
லண்டனிலிருந்து லாவண்யா
`இங்கிலாந்து நாட்டில் உள்ள, 900 வருட வரலாறு கொண்ட தொழிற்புரட்சி நகரமான ஸ்ட்ரவுடில் (Stroud), முதன்முறையாக ஒரு தமிழ்ப்பெண் கவுன்சிலராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்’ என்று லண்டன் செய்தித்தாள்கள் சமீபத்தில் சியாமளா ஆனந்தனை புகழ்ந்து எழுதின. மைனஸ் 4 டிகிரி குளிரில் லண்டன் திளைத்திருந்த ஒரு மதியப் பொழுதில், தேநீர் கோப்பையின் துணையுடன் அவள் விகடனுக்காக சியாமளாவுடன் உரையாடியபோது, இங்கிலாந்தில் குடியேறி 18 வருடங்கள் ஆகிவிட்டாலும் பேச்சில் பக்கா திருநெல்வேலி தமிழச்சியாக, பழகிய பக்கத்துவீட்டுப் பெண் போல பேசினார்.
‘`எங்க அம்மா மங்கையர்கரசிதான் என் முதல் ரோல்மாடல். அப்பா அரசையா பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்ததால, என்னையும் தம்பி, தங்கச்சியையும் அம்மாதான் பொறுப்பா வளர்த்தாங்க. பிறந்த நாள்களை மாற்றுத்திறனாளிகளுடன் கொண்டாடுறது, பெண்கள் யாரையும் சாராமல் சொந்தக்காலில் நிற்கப் பழகுறதுனு அவங்க கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள் நிறைய. பள்ளி நாள்களில் சங்கீதம், வீணை, மேடை நாடகம், விளையாட்டு, சதுரங்கம்னு ஆர்வமா இருப்பேன். இன்ஜினீயரிங்ல சேர்ந்தப்போ காலேஜ் ஜர்னலில் ஆசிரியர், கருத்தரங்கங்கள் நடத்திய அனுபவம்னு என்னை வளர்த்துக் கிட்டேன். படிப்பை முடிச்சதும் கணவர் ஆனந்துடன் காதல் திருமணம் முடிந்தது’’ என்றவர் தான் இங்கிலாந் துக்கு ஃப்ளைட் ஏறிய கதையை சில திகில் சம்பவங்களுடன் சொன்னார்.
‘`வெளிநாட்டில் முதுகலை படிக் கணும்னு எனக்கு தீவிர ஆசை. இங்கி லாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைச்சது. எல்லா மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரி பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப எங்க வீட்டிலும் தயங்கினாலும், என் மாமியாரும் மாமனாரும் எனக்கு முழு சப்போர்ட். என்னுடன் கணவரும் வருவதாக இருந்து, அது முடியாம போச்சு. அதுவரை நான் தனியா தூர பயணம்கூட போனதில்லை. டிராவல் ஏஜென்சியை நம்பி போனப்போ, ஏமாந்த அனுபவம்தான் கிடைச்சது.

2005-ம் ஆண்டு... முதன்முறையா லண்டன் - ஹீத்ரு விமான நிலையத்துல வந்து இறங்கி, அங்கிருந்து நியூகாசில் நகரத்துக்கு விமானம் மூலம் சென்றேன். என்னை கூட்டிட்டுப் போகவும், தங்கு வதற்கு இடம் ஏற்பாடு செய்யவும் ஆட்கள் வருவாங்கனு டிராவல் ஏஜென்சியில சொல்லியிருந்தாங்க. ஆனா அப்படி யாரும் வராமல் போக, திசை தெரியாம ஏர்போர்ட்டில் நின் னேன். பயத்தை ஓரம்கட்டி வெச்சுட்டு, நான் படிக்கவந்த பல்கலைக்கழகத்துக்கு தொடர்பு கொண்டேன். சில மாணவர் களோட எண்களை தந்தாங்க. அவங்கதான் எனக்கு தற்காலிகமா தங்கும் இடம் கொடுத்தாங்க. இருந் தாலும், யாரையும் நம்பிப் பேச ஒரு பயம். கூடவே அந்நேரம் ஒரு தமிழ் மாணவர், உள்ளூர் மக்களால் தாக்கப் பட்டு உயிருக்குப் போராடின செய்தியைப் பார்த்தப்போ, ரொம்ப நடுங்கிப் போனேன். நம்ம இந்திய மாணவர்களுக்கு இங்க பணம், மொழி, உணவெல்லாம் தாண்டி ஒரு பெரிய சவால்... குளிர். அதுவும் வடகிழக்கு இங்கிலாந்தில் ஆளைக் கொல்லும் வகையிலான குளிர் நம்மை சோர்வாக் கும். ஒருவழியா என் கணவர் சில மாதங்களில் இங்க வேலைக்கு வந்ததும் தான் மனசுல இருந்த பயமும் சோர்வும் விலகுச்சு’’ என்றவர், வேலை பற்றி பகிர்ந்தார்.
``படிப்பை முடிச்சுட்டு நான் வேலை தேடினப்போ, அந்தக் காலகட்டத்துல பொறியியல் துறையில் பெண்களுக்கு அங்கீகாரம் இல்லை. மேலும் உள்ளூர் ஆண்களுடன் போட்டி போட்டு நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது கடினமா இருந்தது. ஒருவழியா வேலை கிடைக்க, இளம் பொறியாளராக நான் வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்தில் பெண்கள் யாருமே இல்ல. எங்க டீம்ல பணிபுரிந்த அனைவரும் 25 வருடங்கள் அனுபவம் கொண்ட உள்ளூர் ஆண்கள். ஆனா முதுகலை படிப்பை முடிச்சிருந்த தால எனக்கு அவங்களைவிட சம்பளம் அதிகம், நான் வெளிநாட்டை சேர்ந் தவள்னு இந்தக் காரணங்களால அவங்க எல்லாரும் என்னுடன் ஒரு பனிப்போர் நடத்திட்டே இருப்பாங்க. மீட்டிங்கில் என்னை மதிக்காம உதா சீனப்படுத்துவாங்க. நான் வருத்தப் படாத நாள்களே இல்லை.

அப்போ ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமா, எங்க நிறுவனத்தில் ஒரே நாளில் 500 பேர் வேலை இழந் தாங்க. என் திறமையால அலுவலகம் என்னை தக்கவெச்சுக்கிச்சு. பதவி உயர்வும் கிடைச்சது. ஆனா, என்னை மன ரீதியாகக் காயப்படுத்தினவங்க எல்லாரும் மொத்தமா வெளியேற்றப்பட்டாங்க. பெண், வெளிநாட்டை சேர்ந்தவள்னு பலமுறை அவமானப்படுத்தப்பட்டிருக்கேன். ஆனாலும் என்னை தளரவிடாம பார்த்துக்கிட்டு வேலையில் கவனம் செலுத்தினதால எனக் கான அங்கீகாரம் கிடைச்சது. இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் வான்வெளித்துறை திட்ட இயக்குநரா இருக்கேன். வேலை நிமித்தமா பல நாடுகளுக்குப் போறப்போ, பயந்துட்டே லண்டன் விமான நிலையத்துல வந்து இறங்கின சின்னப் பொண்ணு சியா மளாவை நினைச்சுப்பேன்’’ - சிரித்தபடியே தேநீர் கோப்பையை கீழே வைத்தவர், கவுன் சிலர் சியாமளா ஆன கதையை சொன்னார்.
‘`என் பொண்ணு படிக்கும் ஸ்கூல் கவர்னர் தேர்தலில், உள்ளூர் கால்நடை மருத்துவரோடு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். STEM (Science, Technology, Engineering and Mathematics) திட்டத்தின் தூதுவராக இணைந்து மேல்நிலைப்பள்ளி, கல்லூரி களில் மாணவர்கள், குழந்தைகள் கல்வி அறிவில் மேம்பட எனது அனுபவத்தின் மூலம் வழிகாட்டிட்டு வர்றேன். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்காக மொழிப்பெயர்ப்பாளராவும் செயல்படுறேன். நானும் கணவரும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பலருக்கும் உதவி வந்ததோடு, இப்போ ஒரு தொண்டு நிறுவனத்தின் இயக்குநராவும் இருக்கேன். இப்படி பல தளங்களில் இயங்கினாலும், மனசில் எப்பவும் அடுத்து என்னங்கிற கேள்வி ஓடும் என்றாலும்... அரசியல் எதிர்பாராதது.
கடந்த நவம்பர் மாதம் ஸ்ட்ரவுட் நகர்ல நடந்த தேர்தல்ல, எந்த அரசியல் பின்புலமும் இல்லையென்றாலும், ஒரு உத்வேகத்துல, கணவரும் நண்பர்களும் அளித்த உற்சாகத்துல சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கேன். நிதி மற்றும் நெடுஞ்சாலை துறை கமிட்டிகளில் கலந்து கொண்டு என் நகரத்தின் வளர்ச்சிக்கானதை செய்யணும். ஏதாவது ஒரு வகையில் சமூகத் துக்கு என் பங்களிப்பை செஞ்சுட்டு வந்துட்டே தான் இருந்திருக்கேன். இப்போ இந்தப் பதவி மூலமா அதை இன்னும் அதிகமா செய்றதுக் கான வாய்ப்புக் கிடைச்சிருக்கு.
எதிர்பார்க்காத இன்னொரு விஷயம்... இங்குள்ள பல முன்னணி கட்சிகளும் வரும் தேர்தல்ல தங்களோட வேட்பாளரா நிற்க என்னை கேட்டிருக்காங்க. இப்போதைக்கு எதுவும் முடிவெடுக்கல’’ என்று அசரவைப்பவர், தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.
``இங்கிலாந்தில் இந்திய தமிழர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கிறதா புள்ளிவிவரம் சொல்லுது. அவங்க எல்லாரும் அரசியல் பங்கெடுப்பு பற்றி சிந்திக்கணும். தமிழ்ப் பெண்கள் அரசியலுக்கு வரணும். அதுக்கான ஆலோசனைகள் தேவைப்படுறவங்களுக்கு நான் வழங்கத் தயாரா இருக்கேன்.
`உங்களுக்கு உங்க அம்மா முதல் ரோல் மாடல்போல, எங்களுக்கும் எங்க அம்மாதான் முதல் ரோல்மாடல் மம்மி’னு சொல்லி என்னை உற்சாகப்படுத்திட்டே இருக்குற மகன் கிஷோர், மகள் தீராவுக்கும், என் கணவருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும், ரொம்ப முக்கியமா தமிழ்ப் பெண்ணான என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஸ்ட்ரவுட் டவுன் மக்களுக்கும் நன்றி”
- கைகள் கூப்புகிறார் இங்கிலாந்து அரசியல்வாதி சியாமளா.