"அவர் சட்டையைப் போட்டுகிட்டா கூடவே அவர் இருந்து தைரியம் கொடுக்கிறதா தோணும்!"- நெகிழும் நாராயணம்மாள்

பொட்டலமா சுருட்டி அவர் உடம்பை வீட்டுக்குக் கொடுத்து அனுப்பினாங்க. அவர் இல்லாத வாழ்க்கைய ஒரு நொடிகூட யோசிச்சுப் பார்க்க முடியல
வாட்டும் வெயிலில் தினந்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து, டீ விற்று தன் மூன்று பிள்ளைகளையும் வறுமை வாட்டாமல் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், கணவரை இழந்த நாராயணம்மாள். விதியின் விளையாட்டு தன்னை முடக்கியபோதும் ஆணுக்கு நிகராக அயராமல் உழைக்கிறார் அவர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திலுள்ள சின்ன கைனூர் கிராமத்தில், தண்டவாளத்தையொட்டி வேயப்பட்டிருக்கும் சிறிய குடிசை வீட்டில் வசிக்கும் நாராயணம்மாளைச் சந்தித்தோம்.
‘‘இது ரொம்ப மோசமான உலகமுங்க. புருஷனை இழந்தோ, பிரிஞ்சோ வாழ்ற பொண்ணுங்களைப் பத்தித் தப்புத் தப்பா பேசுறாங்க. பேச்சிலேயே ஆளைக் கொல்றாங்க...’’ என்று மனம்திறந்து பேசத் தொடங்கினார். ‘‘நான் நிர்மலாங்கிற நாராயணம்மாள். 39 வயசுதான் ஆகுது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கிறேன். என் புருஷன் பேரு பன்னீர்செல்வம். காதலிச்சுதான் 2005-ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இந்தச் சின்ன கைனூர் கிராமம்தான் அவருக்கு சொந்த ஊர். நான் பக்கத்துல மேல்பாக்கம் கிராமம். காதலிக்கிற நேரத்துல அவர் கூலி வேலைக்கு ஸ்கூட்டர்ல போயிக்கிட்டிருந்தார். நானும் வேலைக்குப் போனேன். ரோட்டுல என்னைப் பார்த்தவுடனே பிடிச்சிப்போக ஒருநாள் நேரடியா வந்து ‘கல்யாணம் பண்ணிக்கலாமா..?’ன்னு கேட்டார். எனக்கும் பிடிச்சுது. வீட்டுல எதிர்ப்பு கிளம்புனதால என்னை அவர் வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்து தாலி கட்டிட்டார்.

கலைவாணி, ஷாலினின்னு ரெண்டு பெண் பிள்ளைங்க, உதயகுமார்னு ஒரு பையன் இருக்கான். பெரியவள் அவங்க அப்பா மாதிரியே அச்சு அசலா இருப்பாள். அவளைப் பார்க்கிறப்போ, அவர் ஞாபகம் வந்துடும். என்னையே அறியாம கட்டிப்பிடிச்சு அழ ஆரம்பிச்சிடுவேன். என்கூடவே அவர் எப்பவுமே இருக்கிற மாதிரி தோணும். சின்னப் பொண்ணும், பையனும் கொஞ்சம் என் ஜாடையில இருக்காங்க.
பக்கத்துல இருக்கிற தனியார் பள்ளிக்கூடத்துலதான் மூணு பேரையும் படிக்க வச்சிக்கிட்டிருக்கேன். பெரியவள் ப்ளஸ் ஒன், இளையவள் பத்தாவது, சின்னவன் எட்டாம் வகுப்பு படிக்கிறாங்க. பசங்க பிறந்த பின்னாடி அவர் செக்யூரிட்டி வேலைக்குப் போனார். சாகுற வரைக்கும் அதே வேலையைத்தான் செஞ்சிக்கிட்டிருந்தார். அவர் சம்பளம் பசங்கள படிக்க வைக்கவே சரியா இருந்ததனால, குடும்பக் கஷ்டத்தை சமாளிக்க அவர் சாகுறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள்ல டீ விக்க ஆரம்பிச்சேன்.
வறுமைல இருந்தாலும் வாழ்க்கை சந்தோஷமா போயிக்கிட்டிருந்த நேரத்துலதான் அந்தத் துயரமான நாளும் பேரிடியா வந்துச்சு. 14.12.2017. அன்னைக்கு வழக்கம்போல பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, டீ கேனை சைக்கிள்ல கட்டிட்டுக் கிளம்பிட்டேன். காலைல 11 மணிக்கு பக்கத்து வீட்டு அக்கா போன் பண்ணி, ‘சீக்கிரம் நம்ம வீட்டுப் பக்கத்திலிருக்கிற மேம்பாலத்துக்கு அடியில வா...’ன்னு கூப்பிட்டாங்க. ‘இருக்கா, கொஞ்ச டீ தான் இருக்கு. வித்துட்டு வந்துடுறேன்’னு சொன்னேன். ‘டீ வித்தது போதும். சீக்கிரம் ஓடிவா’ன்னு சொன்னதும் பதறியடிச்சுக்கிட்டு வேகமா வந்து பார்த்தேன். மேம்பாலத்துக்கு அடியில தண்டவாளத்தைச் சுத்தியும் கூட்டமா நிறைய பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. போலீஸ்காரங்களும் வந்திருந்தாங்க. ‘யாருக்கு என்ன ஆச்சு’ன்னு பக்கத்துல ஓடிப்போய்ப் பார்த்தேன். ரயில்ல அடிபட்டு என் புருஷன் செத்துப்போய்க் கிடந்தார். போலீஸ்காரங்க ‘உன் புருஷனா இவர்’ன்னு கேட்டப்போ, பேச்சு மூச்சில்லாம மயக்கம்போட்டுக் கீழ விழுந்துட்டேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால மீளவே முடியலை. இப்பவும் என் கண்ணு முன்னாடியே இருக்கு’’ என்று கண்ணீர்விட்டு அழுதார்.

நாம் அவரை ஆசுவாசப்படுத்திய பின்னர் மீண்டும் வலிகளைத் தொடர்ந்தார். ‘‘பொட்டலமா சுருட்டி அவர் உடம்பை வீட்டுக்குக் கொடுத்து அனுப்பினாங்க. அவர் இல்லாத வாழ்க்கைய ஒரு நொடிகூட யோசிச்சுப் பார்க்க முடியல. ஆனாலும், பசங்க முகத்தைப் பார்த்து மனசைத் தேத்திக்கிட்டேன். அந்தச் சமயத்துல பெரிய பாப்பா கலைவாணி பெரிய மனுஷியாகிட்டாள். நாத்தனார் வீட்டிலிருந்து வந்து திடீர்னு அவங்க பையனுக்குப் பொண்ணு கேட்டாங்க. ‘படிச்சிக்கிட்டிருக்கிற பொம்பளப் புள்ளைய எப்படிக் கட்டித்தர முடியும். அவளுக்கு வயசே இல்ல. முடியாது’ன்னு சொல்லிட்டேன். அதுக்கு ‘உன்னால எப்படி முடியும்? பெரியவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போறோம். ரெண்டாவது புள்ளையையும், பையனையும் எப்படியாவது கரைசேர்க்கிறதுக்கு உதவி பண்ணுறோம்’னு சொன்னாங்க. ‘கஷ்டப்பட்டாவது மூணு பசங்களையும் படிக்க வைப்பேன்’னு சொல்லிட்டேன். ‘இனி உங்களோட ஒட்டும் இல்ல, உறவும் இல்ல’ன்னு சொல்லிட்டு நாத்தனார் வீட்டாருங்க போயிட்டாங்க. இப்ப வரைக்கும் அப்படித்தான் இருக்கு.
பீஸ் கட்ட முடியாததனால பிரைவேட் ஸ்கூல் வேண்டாம். கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்திடலாம்னு நெனச்சேன். அப்பதான் தனம் பச்சையப்பன் பள்ளி நிர்வாகம் தரப்புல ‘பசங்க மூணு பேரும் நல்லா படிக்கிறாங்க. தொடர்ந்து இங்கேயே படிக்கட்டும். பையனுக்கு பீஸ் கட்ட வேண்டாம். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் பீஸ் கட்டுங்க, போதும்’னு நம்பிக்கை கொடுத்தாங்க. அப்புறம் டீ வியாபாரத்துல அதிகமா கவனம் செலுத்தினேன். 5 லிட்டர் டீ கேனை மாத்திட்டு, 10 லிட்டர் கேன் வாங்குனேன். தினம் காலைல 4 மணிக்கு எழுந்திருச்சு சமைச்சு வெச்சிட்டு, பசங்களை எழுப்பி ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, 8 மணிக்கு டீ போட்டு எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுறேன். மதியம் வீட்டுக்கு வந்து நைட்டுக்குத் தேவையானதை சமைச்சு வெச்சிட்டு, 3 மணிக்குத் திரும்பவும் டீ போட்டு எடுத்துக்கிட்டு சாயங்காலம் டவுன் புல்லா சுத்தி வந்து வித்துடுறேன். திரும்ப வீடு வந்து சேர்றதுக்கு நைட் 8 மணி ஆகிடுது. கொரோனா டைம்ல ரொம்பவும் சிரமப்பட்டுட்டேன். ‘வீட்டை விட்டே வெளில வரக்கூடாது’ன்னு லாக்டௌன் போட்டிருந்ததனால சாப்பாட்டுக்கே வழியில்லாமப்போச்சு. அந்த நேரத்துல ஸ்கூல் டீச்சருங்க தேடி வந்து உதவி பண்ணுனாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். இப்ப வரைக்கும் என் பசங்கள அவங்க வீட்டுப் பிள்ளைங்க மாதிரியே பார்த்துக்கிறாங்க.
வீட்டை ஒட்டியே தண்டவாளம் இருக்குது. இந்தத் தண்டவாளத்தைத் தினமும் கடந்துதான் நாங்க எல்லாத் தேவைக்கும் போறோம். இப்பதான் பக்கத்துல சப்வே கட்ட ஆரம்பிச்சிருக்கிறாங்க. சீக்கிரமா கட்டி முடிச்சிட்டா பயமில்லாம பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பேன். டீ கேன் வச்சுக்கிட்டு, சைக்கிளைத் தூக்கித் தண்டவாளத்தைக் கடந்து போக முடியலை. அதனால, இந்தப் பக்கமே டீ கேனை கழட்டி வச்சிட்டு சைக்கிளைத் தூக்கிக்கிட்டு அந்தப் பக்கம் போயிடுவேன். அப்புறம் வந்து கேனை எடுத்துட்டுப் போவேன். அஞ்சாறு வருஷமா சைக்கிள் ஓட்டி டீ விக்கிறதனால முதுகு வலி அதிகமாகிடுச்சு. என்ன செய்ய? பசங்களை எப்படியாவது படிக்க வச்சு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திடணும். அந்த நெனப்பு மட்டும்தான் மனசுல ஓடிக்கிட்டிருக்கு.

புருஷன் இல்லாத பொம்பளைங்கனா சிலர் இளக்காரமாவும் பார்க்கிறாங்க; தப்பா நடந்துக்கவும் செய்யுறாங்க. சொந்தக்காரங்க பலரும் ‘எப்படி பசங்களைப் படிக்க வைக்கிற’ன்னு என் கேரக்டரைத் தப்பா நெனைக்கிறாங்க. ஒருசில இடங்கள்ல டீ விக்கிறப்போ கையப் பிடிப்பாங்க. கட்டுமான இடத்துல வேலை செய்யுறவங்களும் ‘டீ விக்க வர்றீங்களே, வீட்டுல அண்ணே என்ன செய்யுறாரு’ன்னு ஒரு மாதிரியா கேட்பாங்க. அவர் உயிரோடு இல்லைன்னு சொன்னா, இன்னும் அதிகமா பேசுவாங்கன்னு நெனச்சுக்கிட்டு, ‘அவர் செக்யூரிட்டி வேலை செய்றார். ஏன் வரச் சொல்லணுமா’ன்னு சொல்லிட்டு வந்திருவேன். இந்த மாதிரியான பிரச்னையால, ஆபீஸ் பகுதிகள்ல மட்டும் டீ விற்கிறேன். ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டுக் கொடுக்கிறதனால என் டீயை ஆபீஸருங்க நிறைய பேர் விரும்பிக் குடிக்கிறாங்க. ஒருநாள் போகலைன்னாலும், ‘ஏம்மா தங்கச்சி, என்னாச்சு. நேத்து ஏன் வரலை’ன்னு அன்பாக் கேட்பாங்க.
ஆம்பளைக்கு நிகரா இருக்கணும்னு நெனச்சு, என் வீட்டுக்காரர் சட்டையைத்தான் புடவைமேல போட்டுக்கிட்டுப் போவேன். அவர் என்கூடவே இருந்து தைரியம் கொடுக்கிற மாதிரி தோணும். என் கனவு ஒண்ணுதான். என் பசங்க மூணு பேரும் படிச்சு பெரிய ஆளாகணும். படிப்பு மட்டும்தான் இவங்களுக்குக் கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும். அவங்களப் படிக்க வைக்க ஓடிக்கிட்டே இருக்கேன். இன்னமும் ஓடுவேன்’’ என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறார் நாராயணம்மாள்.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் உதவி செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர். உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.