தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

த்ரிஷாவுக்குப் பிடித்த `96' கார்டன்! - தன்யா

தன்யா
பிரீமியம் ஸ்டோரி
News
தன்யா

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே...

லாக் டௌனால் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வாழ்க்கையில் நிச்சயமற்ற எதிர்காலம், அது ஏற்படுத்திய நம்பிக்கையின்மை என எல்லோர் மனங்களிலும் வெறுமை ஆக்கிரமித்திருக்கிறது.

உறவுகளுடன் நெருக்கம், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் என இதுநாள்வரை நாம் பழகாத பல விஷயங்களால் அந்த வெறுமையை விரட்டியடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். மனிதர்களால் மாற்ற முடியாத இந்த வெறுமையை மலர்களும் செடிகளும் நிச்சயம் மாற்றும் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். கொரோனா வைரஸ் வலியுறுத்துவது மனிதர்களுடனான இடைவெளியை மட்டுமே... இயற்கையோடல்ல. குட்டியூண்டு தோட்டமும் அதில் துளிர்க்கிற இலையும் பூவும் காயும் காண்பதற்கு இனிமையானவை மட்டுமல்ல, எந்த உளவியல் மருத்துவராலும் தர முடியாத பாசிட்டிவிட்டியை போதிப்பவை.

‘இருக்கவே இடத்தைக் காணோம்.. இதுல எங்கிருந்து தோட்டம் போடறதாம்... செடி வளர்க்கிறதாம்...’ என்பது வழக்கமான புலம்பல். ``மனமிருந்தால் மார்க்கமுண்டு. தோட்டம் போடவும் செடிகள் வளர்க்கவும் மொட்டை மாடியோ, பால்கனியோ இருந்தால் நலம். இல்லாதவர்களும் கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தன்யா.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிற தன்யா, `டெராரியம்' என்ற பெயரில் உருவாக்கும் செடி வளர்ப்பு அழகானது, அலங்காரமானது, ஆத்ம திருப்தியைத் தருவது.

‘`கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.டெக்கும் எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு பெங்களூருல ஐடி கம்பெனியில வேலை பார்த்திட்டிருக்கேன்.கார்டனிங்கும், ஹேண்ட் மேடு கிஃப்ட்ஸ் பண்றதும் ரொம்ப பிடிக்கும். கிரீட்டிங் கார்ட்ஸ், குவில்லிங்னு என் கையால பண்ற கிஃப்ட்ஸ்தான் எல்லாருக்கும் கொடுப்பேன். வேலைக்காக பெங்களூரு போனேன். தனிமையும் அதிகமா கிடைச்ச நேரமும் வேற ஏதாவது பண்ணலாமேன்னு யோசிக்க வெச்சது. அப்பதான் டெராரியம் பற்றித் தெரியவந்தது.

பெங்களூருல வெயில் குறைவு என்கிறதால வெயில்படற மாதிரியான தோட்டத்துக்கெல்லாம் ஆசைப்பட முடியாது. கார்டனிங் ஆசை உள்ளவங்க அதிக வெயில் தேவைப் படாத இண்டோர் பிளான்ட்ஸைதான் வளர்க்கணும். இண்டோர் பிளான்ட்ஸ்ல சக்குலன்ட்ஸ் அண்டு காக்டஸ் வகைதான் பெஸ்ட். வாரத்துல ரெண்டு நாள் வெயில்ல வெச்சு எடுத்தா போதும். தினம் தண்ணீர் விடணும்னு அவசியமிருக்காது. இவை தவிர இண்டோர் பிளான்ட்ஸ்ல இன்னும் நிறைய இருக்கு. இவற்றை வெச்சு உருவாக்கும் குட்டி கார்டன் செட்டப்தான் டெராரியம். இதையே வித்தியாசமா பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.

தன்யா
தன்யா

அது ஒரு கிறிஸ்துமஸ் டைம்... என் ஃபிரெண்ட்ஸுக்காக கிறிஸ்துமஸ் தீம்ல டெராரியம் பண்ணிக்கொடுத்தேன். அவங்க யாரும் அதை இலவசமா வாங்கிக்கத் தயாரா இல்லை. ‘இவ்ளோ அழகா பண்ணியிருக்கே... இதை பிசினஸா செய்யுன்னு ஸ்ட்ரிக்ட்டா எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க. அதுதான் ஆரம்பம். அந்த கிறிஸ்துமஸுக்கு என் ஃபிரெண்ட் ஆபீஸ்ல எக்ஸிபிஷன் நடந்தது. கொஞ்சம்கூட நம்பிக்கையில்லாம நானும் கலந்துகிட்டு, கிறிஸ்துமஸ் கான்செப்ட்ல நான் பண்ணியிருந்த 20 பீஸ் டெராரியம் செட்டை வெச்சிருந்தேன். ரெண்டே மணி நேரத்துல அத்தனையும் வித்திடுச்சு. சின்னதா ஒரு நம்பிக்கை பூத்தது.

ஃபிரெண்ட்ஸ் சொல்ற மாதிரி இதை பிசினஸா பண்ணலாம்போலன்னு தோணவே, ‘மேஜிக் ரூட்ஸ்’ என்ற பெயர்ல இன்ஸ்டா மூலமா பிசினஸை ஆரம்பிச்சேன். அப்புறம் நடந்த எல்லாமே மேஜிக் மாதிரிதான் இருக்கு. நிறைய ஆர்டர்ஸ், நிறைய நிறைய பாராட்டுகள்னு சந்தோஷமா இருக்கேன்'’ - மலர்ந்து சிரிப்பவர், தன்னுடைய இந்த முயற்சிகளுக்குப் பயன்படுத்தும் அனைத்தும் இயற்கையான செடிகளே. விருப்பப்பட்டுக் கேட்பவர்களுக்கு மினியேச்சர் கார்டனும் செட் செய்து தருகிறார்.

‘`டெராரியம் மற்றும் மினியேச்சர் கார்டன்ல என் ஸ்பெஷாலிட்டி நான் பண்ற தீம்ஸ். கஸ்டமர்ஸ் அவங்களுக்கு எந்தத் தருணத்துக்காக அதை ஆர்டர் பண்றாங்கன்னு சொல்லிடுவாங்க. பர்த்டே, வெடிங் ஆனிவர்சரின்னு அவங்க சொல்றதுக்கேத்தபடி நான் தீம் டிசைன் பண்ணுவேன்.

‘96’ படம் வந்தபோது அதையே தீமா வெச்சு ஒரு மினியேச்சர் கார்டன் டிசைன் பண்ணினேன். ரீக்ரியேஷன் தீம்னு அதுக்குப் பெயர் வெச்சேன். `96' படத்துல அவங்க ரீயூனியன் சீன்ல ஒரு மரத்தைக் காட்டுவாங்க. அதுல முழுக்க லைட்ஸ் பொருத்தியிருப்பாங்க. பக்கத்துல ராமும் ஜானுவும் இருப்பாங்க. அதையே நான் என் டிசைன்ல பண்ணியிருந்தேன். அதை த்ரிஷாவுக்கு கிஃப்ட் பண்ணியிருந்தேன். அதுலேருந்து ரீக்ரியேஷன் கான்செப்ட்டுக்கு நல்ல வரவேற்பு. கணவன் மனைவி முதல்ல மீட் பண்ணினது, பெண் பார்க்க வந்தது, நிச்சயதார்த்தம், ஸ்கூல் நினைவுகள்னு இதுல பண்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு’’ - சுவாரஸ்யம் கூட்டும் தன்யா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, மஹத், யாஷிகா, டிடி, விஜே ரம்யா, நடிகர் கதிர் என நிறைய பிரபலங்களுக்குத் தன் கைப்பட டெராரியம் மற்றும் மினியேச்சர் கார்டன் செய்து கொடுத்திருக்கிறார்.

‘`இதுக்கு நான் பயன்படுத்தற செடிகள் அவங்கவங்க ஊர்களுக்கு ஏத்தபடி மாறும். பெங்களூருக்கு ஒரு மாதிரியும், சென்னைக்கு வேற மாதிரியும் செய்வேன். நான் டிசைன் பண்ற இந்த டெராரியம் மற்றும் மினியேச்சர் கார்டனை டீப்பாய்ல வைக்கலாம். அதிக பட்சமா 30 செ.மீ அளவுக்குப் பண்ணலாம்.கேட்கிறவங்களுக்கு குட்டியா நீர்வீழ்ச்சியும் செட் பண்ணித் தரேன். தண்ணீர் குறைவா தேவைப்படற செடிகள் என்பதால குறைஞ்சது ஒரு வருஷம் வரை செடிகள் நல்லா வளரும். அதுக்குப் பிறகு தொட்டியை மட்டும் மாத்த வேண்டியிருக்கும். கேக்டஸ் வகை செடிகள் பக்கத்துல குட்டிச் செடிகளை உருவாக்கிட்டேதான் இருக்கும்.

அதாவது அதன் வேரிலிருந்து புது செடி வளர ஆரம்பிக்கும். `டீப்பாய்ல வைக்கிறது, டெகரேட்டிவ் பிளான்ட்ஸ்னு சொல்றீங்க... மண்ணும் தண்ணீரும் வெளியில கசியாதா'ன்னு கேட்கலாம். அப்படியெல்லாம் ஆகாது. சிரின்ஜ்லதான் தண்ணீர் விடணும். எங்கே, எப்படி தண்ணீர் விடணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் சொல்லிடுவேன். அதனால பிரச்னையில்லை’’ - மினி லெக்சர் கொடுப்பவர், அடுத்தகட்ட முயற்சியாக லாக் டௌன் ஸ்பெஷலாக யூடியூபில் காய்கறித்தோட்டம் பற்றி வகுப்புகள் எடுக்கிறார்.

‘`பெங்களூருல மட்டும்தான் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். நான் பண்ணிக்கொடுத்த ‘96’ தீம் பற்றி த்ரிஷா சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்ணின பிறகும், அவங்க ஒரு ஸ்டேஜ்ல இதைப் பத்திப் பேசின பிறகும் சென்னையிலேருந்து எனக்கு நிறைய ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. அதனால இப்போதைக்கு பெங்களூரு, சென்னை, புதுச்சேரில பண்ணிட்டிருக்கேன்.

ஐடி வேலையில இருந்துகிட்டேதான் இதையும் பண்றேன். இது எனக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் மாதிரின்னு சொல்லலாம். என் சம்பளம்தான் இதுக்கான முதலீடு. பால்கனி கார்டனிங், மாடித்தோட்டம், பொட்டிக்னு லாக் டௌன் முடிஞ்சதும் செய்யறதுக்கு நிறைய ஐடியாஸ் இருக்கு’’ - நம்பிக்கையோடு சொல்கிறார்.

‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது.’
- பிரபஞ்சன்