லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“வாழ்க்கையோட கடைசி நொடி வரைக்கும் எல்லாமே அனுபவம்தான்!” - பாடி பில்டர் ரூபியின் பாசிட்டிவிட்டி

பாடி பில்டர் ரூபி
பிரீமியம் ஸ்டோரி
News
பாடி பில்டர் ரூபி

படங்கள்: ச.ரா.ஸ்ரீதர்

“அப்பா - அம்மா ரெண்டு பேரின் அரவணைப்புமே கிடைக்காம அல்லது சிங்கிள் பேரன்ட்டால வளர்க்கப்படுற குழந்தைகளோட உளவியல் ரொம்பவே சிக்கலானது. நான் அனுபவிச்ச அந்த வேதனைகள் என் பிள்ளைக்கு வரக் கூடாதுனு ஆசைப்படறேன். அதனாலதான் அவனை நல்லபடியா வளர்த்தெடுக்க, ராத்திரி பகலா ஓடியோடி உழைக்கிறேன்!” - சிங்கிள் பேரன்ட்டிங் பொறுப்புணர்வையும் தாய்ப்பாசத்தையும் ஒருசேர விவரிக்கிறார் ரூபி பியூட்டி.

தமிழ்நாட்டின் முதல் பெண் பாடி பில்டராக ரூபியை பலருக்கும் தெரிந்திருக்க லாம். ஆனால், பெரும்பாலானோரும் அறியாத இவரின் துணிச்சலும் வைராக் கியமும் பெரும் ஊக்கம் தருபவை.

‘ சந்திரா ஹோம் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் உணவு சமைத்துக்கொடுக்கும் ரூபி, கூந்தலுக்கான மூலிகை ஆயில், ஊறுகாய், வற்றல் மற்றும் வடகம், சத்துமாவு ஆகியவற்றை விற்பனை செய்வதுடன், துணி வியாபாரமும் செய்கிறார். பர்சனல் ஜிம் டிரெயினராகவும் பயிற்சி கொடுக்கிறார்.

 மகனுடன்...  ரூபி
மகனுடன்... ரூபி

இவர் பயணப்பட்ட வழித்தடங்கள், முள் தடங்களைவிடவும் மோசமானவை. ஆனால், அந்த வலிகளையெல்லாம் துடைத்தெறிந்த புது மனுஷியாகச் சுடர்விடுகிறார் ரூபி.

“எங்கம்மாவும் சிங்கிள் பேரன்ட்தான். சின்ன வயசுல தாத்தா - பாட்டி வீட்லதான் வளர்ந்தேன். சொந்தபந்தங்களால எனக்கு நேர்ந்த அவஸ்தைகள் அதிகம். ப்ளஸ் ஒன் படிக்கிறப்போ வீட்டை விட்டு வெளியே போயிட்டேன். ஆசிரமத்துல அடைக்கலமான என்னை மறுபடியும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. படிப்புல சரியா கவனம் செலுத்த முடியலை. மூணாவது முயற்சியிலதான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். ஏர்ஹோஸ்டஸ், ஸ்டார் ஹோட்டல்கள்ல கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூட் டிவ்னு ஏதேதோ வேலை செஞ்சேன்” தடு மாற்றமாக அமைந்த வாலிப பருவத்தை சரி செய்துகொண்ட ரூபிக்கு, திருமண பந்தம் மீண்டும் கசப்பான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது.

“என் அப்பா – அம்மாவோட சண்டையால நான் பாதிக்கப்பட்ட மாதிரி, எங்க சண்டையும் என் பிள்ளையை பாதிச்சது. குழந்தைக்காக தனிச்சு வாழ முடிவெடுத்தேன். ‘தனியா வாழணும்னு முடிவெடுத்தா, நீ சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்’னு ஏளனமான பேச்சை எதிர்கொண்டேன். என் விரக்தியும் தாழ்வுமனப்பான்மையும் என்னை மட்டுமில் லாம என் மகனையும் பாதிக்கிறதை உணர்ந் தேன். எல்லா விதத்துலயும் என் மனசையும் உடலையும் பலப்படுத்திக்கிட்டேன். ஃபிட் னஸ்ல ஆர்வம் அதிகரிச்சு, பாடிபில்டராக நான் முடிவெடுத்தது அப்போதான். நேஷனல், இன்டர்நேஷனல் லெவல்ல பாடிபில்டருக் கான போட்டிகள்ல பதக்கங்கள் வாங்கினா லும், வாழ்வாதாரத்துக்காக இன்னொரு பக்கம் தொடர்ந்து போராட வேண்டியதா இருந்துச்சு” என்பவர், சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், டெய்லரிங் வேலையுடன், ஜூம்பா டான்ஸ் பயிற்சி யாளராகவும் இருந்திருக்கிறார்.

பாடி பில்டர் ரூபி
பாடி பில்டர் ரூபி

ரூபியின் அடுத்த ஆசை, உணவகம் ஆரம்பிப்பது... “சின்ன வயசுலேருந்து சமையல்ல ஆர்வம் அதிகம். தெரிஞ்சவங் களுக்கு உணவு தயாரிச்சுக் கொடுத்ததுல, பலருடைய நட்பு கிடைச்சது. விஜய் டிவி பிரபலங்களான சுனிதா, ரியோ, ஷாலினி, யுவராஜ் மாஸ்டர் உட்பட பலரின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரிச்சுக் கொடுக் கிறேன். சைவம், அசைவம், மேற்கத்திய உணவுகள்னு எல்லாம் சமைப்பேன். வெளிவேலைக்குப் போறதைவிட இதுல அதிகமாவே சம்பாதிக்கிறேன்.

சொந்தபந்தங்கள் ஆதரவும் இப்போ எனக்குக் கிடையாது. எனக்கான ஒரே பிடிப்பு என் பையன் மட்டும்தான். அவனை நல்லபடியா வளர்த்தெடுக்க, இன்னொருத்தர் தயவை எதிர் பார்த்து நிற்காம சுய மரியாதையுடன் வாழ, பொருளாதார ரீதியா பலம் பெறணும். அதுக் காகத்தான் ஆர்வமுள்ள விஷயங்களையெல்லாம் தொழில் வாய்ப்பா மாத்துறேன். என் பையனுக் கும் சமையல் கத்துக்கொடுக்கிறேன். ‘வேலை செய்ய கஷ்டமா இருக்கும்மா’னு சில நேரம் சொல்வான். ‘உனக்கு ஷூ வாங்கணும்னா நாள் முழுக்க அம்மா கஷ்டப்படணும். இப்படியெல் லாம் கஷ்டப்பட்டாதான் பணம் சம்பாதிக்க முடியும்’னு அவனுக்குப் புரியும்படி சொல்வேன். அஞ்சாவது படிக்கிற என் பையன் நத்தானியல் தான் இப்போ என் க்ளோஸ் ஃப்ரெண்டு” - மகனைக் கட்டியணைத்தபடியே கூறும் ரூபியின் அடுத்த அவதாரம் சினிமாத்துறை.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘யாத்திசை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். காக்கி உடையிலும் கவனம் ஈர்க்கும் ரூபி, “தமிழ் நாடு போலீஸ் டிராஃபிக் வார்டன் ஆர்கனை சேஷன்ல வேலை செய்றேன். நேர்முகத்தேர்வு மூலமா கிடைச்ச இந்தத் தன்னார்வலர் வேலைக்கு வருமானம் உட்பட எந்தச் சலுகையும் கிடையாது. ஆனாலும், மனசுக்குப் பிடிச்ச அந்த வேலையையும் சேவை நோக்கத்துல செய்றேன்” என்று ஆச்சர்யத்தை அதிகமாக்குகிறார்.

“பெற்றோரையும் புருஷனையும் சார்ந்திருக்காம வாழ முடியும்ங்கிறதுக்கு உதாரணமான பல பெண்கள்ல ஒருத்தியா இருக்கிறதுல எனக்குப் பெருமைதான். ‘அடுத்தவங்களாலதான் என் வாழ்க்கை வீணாப்போயிடுச்சு’னு மத்தவங்க மேல பழிபோட்டு முடங்கி உட்கார நான் விரும் பலை. வாழ்க்கையோட கடைசி நொடி வரைக்கும் எல்லாமே அனுபவம்தான். நமக்குப் பிடிச்ச மாதிரி, சரியான முறையில வாழ்க்கையை அமைச்சுக்கிறது நம்ம கையிலதான் இருக்கு. பிழைகளையெல்லாம் சரிப்படுத்தித்தான் ஒரு புத்தகத்தை உருவாக்க முடியும். அதுபோல நம்ம வாழ்க்கையில நடக்கிற கஷ்ட நஷ்டங்களை சரிப்படுத்தினாதான் வாழ்க்கைப் புத்தகத்தையும் நல்லபடியா வடிவமைக்க முடியும்” என்கிற ரூபியின் வார்த்தைகள் வாழ்க்கை மீதான பிடிப்பைக் கூட்டுகின்றன.