லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!

ஃபர்ஹானா படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபர்ஹானா படத்தில்...

சகபணியாளர்களுக்கு வரும் அழைப்புகள், பெரும்பாலும் பாலியல் சீண்டல்களாகவே இருக்கின்றன. தங்களின் பாலியல் இச்சை களுக்காக, குரல்வழியே பெண்களை வன் கொடுமை செய்கின்றனர்.

`ஃபர்ஹானா’... சமீபத்தில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம், இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவரும் பெண்ணடிமைத் தனத்துக்குத் தன் பாணியில் சரியாகச் சவுக்கடி கொடுக்கிறது.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் ஃபர்ஹானா. வீடு, கணவன், குழந்தைகள்தான் பிரதானம் என்று மட்டுமே வாழும் பெரும் பாலான இந்திய இல்லத்தரசிகளைப் போன்ற தொரு வாழ்க்கைதான். கனவுகளும், ஆசை களும் அடுப்பங்கறையில்தான் புதைகின்றன. ஒரே ஒரு மாற்று... புகுந்த வீட்டுக்கு பதிலாக பிறந்த வீட்டிலேயே அப்பா, கணவன், குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் வாழ்கிறார். ஆனாலும், அது சுதந்திர வாழ்க்கையல்ல... அப்பா, அநியாயத்துக்கு மத அடிப்படைவாதி.

அப்பாவுக்கும் கணவனுக்கும் செருப்புக் கடைதான் தொழில். பெரிதாக வருமானம் இல்லாத நிலையில், வேலைக்குப் போக ஆசைப்படுகிறார் ஃபர்ஹானா. குடும்பத்தில் அவ்வளவு ஆதரவில்லை என்றாலும், பொரு ளாதாரச்சூழல் கழுத்தை நெரிக்க, வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்போதும் அப்பா, எதிர்ப்பு காட்டுகிறார். ஆனால், கணவர் ஓரளவுக்குத் துணை நிற் கிறார். கால்சென்டர் வேலைக்குச் செல்லும் ஃபர்ஹானா, அங்கே சந்திக்கும் சவால்களும், அவற்றை எதிர்கொள்வதும்தான் படம்.

ஆரம்பத்தில், ‘வாடிக்கையாளர் சேவை மையம்’ போன்றதொரு கால்சென்டர் பணியைத்தான் செய்கிறார் ஃபர்ஹானா. சகதோழிகள் சிலரைப் பார்த்து, ‘கூடுதல் பணம்... குடும்ப பொருளாதாரத்துக்குத் தீர்வு’ என்கிற எண்ணத்தில் ‘ஃப்ரெண்ட்ஷிப் சாட்’ பணியைத் தேர்ந்தெடுக்கிறாள். ‘எதிர்முனை யில் போனில் பேசும் ஆணுக்கு, போன் மூலம் தோழியாகப் பேச வேண்டும். எல்லை மீறவோ, அடையாளத்தை வெளிப்படுத்தவோ கூடாது’ என்பதெல்லாம் நிபந்தனைகள்.

சகபணியாளர்களுக்கு வரும் அழைப்புகள், பெரும்பாலும் பாலியல் சீண்டல்களாகவே இருக்கின்றன. தங்களின் பாலியல் இச்சை களுக்காக, குரல்வழியே பெண்களை வன் கொடுமை செய்கின்றனர். வயிற்றுப்பிழைப்புக் காக பொறுத்துப் போகிறார்கள். பெண்களை, சகமனிதர்களாக பார்க்காமல் ஆணுக்கான போதை சாதனமாக காலங்காலமாகப் பார்க்கப்படும் பிற்போக்கு கருத்தியலின் தொடர்ச்சியாகவே, இருக்கின்றன இத்தகைய உரையாடல்கள். இதற்கு நடுவில் ஒரு குரல் ஃபர்ஹானாவை மீட்டெடுக்கிறது. இருவருக்கு மிடையில் எந்தவித சலனமும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பயணிக்கின்றன உரை யாடல்கள். இருமனங்களும் இதுவரை யாரிட மும் பேசமுடியாமல் போனவற்றை நட்பாகக் கதைக்கின்றன.

இந்நிலையில், ஃபர்ஹானாவுடன் ‘ஃப்ரெண்ட்ஷிப் சாட்’டில் வேலை பார்த்த ஓர் இளம்பெண், அதிர்ச்சிகரமான முறையில் இறந்துபோகிறார். அந்தப் பெண்ணின் கைப் பையில் ஃபர்ஹானாவின் ஆதார் கார்டு இருப்பதை வைத்து, வீடு தேடி வருகிறார்கள் காக்கிகள். குடும்ப கௌரவத்தைக் குழி தோண்டி புதைத்துவிட்டதாகப் பொங்கும் அப்பா, மகள் மீதே எச்சிலைத் துப்புகிறார்.

எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், ஏதாவதொரு காரணம் கிடைத்துவிட்டால், ‘மானம் பறிபோய்விட்டது... கலாசாரம் சீரழிந்துவிட்டது’ என்று பெண்களை இழிவு படுத்தத் துடிக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் அத்தனை ஆயுதங்களும் ஃபர்ஹானாவின் மீது வீசப்படுகின்றன.

ஃபர்ஹானா படத்தில்...
ஃபர்ஹானா படத்தில்...

இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த நட்புக்குரலும் தன்பங்குக்கு விளையாட்டுக் காட்ட ஆரம்பிப்பதுதான் உச்சபட்ச கொடூரம்! பெண்ணை பாலுறவுக்குக் கட்டாயப்படுத்து வது மட்டும் குற்றமல்ல. ‘அன்பாக இருக்கிறேன்’ என்றெல்லாம் கூறி அவளது விருப்பத்தையும், உணர்வுகளையும் மதிக்காமல் கட்டாயப் படுத்துவதும் வன்கொடுமையே.

அந்தக் கொடூர குரலிடமிருந்து ஃபர்ஹானா தப்பித்தாளா?

படம் நெடுகவே சமூகத்தைப் பதம் பார்க்கும் வசனங்கள் வரிசைகட்டுகின்றன. ‘ஒவ்வொரு பறவைக்கும் பறக்க முடிஞ்ச தூரமும், உயரமும் இருக்கு. எந்தப் பறவையும் பறக்கமாட்டேனு கூட்டுல இருக்குறது இல்ல’ என்கிற வசனம், ஓர் எடுத்துக்காட்டு.

பெண்கள் வேலைக்குச் செல்வதை இந்தச் செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாத குடும்பங்கள் இருக்கவே செய் கின்றன. ‘படிப்பதற்கோ, வேலைக்கோ ஒரு பெண் சென்றால், ஆபத்து’ என்கிற பிற் போக்குத்தனம் இன்னமும் சூழ்ந்துதான் கிடக் கிறது. அவற்றையெல்லாம் தோலுரிக்கிறாள் ஃபர்ஹானா.

பொதுவெளியில் பெண்களின் இயக்கம் அதிகரித்திருக்கும் காலமிது. பல்வேறு தளங் களிலும் சர்வசாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், வீட்டு வாசலைக்கூட தாண்ட முடியாத சூழலில் கட்டுண்டு கிடக்கும் பெண்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள். அந்தப் பெண்களே வீட்டைவிட்டு வெளியே வருவதற்கான விடுதலைப் போராட்டத்தை நிகழ்த்த வேண்டும். அரசியலில், கலைத்துறையில், விளையாட்டில் பெண்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்த முயற்சி செய்வது சமூக அரசியல் மாற்றமாகக் கருதப்படுமெனில், சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில், வீட்டைவிட்டு வெளியே வருவதற்காக பெண் நிகழ்த்தும் விடுதலைப் போராட்டமும் சமூக மாற்றமே!

சாதி, மதம், மொழி, வர்க்கம் என்று பாகு பாடின்றி பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளா கின்றனர். அந்தக் கொடுமைச்சங்கிலியின் ஒரு வளையத்தை, இந்தத் திரைப்படம் அழுத்த மாகப் பதிவு செய்கிறது. படத்துக்கு ‘ஃபர்ஹானா’ என்பது ஒரு பெயர் மட்டுமே. ‘பார்வதி’, ‘பெனிட்டா’ என்று எந்தப் பெயரைச் சூட்டினாலும், பொருந்தக்கூடிய உண்மையைத்தான் உரக்கச் சொல்கிறது படம். உலகளாவிய பெண்களின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது.

இத்தகைய கதையைத் தேர்ந்தெடுத்து, அதைப் பேசுபொருளாக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுக்கு பாராட்டுகள்!