``இது என் ஒருத்தியோட வெற்றியில்ல... 23 பெண்களோட வெற்றி!” - 77 வயது தங்கம் பாட்டியின் மகளிர் கோட்டை

சுத்து வட்டாரத்துல திருமணம், விசேஷம், கோயில் கும்பாபிஷேகம்னு பல ஆர்டர்கள் வரும். பலகாரங்களைப் பொறுத்தவரை வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் வரைக்கும் அனுப்புறோம்.
``எனக்கு 77 வயசாகுது. 36 வருஷமா கேட்டரிங் தொழில் நடத்திட்டு வர்றேன். வேலையோ, வாழ்க்கையோ சலிச்சதே இல்ல. ஒவ்வொரு காலையும் புத்தம் புது நாளாதான் தெரியுது’’ - எனர்ஜி லெவல் டாப்பில் இருக் கிறது தங்கம் வைத்தீஸ்வரன் பாட்டிக்கு. திருச்சி, சோமரசம்பேட்டையில் உள்ள இவரது ‘பெரியாண்டவர் கேட்டரிங் சர்வீஸ்’ காலை, மதிய உணவுடன் பாரம்பர்ய பலகாரங்கள் என பரபரப்பாக இயங்குகிறது. இதை முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப் படும் தொழிலாக வளர்த்தெடுத்து, 22 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, ஒரு மகளிர் சாம்ராஜ்யமாக நடத்திக் கொண்டிருக்கிறார் பாட்டி.

“சின்ன வயசுல இருந்தே சமைக்கத் தெரியும். கல்யாணத் துக்கு அப்புறம் அதையே ஒரு தொழிலா பண்ணலாம்னு, வீட்டுலேயே சமைச்சு பார்சல் சாப்பாடு கொடுத்துட்டு இருந்தேன். `தனி இடம் எடுத்துப் பண்ணினா இன்னும் சூப்பரா செய்ய லாம்’னு கணவரும் பிள்ளைகளும் சொல்ல, சமையல் கூடத்துடன் ஒரு இடத்தை பிடிச்சேன். காலை, மதியம் உணவு கொடுத்ததோட, கைமுறுக்கு, அதிரசம், சோமாஸ், சீடைனு பாரம்பர்ய பலகாரங்களை யும் ஆர்டர் எடுத்து செய்தேன். இப்போ வரை தொழில் நல்லா போயிட்டுருக்கு. ஒரு பொம்பளையா 36 வருஷத்துக்கு முன்ன கேட்டரிங் தொழிலை ஆரம்பிச்சதுல இருந்து, இத்தனை வருஷமா இதுல நிக்கிற வரைக்கும் நிறைய போராட்டங்கள், சவால்கள் இருந்துச்சு தான். அதுக்கு பலனாதான், இன்னிக்கு இங்க வேலைபார்க்கிற பொண்ணுங்களோட சேர்த்து 23 பெண்கள் ஜெயிச்சிருக்கோம்’’ - ஆலமரமாக நின்று பேசுகிறார் பாட்டி.

அடுப்படியில், ‘அக்கா அத கொடுங்க’, ‘அம்மா இதுல உப்பு பாருங்க’ என்று குடும்பம் போல பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, ‘`நாங்க எல்லாருமே இங்க 15, 20 வருஷமா வேலை பார்க்குறோம். இவங்க எங்ககிட்ட ஓனர் மாதிரியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க. நாங்க அம்மானு கூப்பிடுறது போல, எங்களை எல்லாம் அம்மாவாதான் பார்த்துக்குவாங்க. எங்க ஒவ்வொருத்தரோட குடும்ப நிலையும் உயரணும்னு நினைப்பாங்க. அதனாலதான், `எவ்வளவு பெரிய ஆர்டர் வந்தாலும் எடுங்கம்மா, நாம செஞ்சுடலாம்’னு நாங்க அவங்களுக்குத் தோளுக்குத் துணையா நிக்கிறோம்’’ என்கிறார்கள் மனதிலிருந்து.
’’சுத்து வட்டாரத்துல திருமணம், விசேஷம், கோயில் கும்பாபிஷேகம்னு பல ஆர்டர்கள் வரும். பலகாரங்களைப் பொறுத்தவரை வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் வரைக்கும் அனுப்புறோம். சமீபத்துல, கல்கத்தா காளி கோயிலுக்கு எங்க பலகாரங்களை அனுப்பி னோம். சின்ன ஆர்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். ஏழைகள், குழந்தைகளுக்கு இலவச உணவும் கொடுக்குறோம்’’ என்று அசத்தும் பாட்டியிடம், அவரது ஒருநாளைக் கேட்டால் இன்னும் அசந்துபோவோம்.

``காலையில மூன்றரை மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடிப்பேன். அஞ்சரை மணிக்கு சமையல் வேலைகள் தொடங்கிடும். காலை உணவு, மதிய உணவு வேலைகளை யெல்லாம் முடிச்சிட்டு, சாயங்காலம் பலகார ஆர்டர் வேலைகளைப் பார்ப்போம். எல்லாத்தையும் முடிச்சுட்டு நான் தூங்கப்போக மணி 11 ஆகிடும். எல்லாரும், எப்படி இந்த வயசுலயும்னு கேப்பாங்க. ஆசையும் ஆர்வமுமா வேலை செய்யும்போது வயசெல்லாம் மறந்து போயிடுது’’ என்று மாஸ் காட்டும் பாட்டியின் கணவர் வைதீஸ்வரன், நடத்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது கேட்டரிங் தொழிலுக்கு உதவி வருகிறார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகி விட்டனர்.
“வேலைக்குப் போறதைவிட ஒரு தொழிலை செஞ்சு பார்ப்போம்ங்கிற ஆர்வம் இன்னிக்கு ஆண்கள், பெண்கள்னு பலருக்கும் இருக்கு. அதுக்கு முதலீடு, வேலை ஆட்கள் மட்டும் போதாது. அசராத உழைப்புதான் எந்தத் தொழிலையும் முன்னேத்தும், நிலைச்சு நிக்க வைக்கும். எங்கிட்ட வேலைபார்க்கிற இந்தப் புள்ளைங்க எல்லாம் இங்க வரும்போது தொழிலை தெரிஞ்சுக்கிட்டு வந்தவங்க இல்ல. ஆனா, வந்ததுக்கு அப்புறம் சமையல் கைப்பக்குவம், பலகார நுணுக்கம்னு மூக்கு மேல கைவைக்குற அளவுக்கு வேலையை, தொழிலைக் கத்துக்கிட்டாங்க. எவ்ளோ பெரிய ஆர்டரா இருந்தாலும் பொண்ணுங் களா இருந்து முடிச்சுக் கொடுக்குறோம்’’ என்ற பாட்டி...

``இந்தக் காலப் பொண்ணுங்களுக்கு பாட்டி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க... வீட்டுல பொழுதுபோக்க செலவிடுற நேரத்தை குறைச்சுட்டு, வருமானத்துக்கு ஒரு வழியை கண்டுபிடிச்சு அதுல உங்க உழைப்பை போடுங்க. நிச்சயம் வெற்றி பெறலாம். எல்லா பொண்ணுங்களுமே சாதிக்கப் பிறந்தவங்க தான்’’ - ரெண்டு அதிரசத்தோடு ரெண்டு தட்டு உத்வேகத்தையும் ஊட்டி அனுப்பி வைத்தார் தங்கம் பாட்டி.