கட்டுரைகள்
Published:Updated:

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம்... எப்படித் தெரியுமா?

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?

``இளைஞனே, நதியில் வீசியெறியப்பட்ட கல், தரையில் தங்கிவிடுகிறது. கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த இலைகள், நதியின் பிரவாகத்தில் ஆனந்தமாகத் தவழ்ந்து செல்கின்றன.

அழகிய அந்த நதிக்கரையில் உட்கார்ந்திருந்தான் ஓர் இளைஞன். அவன் முகத்தில் சோகம். சமீபகாலமாக அவன் மேற்கொண்டிருந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்திருந்தன. அதனால் எழுந்த துக்கம் மனதைப் பாரமாக்க, அமைதியைத் தேடி நதிக்கரைக்கு வந்திருந்தான்.

`புதிய முதலீடுகள், தகுதிக்கு மீறிய பொருட்செலவு, அதற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைத்தாக வேண்டும். என்ன செய்யப்போகிறோம்... பேசாமல் உயிரை மாய்த்துக்கொள்ளலாமா?’ எனும் அளவுக்கு அவனுள் சிந்தனைகள் எழுந்தன.

சட்டென்று ஒரு சலனம். துறவி ஒருவர் ஆற்றில் நீர் பருகிவிட்டுக் கரையேறிக்கொண்டிருந்தார். அருகிலுள்ள ஊருக்கு வழி கேட்கும் பொருட்டு இவனிடம் வந்தார். இவன் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ துயரத்தில் இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டார்.

இவனிடம் பேச முற்பட்டார். ஆனால், இளைஞனோ முகத்தைத் திருப்பிக்கொண்டான். அருகில் வந்து அவன் தலைமுடியைக் கோதினார். அதேநேரம் காற்றும் வீசியது. காற்றின் குளர்ச்சியும் துறவியின் பரிவும் மனத்தின் பாரத்தைக் குறைத்தன. மெள்ள நிமிர்ந்தான்.

துறவி அருகில் அமர்ந்தார். இளைஞனிடம் அவன் துக்கத்துக்கான காரணத்தைப் பற்றி விசாரிக்க முற்படவில்லை. கரையில் இருந்த மரத்தைச் சுட்டிக்காட்டினார். காற்றின் விசையால் கிளைகள் அசைந்தாட, அவற்றிலிருந்து உதிர்ந்த இலைகள் நீர்ப் பரப்பில் விழுந்து, அதன் பிரவாகத்தில் ஆனந்தமாய்த் தவழ்ந்துசெல்வதைக் கண்டான்.

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?
வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?

இப்போது துறவி சொன்னார். ``இளைஞனே, ஏதோ துக்கத்துடன் அமர்ந்திருக்கிறாய். அதுபற்றி நான் கேட்கப் போவதில்லை. ஆனால், இதுவரையிலும் சிறு சிறு கற்களை நதியில் போட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா? அவை என்னவாயிற்று என்று பார்த்தாயா?’’

உடனே இளைஞன் நதிக்குள் பார்த்தான். அது ஆழம் குறைவான பகுதி. நீரும் தெளிவாக இருந்தது. இவன் வீசியெறிந்த கற்கள், நதியின் அடிப்பரப்பில் தேங்கிக்கிடந்தன. துறவி எதற்காகக் கற்களைப் பற்றிக் கேட்கிறார் என்பது இளைஞனுக்குப் புரியவில்லை.

``இளைஞனே, நதியில் வீசியெறியப்பட்ட கல், தரையில் தங்கிவிடுகிறது. கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த இலைகள், நதியின் பிரவாகத்தில் ஆனந்தமாகத் தவழ்ந்து செல்கின்றன. அநேக விஷயங்களை உள்ளுக்குள் தேக்கி, அதனால் கல்லைப் போன்று கனம் கொள்ளும் மனிதனும், வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாமல், ஓரிடத்திலயே விழுந்து கிடக்கிறான். இலையைப் போல் லேசாக இருப்பவன், இறுதிவரை இன்பமாக நடக்கிறான்’’ என்றார்.

அந்தப் புத்திசாலி இளைஞன், அவர் கூறியதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டான். ஒரு துள்ளலுடன் எழுந்து அவரை வணங்கியவன், உற்சாகத்துடன் புறப்பட்டான்!

மேற்சொன்ன கதையில் துறவி குறிப்பிட்ட நம் மனத்தைக் கனமாக்கும் அநேக விஷயங்களில் அளவில்லா ஆசை, அதீத அகங்காரம், பொறாமை, தேவையில்லாத பற்றுதல், வீண் கவலைகள் ஆகியவையும் உண்டு. அவற்றை விட்டுவிடுவது அவசியம்.

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?
வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?

மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தரையில் போட்டிருந்த ஒரு பெரிய மீனை எடுத்துக்கொண்டு பறந்தது ஒரு பருந்து. அங்கிருந்த காக்கைகள், தரையில் கிடக்கும் மீன்களை எடுப்பதை விட்டுவிட்டு பருந்தைத் துரத்தத் தொடங்கின.

நூற்றுக்கணக்கான காக்கைகள், பருந்து போகும் இடமெல்லாம் போய் அமளி செய்தன. பருந்து எந்தத் திசையில் பறந்தாலும் விடவில்லை. பறந்து பறந்து சோர்ந்துபோனது பருந்து.

ஒரு நிலையில், சோர்வு காரணமாக பருந்து தன் அலகைத் திறக்க, அதன் வாயில் பிடிபட்டிருந்த மீன் கீழே விழுந்தது. துரத்திய காக்கைகள் பருந்தை விட்டுவிட்டு மீனைப் பிடிக்கக் கீழே பாய்ந்தன. பருந்து களைத்துப்போய் ஒரு மரக் கிளையில் உட்கார்ந்தது. அப்போதுதான் அதன் கவலை தீர்ந்தது. மெள்ள மெள்ள அதற்குப் புரியத் தொடங்கியது. ‘காக்கைகள் துரத்தக் காரணம், தன் வாயிலிருந்த மீன்தான். மீனை விட்டுவிட்டால் காக்கைகள் துரத்தாது, நிம்மதியாக இருக்கலாம்.’

ஒருவகையில் நாமும் பருந்துதான். நம்முடைய ஆசைகள், வீண் கவலைகள் முதலான மீன்களைப் பற்றிகொண்டிருக்கிறோம். அவற்றை விட்டுவிட்டால், வாழ்க்கை எனும் வானில் இலக்கை நோக்கி மிக எளிதாக சந்தோஷமாகச் சிறகடித்துப் பறக்கலாம்.

ஒருவரின் தேக்கத்துக்கும் வாழ்க்கைப் பயணத்தில் மேற்கொண்டு நகர முடியாமல் ஒரே நிலையில் அவர் சோர்ந்து கிடப்பதற்கும் வேறு காரணங்களும் உண்டு நண்பர்களே!

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?
வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?

ஆம், புதிய முயற்சிகளை மேற்கொள்வது, வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பது ரிஸ்க் என்று தயக்கம் கொள்பவர்களும் தேங்கிப்போகிறார்கள். விதிவசத்தால் அவர்கள் வந்தடைந்த இடத்தின் சில சாதகமான சூழல்கள், ஒருவித சுகத்தை - திருப்தியைக் கொடுத்துவிட, அங்கேயே தேங்கிவிடுகிறார்கள். விளைவு, தற்காலிக இன்பச் சூழல்களில் மூழ்கித் திளைத்து, வெற்றிக்கான பயணத்தை மறந்து போகிறார்கள். கிடைக்கவேண்டிய நிரந்தர இன்பத்தை அவர்களே தொலைத்துவிடுகிறார்கள்.

அப்பர் பெருமான் அழகாகப் பாடுகிறார்... `தளைத்துவைத் துலையை யேற்றித்

தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற

வாமைபோற் றெளிவி லாதேன்!' இந்தப் பாடலில் அவர் சொல்லவரும் பாடம் மிக அற்புதமானது.

ஆமை நீண்ட நாள்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால், அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்போக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக்கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது. ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டு வந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதி கலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெதுவெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்!’ என்று ஆமை அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து, ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

நாமும் இப்படித்தான். இருக்கும் சூழல் வெம்மையாகத் தகிக்கும்போதுதான் மாற்றுச் சூழலைத் தேட விழைகிறோம். ஆனால், அதற்குள் நடப்புச்சூழலின் வெம்மை நம்மை இயங்கவிடாமல் முடக்கிப்போட்டுவிடுகிறது. சரி... `தேங்குதல் சரியல்ல’ என்ற தெளிவும் புரிதலும் யாருக்கு உண்டாகிறது?

`எல்லாம் தெரியும்’ என்ற இறுமாப்பு இல்லாதவர்களுக்கு!

ஆம் ஆணவம் ஒருவன் புதிய முயற்சிகள் குறித்துச் சிந்திக்கவிடாதபடி அவனைச் சோம்பலுக்கு ஆளாக்கி முடக்கிப்போட்டுவிடும்.

வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?
வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம் எப்படித் தெரியுமா?

அதுவொரு மனநோய் மருத்துவமனை. அங்குள்ள நோயாளிகளில் 6 பேர் மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் தெளிவு பெற்றிருந்தார்கள். முற்றிலும் குணமாகவில்லை. அந்த 6 பேருக்கும் சோதனை வைத்து, அதிலும் தேறியவர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

என்ன சோதனை தெரியுமா?

ஒரு நீளமான சுவர் அங்கே இருந்தது. சிறந்த ஓவியர் ஒருவரை வரவழைத்து, அந்தச் சுவரில் அழகான கதவு மாதிரியான ஓவியத்தை வரைந்து வைத்தார்கள். மறுநாள் அந்த ஆறு பேரையும் அந்த இடத்துக்கு வரவழைத்தார்கள்.

மருத்துவர் ஒருவர் அவர்களிடம், ``நண்பர்களே, அந்தக் கதவைத் திறந்து காட்டுங்கள் பார்க்கலாம்’’ என்றார்.

அது கதவு இல்லை ஓவியம் என்று கண்டுகொள்ளும் நபர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என்பது திட்டம். ஆனால், `கதவைத் திறந்து காட்டுங்கள்’ என்று மருத்துவர் கூறியதும் ஐந்துபேர் ஓடிச் சென்று ஓவியக் கதவின் மீது முட்டிமோதிக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மட்டும் சிரித்தவாறு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். ‘இவர் பரவாயில்லை!’ என்று நினைத்த மருத்துவர் அவரை அணுகினார். ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

``பாவம்... என்ன முயன்றாலும் அந்த முட்டாள்களால் கதவைத் திறக்க முடியாது!’’

மருத்துவருக்கு மகிழ்ச்சி. `இவரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்’ என்ற திருப்தி அவருக்குள். எனினும் நிறைவாய் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘ஏன் அவர்களால் அந்தக் கதவைத் திறக்க முடியாது?!’’

‘‘அந்தக் கதவோட சாவி என் கையில் இருக்கும்போது அவர் களால் எப்படி அந்தக் கதவைத் திறக்க முடியும்?’’

அவர் கையில் இருந்தது மருத்துவரின் கார் சாவி!

நண்பர்களே, ஆணவத்துக்குத் தீனி போட்டால் நாமும் இப்படித்தான்... உண்மையை, யதார்த்தத்தை அறிய இயலாமல் முடங்கிப்போவோம்; நமக்கு விடுதலை கிடைக்காது.

`எல்லாம் தெரியும்’ எனும் இறுமாப்பை விட்டொழித்தால், வெற்றிக் கதவை எளிதில் திறக்கலாம்!