட்டுகளால் இயங்கும் இஸ்திரிப் பெட்டியை உருவாக்கினார். விகடன் விருது மேடைக்கு தந்தையுடன் வந்த இவருக்கு டாப் - 10 இளைஞர் 2021 விருதை சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் வழங்கினார். தன் ஊரான திருவண்ணாமலையின் சிறப்பு, செல்லப் பிராணி களின் வளர்ப்பு, மரங்களின் வளம் பற்றி பேசிய வினிஷா, புவி வெப்பமயமாதலில் இருந்து உலகத் தைக் காக்க, தேவையான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.



ஒரு சாமானியர் நினைத்தால் பெரிதாக எதை மாற்றிவிட முடியும்? ஓர் அரசு மருத்துவமனையைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் பொதுநலப் போராளி வெரோணிக்கா மேரி. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி ஊழல் வாதிகளுக்கும் ஜனநாயக எதிரிகளுக்கும் எதிராக ஒற்றைப் பெண்ணாகக் களத்தில் தன் பணியைத் தொடரும் வெரோணிக்கா மேரிக்கு நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் 2022 டாப் 10 மனிதர்களுக்கான நம்பிக்கை விருதை அளித்தார். ``மதுரை வந்த வட இந்திய குழந்தை ஒன்று மூச்சுத்திணறலால் இறக்கும் தருணத்தில் இருந்தபோது பல மருத்துவமனைகள் கைவிட்டன. ஆனால், அந்த உயிரைக் காப்பாற்றியது மதுரை அரசு மருத்துவமனைதான்’’ என்று கூறியவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையை உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விழாவுக்கு வந்திருந்த தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வைத்தார்.
திருநர்களின் உணர்வுகளையும் உள வியலையும் உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கும் தருணத்தில் அவர் களைப் பற்றித் தூக்கிவிட ஆயிரமாயிரம் கரங்கள் தேவையாக இருக்கின்றன. அவர்களில் ஒருவராக நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் செஞ்சியைச் சேர்ந்த மர்லிமா முரளிதரன். தமிழ்நாட்டின் முதல் திருநர் பொறியாளராக, தொழில்முனைவோராக, வழிகாட்டியாக இருந்து பல செயல்களைச் செய்து வரும் திருநர் மர்லிமா முரளிதரனுக்கு நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி சிவா (தி.மு.க), டாப் 10 மனிதர் 2022 விருதை வழங்கினார். ``ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்தில் வளர விடுகிறார்கள். ஆனால், திருநர்களை அவர்கள் விருப்பத்துக்கு வாழ வைப்பதை அவமானம் என நினைக்கிறார்கள். இந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று திருநங்கை மர்லிமா முரளிதரன் கூறியபோது அரங்கம் கைதட்டி வர வேற்றது. தொடர்ந்து திருநர், திருநங்கைகள் நலனுக்காக, தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இந்தியா முழுமைக்கும் சட்டமாக்கிய தனது போராட்டத்தை அரங்கத்தில் பதிவு செய்தார், திருச்சி சிவா.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சமரசமற்ற ஆய்வறிக்கை சமர்ப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, பாதிக்கப் பட்ட மக்களின் குடும்பத்தினரே நேரில் வந்து 2022 டாப் 10 மனிதருக்கான விருது வழங்கிய தருணம் உணர்ச்சிகரமானது. “முதலில் இந்த விசாரணை கமிஷனில் ஈடுபடத் தயங்கினேன். என் கணவர் தந்த ஊக்கத்தால் செயல்பட்டேன். இந்த விருதை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கே காணிக்கையாக்கு கிறேன்” என அருணா ஜெகதீசன் கூற, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார், ``கமிஷன் அறிக்கை பரிந்துரைத்தபடி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தபோது அரங்கம் அதைக் கைதட்டி ஆமோதித்தது.
அம்பாசமுத்திரம் அருகேயிருக்கும் வாகைக் குளத்தில் பிறந்த கலைச்செல்வி, இன்று தேசமெங்கும் அறிவியல் ஆராய்ச்சிகளை வழிநடத்தும் சி.எஸ்.ஐ.ஆர் (இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம்) தலைமை இயக்குநராகவும், டி.எஸ்.ஐ.ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் இருக்கிறார். இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் அறிவியல் தமிழர் டாக்டர் கலைச்செல்விக்கு 2022 டாப் 10 மனிதருக்கான விருதை வழங்கினார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி. லித்தியம் பேட்டரி தொடர்பான கலைச் செல்வியின் ஆய்வுகளும் மேடையில் அது தொடர்பாக அவர் பேசியவையும் இந்தியாவின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனக் கனவுகளுக்கு உயிர் கொடுப்பவையாக அமைந்தன. ``உங்களில் ஒருவராகத்தான் நான் இந்த விருதைப் பெற் றிருக்கிறேன். நாளை நீங்களும் இந்த விருதைப் பெறும் ஒருவராகலாம்’’ என்று கூறி, அரங்கத்தில் இருந்தவர்களின் மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்தார்.



பாலினப் பாகுபாடு, உருவகேலி, உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திலகவதி. இவருக்கு 2022 டாப் இளைஞர் விருதை அளித்த வழக்கறிஞர் அருள்மொழி, ``இன்று நீதி மன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு காரணம் திலகவதி போன்றோரின் செயல்பாடுகள்’’ என்றார். ``பெண்களின் வலிமையை உலகத் துக்கு உயர்த்துவதுதான் என் லட்சியம். சிறகடித்துப் பறக்க நினைக்கும் பெண்களின் இறக்கைகளை ஒடிக்காதீர்கள்’’ என்று திலகவதி பேசியதும், அரங்கத்தில் இருந்த வர்களின் பலத்த கரவொலி, சக பெண் களுக்காக நியாயம் கோரி பயணித்துக் கொண்டேயிருக்கிற இந்த ஆச்சர்ய மனுஷியின் குரலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தது.
ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குத் தன் பெற்றோரை அடுத்தடுத்து பறி கொடுத்து, தவித்து நின்றபோது கிருஷ்ணவேணிக்கு வயது 12. ‘நாம் மட்டும் மருத்துவராக இருந்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே’ என்ற கண்ணீர்ச் சிந்தனையில் துளிர்த்தது மருத்துவ ராகும் கனவு. அந்தக் கனவை நின்று நிஜமாக்கி, ராணுவத்தில் டாக்டராகப் பணியாற்றும் மேஜர் கிருஷ்ணவேணிக்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் 2022 டாப் 10 இளைஞர்களுக்கான நம்பிக்கை விருதை அளித்தார். ``சின்னச் சின்ன விஷயங்களை எங்களுக்கு விதைத்து மெருகேற்றியது நடிகர் சூர்யாவின் `அகரம் ஃபவுண்டேஷன்’. அதில் எங்களுக்கு ஓர் உறுதிமொழி இருக்கிறது. `உனக்கான வெளிச்சத்தை நாங்கள் காட்டிவிட்டோம், மற்றவர்களுக்கான வெளிச்சத்தை நீ காட்டு.’ இதுதான் எனக்கு உந்துசக்தி!’’ என்று மேடை யில் தன் வளர்ச்சிக்கான பாதையைப் பகிர்ந்தார் கிருஷ்ணவேணி.
இந்தியாவில் அதிக அளவில் அறிந்திடாத ‘போல் வால்ட்’ விளையாட்டில் இந்தியாவின் பெருமிதமுகமாக முத்திரை பதித்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான போல் வால்ட் வீராங்கனை ரோஸிமீனா பால்ராஜ். இவர் கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய உட்புற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டிருந்த நிலையில் இவருடைய பெற்றோர் மேடையேறினர். அவர்களிடம், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஆதவ் அர்ஜுனா 2022 டாப் 10 இளைஞர்களுக்கான நம்பிக்கை விருதை அளித்தார். மேடையில் பேசிய ரோஸிமீனாவின் தந்தை, வலியும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைச் சுருக்கத்தை விவரித்தார். பரி சளித்த ஆதவ் அர்ஜுன், ``உண்மையான, திறமையானவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். அதற்கு துணையாக நிற்போம்’’ என்றார். இந்த நிலையில் கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய உட்புற தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் ரோஸிமீனா பால்ராஜ் வெண்கலம் வென்றிருக்கிறார்.
இப்படி நிஜ நாயகர்களின் மீதும், தன்னலம் விடுத்து மக்களுக்கான அறச்செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களின் மீதும் வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றி பெருமிதப்படுத்தியது விகடன் நம்பிக்கை விருதுகளுக்கான பிரமாண்ட மேடை.

`N-சக்தி'...
2021 டாப் 10 மனிதருக்கான விருது பெற்ற சமூகச் செயற் பாட்டாளர் கே.ஆர்.ராஜாவுக்கு 2021 டாப் 10 மனிதருக்கான விருதை சமூகச்செயற்பாட்டாளர் கே.ஆர்.ராஜாவுக்கு வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (தி.மு.க). நிப்பான் பெயின்ட் இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் ராஜேஸ்வரி நடராஜன், கே.ஆர். ராஜாவுக்கு அன்புப் பரிசு வழங்கினார். அப்போது அவர், நிப்பான் பெயின்ட் நிறுவனம் `N-சக்தி’ என்கிற பெயரில் மகளிருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தொழில்முனைவோர்களை உருவாக்கி வருவதாகவும் இதனால் பலர் பலனடைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு சாட்சியாக இரண்டு பெண்கள் மேடையேறினார்கள். அவர்களில் ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது அரங்கத்தில் நிறைந்திருந்தவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்தது.