லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

“2,000 ரூபாய்ல தொடங்கின பிசினஸ்... இப்போ மாசம் 5 லட்சம் சம்பாதிக்கிறேன்!” - டிசைனர் ஜோத்ஸ்னா

ஜோத்ஸ்னா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோத்ஸ்னா

“மன அழுத்தத்துலேருந்து விடுபட, வெளிநாடுகளுக்குத் தனியா டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். துபாய், சிங்கப்பூர், நியூயார்க்னு நான் வெளிநாடுகளுக்குப் போகும்போது என் கணவர் குழந்தையைப் பார்த்துப்பார்.

“போராட்டங்களும், சவாலான சூழ்நிலை யும் வாழ்கையில சகஜம். தன்னம்பிக்கையோடு அந்தச் சூழலை கடந்துட்டா வாழ்க்கையில ஜெயிச்சிடலாம். பிசினஸ்ல பிஸியா இயங் கிட்டு இருந்த எனக்கு உடல் எடை அதிகமாச்சு. பிசினஸ்ல கவனம் குறையத் தொடங் குச்சு. சில மாசங்கள் எல்லாத்துலேருந்தும் ஒதுங்கியிருந்தேன். மன அழுத்தத்துலேருந்து வெளிவர வெளிநாடுகளுக்கு தனியே டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ புதுத்தெம் போட இயங்க ஆரம்பிச்சுருக்கேன்” - புத்துணர்வுடன் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப் பாளர் ஜோத்ஸனா.

அதுல்யா, நட்சத்திரா, யாஷிகா, ஆல்யா மானஸா உள்பட பல பிரபலங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். மேலும், சோலோ டிராவல் செய்ய விரும்பும் பெண்களை ஒன்றிணைத்து குழுவாக பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். டிசைனராகவும், டிராவலராகவும் தான் கடந்த வந்த பாதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஜோத்ஸனா.

``பி.இ படிச்சு முடிச்சுட்டு இன்ஜினீயரா வேலைக்குச் சேர்ந்தேன். ஓய்வு நேரத்துல ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். ஆன்லைன்ல பார்த்து ஆரி வேலைப்பாடுகள் செய்ய கத்துக்கிட்டேன். தனித்துவமான டிசைன்களை தேடித்தேடி உருவாக்கினேன். என் டிசைன்களை பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் அவங்களுக்கும் பண்ணித்தர சொல்லிக் கேட்டாங்க. பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு டிசைனிங்ல இறங்கிட்டேன். வீட்டோட சின்ன அறையில 2,000 ரூபாய் முதலீட்டுலதான் என் பிசினஸை தொடங்கி னேன். இப்போ மாசம் 5 லட்சம் வரை சம்பாதிக்கிறேன். ஆரம்பத்துல கட்டிங், டிசைனிங், பேக்கிங், டெலிவரி எல்லாத்தையும் நானே செஞ்சுட்டு இருந்தேன். லாபம் குறைவா இருந்தாலும் ஒரு பிளவுஸை டிசைன் பண்ணி முடிக்கும்போது மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கும். அந்த நேரத்துல சின்னத் திரை பிரபலங்களோட வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சுது. ப்ரீத்தி ஷர்மா, நட்சத்திரா, ஜனனி, அர்ச்சனா, தியா, வினுஷா, கேப்ரிலா, தர்ஷானு சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் டிசைன் பண்ணி யிருக்கேன். இப்படி பார்த்துப் பார்த்து வளர்த்த பிசினஸ்ல திடீர்னு மிகப்பெரிய நஷ்டம் வந்துச்சு.

ஜோத்ஸ்னா
ஜோத்ஸ்னா

வெளிநாட்லேருந்து வந்த கஸ்டமர் அவங்க கல்யாணத்துக்காக 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகளுக்கு ஆர்டர் கொடுத்தாங்க. 50,000 ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தாங்க. மீதித் தொகையை கொடுக்கல. கல்யாண தேதிக்கு சில நாள் முன்னாடி வந்து, டிசைன் பண்ணி வெச்சுருந்த டிரஸ்ஸை வாங்கிட்டு இன்னும் சில டிரஸ்ஸுக்கு ஆர்டரும் கொடுத்தாங்க. பணத்தை மொத்தமா கொடுக்குறதா சொன் னாங்க. ஆனா, அவங்ககிட்டு இருந்து எந்தப் பணமும் வரல. போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்துச்சு. கல்யாணம் நடக்க இருக்கிறதா அவங்க சொன்ன இடத்துக்குப் போய் விசாரிச்சா, அப்படி ஒரு கல்யாணமே அங்க நடக்கலைன்னு தெரிஞ்சுது. மொத்தமா 6 லட்ச ரூபாயை இழந்துட்டேன். அதுலேருந்து மீண்டு வர முடியல. அந்த நேரத்தில் எனக்கு டெலிவரி ஆனதால பிசினஸ்ல சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன். மறுபடி பிசினஸை ஆரம் பிச்சப்போ, கொரோனா வந்துருச்சு. அப்போ தான் ஆன்லைன் மூலமா ஆரி வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். இதுவரை 5000-க்கும் அதிக மான பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கேன். மாதம் 5 லட்சம் வரை டர்ன் ஓவர் பண்றேன். இப்போ அடுத்தடுத்த ஊர்களில் கிளைகள் அமைக்கும் பிளான் இருக்கு” என்ற ஜோத்ஸ் னாவிடம் பயணங்கள் பற்றி கேட்டோம்.

“மன அழுத்தத்துலேருந்து விடுபட, வெளிநாடுகளுக்குத் தனியா டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். துபாய், சிங்கப்பூர், நியூயார்க்னு நான் வெளிநாடுகளுக்குப் போகும்போது என் கணவர் குழந்தையைப் பார்த்துப்பார். தனியா டிராவல் பண்ணிட்டு வந்த கதையை சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணதும், நிறைய பெண்கள், ‘நாங்களும் உங்ககூட வர்றோம்’னு மெசேஜ் பண்ணாங்க. என்னை மாதிரி விருப்பமுள்ள பெண்களை என்கூட சேர்த்துகிட்டேன். பயணத்துக்காக அவங்க கிட்ட இருந்து பணம் வாங்குறது இல்ல. டிக்கெட் மட்டும் எல்லாரும் ஒண்ணா புக் பண்ணுவோம். அவங்க செலவை அவங்க அவங்க பார்த்துக்கணும். வெளிநாடுகளுக்கு டூர் போகணும்... ஆனா, தனியா போக பயமா இருக்குனு நினைக்கிற பொண்ணுங்க எங்ககூட சேர்ந்துக்கலாம் அவ்வளவுதான்” என்ற ஜோத்ஸனா, தன் சமூக வலைதள பக்கத்தில் 35 கிலோ வெயிட்லாஸ் செய்திருப்ப தாகப் பதிவிட்டிருக்கிறார்.

‘`பிரெக்னென்சி, ஸ்ட்ரெஸ் காரணமா வெயிட் போட்டேன். வொர்க்அவுட்லாம் பண்ணாமலே வாக்கிங், ஆரோக்கியமான உணவுகள் மூலமா எட்டு மாசத்துல 35 கிலோ குறைச்சு இருக்கேன். இப்போ என் பிராண்டு களுக்கு நானே மாடலிங் பண்றேன். நம்ம வாழ்க்கையை நமக்குப் பிடிச்ச மாதிரி அமைச்சுக்கிறது நம்ம கையிலதான் இருக்கு” - நிறைவுடன் விடைபெறுகிறார் ஜோத்ஸ்னா.