Published:Updated:

Motivation Story: மகனுடன் வீடில்லாமல் தெருவிலிருந்தவர் மல்டி மில்லியனர் ஆன கதை!

கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner

`The Pursuit of Happyness' திரைப்படத்தின் நிஜக்கதை இவருடைய வாழ்க்கைதான். இவர் எழுதிய அந்தப் புத்தகம்தான் படமாக எடுக்கப்பட்டது.

Published:Updated:

Motivation Story: மகனுடன் வீடில்லாமல் தெருவிலிருந்தவர் மல்டி மில்லியனர் ஆன கதை!

`The Pursuit of Happyness' திரைப்படத்தின் நிஜக்கதை இவருடைய வாழ்க்கைதான். இவர் எழுதிய அந்தப் புத்தகம்தான் படமாக எடுக்கப்பட்டது.

கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner
`துரதிர்ஷ்டவசமாக சில சிறந்த தந்தைகள், தாய்மார்களாகவும் இருக்க நேர்ந்துவிடுகிறது.’ - கிறிஸ் கார்ட்னர் (Chris Gardner)

உலக சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத திரைப்படம் `தி பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ (The Pursuit of Happyness). அந்தப் படத்தை நினைத்தாலே, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித்தும், சிறுவன் ஜேடன் ஸ்மித்தும் நம் கண்முன் நிழலாடுவார்கள். வீடில்லாமல், ஒதுங்கக் கூரை தேடி இருவரும் பகலிலும் இரவிலும் அலையும் காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை அலைக்கழிக்கவைப்பவை; கனம் கூட்டுபவை. உண்மையிலேயே அப்பாவும் மகனுமான அந்த இருவரும் அந்தப் பாத்திரங்களாகவே படத்தில் ஒன்றிப்போய் நடித்திருப்பார்கள். படமே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றால், யதார்த்தத்தில் இப்படி ஒரு கதை நிகழ்ந்திருந்தால்..?

ஆம். அது உண்மைச் சம்பவமேதான். வில் ஸ்மித் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் கிறிஸ் கார்ட்னர். அவரின் வாழ்க்கை வரலாறுதான் படமாகியிருக்கிறது.

`மனிதர்களுக்குத் துன்பம் வரலாம்... ஆனால், இப்படியெல்லாம் வரவே கூடாது’ என்பதற்கு உதாரணமாக இருக்கும் சில மனிதர்களில் ஒருவர் கிறிஸ் கார்ட்னர். உலகில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் எதிர்காலம் தெரிவதில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால், சில குழந்தைகள் இந்த உலக வாழ்க்கையையே தவிர்த்திருக்கக்கூடுமோ, என்னவோ... ஆனால் இயற்கையை மனிதர்களால் மீற முடியாது. அதன் நியதிகளை யாராலும், ஒருபோதும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அதற்கு கிறிஸ் கார்ட்னரும் விதிவிலக்கில்லை. அவர் சிறு வயதிலிருந்து, திருமணம் முடித்த காலம் வரை தனக்கு நேர்ந்த அத்தனை இன்னல்களையும் அடித்து நொறுக்கி பெரும் பணக்காரராக ஆனதும், இன்றைக்குப் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வதும்தான் நாம் அவரிடமிருந்து கற்கவேண்டிய பாடம்.

கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner
கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner
` `உங்களால் முடியாது’ என்று யாரோ ஒருவர் கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம்... அவர்களால் முடியாது என்பதுதான். எனவே, அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?’ - கிறிஸ் கார்ட்னர்.

1954-ல் மில்வாகீ (Milwaukee) என்ற அமெரிக்க நகரத்தில் பிறந்தார் கிறிஸ் கார்ட்னர். அவரின் இளமைப் பருவ வாழ்க்கையே பல பக்கங்களுக்கு நீளும். ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க நம்மை அதிரவைக்கும் பக்கம். குழந்தைப் பருவமென்பது, குதூகலமான காலம். பெற்றோரின் அரவணைப்பில் கோழிக்குஞ்சாக அடைக்கலம் பெற... பள்ளியில் பாடம் படிக்க... புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள... பல நல்ல நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள... மகிழ்ச்சியோடு விளையாடி, சுற்றித்திரிய, காலமெல்லாம் நினைத்துப் பூரிக்க... எனக் குழந்தைகள் வரம் வாங்கி வந்த பருவம். அது கார்ட்னருக்கு வாய்க்கவில்லை.

கார்ட்னர் அவருடைய தந்தையைப் பார்த்ததில்லை. அம்மா பெட்டி ஜீன் (Bettye Jean) இரண்டாவதாக ஒருவரை மணம் செய்துகொண்டார். அந்த மனிதரின் பெயர் ஃபிரெட்டி ட்ரிப்லெட் (Freddie Triplett). வந்து வாய்த்தவர் கொடூரன். குடிகாரர். குடியென்றால் அப்படி ஒரு குடி. அவருடைய முக்கியமான வேலையே கார்ட்னரையும், அம்மாவையும், அவருடைய இரு சகோதரிகளையும் சதா திட்டுவதும் அடிப்பதும்தான். அந்த வீட்டுக்கு ஃபிரெட்டி வந்ததிலிருந்தே கார்ட்னருக்கு அவரைப் பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய அயோக்கியனாகவும் இருக்கட்டும். திருமணமாகிவிட்டது. குழந்தைகள் மனைவி என ஆகிவிட்டது. கொஞ்சம்கூடவா ஒரு மனிதன் மாற மாட்டான்... அதேநேரத்தில், ஃபிரெட்டி என்ற அந்த மனிதருக்கு குரூரத்தனம் கூடவே எப்படி வாழ்நாளெல்லாம் துணை வந்தது என்பதுதான் கிறிஸ் கார்ட்னருக்குப் புரியாத புதிர்.

கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner
கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner

தன் மனைவி பெட்டி ஜீன் குறித்தே அரசாங்கத்திடம் போட்டுக் கொடுத்தார் ஃபிரெட்டி. அரசாங்கத்தின் நலத்திட்ட உதவி ஒன்றில் மோசடி (Welfare Fraud) செய்துவிட்டார் என்று புகார். கார்ட்னரின் அம்மா ஜெயிலுக்குப் போனார். கார்ட்னரும் அவருடைய சகோதரிகளும் அரசாங்கம் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போனார்கள். கார்ட்னருக்கு எட்டு வயது நடக்கும்போது இன்னொரு முறை அவரும் அவருடைய சகோதரிகளும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மறுபடியும் போக நேர்ந்தது. ஒன்றுமில்லை, வீட்டுக்குள் ஃபிரெட்டி தூங்கிக்கொண்டிருந்தார். அம்மா கதவைப் பூட்டி வீட்டுக்குத் தீ வைத்துவிட்டார். அந்த நிகழ்வில் ஃபிரெட்டி தப்பித்துவிட்டாலும், அம்மா பெட்டி ஜீன் மறுபடியும் சிறைக்குப் போக நேர்ந்தது. இப்படி ஒரு வாழ்க்கை வாழும் சிறுவனின் மனநிலை எப்படி இருக்கும்... அதிலிருந்தும் மீண்டு வந்தார் கார்ட்னர்.

`உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை மேற்கொள்ள சரியான நேரம் வருவதற்காகக் காத்திருக்காதீர்கள். மிகச் சரியாக அந்த நேரம் இதுதான்.’ - கிறிஸ் கார்ட்னர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரம் நீட்டுபவர்களும் உண்டு. அப்படி கார்ட்னருக்கும், அவருடைய சகோதரிகளுக்கும் உதவிக்கரம் நீட்டியவர்கள் மூன்று பேர். மூவரும் தாய் மாமன்கள். ஆர்ச்சிபால்டு, வில்லி, ஹென்றி என மூன்று பேர். அவர்களில் ஹென்றி அன்பைப் பொழிந்தார். அதுவும் நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை. மிசிசிப்பி ஆற்றில் மூழ்கி அவர் இறந்துபோனார். அவரின் இறுதிச்சடங்குக்கு அம்மா, காவலர்களின் துணையுடன் வந்தபோதுதான் அம்மா சிறையில் இருப்பதே கார்ட்னருக்குத் தெரிந்தது. சூழ்நிலை, அறியாமை, ஆத்திரம், கோபம் இவற்றால் செய்தவைதான் அம்மா செய்த தவறுகள் என்பது கிறிஸ் கார்ட்னருக்குப் புரிந்திருந்தது. அம்மாவும் அவர்மேல், அவர் எதிர்காலத்தின்மேல் அத்தனை அக்கறை கொண்டவராக இருந்தார். அம்மா பெட்டி ஜீன் அவரிடம் அடிக்கடி சொல்லும் முக்கியமான ஒரு வாசகம்... ``உன்னைக் காப்பாத்த ஏதோ பெரிய படை வரும்னு நினைச்சுக்கிட்டு இருக்காதே. உன்னை நீதான் காப்பாத்திக்கணும்.’ அந்த வாசகம் அப்படியே அழுத்தமாக அவர் மனதில் பதிந்துபோனது.

கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner
கிறிஸ் கார்ட்னர் |Chris Gardner

இளமைப் பருவத்தைக் கடந்த பிறகும், விடாமல் துரத்தும் தெருநாய்போல துன்பம் அவரைத் துரத்தியது. திருமணம்,மனைவியுடன் மனக்கசப்பு, அதனால் பிரிவு என எல்லாம் நடந்தது. அதன் உச்சகட்டமாக தன் சின்னஞ்சிறு வயது மகனைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டிய துர்பாக்கியமான சூழல். நல்ல வேலை இல்லை. வருமானமில்லை. ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து வாழ வழியில்லை. இதில் மூன்று வேளையும் இருவரும் சாப்பிட்டாக வேண்டும். முக்கியமாக, மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியாக வேண்டும். அதற்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில், இருவரும் எங்கேயெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கே படுத்துத் தூங்கினார்கள். பார்க், சர்ச்சின் வெளிப் பகுதி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் டாய்லெட்டின் முன்பு, சில நேரங்களில் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில், அவரின் டெஸ்குக்குக் கீழே எனத் தூங்கினார்கள். இத்தனைக்கும் அவர் வசிப்பதற்கு ஒரு வீடில்லை என்பது அவருடன் வேலை பார்ப்பவர்களுக்குக்கூடத் தெரியாது.

`நான் விரும்பிய வாழ்க்கையைத்தான் நான் உருவாக்கியிருக்கிறேன்.’ - கிறிஸ் கார்ட்னர்.

படிப்பை முடித்ததும் அவர் போய்ச் சேர்ந்த இடம் அமெரிக்க கப்பற்படை. மாமா ஹென்றி சொல்லிச் சொல்லி ராணுவத்தின் மீது அவருக்கு ஓர் ஈடுபாடு வந்திருந்தது. அங்கே நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு வந்திருந்தார். வாழ்க்கை அவரை அடித்துத் துவைக்க, மருத்துவ உபகரணங்களை விற்பது என ஏதோ பயனில்லாத வேலையைச் செய்துகொண்டிருந்தார். அவரும் அவருடைய சிறு வயது மகனும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான், ஒரு நாள் அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது.

ஏதோ ஓர் இடம். கார் பார்க்கிங் பகுதி. ஒரு சிவப்பு நிற ஃபெராரி காரில் வந்து ஸ்டைலாக இறங்கினார் ஒரு மனிதர். பார்ப்பதற்கே டிப்டாப் தோற்றம். அவரைப் பார்த்ததுமே கிறிஸ் கார்ட்டனுக்கு ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை. இளம் வயது, இவ்வளவு செல்வச் செழிப்பு... எப்படி? அதற்கு மேல் அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. அந்த மனிதரிடம் போனார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

`The Pursuit of Happyness' புத்தகம்
`The Pursuit of Happyness' புத்தகம்

``சார்... ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?’’

``இல்லை. சொல்லுங்க.’’

``நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?’’

``ஷேர் மார்க்கெட் புரோக்கர்.’’

ஆச்சர்யத்தில் கார்ட்னரின் விழிகள் விரிந்தன. மேலும் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினார். இறுதியாகக் கேட்டார்... ``என்னாலயும் அந்த வேலையைப் பார்க்க முடியுமா?’’

``நிச்சயமா. ஆனா, அதுக்குன்னு சில நடைமுறைகள் இருக்கு. எக்ஸாம் இருக்கு, அதுல பாஸ் பண்ணணும். அப்புறம்...’’

``எது வேணாலும் செய்யறேன். நானும் உங்களை மாதிரியே ஆகணும். அவ்வளவுதான்.’’

அந்த மனிதர் ஒரு முறை ஏற இறங்க கார்னரைப் பார்த்தார். தன் பெயர் பாப் பிரிட்ஜஸ் (Bob Bridges) என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து அங்கே வரச் சொன்னார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக். இதற்கு மேல் விரிவாக கார்ட்னரின் கதையைச் சொல்வது சோர்வடையச் செய்துவிடும். எனவே சுருக்கமாக... கார்ட்னர் பல இன்னல்களுக்கு மத்தியில், `Deen Witter Reynold (DWR)' என்ற பங்குச் சந்தை தரகு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்தார். நிறைய சம்பாதித்தார். சிகாகோ நகரில் தன் சொந்த பங்குத் தரகு நிறுவனமான `Gardner Rich & Co’ என்பதை ஆரம்பித்தார். இன்றைக்கு அவருடைய சொத்து மதிப்பு 60 மில்லியன் டாலருக்கும் மேல்.

இடையில் அவர் எழுதிய சுயசரிதையான `The Pursuit of Happyness' விற்பனையில் சக்கைபோடு போட்டது. அதைத் திரைப்படமாக எடுக்க கொலம்பியா பிக்சர்ஸ் உட்பட பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தன. அது படமாக வெளியாகி, கிறிஸ் கார்ட்னராக ஹாலிவுட்டின் பிரபல நாயகர்களில் ஒருவரான வில் ஸ்மித் நடித்தார். அவரின் சிறந்த நடிப்பு ஆஸ்கர் நாமினேஷன் வரை அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.

`The Pursuit of Happyness'  படத்தில்
`The Pursuit of Happyness' படத்தில்

அந்தப் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து ஒருநாள்... கிறிஸ் கார்ட்னரின் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். இடிந்துபோனார் கார்ட்னர். அதற்குப் பிறகும் பிசினஸில் தொடர அவர் மனம் ஒப்பவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பிசினஸில் கழித்தாயிற்று. `பார்த்தீங்களா... வாழ்க்கை எவ்வளவு சின்னதுன்னு. இனிமே என்ன செய்யப்போறீங்க?’ என்று அவர் மனைவி கேட்பதுபோலவே மனதுக்குள் குரல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு முடிவெடுத்தார். உரையாடல்... பார்க்கிற ஒவ்வொரு மனிதரோடும் உரையாட வேண்டும். அவர்கள் மனதில் பதிகிற மாதிரி நான்கு நல்ல விஷயங்களைப் பேச வேண்டும். முக்கியமாக, நல்லவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். எல்லாவற்றையும் கழற்றித் தூரப்போட்டார். ஊர் ஊராகச் சென்று நல்ல கருத்துகளைப் பேச ஆரம்பித்தார். இன்றைக்கு உலகம் முழுக்கத் தன் பேச்சாற்றலால் வலம் வருகிறார்.

தன் மேடைப் பேச்சுகளில் கிறிஸ் கார்ட்னர் தவறாமல் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். `இந்த உலகம் உங்களுக்கேயான ஒரு சிப்பி. அதிலிருக்கும் முத்தை நீங்கள்தான் கண்டெடுக்க வேண்டும்.’ கண்டெடுத்தவர் சொன்னால் கேட்கத்தானே வேண்டும்?