கட்டுரைகள்
Published:Updated:

உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?

உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?

குருதேவர் ஒருவரை தரிசிக்க வந்தான் ஒருவன். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான். குரு ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைந்தார்.

‘ஆயிரம் எண்ணங்களைவிட ஒரு சொல் மேலானது’ என்றார் புத்தர். ஒருவரைப் பற்றி நம் மனத்துக்குள் எவ்வளவு இரக்கப்பட்டாலும், அதை அப்படியே வைத்துக்கொண்டிருந்தால் எதிராளிக்கு அது ஆறுதலை அளிக்காது. மாறாக, ஒரே ஒரு சொல்லை இனிமையாக உதிர்த்தால், அது காயம்பட்டவருக்கு வலியை மட்டுப்படுத்தும்.

அதேபோல், ‘ஆயிரம் சொற்களைவிட ஒரு செய்கை மேலானது’ என்றும் புத்தர் சொன்னார். காரணம், செய்கைகளின் மூலமாகத்தான் பெரிய உண்மைகளை விளங்கச் செய்யமுடியும். சொற்கள் செய்யாததைச் செயல்கள் செய்யும். ஆம்... ஆயிரம் ஆறுதல் சொற்களை உதிர்ப்பவனைவிட, காயத்துக்கு மருந்து தடவுபவனே மகத்தானவன் என்பதே புத்தர் தரும் விளக்கம்.

குருவின் வழிகாட்டல் இப்படித்தான் இருக்கும்.

குரு எனும் ஸ்தானத்துக்கு இந்தப் புண்ணிய பூமியில் எப்போதும் உயர்ந்த மதிப்பு உண்டு.

தத்துவ மேதை அரிஸ்டாட்டிலிடம் சீடனாக வந்து சேர்ந்தான் சிறுவன் ஒருவன். ஒருநாள் இருவரும் வெளியூருக்குப் பயணப்பட்டார்கள். அரிஸ்டாட்டில் கம்பீரமாக முன்செல்ல, சிறுவன் அவரைப் பின்தொடர்ந்தான்.

வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. உடனே, ‘`குருவே... முதலில் நான் ஆற்றில் இறங்கி நடக்கிறேன். நீங்கள் என்னைப் பின்தொடருங்கள்!’’ என்றபடி அரிஸ்டாட்டிலின் பதிலை எதிர்பாராமல், ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து அரிஸ்டாட்டிலும் ஆற்றில் இறங்கினார். இடுப்பளவு நீரே இருந்ததால் இருவரும் சுலபமாக ஆற்றைக் கடந்து கரையேறினர்.

இருந்தாலும் அரிஸ்டாட்டிலுக்குக் கோபம்! ‘`குருவை அவமதித்து விட்டாயடா நீ’’ என்று சீடனிடம் சீறினார்.

``எவ்வகையில் அவமதித்துவிட்டேன் குருவே’’

- பணிவுடன் கேட்டான் சிறுவன்.

உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?
உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?

‘`சீடனாகிய நீ... எப்போதும் எனக்குப் பின்னால்தானே வர வேண்டும். நான் பதில் சொல்வதற்குள், என்னை முந்திக்கொண்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டாயே!’’ என்றார், கோபம் தணியாத அரிஸ்டாட்டில்.

இதற்குச் சிறுவன் பதிலளித்தான் ‘`குருவே... ஆற்றின் ஆழம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது. இந்த நிலையில், நீங்கள் முதலில் ஆற்றில் இறங்கி... உங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? என்னைப் போன்ற சீடர்கள் பலர் கிடைப்பார்கள். ஆனால், உங்களைப் போன்ற குரு ஒருவர் கிடைப்பது அரிது! எனவேதான் ஆற்றின் ஆழத்தையும் வெள்ளப்போக்கையும் தெரிந்துகொள்ள முதலில் நான் இறங்கி நடந்தேன். என் உயிரைவிட தாங்களே எனக்கு முக்கியம்’’ என்றான்.

அவன் உள்ளத்தை அறிந்த அரிஸ்டாட்டில், கட்டி அணைத்துப் பெருமிதம் கொண்டார். குருபக்தியில் சிறந்த அந்தச் சிறுவனே, பிற்காலத்தில் உலகில் பல நாடுகளை வென்று வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டர்!

சாணக்யனை குருவாகப் பெற்ற சந்திரகுப்தனுக்குப் பேரரசு பரிசாகக் கிடைத்தது. அதேபோல்தான் விஜயநகரப் பேரரசை நிர்மாணித்த ஹரிகர புக்கரருக்கு வித்யாரண்யரும், மராட்டிய மன்னன் வீரசிவாஜிக்கு சமர்த்த ராமதாசரும் குருவாக வாய்த்தனர். மாமன்னர்கள் மட்டுமன்றி, குருவருளால் திருவருள் பெற்ற சாமான்யர்களும் எண்ணற்றோர் உண்டு.

உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?
உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?

சரி... குரு என்றால் என்ன பொருள், குருமார்களுக்கான இலக்கணம் என்ன, குருவின் வழிகாட்டல் அவசியம்தானா... இவை பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.

குரு எனும் பதத்துக்கு `மனத்தில் அறியாமை எனும் இருளை நீக்கும் சைதன்யம்’ என்று பொருள் சொல்கின்றன ஞானநூல்கள். எளிமையாய்ச் சொல்வதானால், வேதனைகளிலிருந்து விடுபட வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்தச் சூழலை உருவாக்கித் தருபவரே குரு.

‘எவரைத் தெரிந்துகொண்டால் எல்லாம் தெரிந்துவிடுமோ, அவரைத் தெரிந்துகொள்!’ என்கிறது பாகவதம். கடவுளை அறிதல் எனும் இலக்கைச் சுட்டிக்காட்டுகிறது. அதற்குக் குருவின் திருவருள் தேவை.

குரு ஒருவரைச் சந்தித்த சீடன் கேட்டான்: ‘`சுவாமி... இறைவனை உடனே காண வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.’’

குரு புன்னகைத்தபடி கூறினார்: ‘சீடனே! இறைபக்தி என்பது சீன மூங்கில் போன்றது. இந்த மூங்கிலானது... விதையைப் போட்டு, வருடம் முழுவதும் நீரூற்றி, உரமிட்டுப் பாதுகாத்தாலும் பூமிக்கு மேலே ஓர் அங்குலம் கூட வளராது. ஆனால், ஐந்து வருடங்கள் பூர்த்தியானதும் ஆறே வாரங்களில் 90 அடி வரை வளரும்!

புதிதாக அதைக் காண்பவர்கள், ‘அட... ஆறே வாரத்தில் இப்படியொரு வளர்ச்சியா?’ என்று எண்ணக்கூடாது. ஐந்து வருடங்களாகத் தனது வேரை பூமிக்குள் பரப்பி, எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் வீழ்ந்துவிடாத அளவுக்குத் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே, தனது வளர்ச்சியை வேகப்படுத்துகிறது அந்த மூங்கில். இறைபக்தியும் அப்படித்தான். மனம் தளராமல் இறைச் சிந்தனையில் பற்றுடன் இருந்தால், இறைவனை தரிசிப்பது உறுதி!’’

உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?
உங்களுக்கு குரு நீங்கள்தான்... எப்படித் தெரியுமா?

பக்தியில் இருக்கவேண்டிய சிரத்தையை, பொறுமையை எவ்வளவு அழகாய் எளிமையாகப் போதித்துவிட்டார் பார்த்தீர்களா? நல்ல குருவின் பணியானது இப்படித்தான் இருக்கும். தேவையான தருணங்களில், அவசியப்படும் ஞானத்தைத் தந்து குருவருள் நம்மை ஆற்றுப்படுத்தும். அதேநேரம், தகுந்த குருவைத் தேர்வு செய்வது நம் பொறுப்பு ஆகும்.

குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை. உங்களுக்கு ஆறுதல் சொல்வதும், உங்களைத் தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி. நீங்கள் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம். நீங்கள் சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் உங்களை விடுவித்து சுதந்திரம் தருவதே குருவருளின் மகத்துவம். அந்த நிலையை நோக்கி விழிப்புணர்வுடன் உங்களைப் பயணப்படவைப்பதே குருவின் பணியாக இருக்கும்.

சரி, `சரியான குரு இவர்’ என்று ஒருவரை அடையாளம் காண்பது எப்படி? யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல; யாருடைய அருகில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும், அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ, அவர்தான் உண்மையான குரு என்று வழிகாட்டுகிறார்கள் ஆன்றோர்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் உண்மையைத் தேடுபவனுக்குப் பறவைகளும், எறும்பும், ஏன்... அவன் காணும் ஜடப் பொருள்களும்கூட ஒரு குருவாக ஞானம் அளிக்க இயலும். மட்டுமன்றி, நீங்களேகூட உங்களுக்குக் குருவாகலாம்!

ஆம்! உங்களுக்குள்ளேயும் ஒரு குரு இருக்கிறார். அந்தக் குருவின் பெயர் மனம். நாம் செய்யும் தவறுகளை அறிந்த ஒரே குரு நம் மனசாட்சி மட்டும்தான். ஆனால், அற்புதமான அந்தக் குருவை அறிவின் கட்டுப்பாட்டில் வைக்காமல், உணர்வுகளுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறோம். இந்த நிலையைத் தகர்த்தோம் எனில், அறிவின் கட்டுப்பாட்டில் ஞானத்தின் அணுக்கத்துடன் நம் மனம் செயல்படுமாயின், நமக்கு நாமே நல்ல குருவாகிவிடுவோம்!

தற்காலச் சூழலில், `நானே கடவுளின் தூதன்’ என்கிறார்கள் சிலர். `நானே கடவுள்’ என்கிறார்கள் சிலர். நல்லதை அடையாளம் காண்பதற்கு சாமர்த்தியம் தேவை.

குருதேவர் ஒருவரை தரிசிக்க வந்தான் ஒருவன். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான். குரு ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைந்தார். அவன் பயந்து ஓடிப் போனான். பக்கத்திலிருந்தவர்கள் குருவிடம் கேட்டார்கள், ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’ ‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக்கொண்டிருக்கிறான்!’’