கட்டுரைகள்
Published:Updated:

நன்றி சொல்லும் நல்லுணவு!

‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்

WE CAN

‘ஆர்டர் எங்க?’

‘மும்பைக்கு அனுப்பணும்...’

‘ஓகே சார், எத்தனை மணிக்கு, எந்த ஐ.டி கம்பெனிக்குன்னு சொல்லுங்க. நாங்க பார்த்துக்குறோம்!’

“இந்தத் தன்னம்பிக்கைதான் இவங்க அடையாளம். ஒரு புது ஆர்டர் வரும்போது, அவங்களுக்கு அந்த ஊரு, மொழி தெரிஞ்சுருக்கோ இல்லையோ, அந்த ஆர்டர எடுத்துச் செய்ய ஆரம்பிச்சுருவாங்க. அந்தப் பொருளைச் செய்யுறது, பேக் பண்ணுறது, ரயில்வே ஸ்டேஷன்ல ஏத்துறதுன்னு இந்தப் பக்கம் வேலைய முடிச்சுட்டு, அந்தப் பக்கம் அந்தக் கம்பெனில வியாபாரம் பண்ணி, கணக்கு சரிபார்த்து மிச்சப் பொருள நம்ம இடத்துக்குக் கொண்டுவர்ற வரை எல்லா வேலையும் அவங்களே பாத்துருவாங்க’’ என்று மூச்சு விடாமல் அப்துல் ரஹீம் பேசியது, ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ எனும் சமூக நிறுவனத்தில் பணிபுரியும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உழைப்பைப் பற்றியது.

இந்தியாவில் சுமார் 4 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் படித்து வேலைக்குச் செல்லத் தயாராக இருப்பவர்கள் மட்டும் 1.4 கோடி பேர். ஆனால் அதில் 35 லட்சம் பேருக்கு மட்டும்தான் வேலை கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ‘‘அதைத் தீர்க்கும் ஒரு சிறு புள்ளிதான் ‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்’’ என்கிறார், மதுரை சுந்தரம்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம்.

அப்துல் ரஹீம்
அப்துல் ரஹீம்

‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் அசோசியேஷன் பார் ப்ளைன்ட்ஸ்’ (ஐ.ஏ.பி) ஆகியவற்றின் தலைவராக இருக்கிறார் இவர். ஐ.ஏ.பி நிறுவனத்தைத் தொடங்கியது இவர் தந்தை முகமது அலி ஜின்னா. 13 வயதில் விபத்தில் பார்வையிழந்த அவருக்கு அவரின் பெற்றோர் எப்படியாவது சொத்து சேர்த்து வைக்க விரும்பினார்கள். ஆனால் தான் சேர்க்க வேண்டிய சொத்து வேறென்று படிக்க ஆரம்பித்தார் அவர். பள்ளி, கல்லூரி என அனைத்திலும் முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்றவர், அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் பார்வையற்றவருக்கான சிறப்புக் கல்வியைப் பெற்றார். அங்கேயே கிடைத்த வேலையை வேண்டாமென்று சொல்லிவிட்டு மதுரை வந்து, தன்னைப்போல் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குத் தற்சார்பு வாழ்வினை உருவாக்குவதற்காக ஐ.ஏ.பி-யைத் தொடங்கினார்.

ஐ.ஏ.பி 1985-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 35 ஆண்டுக்காலமாக இலவசக் கல்வி, மருத்துவம், உணவு, தங்குமிடம் தந்து, வேலைவாய்ப்பினை உருவாக்கி, 40,000 மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக வாழ்வினை நகர்த்தப் பாதை தந்துள்ளது. இதன் மூலம் பட்டம் முடித்து, பலர் அரசு வேலை வரை உயர்ந்திருக்கிறார்கள். இப்படி அப்துல் ரஹீமின் தந்தை ஜின்னா உண்டாக்கிய பாதை, இன்று பார்வை மாற்றுத்திறனாளிகளின் நெடுங்கனவின் ராஜபாட்டையாக மாறியுள்ளது.

‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
நன்றி சொல்லும் நல்லுணவு!

“அப்பா இருந்தவரை அவரோடு சேர்ந்தே பயணப்பட்டு வந்தேன். இன்ஜினீயரிங் முடித்து, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன். பின்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வந்தது. அப்பாவைப்போல நானும் அதை ஏற்கவில்லை. 2013-ம் ஆண்டு அப்பாவின் மறைவுக்குப் பின்னால் அவரது பொறுப்பு, கனவு எல்லாம் என்னிடம் வந்தன. ஐ.ஏ.பி மக்கள் நிதியில் இயங்கும் அமைப்பாக இருந்தது. மக்களையே எப்போதும் நம்பி இருக்கக் கூடாது, தற்சார்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணினேன். முன்னரே தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்படி நான் தொடங்கும் தொழில் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இருக்க வேண்டும் என்றும், அந்த லாபத்தில் பெரும் பங்கை ஐ.ஏ.பி சிறப்புப் பள்ளிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தேன்” என்கிறார் அப்துல் ரஹீம்.

தனது முந்தைய கார்ப்பரேட் அனுபவங்களை வைத்து அவர் தொடங்கிய முதல் தொழில், ‘கால் சென்டர்.' அதைத் தொழில்நுட்ப உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக ஆரம்பித்தார். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கைகோத்தன. இரண்டு பேரோடு ஆரம்பித்த கால் சென்டர் 2017-ம் ஆண்டில் சுமார் 250 மாற்றுத்திறனாளிகளோடு சிறப்பாக வளர்ந்து வந்தது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள் வளர்ச்சியில் சறுக்கல்களாகக் குறுக்கிட்டன. இதனால் துவண்டுவிடாமல் அடுத்த தொழில் தொடங்கும் யோசனையில் இருந்த ரஹீமுக்கு ஒரு ரயில் பயணம் திருப்புமுனையாக அமைந்தது.

‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்

‘‘ரயில் பயணத்தின்போது தின்பண்டங்களை மாற்றுத்திறனாளிகள் விற்பனை செய்வதைப் பார்த்தேன். அது மனதை உறுத்தியது. ‘நாம் ஏன் இதை ஒரு பிராண்டாக மாற்றக்கூடாது’ என்ற எண்ணம் வந்தது. அதைத் தொடர்ந்து வீட்டிலேயே குக்கீஸ்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம். இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு மட்டும் வாங்கினால், அது ஒரு முறை வாங்குவதோடு நின்றுவிடும். ஆகையால், அதனைத் தொடர் நிகழ்வாக மாற்றும் தரத்தை உருவாக்க விரும்பினேன். அதுவே பிராண்டாக மாறியது” என்கிறார்.

மக்கள் தரும் ஆதரவால் இயங்கிவருவதால் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ என்று நிறுவனத்தின் பெயரை வைத்தார். பள்ளி, கல்லூரிகள் என சாலையோரத்தில் ஆரம்பித்த அவர்கள் பயணம் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் கேன்டீன் வரை விரிந்தது என ஆச்சர்யப்படுத்துகிறார். இந்தியா முழுக்க இருக்கும் பல ஐ.டி நிறுவனங்கள் ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ கியாஸ்க்குகளை (கடை) தங்கள் நிறுவனத்தில் அமைக்க அழைத்திருக்கிறார்கள். இந்தப் பணியில் உணவுத் தயாரிப்பில் இருந்து விற்பனை வரை பார்வை மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளோடு இணைந்தே செயல்பட்டுள்ளனர். ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனர் இவர்களின் வாடிக்கையாளர் கவனிப்பைப் பார்த்து மிரண்டுபோய் ‘எங்கள் நிறுவனத்தில்கூட இப்படிச் செய்வது கிடையாது' என்று கூறியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் பிறரைச் சாராமல் தற்சார்பு வாழ்வை நடத்த வேண்டும் என்ற தந்தையின் கனவை ஓரளவேனும் தொட்டுவிட்டோம் என்று அப்துல் நினைக்கையில், கொரோனா ஊரடங்கு மீண்டும் ஒரு இடியாக விழுந்திருக்கிறது.

‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்
‘தேங்க் யூ ஃபுட்ஸ்' நிறுவனம்

‘‘அந்த நேரத்தில் உணவு உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். 40 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்ட எங்களின் சிறப்புப் பள்ளிகள்கூடக் காலவரையின்றி மூடப்பட்டன. அனைவரையும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் போன்றவற்றை அவர்களது முகவரிக்கு அனுப்பி வைத்தோம். கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்வான பின்னர் thankufoods.com என்கிற இணையதளப் பக்கம் மூலம் மீண்டும் விற்பனையைத் தொடங்கினோம். எங்கள் நிறுவனம் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு முயற்சி நிறுவனம். தலைசிறந்த செப்ஃகளும் இதில் அடங்குவர். அவர்களின் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகளின் மூலம் சிறந்த பொருள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதே எங்கள் நோக்கம். எங்களுடைய பனைவெல்ல மைசூர்ப்பாக், இளநீர் அல்வா, மோத்தி லட்டு உள்ளிட்ட பொருள்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2021-ல் எங்கள் பள்ளிக்கு முன்னால் ஒரு சின்ன ஸ்டோரை அமைத்து பப்ஸ், கேக் செய்து கொடுத்தோம். இப்போது மதுரை, சென்னை, கோவை என 8 இடங்களில் ‘தேங்க் யூ ஃபுட்ஸ்' வெற்றிகரமாகச் செயல்படுகிறது. விரைவில் தமிழகமெங்கும் இது வளரும்’’ என்று தான் சார்ந்து இயங்கும் சமூகத்தின் தன்னம்பிக்கைக் குரலாக ஒலிக்கிறார் அப்துல் ரஹீம்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியையும் மைக்ரோ தொழில்முனைவோராக மாற்றுவதும், எதிர்காலத்தில் இதை உலகளாவிய சமூக நிறுவனமாக மாற்றுவதும் தன் நோக்கம் என்கிறார்.

‘தேங்க் யூ’ அப்துல் ரஹீம்.