கட்டுரைகள்
Published:Updated:

சூடான்... போர்முனையிலிருந்து மீண்ட தமிழர்கள்!

குடும்பத்துடன் ஜோனஸ் திரவியம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் ஜோனஸ் திரவியம்

ஏப்ரல் 15, எங்கள் பள்ளியை வழக்கம்போலத் திறந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பெருஞ்சத்தம் கேட்டது. அந்த இடத்தைப் புகை மண்டலம் சூழ்ந்துகொண்டது

``பத்துநாள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துட்டு வெளியே வந்து பார்த்தப்போ... தீபாவளிக்கு மறுநாள் தெரு முழுக்க வெடிச்ச பட்டாசுகள் சிதறிக்கிடப்பதுபோல, எங்க வீட்டு வாசல்ல துப்பாக்கிக் குண்டுகள் கிடந்துச்சு. ராணுவமும் துணை ராணுவமும் எதிரெதிரா நின்னு மோதி சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கிறாங்க. ஆம்புலன்ஸுக்குக்கூட வழி விடாம நேருக்கு நேரா சண்டை போடுறாங்க. தண்ணி, உணவு எதுவும் கிடைக்கலே. உயிரோடு மீண்டு வருவோம்னு நம்பிக்கையே இல்லை...’’ சூடான் நாட்டிலிருந்து மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஷீபா சொல்லும்போதே உடல் நடுங்குகிறது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்துவருகிறது. அங்கு ஏராளமான தமிழர்கள் பணிபுரிகிறார்கள். இரு வாரங்களுக்கு முன்பு, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையின் தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவாக மோதல் ஏற்பட்டது. தலைநகர் கார்டோமில் இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையிலும் வான்வழித் தாக்குதலிலும் ஈடுபட, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். சூடானில் வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர ‘ஆபரேஷன் காவேரி' எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தலைநகர் கார்டோமிலிருந்து சுமார் 850 கி.மீ தொலைவிலிருக்கும் துறைமுக நகரான போர்ட் சூடானில் வெளிநாட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கிருந்து வெளிநாட்டவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சூடான்
சூடான்

ஷீபாவும் அவரின் கணவர் ஜோனஸ் திரவியமும் 15 ஆண்டுகளுக்கு மேலாக சூடானில் வசிக்கிறார்கள். இரண்டு மகள்களுடன் மதுரை வந்திறங்கிய ஷீபாவிடமும் அவர் கணவர் ஜோனஸ் திரவியத்திடமும் பேசினேன்.

‘‘சூடான் தலைநகரான கார்டோமில் ஒரு பள்ளியில் நான் இயக்குநராக இருக்கிறேன். அதே பள்ளியில் என் மனைவி தலைமை ஆசிரியையாக இருக்கிறார். ஏப்ரல் 15, எங்கள் பள்ளியை வழக்கம்போலத் திறந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பெருஞ்சத்தம் கேட்டது. அந்த இடத்தைப் புகை மண்டலம் சூழ்ந்துகொண்டது. மக்கள் கதறி அழுதார்கள். அப்போதுதான், அங்கு போர் தொடங்கியது தெரிந்தது. உடனே குழந்தைகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டோம். திடீரென ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போரால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் சிக்கிக் கொண்டார்கள். மிகப்பெரும் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, ராணுவமும் துணை ராணுவமும் ஆம்புலன்ஸ் வண்டிக்குகூட வழிவிடாமல் அராஜகம் செய்தார்கள். வீட்டை விட்டு வெளியில் யார் வந்தாலும், அவர்கள் சுடப்பட்டார்கள். இரண்டு வாரங்களாக உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை.

ராணுவ அதிகாரிகள் வீட்டுக்கதவைத் தட்டும் போதெல்லாம், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கதவைத் திறப்போம். எப்படியாவது இந்தியா திரும்பிவிட வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு போர்ட் சூடானுக்குச் செல்ல வேண்டும். எங்கள் இடத்திலிருந்து போர்ட் சூடானுக்குப் போக 18 மணி நேரம் ஆகும். அதற்கு மட்டும் பஸ் ஏற்பாடு செய்து தந்தார்கள். ஆனால் அதில் இடம் கிடைப்பதும் பெரும்பாடாக இருந்தது. எப்படியோ அந்த பஸ் புறப்படும் இடத்தைக் கண்டுபிடித்து, 18 மணி நேரப் பயணத்திற்குப் பின், போர்ட் சூடான் வந்தோம். அங்கிருந்து போர்க் கப்பலில் சவுதி அரேபியா வந்தடைந்தோம். அங்கிருந்து விமானத்தில் டெல்லி வந்து இறங்கியதும்தான் நிம்மதி வந்தது. அங்கு நம் தமிழக அதிகாரிகள் வரவேற்று, மதுரைக்கு அனுப்பினார்கள்...’’ என்கிறார் ஜோனஸ் திரவியம்.

குடும்பத்துடன் ஜோனஸ் திரவியம்
குடும்பத்துடன் ஜோனஸ் திரவியம்

ஜோனஸ் திரவியம்-ஷீபா தம்பதியின் மகள்கள் இருவரும் சூடானில் பெரிய கனவுகளுடன் மருத்துவம் படிக்கச் சேர்ந்தார்கள். போரால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். படிப்பு என்ன ஆகும் என்ற கவலை குடும்பத்தையே சூழ்ந்திருக்கிறது.

``15 வருடங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. பெண்கள் இரவு 12 மணிக்குக்கூட வெளியில் போய் வரலாம். அந்த அளவுக்கு அமைதியான நாடு இப்போது போர்க்களமாக மாறிவிட்டது. போர் தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை. அதனால் உணவு, தண்ணீரை இருப்பு வைக்கமுடியவில்லை. போர் சிறிதுநேரம் நிறுத்தப்படும் என்று தகவல் வரும். நம்பிக்கையாகக் கதவைத் திறந்தால் விடாமல் சுட்டுக்கொண்டிருப்பார்கள். பத்து நாள்கள் மரண பயத்தோடுதான் ஓடின’’ என்கிறார் ஷீபா.

இவர்களது இளைய மகள் ஜோஸ்னா இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். “போர் ஆரம்பிச்ச அன்னைக்கு எனக்கு செமஸ்டர் பிரேக். வீட்ல இருந்தேன். என் ஜூனியர்ஸ், சீனியர்ஸ் கல்லூரில இருந்தாங்க. காலையில போர் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன். என் நண்பர்களுக்கு போன் செய்தபோது, ‘நாங்க காலை 7.30 மணிக்கு காலேஜ் வந்துட்டோம். ஆனா உள்ளே இருக்குற பயிற்சி மருத்துவமனையை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றிட்டாங்க. அதனால நாங்க உள்ள மாட்டிட்டு இருக்கோம்’னு சொன்னாங்க. நாங்க தப்பிச்சு போர்ட் சூடான் போனபோது, அங்க ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருந்தாங்க. யாரும் என்ன நடக்குதுன்னே புரியாம குண்டுச் சத்தத்துல தூங்காம ரொம்ப பயந்துபோய் இருந்தாங்க.

15 வயசுப் பசங்களையெல்லாம் ராணுவத்துல சேர்த்திருக்காங்க. என்னோட கல்லூரில படிச்ச மாணவர்களேகூட இப்ப கையில துப்பாக்கி வச்சுக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. எங்க வீடு, மக்கள் அதிகம் கூடும் ஒரு பிசியான சாலையில இருக்கும். நாங்க பத்து நாள் கழிச்சு வெளிய வந்து பார்த்தபோது, மனிதர்கள் வாழ்ந்த தடமே இல்லாம வெறிச்சோடிக் கிடந்தது...’’ என்கிறார் கண்கள் கலங்க.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த யுவனேஷ்வரன் மகாலிங்கம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பியிருக்கிறார்.

‘‘நான் சூடான் வந்து ஆறு மாசம்தான் ஆச்சு. ஒரு ஸ்டீல் பேக்டரில வேலை செய்றேன். பேக்டரி உள்ளேயே தங்கும் வசதிகள் செய்து கொடுத்தாங்க. நாங்க தங்கியிருக்கும் இடத்துல இருந்து நூறு கி.மீ தூரத்துலதான் போர் நடந்துட்டிருந்துச்சு. நாங்க எல்லாரும் உள்ளயே பாதுகாப்பா இருந்தோம். ஆனா ஒரு நாள், எங்க கம்பெனிக்குப் பக்கத்துல இருக்குற ராணுவத்தளத்தைக் கைப்பற்றி, துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பிச்சாங்க. சாப்பாடு, தண்ணி, கரன்ட் எல்லாம் கட்டாயிடுச்சு. இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டப்போ, எப்படியாவது போர்ட் சூடானுக்கு வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க. 13 மணி நேரப் பயணம். வழியில சாப்பிடக்கூட எதுவும் இல்லை. வழியில ராணுவம் எங்களைப் பிடிச்சுச்சு. கழுத்துல கத்தியை வச்சு கையில இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிட்டாங்க. ஒன்னுமே இல்லாமதான் போர்ட் சூடானுக்கு வந்து சேர்ந்தோம்.

குடும்பத்துடன் யுவனேஷ்வரன்
குடும்பத்துடன் யுவனேஷ்வரன்

ஊர்ல எல்லாரும் ரொம்ப பயந்துபோய் இருந்தாங்க. நெட்வொர்க் இல்லாததால சரியா தகவல்கூட சொல்ல முடியலே. போர்ட் சூடானுக்கு வந்ததும்தான் பிழைச்சிட முடியும்னு நம்பிக்கையே வந்துச்சு. போர்ட் சூடான்ல பணம்தான் எல்லாத்தையும் முடிவுசெய்யுது. நடுவுல நிறைய புரோக்கர்கள் வந்து, காசு கொடுக்குறவங்களைத்தான் சவுதிக்கு அனுப்புறாங்க. எங்களுக்கு அப்புறம் வந்த, லிஸ்ட்ல பெயர் இல்லாத பலரும் எப்படியோ முன்னாடி போய்க்கிட்டே இருந்தாங்க. நாங்க நாலு நாளா காத்துக்கிடந்தோம். என்கிட்டயும் சிலபேர் பணம் கேட்டாங்க. ஆனா என் கையில எதுவுமே இல்லை. எங்க கம்பெனியைத் தொடர்பு கொண்டபிறகு எங்களுக்குக் கப்பல்ல இடம் கிடைச்சுச்சு. பதினைஞ்சு நாளா வெறும் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு பல குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியாமப்போச்சு. உயிரோட வந்துட்டோம்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், போர் சமயத்துல கூட மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்ட பணத்தாசை பிடிச்ச மனிதர்களை நினைச்சாதான் ரொம்ப கஷ்டமா இருக்கு...”

மிரட்சி விலகாமல் சொல்கிறார் யுவனேஷ்வரன்.