‘சிறப்புக் குழந்தைகளுக்கும் உண்டு சிறப்பான எதிர்காலம்!’ - நம்பிக்கையளிக்கும் புகலிடம்

கூடுமானவரையில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரில் யாராவது ஒருவராவது எந்நேரமும் கூடவே இருந்து, குழந்தைக்கான சிகிச்சை, பயிற்சி, கல்வி ஆகியவை சரியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
சிறப்புக் குழந்தைகளின் உலகம் எப்படியானது? அவர்களுக்கான சிறப்பான எதிர் காலத்தை எப்படிச் சாத்தியப்படுத்துவது? இந்தப் பெற்றோர்களுக்கு எத்தகைய வழி காட்டுதல்கள் அவசியம்? சிறப்புக் குழந்தை களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான விஷயங்களை அறிய, சென்னை, தரமணியில் உள்ள ‘த ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ சிறப்புப் பள்ளிக்குச் சென்றோம்.
சின்னஞ்சிறு மழலைகளையும், தோளுக்கு மேல் வளர்ந்த வளரிளம் பிள்ளைகளையும் தூக்கிச் சுமந்தபடி பள்ளிக்குள் நுழையும் தாய்மார்கள், தந்தைகள் மற்றும் பாது காப்பாளர்கள் பலரும், குழந்தைகளின் ஆனந்தச் சிரிப்பில் சுமைகளை மறக்கிறார்கள்; மனம் நெகிழ்கிறார்கள்.
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக 1981-ல் ‘த ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் பல விதமான பாதிப்புகள் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கும் வேடந்தாங்கலாக மாறிய இந்தப் பள்ளி, அவர்களின் பெற்றோர்களுக் கும் வழிகாட்டுகிறது. தரமணியிலுள்ள இந்தப் பள்ளி தவிர்த்து, வில்லிவாக்கம், வண்ணாரப் பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் இதன் கிளைகளிலும் சேர்த்து 90 சதவிகிதப் பணிகளில் பெண்களே பங்களிப்பு செய்கிறார்கள்.
“சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைக்கு இருக்கும் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், ஆதங்கமற்ற மனநிலையும்தான் முதலில் தேவை. ‘குழந்தையை எல்லா விதத்திலும் நல்ல நிலைக்கு உயர்த்துவதே தம் முதல் கடமை’ என்று பெற்றோர்கள் முடிவெடுத்து, அதற்கான பணிகளைச் சரியாகச் செய் தால், அந்தக் குழந்தைக்கு நல்லதோர் எதிர்காலம் சாத்தியமாகும்” என்று வலியுறுத்திச் சொல்கிறார், இந்தப் பள்ளியின் இயக்குநரான ஜெயஸ்ரீ.
“கூடுமானவரையில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரில் யாராவது ஒருவராவது எந்நேரமும் கூடவே இருந்து, குழந்தைக்கான சிகிச்சை, பயிற்சி, கல்வி ஆகியவை சரியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் பாதிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து, சரியான நேரத்தில் உரிய சிகிச்சை மற்றும் சிறப்புக் கல்வியைக் கொடுப்பதே நல்ல பலனைக் கொடுக்கும். வீட்டிலேயே இல்லாமல், சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது, தொழிற்பயிற்சி கொடுப்பது உட்பட சமூகத் துடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகள் மட்டுமே குறைபாடுகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க உதவும்” என்கிறார் ஜெயஸ்ரீ.
அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability), ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism Spectrum Disorder), கற்றல் குறைபாடு (Learning Disorder), மூளை முடக்குவாதம் (Cerebral Palsy), ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குறைபாடு (Multiple Disabilities) போன்று பலவிதமான பாதிப்புள்ள சிறப்புக் குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளியில், பிள்ளைகளுடன் அமர்ந்து பெற்றோர் களும் பாடம் படிக்கிறார்கள்; விளையாடி மகிழ்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களின் தாய்மார்கள் பலரும் இங்கேயே பயிற்சி பெற்று, ஆசிரியர்களாகவும் பணியாற்று கின்றனர்.
வகுப்பறைகளைச் சுற்றிக்காட்டிய பிறகு, பாடத்திட்ட முறைகள் குறித்துச் சொன்னார், பள்ளியின் முதல்வர் தேவி. “மூன்று வயதுக்கு உட்பட்ட சிறப்புக் குழந்தை களுக்கு, ஆரம்பகால சிகிச்சையை (Early Intervention) சிறப்பு வகுப்பறையில் கொடுப்போம். பிறகு, ப்ளே வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பெயின்ட்டிங், மேட்ச்சிங் உள்ளிட்ட அடிப்படை திறனுக்கான பாடங்கள் சொல்லித்தரப்படும். அதில் முன்னேற்றம் கிடைத்தால், சமச்சீர் கல்வி முறையில் பாடங்கள் சொல்லிக் கொடுப் போம். பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, நாட்டியப் பயிற்சி, இசைப் பயிற்சி என பலவிதமான பயிற்சிகளையும் ஒருங்கிணைந்த கற்றலாகக் கொடுக்கிறோம்.
சிறப்புக் குழந்தைகளுக்குத் தொடர் பயிற்சிகள் அவசியம் என்பதால், நாங்கள் கற்றுத்தரும் விஷயங்களை வீட்டிலும் பெற் றோர்கள் சொல்லிக்கொடுக்க ஏதுவாக, வகுப்பறையில் பெற் றோர்களும் இருப்பதை வலியுறுத்துகிறோம். இதன் மூலம், குழந்தைகளின் உளவியலையும், அதற்கான தீர்வுகளையும் பெற் றோர்களால் விரைவாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும், குழந்தைகளின் பெற்றோர்களுக் குள் ஏற்படும் நட்புணர்வு, அவர் களின் மன அழுத்தத்தைக் குறைக் கும்” என்றவர், சிறப்புக் குழந்தை களுக்கு, தொடர்ந்து பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விவரித்தார்.
“சிறப்புக் குழந்தைகள் தங்களுக் கான உடல் உபாதைகளைக்கூடச் சொல்லத் தெரியாமல் இருந்தால் விவரம் புரியும்வரை அவர்களுக்கான தேவைகளைப் பெற்றோர் கவனித்துச் செய்ய லாம். பத்து வயதைத் தாண்டியதும் குழந்தைகளின் எடை கூடும். அவர்களைத் தூக்கி பணி விடைகள் செய்யப் பெற்றோருக் குச் சிரமம் ஏற்படும். அசைவுகளே இன்றி ஓரிடத்தில் குழந்தைகளை உட்கார வைத்தால், உடலுறுப்பு களில் பெரிதாக இயக்கமே நடைபெறாமல் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும். எனவே, ஆரம்பம் முதலே தொடர் பயிற்சிகள் கொடுப்பதால், நாளடைவில் தனக்கான தேவைகள் மற்றும் உடல் உபாதைகள் குறித்து பேச்சிலோ அல்லது சைகையிலோ தெரிவிப்பதுடன், முடிந்தவரை தனக்கானதைத் தானே செய்யவும் பழகுவார்கள்” என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ‘ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ பள்ளிகளில், எவ்வித கட்டணமும் பெறப் படுவதில்லை. தரமணி, வண்ணாரப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம் கிளைகளில், சிறப்புக் குழந்தைகளுடைய பெற்றோர்களின் பொருளாதாரத்துக்கு ஏற்ப மாதம் 300 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை கட்டணம் பெறுகிறார்கள்.

இந்த மையத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொறுப்பாளரான புவனேஸ்வரி ராகவன், “மூளை முடக்குவாதம் போன்ற சில பாதிப்புகளைக் கொண்ட பிள்ளைகள், இங்கு ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்கிறார்கள். அதற்கு முன்பாகவே கற்றல் திறன் சீரானதும், சில மாணவர்களை நார்மல் பள்ளியிலும் சேர்க்கிறோம். சிறப்புக் குழந்தை களாக இருந்த பலரும், தங்களின் குறைபாடு களை வென்று, வங்கிப் பணி, அரசு மற்றும் தனியார் வேலை, உணவக நிர்வாகம் என பல்வேறு நிலைகளுக்குச் சென்றுள்ளார்கள். படிப்பு ரீதியிலான கற்றலில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவரவர் திறனுக்கு ஏற்ப, நெசவு, பிளாக் பிரின்டிங், டெய்லரிங், உணவக உபசரிப்பு போன்ற தொழில் பயிற்சி களை வழங்குவதுடன், வேலைவாய்ப்பும் வாங்கிக் கொடுக்கிறோம்” என்கிறார் சந்தோஷத்துடன்.
6 - 14 வயதுக்கு உட்பட்ட ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான ஆசிரியர் ஜெமிமா, “ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக் கொள்ளும் முறை மாறுபடும். அதைச் சரியாகப் புரிந்து, சிரமம் பார்க்காமல் ஒன்றுக்குப் பலமுறை பக்குவமாகப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்தக் குழந்தைகளின் உளவியலை நாம் புரிந்து கொண்டு அவர்களில் ஒருவராகப் பழகினால், விவரிக்க இயலாத அன்பை அவர்கள் நமக்குப் பரிசாகத் தருவார்கள்” என்கிறார் பூரிப்புடன்.
பள்ளியின் சிறப்புக் கல்வியாளரான இந்து சீனிவாசன், “தனக்குப் பிடிக்காத விஷயங்கள் நிகழும்போது, அதுகுறித்து குழந்தைகள் ஏதாவதொரு வகையில் கோபத்தை வெளிப் படுத்துவார்கள். அதில் நியாயம் இருப்பதையும், இந்தக் குழந்தைகளின் உளவியலையும் புரிந்துகொள்வதுடன், அவர்களுக்கான தேவைகளை முகம் சுளிக்காமல் பக்குவத் துடனும் பொறுமையுடனும் ஆசிரியர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் நாங்களும் இவர்களின் பெற்றோர்களாக மாறுகிறோம்” என்பவரின் உற்சாகம், அவரின் வகுப்பறை குழந்தைகள் முகத்திலும் பிரதிபலிக்கிறது.
‘நம் பிள்ளைக்கும் எதிர்காலம் உண்டு’ எனும் பெரும் நம்பிக்கையில், குழந்தைகளை இடுப்பிலும் மார்பிலும் அணைத்துக்கொண்டு கிளம்புகின்றனர், பெற்றோர்களும் பாது காப்பாளர்களும். அந்தத் தன்னம்பிக்கை, அவர்களின் குழந்தைகளை முடக்கிய குறை பாடுகளிலிருந்து நிச்சயமாக மீட்டெடுக்கும்.
பெரும் நம்பிக்கை வந்திடுச்சு!
இந்தப் பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதிப்புள்ள சிறப்புக் குழந்தையின் பாதுகாவலரான மேரி கிரிஷ்டினாவிடம் பேச்சு கொடுத்தோம். “இவன் என் பேரன். 2016-ல் ஆறு வயசா இருக்கிறப்போ இவனை இந்த ஸ்கூல்ல சேர்த்தேன். அப்போ சுத்தமா பேச மாட்டான். இப்போ ஓரளவுக்குப் பேசுறான்; சொல் றதைப் புரிஞ்சுக்கிறான். காலையில பேரனைக் கூட்டிட்டு வந்துட்டு, இங்கேயே காத்திருந்து சாயந்திரமா இவனைக் கூட்டிட்டுப் போவேன். இங்க வந்ததுக்கு அப்புறமா, என் பேரனுக்கும் நல்ல வாழ்க்கை இருக்குனு நம்பிக்கை வந்திருக்கு” என்கிறார் பெரும் எதிர்பார்ப்புடன்.