Published:Updated:

Motivation Story: `மாறாது மாறாது இவன் வீரமே!’- தோட்டக்காரரின் மகன் ரொனால்டோ கால்பந்தின் நாயகனான கதை!

Cristiano Ronaldo |ரொனால்டோ

ஒருகட்டத்தில் `இனி ரொனால்டோ அவ்வளவுதான்... கால்பந்தாட்ட மைதானத்தில்கூட அவர் கால்வைக்க முடியாது’ என்கிற அளவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

Published:Updated:

Motivation Story: `மாறாது மாறாது இவன் வீரமே!’- தோட்டக்காரரின் மகன் ரொனால்டோ கால்பந்தின் நாயகனான கதை!

ஒருகட்டத்தில் `இனி ரொனால்டோ அவ்வளவுதான்... கால்பந்தாட்ட மைதானத்தில்கூட அவர் கால்வைக்க முடியாது’ என்கிற அளவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

Cristiano Ronaldo |ரொனால்டோ
`உறக்கத்தில் நீங்கள் காண்பவை கனவுகளே அல்ல. உங்களை உறங்கவிடாமல் அடிப்பவைதான் உங்களுடைய நிஜக் கனவுகள்.’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo
Cristiano Ronaldo
AP

கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலகிலேயே முதன்முறையாக அதிகபட்ச ஊதியமாக ஒரு பில்லியன் டாலர் வாங்கியவர்... எத்தனையோ கால்பந்து விளையாட்டு வீரர்கள் இருக்க, கூகுள் தேடலில் அதிக அளவில் தேடும் பெயராக தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பவர்... 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 5 மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்து, `உலகிலேயே தொண்டுள்ளத்தோடு அதிக நன்கொடை வழங்கும் விளையாட்டு வீரர் போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்... கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo).

இன்னும் இணையத்தில் தேடினால் ரொனால்டோ பெற்ற பதக்கங்கள், விருதுகள், புரிந்த சாதனைகள் என மலைக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இவ்வளவு உலகப்புகழ் பெறுவது சாதாரண காரியமில்லை. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, இந்த அளவுக்கு அவர் வளர்ந்தது ஏதோ மாயாஜால வேலை அல்ல. ஓர் இலக்கை நோக்கிய உறுதியான திட்டமிடல், அயராத உழைப்பு, எவ்வளவு தடைகள் வந்தாலும் வெற்றியை நோக்கியே இருந்த அவர் பயணம்... இவையெல்லாம்தான் காரணங்கள்.

`திறமை இருந்தும் கடினமாக உழைக்காவிட்டால், அது ஒன்றுமேயில்லாதது.’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ
Ronaldo
Ronaldo
AP

ஒருகட்டத்தில் `இனி ரொனால்டோ அவ்வளவுதான்... கால்பந்தாட்ட மைதானத்தில்கூட அவர் கால்வைக்க முடியாது’ என்கிற அளவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்தும் அவர் மீண்டு வந்தார். அதற்குக் காரணம், அவருக்கு கால்பந்து விளையாட்டின் மேலிருந்த கட்டுக்கடங்காத காதல்! அந்த நேசம் திடீரென்று வந்தது கிடையாது... சிறு வயதிலிருந்தே மனதுக்குள் விதைபோட்டு, நீரூற்றி வளர்த்த நேசம் அது.

`நான் ஒரு கனவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதிலிருந்து விழித்துக்கொள்ள நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன்.’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ

1985, பிப்ரவர் 5-ம் தேதி போர்ச்சுக்கல்லில் இருக்கும் சாவோ பெட்ரோ (São Pedro) என்ற சிறு நகரில் பிறந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆனால், அவர் வளர்ந்ததெல்லாம் சான்டோ ஆன்டனியோ (Santo António) என்ற பகுதியில். வீட்டில் கடைக்குட்டி ரொனால்டோ. அவருக்கு இரண்டு அக்காக்களும், ஓர் அண்ணனும் இருந்தார்கள். அம்மா சமையல் வேலை பார்த்தார். அப்பா முனிசிபாலிட்டியில் தோட்டக்காரர். அதோடு ரொனால்டோவின் அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தார். கேட்க வேண்டுமா... வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ரொனால்டோவை கருவில் சுமந்திருந்தபோது, `வீட்டுல எல்லாருமே கால் வயித்துக்கும், அரை வயித்துக்கும்தான் சாப்பிடுறோம். இதுல இந்தக் குழந்தை வேற வேணுமா?’ என்கிற எண்ணம் அவரின் அம்மாவுக்குத் தோன்றியது. ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், ``கருவைக் கலைக்க முடியாது. அது உயிருக்கே ஆபத்தாக முடியும்’’ என்று மறுத்துவிட்டார். `சரி... மூணோட நாலாவாதா ஒண்ணு இருந்துட்டுப் போகட்டுமே...’ என்ற எண்ணத்தில் கருவை கலைக்காமல் விட்டுவிட்டார் அந்தத் தாய்.

Ronaldo
Ronaldo
Twitter

குட்டியூண்டு அறை. இரவுப் பொழுதில் அதற்குள் ரொனால்டோ, அண்ணன் ஹியூகோ, அக்காக்கள் காஷியா (Katia), எல்மா (Elma) நால்வரும் ஒட்டிக்கொண்டு படுத்துக் கிடப்பார்கள். புரண்டு படுக்க முடியாது. இஷ்டத்துக்கு கால் கையை நீட்டிப் படுக்க முடியாது. ரொனால்டோ ஒரு ஃபுட்பால் பைத்தியம். ஒரு கால்பந்து வாங்கக்கூட காசிருக்காது. ஆனால் ரோட்டில் இறங்கினாலே கால் தானாக பந்தை உதைப்பதற்கு நீளும். வாட்டர் பாட்டில், கந்தைத்துணி என உதைப்பதற்குத் தோதாக எது கிடைத்தாலும் விட மாட்டார். தெருவில் உதைத்து உதைத்து உருட்டிக்கொண்டே போவார். சக பையன்களும், தெருக்காரர்களும் கேலி செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார்.

ஒருநாள் தெருவில் கந்தைத்துணியை பந்து மாதிரி சுருட்டிச் செய்து, அதில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த ரொனால்டோவை ஒருவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

``தம்பி இங்கே வா.’’

பாலை உதைத்தபடியே ரொனால்டோ அந்த மனிதரின் அருகே போனார். ``சொல்லுங்க சார்...’’

``நீ எதிர்காலத்துல என்னவா ஆகப்போறே?’’

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

``இது என்ன கேள்வி... பார்த்தா தெரியலை... இந்த உலகத்துலயே பெரிய ஃபுட்பால் பிளேயரா ஆகப்போறேன்.’’

``ஆனா உன்கிட்ட பந்துகூட இல்லையே... அதுலயும் ஒல்லியா வேற இருக்கே?’’

``அதெல்லாம் எனக்குப் பிரச்னை இல்லை சார். நீங்க வேணா பாருங்க. நான் பெரிய ஃபுட்பால் பிளேயரா வருவேன்.’’

`சில நேரங்களில் சிறந்த பயிற்சி என்பது ஓய்வெடுப்பதுதான் என்று நான் நினைத்துக்கொள்வேன்.’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ.

எப்படியோ ஒரு கால்பந்து வாங்கிவிட்டார், 11 வயதிலிருந்தே சின்னச் சின்ன கால்பந்து விளையாட்டுகளில் பங்கெடுக்கவும் ஆரம்பித்துவிட்டார், கால்பந்து மைதானத்தில் துள்ளித் துள்ளி ஓடும் கால்கள், பந்தை லாகவமாக விரட்டும் திறமை, குறிபார்த்து பந்தை கோல் போஸ்ட்டில் அடிக்கும் சாமர்த்தியம்... பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை. `யாரிந்த பையன்?’ என்று பார்க்கிறவர்களெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

ரொனால்டோ
ரொனால்டோ

ரொனால்டோவுக்கு 12 வயது. போர்ச்சுக்கல்லில் இருக்கும் ஸ்போர்ட்டிங் சி.பி (Sporting C.P) என்ற கிளப் மூன்று நாள்கள் தங்கள் அணிக்காக விளையாட அவருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதற்காக அவருக்குக் கிடைத்த ஊதியத் தொகை 1,500 பவுண்டுகள். ஒரு பக்கம் கால்பந்து விளையாட்டு `வா... வா...’ என்று அவரை அழைத்துக்கொண்டிருக்க, பள்ளி வாழ்க்கை அவருக்கு நரகமாக இருந்தது. அவரால் படிப்பில் கவனம் செலுத்தவே முடியவில்லை. அப்போது ஆறாவது கிரேடுதான் படித்துக்கொண்டிருந்தார். பள்ளியில் ஒரு பிரச்னை. ஆசிரியர் மரியாதைக் குறைவாக ரொனால்டோவைப் பேச, அவரால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி ஆசிரியரை நோக்கி வீசியெறிந்தார். பிறகென்ன... பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்.

வீட்டுக்கு வந்தார் ரொனால்டோ. ``அம்மா உங்களுக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல?’’

``என்னப்பா விஷயம்... ஏன் இப்பிடிக் கேக்குற?’’

``இல்லம்மா. என்னால படிக்க முடியலை. முழு நேரமும் ஃபுட்பால்ல கவனம் செலுத்தப்போறேன். என்னால ஃபுட்பால்ல பெரிய ஆளா வர முடியும். படிச்சு சம்பாதிக்கறதைவிட அதிகமா நான் ஃபுட்பால்ல சம்பாதிப்பேன்மா.’’

அம்மாவுக்கு ரொனால்டோவின் நம்பிக்கை ஆச்சர்யத்தைத் தரவில்லை. அவருடைய திறமையை அம்மா அதிகம் அறிவார். ``சரி... படிப்பு இல்லைன்னதும் வேற பக்கம் கவனம் போயிடக் கூடாது. ஃபுட்பால்ல மட்டும்தான் உன் சிந்தனை இருக்கணும் சரியா?’’

``சரிம்மா.’’

`உங்களால் இந்த உலகத்தை மாற்ற முடியாது. என்னாலும் இந்த உலகத்தை மாற்ற முடியாது. ஆனால், நம்மால் உதவ முடியும். நம் எல்லோராலும் பிறருக்கு உதவ முடியும்.’ - கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Philipp Guelland

ரொனால்டோவுக்கு 15 வயது. அப்போதுதான் அந்த இடி போன்ற செய்தி வந்தது. ஏதோ ஒரு பிரச்னை. இதயத்தில் லேசாக வலி என்று போனவரைப் பரிசோதித்தார்கள் மருத்துவர்கள். ``ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் ஒருவகையான இதயக் கோளாறு இது. இதற்குப் பெயர் `டாச்சிகார்டியா’ (Tachycardia)’’ என்றார்கள். அதாவது ஒரு மனிதருக்கு சாதாரணமாக இருக்கும் இதயத் துடிப்பைவிட அதிகமாக இருக்கும்.

ரொனால்டோவுக்கு அப்போது இருந்தது இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று, ஓடாமல், ஆடாமல் இருக்க வேண்டும். அதற்கு ஃபுட்பாலை மூட்டைகட்டி வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட வேண்டும். இரண்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு மீண்டெழ முடியுமா என்று பார்க்க வேண்டும். அது மிக ஆபத்தான அறுவை சிகிச்சை. அன்றைக்கு இருந்த சூழலில் அந்த ஆபரேஷனை செய்துகொண்டு உயிர் பிழைப்பதேகூட கடினம். அந்தச் சூழலில்கூட இரண்டாவது வாய்ப்பைத்தான் கையிலெடுத்தார் ரொனால்டோ.

அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ``பயப்படாதீங்கம்மா. எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் மறுபடியும் ஃபுட்பால் விளையாடுவேன்’’ என்று நம்பிக்கையோடு சொன்னார் ரொனால்டோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஆபரேஷன் முடிந்தது. சில நாள்களிலேயே தனக்குப் பிரியமான கால்பந்தை விரட்டிக்கொண்டு மைதானத்தில் இறங்கிவிட்டார் ரொனால்டோ. ஏழ்மை, தடைகள், முழுமையான கல்வி இல்லை... இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றி பெற்றதற்குக் காரணம் அவருக்குத் தன் திறமை மீதிருந்த அபார நம்பிக்கை. கால்பந்து விளையாட்டின் மேல் அவருக்கு இருந்த தீராத காதல். ரொனால்டோ ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார்...

``கால்பந்து இல்லையென்றால், என் வாழ்க்கைக்கே மதிப்பில்லை.’’