
- ராணி கார்த்திக்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஸ்ட்ரீட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் துணைக் கேப்டன் மோனிஷா, ப்ளஸ் டூ தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சென்னை வால்டாக்ஸ் ரோடு அருகில், சாலையோரம் வசிக்கும் மோனிஷாவைச் சந்தித்து வாழ்த்துகளைச் சொன்னோம்.
அவரிடம் பேசியபோது, ``எனக்கு அப்பா இல்லை... அம்மா மாநகராட்சியில தூய்மைப் பணியாளரா இருக்காங்க. நானும் அண்ணனும்தான் அவங்களுக்கு எல்லாம். சின்ன வயசுல பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். அதைப் பார்த்துட்டு, கருணாலயா தொண்டு நிறுவனம் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கொடுத்தாங்க. 2019 ஸ்ட்ரீட் கிரிக்கெட் உலகக் கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் அத்தனை பேருக்கு மத்தியில் விளையாடின அனுபவத்தை மறக்க முடியாது. அந்த ஃபைனல்ஸ்ல எங்களுக்கு சியர்ஸ் பண்ணக்கூட யாரும் இல்லை. ஒரு சிக்ஸர் அடிச்சாக்கூட கூட்டத்துல எந்த ரியாக்ஷனும் இருக்காது. அந்த சைலன்ஸ்தான் ஜெயிக்கணுங்குற வெறியைக் கொடுத்துச்சு. உலகக் கோப்பையை ஜெயிக்கவும் வெச்சுது. இப்போ எனக்குள்ளேயும் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கு.
நாங்க தங்கியிருக்குற இடத்துல எப்பவுமே டிராஃபிக் சத்தம் அதிகமா இருக்கும். இங்கருந்து படிக்கிறது ரொம்ப சிரமமா இருந்ததால ஸ்கூல் முடிஞ்ச பிறகும், கிளாஸ்ல உட்கார்ந்து படிப்பேன். ரிவிஷன் டெஸ்ட் நடந்தப்போ கிரிக்கெட் பிராக்டீஸுக்குக்கூட போகாம படிச்சேன். என் நண்பர்களும் டீச்சர்களும் அவ்வளவு சப்போர்ட் பண்ணினாங்க. அதுதான் ஓரளவு நல்ல மார்க் வாங்க வெச்சுருக்கு...” என்றவரை இடைமறித்து, மோனிஷாவின் தாய் குட்டியம்மா நம்மிடம் பேசினார்.

“என் பிள்ளை யார் மனசையும் நோகடிக்கக் கூடாதுன்னு பேசுது சார். எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரியான வாழ்க்கை இல்லை சார் எங்களோடது. வயசுக்கு வந்த பிள்ளைக்கு பீரியட்ஸ் வந்தா துணி மாத்தக்கூட இடமில்லாத வாழ்க்கை. முன்னாடில்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது, திடுதிடுன்னு ஓடிவந்து என் பின்னாடி ஒளிஞ்சுக்குவா. என்னடின்னு கேட்டா, `அது எங்க மேத்ஸ் மிஸ்ஸும்மா’, `என்கூடப் படிக்கிற
வங்கம்மா'ன்னு சொல்வா. உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாடி ஜெயிச்ச பிறகுதான் அவளுக்கே ஒரு துணிச்சல் வந்துச்சு. நாமளும் எல்லாருக்கும் முன்னாடி தன்னம்பிக்கையோட வாழணும்னு அவளுக்குத் தோணியிருக்கு. அதுக்காகவே பசி, தூக்கம் பார்க்காம படிச்சா. இப்போ அவ எடுத்திருக்குற இந்த 499 மார்க் எங்களுக்கு ரொம்பப் பெரிய விஷயம். இங்க இருக்குற பிள்ளைங்களுக்கு மோனிஷா ஒரு முன்னுதாரணமா மாறியிருக்கா” என்றார் தழுதழுத்த குரலில்.

கருணாலயா அமைப்பைச் சேர்ந்த பவுல் சௌந்தர் சிங்கிடம் பேசினோம். ``1995-ம் ஆண்டிலிருந்து சாலையோர மக்களின் பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வுக்காகப் பணியாற்றிவருகிறோம். குறிப்பாக, குழந்தைகளின் கல்வி, விளையாட்டுத்திறன் மேம்பாடு, தங்குமிடம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் செயலாற்றிவருகிறோம். மோனிஷா மாதிரி இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்... வசிப்பிடம், சாதிச் சான்று, ஆதார் உட்பட பல அடிப்படை விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் இவர்கள் அலையவேண்டியிருக்கிறது. இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார்.
அரசின் பார்வையில் ‘மோனிஷா’க்கள் தென்படுவார்களா?