
யோக வாசிஷ்டம் எனும் அற்புதமான ஒரு ஞானநூல் உண்டு. வசிஷ்ட முனிவர், ராமபிரானுக்குச் சொன்ன தத்துவக் களஞ் சியமே இந்த நூல்.
நண்பர்கள் இருவர். லீவு நாள்களில் அருகிலுள்ள மலைக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுடன் புதிர் விளையாட்டுகள், கதைச் சொல்லல் என்று நேரம் கழித்துவிட்டு வருவது அவர்களின் வழக்கம்.
ஒருநாள் பிள்ளைகளுடன் கிராமத்து இளைஞர்களும் சேர்ந்துகொண்டு இரு பிரிவாகப் பிரிந்து பந்து எறிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். நண்பர்கள் இருவரும் ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். இடையில் ஏதோ வேலை வரவே, விலகிச் சென்றவர்கள், சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவர்கள், கிராமத்து இளைஞர்களிடம் ``எந்த அணிக்கு எத்தனை புள்ளிகள்... யார் வெற்றிபெற்றது?’’ என்று கேட்டனர்.
இந்தக் கேள்வியே அவர்களுக்கு விநோதமாக இருந்தது. ஆனாலும் பதில் சொன்னார்கள்.
``அவர்கள் எறிந்தார்கள்... நாங்கள் பிடித்தோம். பதிலுக்கு நாங்கள் எறியும்போது, அவர்கள் பிடித்தார்கள். மகிழ்ச்சியாக விளையாடினோம்... அவ்வளவுதான்!’’
அவர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே கையாண்டார்கள்; போட்டியாகக் கருதவில்லை. புள்ளிகளையோ வெற்றியையோ எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் `நிரந்தர மகிழ்ச்சி’ என்ற பரிசு அவர்களை விட்டு விலகாமல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள் நண்பர்கள் இருவரும்.
வாழ்க்கைக் களத்திலும் அப்படித்தான். சிலர் விளையாட்டை விரும்புகிறார்கள்; மகிழ்வோடு இருக்கிறார்கள். சிலரோ போட்டியை விரும்புகிறார்கள். அவர்களுடன் கவலையும் சேர்ந்துகொள்கிறது.
யோக வாசிஷ்டம் எனும் அற்புதமான ஒரு ஞானநூல் உண்டு. வசிஷ்ட முனிவர், ராமபிரானுக்குச் சொன்ன தத்துவக் களஞ் சியமே இந்த நூல். குருகுலவாசம் முடிந்த பின்பு, தந்தையின் அனுமதி பெற்றுத் தீர்த்த யாத்திரை சென்று வந்தார் ராமன்.
அவர் சென்று வந்த இடங்களில் எல்லாம் ஒரே சோகமயமாகவே இருப்பதைக் கண்டார். இதனால், அவருக்கு எல்லாவற்றிலும் பற்று விட்டுப்போய்விட்டது. எந்தச் செயலையும் செய்ய அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் விஸ்வாமித்திரர் அவர்களை அழைத்துச் செல்ல வந்தார். அப்போது தன்னிடமிருந்த கேள்விகளை எல்லாம் அவையில் முன்வைத்தார் ராமபிரான். அவற்றுக்கு விஸ்வாமித்திரர் பதில் சொல்லாமல், வசிஷ்டரிடம் உபதேசம் அருளும்படி கேட்டுக் கொண்டார். வசிஷ்டரும் பலவிதமான கதைகள் மூலம் அற்புதத் தத்துவங்களை உபதேசித்தார். கவலைகளுக்கான காரணங்கள் தீர்வு குறித்தும் விளக்கினார்.

‘`ராமா! விறகைப் போடப் போட, தீ மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிகிறது அல்லவா? அதுபோல, ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, கவலைகளும் அதிகமாகும். விறகை நீக்கிவிட்டால் நெருப்பு இல்லாமல் போவதைப்போல, ஆசைகளை நீக்கிவிட்டால் கவலை என்னும் தீ இல்லாமல்போகும்.
ஆசைகளை நீக்க என்ன வழி? ஒரே வழி... வைராக்கியம்தான்! மன உறுதியால் மட்டுமே ஆசைகளை நீக்க முடியும். வைராக்கியம் கொண்டவன் மட்டுமே மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளிலிருந்து விடுபட முடியும். அப்படி விடுபட்டு, மனநிறைவு பெற்றால்தான், எந்தக் கவலையும் பாதிக்காது. அமிர்தத்துக்கு ஒப்பான நிலை அது!’’ என்று நீண்டது வசிஷ்டரின் உபதேசம்.
சரி, நம்மால் இந்த வைராக்கிய நிலையை அடைய முடியுமா? சாமானியர்களுக்கு இது சாத்தியம்தானா?
கவலையை வெல்ல ஓஷோ எளிமையான வழியைச் சொல்கிறார். `முகம் பார்க்கும் கண்ணாடியைப்போல் இருந்துவிடுங்கள்; அப்போது கவலைகள் பாதிக்காது. இறக்கைகள் இல்லாமலேயே நீங்கள் பறக்க முடியும்’ என்கிறார்.
`எதன்மீதாவது ஆசை கொண்டு அதே நினைப்பில் இருக்கத் தொடங்கினால், தேங்கத் தொடங்கிவிடுவீர்கள். முகம் பார்க்கும் கண்ணாடியைப் பாருங்கள். அது உருவங்களைப் பிரதிபலிக்குமே தவிர, எந்த உருவத்தையும் தன்னுடனேயே இருத்திக் கொள்ளாது.

உங்கள் அழகைப் பற்றிக்கொள்வதிலோ அல்லது அழகைப் பற்றிய எண்ணங்களோ கண்ணாடிக்கு வருவதே இல்லை. நீங்கள் நகர்ந்துவிட்டால், அழகான நம் உருவத்தை அது பின்தொடர்ந்து வரப்போவதும் இல்லை.
இந்த நிலையைத்தான் பற்றின்மை என்கிறேன். கண்ணாடி முன் நாம் நிற்கும்போது நம்மை நேசிக்கிறது; நம்முடன் வாழ்கிறது; நம்மையே பிரதிபலிக்கிறது. நாம் நகர்ந்துவிட்டால் வெறுமையையே அது பிரதிபலிக்கிறது. பற்றின்மையின் மிகப்பெரிய ரகசியம் இதுதான்’ என்கிறார் ஓஷோ.
இதன் மூலம் அவர் சொல்லவரும் கருத்து...
`இந்த உலகில் இருப்போம். உலகத்தில் உள்ள பொருள்களுக்காக ஏங்க வேண்டாம். அவை ஒவ்வொன்றும் நம்மை எப்படிக் கையாள்கிறதோ, அந்த அளவிலேயே நாமும் அவற்றை நடத்துவோம். இவரின் கைகளில் ஏறி அலங்கரிக்கமுடியவில்லையே என்று ஒரு தங்கக்கடிகாரம் என்றாவது கண்ணீர் வடித்திருக்கிறதா? நாம் மட்டும் அதன் பொருட்டு நம் உடலையும் மனதையும் எவ்வளவு துன்புறுத்தியிருப்போம்; கவலைப்பட்டிருப்போம். இது தேவையில்லாதது’ என்பதே அவர் தரும் விளக்கம்.
எதையாவது பற்றித் தொங்க ஆரம்பித்துவிட்டால், அந்த மனம் தனது `முகம் காட்டும் ரசத் தன்மை’யை இழந்துவிடும். எந்தப் பொருள்மீதும், மனிதர்கள் எவர்மீதும் அவசியம் நேசத்துடன் இருப்போம்; ஆனால் ஆசையுடன் இருப்பது அர்த்தமற்றது. இந்த இடத்தில்தான் கவலை ஆரம்பித்துவிடுகிறது.

நதியின் இரு கரைகளிலும் பசுமையான வனங்கள், மலைகள், பூந்தோட்டங்கள் என இயற்கை பல வர்ணஜாலங்களைப் படைத்து வைத்திருந்தாலும், அவற்றின் மீது பற்று கொண்டு நதிதேங்கிவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது!
நதியாக, ஒரு கண்ணாடியாக இயல்பு கொண்டு வாழப் பழகினால், நீங்களும் கவலைகள் இல்லாத மனிதர்தான்!
சார்லி சாப்ளின் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். சிரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. நிகழ்வு தொடர்ந்தது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே நகைச் சுவையைக் கூறினார். கூட்டத்தில் பாதிப்பேர் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அதே நகைச்சுவையை மூன்றாவது முறையாகச் சொன்னார். ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே கைதட்டி ரசித்தனர்.
அதே நகைச்சுவையை அவர் நான்காவது முறை சொன்னபோது, அரங்கத்தில் அமைதியே நிறைந்திருந்தது. எவரும் கைதட்டவோ, சிரிக்கவோ இல்லை.
அப்போது சார்லி சாப்ளின் கூட்டத்தினரிடம் கேட்டார்,
``ஒரே நகைச்சுவையை மீண்டும் மீண்டும் கேட்கும்போது சிரிக்காத நாம், ஏன் ஒரே கவலையை மீண்டும் மீண்டும் நினைத்து அழுகிறோம்?’’