Published:Updated:

Motivation Story: `தன் திருமணத்தால் வந்த யோசனை!' - `பாரத் மேட்ரிமோனி’ முருகவேல் ஜானகிராமன் வென்ற கதை

முருகவேல் ஜானகிராமன்

நான் மட்டும் வேதியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஏதாவது ஒரு சோதனைக் கூடத்தில் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்திருப்பேன் - முருகவேல் ஜானகிராமன்

Published:Updated:

Motivation Story: `தன் திருமணத்தால் வந்த யோசனை!' - `பாரத் மேட்ரிமோனி’ முருகவேல் ஜானகிராமன் வென்ற கதை

நான் மட்டும் வேதியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஏதாவது ஒரு சோதனைக் கூடத்தில் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்திருப்பேன் - முருகவேல் ஜானகிராமன்

முருகவேல் ஜானகிராமன்
`வாய்ப்புகள் தானாக வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை உருவாக்க வேண்டும்.’’ - அமெரிக்க புகைப்படக் கலைஞர், தொழில்முனைவர் கிரிஸ் கிராஸர் (Chris Grosser)

`சரியான வாய்ப்பு அமையலை... அதான் நான் இப்படி இருக்கேன்’, `எனக்கு மட்டும் அவருக்குக் கிடைச்ச மாதிரி வாய்ப்பு கிடைச்சிருந்தா எங்கேயோ போயிருப்பேன்...’ என்றெல்லாம் புலம்புபவர்கள் ஒரு வகை. `புதுசா, கிரியேட்டிவா என்ன பண்ணலாம்?’ என சதா யோசித்து, ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள் சிலர். அதற்கு செயல் வடிவம் கொடுத்து, அதிலேயே அழுத்தமாகக் காலூன்றி மேலே மேலே போய்க்கொண்டேயிருப்பார்கள். இவர்கள் மற்றொரு வகை. எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி... `கிரியேட்டிவிட்டி’ ரொம்ப முக்கியம். இந்த வரம் வாய்க்கப் பெற்றவர்களைத்தான் இந்தச் சமூகம், `அதிர்ஷ்டசாலிகள்’ என வர்ணிக்கிறது. அப்படியோர் `அதிர்ஷ்ட வரம்’ வாங்கி வந்தவர், முருகவேல் ஜானகிராமன்.

வடசென்னையில், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களுக்கு மத்தியில் வளர்ந்தவர் முருகவேல் ஜானகிராமன். அதனால், இயல்பாகவே அவருக்குப் பணத்தின் அருமை தெரிந்திருந்தது. ப்ளஸ் டூவில் பாஸாகிவிட்டார். பள்ளி மேற்படிப்பு முடிந்ததும், மாணவர்கள் அத்தனை பேரும் எதிர்கொள்ளும் வழக்கமான பிரச்னையை எதிர்கொண்டார் முருகவேல். எந்தக் கல்லூரியில், எந்தப் பாடம் எடுத்துப் படிப்பது?

முருகவேல் ஜானகிராமனின் மாமா ஒரு யோசனை சொன்னார். ``இப்போ இருக்குற படிப்புலயே அதிக டிமாண்ட் இருக்குறது கெமிஸ்ட்ரிக்குதான். அதை எடுத்துப் படி. உடனே வேலை கிடைச்சுடும்.’’ குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களும் அதையே வலியுறுத்தினார்கள். ஆனால், சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) புள்ளியியல் (Statistics) இளங்கலைப் படிப்பில்தான் அவருக்கு இடம் கிடைத்தது. அதுவரை அவருக்கு புள்ளியியல் என்றால் என்ன என்றுக்கூடத் தெரியாது. ஆனாலும் பாடத்தில் கவனம் செலுத்தினார். ஆழ்ந்து படித்தார். இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Murugavel Janakiraman
Murugavel Janakiraman
P.Kalimuthu

அதற்குப் பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பித்தார். பின்னாளில் ஒரு பேட்டியில், `அதுவரை நான் கம்ப்யூட்டரைத் தொட்டதுகூட இல்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அந்தப் படிப்புக்கு விண்ணப்பித்து, தேர்வான 10 பேரில் நானும் ஒருவன். நான் மட்டும் வேதியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஏதாவது ஒரு சோதனைக் கூடத்தில் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்திருப்பேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் முருகவேல் ஜானகிராமன். இந்தப் படிப்புகளோடு ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில், முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

வாய்ப்புக்காக அவர் காத்திருக்கவில்லை. அதை, தான்தான் உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். தன் திறமை என்ன என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கம்ப்யூட்டர் புரோக்ராமிங் செய்வதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்தார் அவர். முதலில் சிங்கப்பூரில் பணிபுரியும் வாய்ப்பு. அங்கே பணியாற்றிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என சதா யோசனையில் இருந்தார். அதன் பிறகு 1997-ல் அமெரிக்காவில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்ற அழைப்பு வந்தது. நல்ல வாய்ப்பு எனத் தெரிந்துகொண்டவர், அமெரிக்காவுக்குப் பறந்தார்.

முருகவேல்
முருகவேல்

அது இணையதளம் பிரபலாமாகியிருந்த நேரம். இன்டர்நெட் எதிர்காலத்தில் கொடிகட்டிப் பறக்கப்போகிறது. இது இல்லாமல் எதுவும் இல்லை என்பது அவருக்குப் புரிந்துபோனது. அதில் என்ன செய்யலாம், எதைச் செய்தால் பலன் கிடைக்கும் என்று ஆராய்ந்துகொண்டேயிருந்தார். இன்டர்நெட்டும் அவருக்குப் புதிய கதவொன்றைத் திறந்துவிட்டது. அமெரிக்கவாழ் தமிழர்களுக்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார் முருகவேல். அங்கிருந்தவர்களெல்லாம் இணையதளத்தை தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்தது. பயனுள்ள தகவல்களைப் பதிவிட வேண்டும்; அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

நாமெல்லாம் நாட்காட்டியில் தேதி கிழித்துப் பழக்கப்பட்டவர்கள். அதில் ஆரம்பித்தார் முருகவேல் ஜானகிராமன். முதல் வேலையாக ஓர் இணையதளத்தை உருவாக்கினார். அதன் பெயர், `sysindia.com'. இலவச இணையதளம். அதில் காலண்டர், திருவிழாக்கள், சுபதினங்கள், முக்கியப் பண்டிகைகள்... எனப் பல பயனுள்ள தகவல்களை இடம்பெறச் செய்தார். அப்போதுதான் சில நண்பர்கள் அவரை அணுகினார்கள்... ``உங்க இணையதளத்துல ஒருத்தரோட தகவல்களை பதிவு செஞ்சு, பொருத்தமான பெண் கிடைக்குதான்னு பாருங்களேன்’ என்றார்கள். விளையாட்டாகத்தான் அந்த வேலையை ஆரம்பித்தார். மூன்றே மாதங்களில் பதிவு செய்தவருக்குப் பெண் கிடைத்துவிட்டது. தொழில்நுட்பம் ஒரு நல்ல மண வாழ்க்கையைச் சாத்தியப்படுத்தியிருந்தது.

முருகவேல் ஜானகிராமன்
முருகவேல் ஜானகிராமன்

ஒருநாள், தன் சுயவிவரங்களையே இணையதளத்தில் பதிவுசெய்தார் முருகவேல் ஜானகிராமன். ஒருவர் லைனில் வந்தார். `உங்க ஜாதகத்தை அனுப்பி வைங்க’ என்றார். அவர்தான் அவருக்கு எதிர்காலத்தில் மாமனாராகப்போகிறார் என்று முருகவேலுக்கு அப்போது தெரியாது. ஜாதகத்தை அனுப்பிவைத்தார். சில தினங்களில் திருமணமே முடிவாகி, தீபாவை மணந்தார் முருகவேல். அப்போதுதான் இணையதளம் திருமணத்துக்குக்கூட உதவும் என்கிற உண்மை அவருக்கு அழுத்தமாகப் புரிந்தது.

1999-ல் வேலையிழந்து சென்னைக்குத் திரும்பினார். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புதான் வசிப்பிடம். ஆனால், நம்பிக்கை இருந்தது. `திருமண சேவை தளம்’ ஒன்றை ஆரம்பித்தால் மேடேறிவிடலாம் என்கிற நம்பிக்கை. தனிமனிதனாக `தமிழ்மேட்ரிமோனி’ இணையதளத்தை ஆரம்பித்தார். இந்தியாவில் வரன்களைத் தேடும் பல லட்சம் பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஓர் இணைப்பு மையமாக தமிழ்மேட்ரிமோனி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது அந்த இணையதளம். பிறகு எல்லாச் சமூகங்களையும் உள்ளடக்கிய திருமண சேவை தளமாக உருவெடுத்தது. அதன் பெயர் `பாரத் மேட்ரிமோனி.’ பிரபல இணையதளங்களான Rediff, MSN, Sify ஆகியவற்றுடன் கூட்டு வைத்துக்கொண்டார். ஆயிரக்கணக்கானோர் வரன் தேடி பாரத்மேட்ரிமோனியின் கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள். வருமானம் பெருகியது. அதன் பிறகு, சென்னையிலும் அமெரிக்காவிலும் தன் அலுவலகங்களைத் திறந்தார் முருகவேல் ஜானகிராமன். ஆரம்பத்தில் இணையதள வேலையோடு அவர் நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று விவரங்கள் சேகரிப்பது, திருமண சுயம்வரங்களை நடத்துவது என என்னென்னவோ செய்தார்.  

இன்றைக்கு பெரும் செல்வந்தர்கள் தொடங்கி, வறுமை நிலையில் இருப்பவர்கள் வரை அத்தனை பேருக்கும் பாரத்மேட்ரிமோனியலில் வரன் கிடைக்கும். மணமகளையும் மணமகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவும் எளிய தளம். இந்தியாவில் திருமணம் என்பது மிகப்பெரிய சந்தை. அதை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்காகவே ஓர் இணையதளத்தை ஆரம்பித்து, இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார் முருகவேல் ஜானகிராமன். அதற்குக் காரணம், அவர் வாய்ப்பு வரும் என்று காத்திருக்கவில்லை. அவருக்கான வாய்ப்பை அவரே உருவாக்கினார்!