லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

“கல்வியால எந்தக் கதவையும் திறக்கவைக்கலாம்!”

“கல்வியால எந்தக் கதவையும் திறக்கவைக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கல்வியால எந்தக் கதவையும் திறக்கவைக்கலாம்!”

ஏழ்மையான சூழலிலும் மதிப்பெண்கள் அள்ளிய தங்கங்கள்

சிலரின் வெற்றிகள் அதிக பாராட்டுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரியவை. எப்போது..? அந்த வெற்றிக்கான சாத்தியங்கள் சுருக்கப்பட்ட சூழ்நிலையிலும், அதை தங்கள் தன்னம்பிக்கையாலும், அதிக உழைப்பாலும் ஈடுகட்டி அவர்கள் முன்னேறும்போது. அப்படி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் ஏழ்மையான, பின்தங்கிய சூழலிலும் ஆச்சர்யப்படுத்தும் மதிப்பெண்களை அள்ளியிருக்கும் தங்கங்கள் சிலர் இங்கே. பிராண்டட் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள், டியூஷன்கள் எல்லாம்தான் அதிக மதிப்பெண்களுக்கான வழிகள் என்று நம்பும் பலருக்கு... இந்த மாணவிகளின் வெற்றியும், வார்த்தைகளும் சொல்லும் செய்தி சிறப்பானது!

 கனிஷ்கா
கனிஷ்கா

``வீட்டுல கழிப்பறை இல்ல!’’

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ஓமாந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கனிஷ்காவின் மதிப்பெண்கள், 590/600. திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். “அப்பா அண்ணாதுரை லாரி டிரைவர். அம்மா கோமதி, நூறு நாள் கூலி வேலைக்குப் போறாங்க. ஒரே அண்ணன் பி.எஸ்ஸி படிச்சிருக்காங்க. ஏழ்மையான குடும்பம். வீட்டுல கழிப்பறைகூட இல்ல. நல்லா படிச்சாதான் நல்ல நிலைமைக்கு வர முடியும்னு ராத்திரி பகலா படிச்சேன். உழைச்சுக் களைச்சு வர்ற அப்பா, அம்மாவுக்கு, நைட் முழுக்க நான் லைட்டை போட்டுட்டுப் படிக்கிறது தொந்தரவா இருந்தாலும், நம்ம புள்ள இப்படியெல்லாம் படிக்குதுனு அதை பெருமையாதான் நினைப்பாங்க. எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸும் எனக்கு ஊக்கம் கொடுத்துட்டே இருப்பாங்க. ரிசல்ட் வந்தப்போ, வீட்டுல, பள்ளியில எல்லாருக்கும் சந்தோஷம் தாங்கலை. வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் என்பது, ரெட்டை உற்சாகம் ஆகிடுச்சு.

ரெண்டு நாள் கழிச்சி எங்க ஸ்கூல் ஹெச்.எம் போன் பண்ணி, ‘திருச்சி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்ல நீதான் முதல் மதிப்பெண்’னு சொன்னப்போ, எங்கப்பா, அம்மாவுக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்துடுச்சி. `லாரி டிரைவர் பொண்ணு மாவட்ட அளவுல முதலிடம், இதைவிட எங்களுக்கு வேற என்ன பெருமை வேணும்’னு ரெண்டு பேரும் நெகிழ்ந்து போயிட்டாங்க. போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைக்குப் போகணும் என்பதுதான் லட்சியம். கழிப்பறையோட எங்க சொந்த வீட்டைக் கட்டணும். பி.காம் ஹானர்ஸ் படிக்க ஆசை. ஆனா ஃபீஸ் அதிகம். முடியாத பட்சத்துல பி.காம் சேரணும். இன்னிக்கு நாம எவ்வளவு பின்தங்கியும் இருக்கலாம். ஆனா, நாளைக்கு நாம எவ்வளவு முன்னேறப் போறோம்ங்கிறது நம்ம கையிலதான் இருக்கு!”

 ஸ்டெபி நாயகி
ஸ்டெபி நாயகி

``தலையில அடிபட்டுருச்சு!”

கன்னியாகுமரி மாவட்டம், பெத்தேல்புரம் மிர்னா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்டெபி நாயகி, 513/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். “அப்பா ஜோஸ் வெல்டிங் வேலை செய்யுறாங்க. அம்மா வீட்டுல இருக்காங்க. நான் ஒரே பொண்ணு. மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்துல அப்பாவுக்கு தோள்ல பலத்த காயம் ஏற்பட்டுச்சு. இப்போ ரெண்டு முட்டியிலும் தேய்மானப் பிரச்னையும் இருக்கிறதால ரொம்பக் கஷ்டப் படுறாங்க. அதனால ஒருநாள் வேலைக்குப் போவாங்க, ரெண்டு நாள் உடம்பு முடியாம இருப்பாங்க. வருமானமும் அப்படித்தான் நிச்சயமில்லாம இருக்கும். சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு சொந்தமான வீட்டுல இருக்கோம். சாப்பாட்டுச் செலவுகள் எல்லாம் ரொம்பக் கஷ்டம்தான். கூடப்படிக்கிற பிள்ளைங்க எல்லாரும் டியூஷன் போகும்போது, நான் வீட்டுல இருந்து படிச்சே நல்ல மார்க் வாங்கிக் காட்டு வேன்னு எனக்கு நானே சொல்லிக்குவேன். வரலாறு குரூப் எடுத்துப் படிச்சேன்.

விளையாட்டுலயும் ரொம்ப ஆர்வம். ரிலே, தடை தாண்டி ஓடுதல்னு கலக்குவேன். நாகர்கோவில் ஸ்டேடியத்துல, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில தடை தாண்டுதல்ல ஓடினப்போ கீழே விழுந்ததுல தலையில நல்லா அடிபட்டது. மூணு வாரம் ஸ்கூல் போக முடியல. அதுக்கு அப்புறம் மாத்திரையை எடுத்துட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிட்டேன். ரிசல்ட் வந்தப்போ, ’அடி படலைன்னா இன்னும் நிறைய மார்க் எடுத்திருப்ப’னு டீச்சர்ஸ் தட்டிக்கொடுத்தாங்க. பொதுவா, படிக்கிற பிள்ளைங்க, ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருக்கிற பிள்ளைங்கனு பள்ளிகள்ல வித்தியாசப்படுத்தித்தான் பார்ப்பாங்க. படிக்கிற பிள்ளைங்க கிரவுண்டுக்குப் போறதை விரும்ப மாட்டாங்க. ஆனா, எங்க தலைமையாசிரியர் செந்தில்குமார், ரெண்டிலும் ஆர்வமா இருக்கிறதுக்காகவே என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்துவார். புவியியல் சார்ந்த துறையில் வேலை பார்க்கணும். ஐ.ஏ.எஸ் ஆகணும் என்ற கனவும் இருக்கு. அதுக்கெல்லாம் முன்னாடி, சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அப்பாவுக்கு நல்ல சிகிச்சை கொடுக்கணும்!”

 ஷப்ரீன் இமானா
ஷப்ரீன் இமானா

``ஆளுநர் மாளிகையில தங்க வெச்சாங்க!’’

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷப்ரீன் இமானாவின் மதிப்பெண்கள் 590/600. அவரின் தந்தை ஷிராஜூதீன் கூலி வேலை செய்து வருகிறார். தாய் ஷிராஜின் நிஷா. எந்தக் கல்விப் பின்புலமும் இல்லாத ஏழைக் குடும்பம். இருந்தும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள், கணிதத்தில் 99, தமிழில் 95 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்கள் என அசத்தியிருக்கிறார். இந்தாண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் அழைத்து கௌரவித்தார். அவர்களில் ஷப்ரீன் இமானாவும் ஒருவர்.

“ஆளுநர் மாளிகையில இருந்து கூப்பிட்டு, ஆளுநர் நேர்ல சந்திச்சுப் பாராட்ட உள்ளார், சென்னைக்குப் புறப்பட்டு வாங்கனு சொன்னாங்க. எங்களுக்கு என்ன செய்றதுனே தெரியல. அப்பாவுக்கு உடல்நலம் சரியில்ல, பயணிக்க முடி யாது. பயணத்துக்கும் பணம் இல்ல. தவிச்சிட்டு இருந்தப்போ, மறுபடியும் ஆளுநர் மாளிகையில இருந்து பேசினவங்ககிட்ட நிலைமையைச் சொன்னேன். `வாடகை கார்ல வாங்க, செலவை நாங்க பார்த்துக்கு றோம்’னு சொன்னதும்தான் நிம்மதி வந்துச்சு. ஆனாலும், அம்மாவும் நானும் மட்டும் போறதுல சிரமம் இருந்ததால, அம்மாவோட அண்ணனான என் மாமாவை துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டோம். அடிக்கடி ஆளுநர் மாளிகையில இருந்து பேசிட்டே இருந்தவங்க, `சென்னையில எங்க தங்கப் போறீங்க?’னு கேட்டாங்க. ‘எங்களுக்கு அங்க யாரையும், எதுவும் தெரியாதே’னு உண்மையைச் சொன்னேன். அந்த அதிகாரி அதை அப்படியே ஆளுநர்கிட்ட சொல்ல, ஆளுநர் மாளிகையில இருக்குற விருந்தினர் மாளிகையிலேயே தங்க ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கார் ஆளுநர். ஆனா, விதிமுறைப்படி அது முடியாதேனு அதிகாரி சொன்னப்போ, `தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியைப் பாராட்ட, விருந்தினர் மாளிகை விதிமுறைகளை மாற்றுவதுல தவறில்லை’னு ஆளுநர் சொல்ல, நாங்க அங்க தங்க அனுமதிக்கப்பட்டோம். குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கியப் பிரமுகர்கள் வரும்போது திறக்கப்படும் அந்த விருந்தினர் மாளிகை, இந்த ஏழைக் குடும்பத்துக்காகத் திறக்கப்பட்டப்போ... ஒண்ணு மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. கல்வியால நாம எந்தக் கதவையும் திறக்கவைக்கலாம்!”

 அனுஜா
அனுஜா

``அரசுப் பள்ளியில் படிச்சா சென்ட்டம் எடுக்க முடியாதா?!”

மலைப் பிரதேசமான நீலகிரியின் கடைக்கோடியில் உள்ள அரசுப் பள்ளி மாணவி அனுஜாவின் மதிப்பெண்கள் 542/600. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அனுஜா, தீராத நோயிலும், கொடுமையான வறுமையிலும் வாடி வரும் தாய், தந்தையுடன் குடும்ப பார்த்தை பகிர்ந்துகொண்டே வேதியியலில் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறார். கூடலூர் அருகே, நடைபாதை கூட இல்லாத சளிவயல் குக்கிராமத்தில், ஹாலோபிளாக் கற்கள் அடிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டி முடிக்கப்படாத தன் வீட்டில் அம்மாவுடன் அமர்ந்து நேர்த்தியாகப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தார்.

“அப்பாவுக்கு கால் முடியாது. அம்மாவுக்கு இடுப்பு எலும்பு பாதிப்பு. கஷ்டமான வேலை செய்ய முடியாதாததால வீட்டுலேயே பூக்கட்டிக் கொடுக்குறோம். சாப்பாட் டுக்குக் கூட சில நேரம் கஷ்டப்பட்டிருக்கோம். குடும்பத்துல யாரும் படிச்சதில்ல‌. படிப்போட அருமையை ஆசிரியர்கள்தான் சொல்லிக் கொடுத்தாங்க. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் 3, 4 மணி நேரம் பூ கட்டுவேன். நைட்டு தான் படிக்க ஆரம்பிப்பேன். பசுமை வீடு திட்டத்துல வீடு கட்ட ஆரம்பிச்சு பாதியில நிக்குது. மழை பெஞ்சா வீடே குளமாகிடும். சித்தி வீட்டுல தங்கித்தான் ப்ளஸ் டூ முடிச்சேன். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சா சென்ட்டம் எடுக்க முடியாதா, எடுத்துக் காட் டணும்னு கெமிஸ்ட்ரி சார் ஒரு தடவை சொன்னார். வெறித்தனமா படிக்க ஆரம்பிச் சேன். அதுதான் என்னை கெமிஸ்ட்ரியில 100/100 எடுக்க வெச்சது. ட்யூஷனெல்லாம் போனதில்ல. என் ஆசிரியர்கள்தான் நான் எடுத்த மார்க்ஸுக்குக் காரணம். அக்ரி படிக்க அப்ளை பண்ணியிருக்கேன். எத்தனையோ ஏழைப்பட்ட குடும்பங்களை அந்த வீட்டுப் பிள்ளைங்க படிச்சு வேலைக்குப் போய் முன்னேற்றியிருக்கிறதை பார்க்குறப்போ... எனக்கும் அந்த நம்பிக்கை வரும். நாளைக்கு என்னைப் பார்த்தும் அப்படி ரெண்டு, மூணு பேருக்கு நம்பிக்கை வர்ற மாதிரி முன்னேறணும்!”

  நந்தினி
நந்தினி

``நம்பர் 1... கனவெல்லாம் நனவாகும்னு நம்பவைக்குது!”

திண்டுக்கல், அண்ணாமலையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் என அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று 600/600 சாதனை புரிந்தவர். திண்டுக்கல் மாவட்ட அளவிலும் தமிழக அளவிலும் முதலிடம் பெற்றவர்.

ஒரு படுக்கை அறை, சமையல் அறையை மட்டும் கொண்டுள்ள மிகவும் சிறிய வாடகை வீட்டில் வசித்து வரும் நந்தினியின் பேச்சில் உற்சாகம் வழிகிறது. ``அப்பா சரவணக்குமார் தச்சுக் கூலித் தொழிலாளி. அம்மா பானுப்ரியா வீட்ல இருக்காங்க. தம்பி பிரவீன்குமார் 7-ம் வகுப்பு படிக்கிறார். அப்பா படுற சிரமங்களையும், குடும்பத்தின் கஷ்டத்தையும் உணர்ந்து படிச்சேன். அப்பாவுக்கு வாரத்துல 3, 4 நாள்கள் வேலை கிடைக்கும். சில நேரம் மாசக்கணக்கில்கூட வேலை இருக்காது. கொரோனா காலத்தில் நாங்க பட்ட கஷ்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமில்ல. செல்போன் இல்லாததால ஆன்லைன் வகுப்பில் கலந்துக்க முடியல. தமிழ் ஆசிரியர் அனுராதா தான், ‘படிக்கிற புள்ள, கஷ்டப்படுது...’னு போன் வாங்கிக் கொடுத்தாங்க. நான் ஆடிட்டர் ஆகணும்னு அப்பாவுக்கும் எனக்கும் ஆசை. முதல்வர் ஸ்டாலின் நேர்ல அழைச்சுப் பாராட்டியது, கவிஞர் வைரமுத்து வீட்டுக்கே வந்து தங்கப் பேனா பரிசளித்தது, பலரும் பாராட்டி உயர் கல்விக்கு உதவுவதாகக் கூறி யிருப்பதுனு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்ல ஒரு ஓரத்துல தொந்தரவில்லாம உட்கார்ந்து படிக்கக்கூட இடம் இருக்காது. ஆனா, படிக்கிறதுக்கு வசதிகளைவிட வைராக்கியம்தான் வேணும்னு இப்போ நான் முழுசா உணர்ந்திருக்கேன்.”