தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மலரைப் போல பிறருக்குப் பலன் தர வேண்டும்! - வாசமல்லி

வாசமல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
வாசமல்லி

போராளி

நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களுக்காகப் போராடும் பெண் யாரெனக் கேட்டால் அத்தனை விரல்களும் வாசமல்லி அம்மாவை நோக்கியே நீள்கின்றன. தோடர் பழங்குடி பெண்களில் முதல் பட்டதாரி என்கிற பெருமைக்கும் உரியவர் இவர்.

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ஊட்டி நகரின் மிக அருகிலேயே இருக்கிறது ‘தமிழகம் மந்து’ எனும் தோடர் பழங்குடி கிராமம். புல்வெளிகள், தோடர் மக்களின் சிறிய வீடுகள், பாரம்பர்ய கோயில், யூகலிப்டஸ் மரங்கள்... இந்தச் சூழலில் அந்த மிகச் சிறிய கிராமத்தில் வசிக்கிறார் வாசமல்லி அம்மா.

“பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பதே பெரும் குற்றச்செயலாகப் பார்க்கப்பட்ட காலம் அது. சிறுவயதிலேயே இவருக்கு இவர் என்று பேசி வைத்துவிடுவார்கள். இருந்தபோதும் படிப்பறிவு துளியும் அற்ற என் பாட்டி, என் பெற்றோருக்குத் தெரியாமல் என்னைக் கோவைக்கு அழைத்து வந்து தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டுப் போனார். மரபுசார்ந்த விஷயங்களில் கண்டிப்பான தோடர் பழங்குடிகளில் முதல் பெண் பட்டதாரியாக நான் வெளிவந்ததற்கு என் பாட்டியே காரணம்.

மருத்துவராக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், இரண்டு மதிப்பெண்ணில் தவறவிட்டேன். இளங்கலை அறிவியலில் சேர்ந்தேன். ஊட்டியில் பிறந்து வளர்ந்த எனக்குக் கோவை வெயிலைச் சமாளிக்க முடியவில்லை. அப்படி இருந்தும் விடுமுறைக்குக்கூட அதிகம் ஊட்டிப் பக்கம் போகமாட்டேன். ஊருக்குப் போனால் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்'' என்று சிரிக்கிறார் வாசமல்லி அம்மா.

வாசமல்லி
வாசமல்லி

``ஆங்கிலம் பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும், மனம் தளராமல் முயற்சி செய்து படித்து முடித்தேன். அடுத்த வருடமே திருமணம் நடந்து முடிந்தது'' என்கிற வாசமல்லி, பட்டதாரியான பிறகு ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலையில் வேலை செய்திருக்கிறார்.

``பள்ளிப்பருவத்திலிருந்தே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் முன் `ஏன்' என்ற கேள்வி என்னுள் முளைக்கத் தொடங்கும். அதன் விளைவாக, வாழ்வில் ஏற்றம் காணாத எங்கள் மக்களைப் பார்க்கும்போது, `ஏன் அவர்கள் முன்னேற்றம் தடைப்படுகிறது' எனத் தோன்றியது. விடுமுறை நாள்களில் பல கிராமங்களுக்குச் சென்று அவர்களின் தேவை என்ன என்பது பற்றி அறிய ஆரம்பித்தேன். உடனடியாக தீர்க்க முடிந்தவற்றுக்கு ஆலோசனைகளை அளித்தேன். அரசாங்கம் சார்ந்த தீர்வுகளுக்கு முயற்சிகளை மேற்கொண்டேன். என் செயல்களுக்கு கணவர் பக்கபலமாக இருந்தார்.

பழங்குடி மக்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் சில செயல்களைத் தடுக்க முடிவு செய்தோம். உதாரணமாக, ஒருவர் இறந்தால் அவருடன் வளர்ப்பு எருமைகளைப் பலியிடுவது எங்கள் இன மக்களின் வழக்கமாக இருந்தது. இதனால் தனித்துவமிக்க எங்கள் எருமைகள் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுகிற நிலை உருவானது. இதைத் தடுக்க நினைத்து மக்களை அணுகினோம். ஆரம்பத்தில் எங்களைத் தாக்கக்கூட வந்தார்கள். தொடர்ந்து போராடினோம். இன்றைக்கு இந்த வழக்கமே இல்லாமல் போய்விட்டது!

வாசமல்லி
வாசமல்லி

இப்படி, பல்வேறு மூடப்பழக்கவழக்கங்கள் பற்றிய தெளிவை உண்டாக்க நீண்ட காலம் போராடினோம். வெற்றியும் கிடைத்தது. கல்வி, நில உரிமை, பெண்களுக்குச் சம உரிமை என எல்லாத் தளங்களிலும் இயங்கினோம்'' என்கிறவர், பல்வேறு சமூகநல, வனநல மற்றும் பெண்கள் நலக் குழுக்களில் உறுப்பினராகச் செயல்படுகிறார்.

பல வெளிநாடுகளுக்குப் பயணித்து உரையாற்றியிருக்கிற இவர், சமீபத்தில், தோடர் பழங்குடி இன பெண்களின் நலனுக்காகச் செய்த ஒரு விஷயம் மிக முக்கியமானது.

``பல காலமாகத் தோடர் பழங்குடி ஆண்கள் தங்கள் நில சிட்டாவில் பெண்கள் பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். சுமார் 2,000 பேர் கொண்ட எங்கள் இனத்தில் மட்டும் 200 பெண்கள் கணவனை இழந்த வர்கள். இவர்கள் பெயரில் நில உரிமை சிட்டா தர வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டேன். பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் வெற்றியும் கண்டேன். இப்போது எங்கள் இனப் பெண்களுக்கு நில சிட்டா வழங்கப் படுகிறது'' என்று நெகிழ்கிறார் வாசமல்லி அம்மா.

``என்கூடவே பயணிச்ச என் கணவர் மூளையில் ஏற்பட்ட கட்டியால் போன வருஷம் தவறிட்டார். வாழ்க்கையில எல்லாத்தையும் கடக்கணும் இல்லையா... எனக்கு இப்ப 63 வயதாகுது. இரண்டு மகன்கள், மருமகள், பேரக்குழந்தைகள், விருதுகள், பாராட்டுகள் என்று வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. ஆனா, இந்த மக்களுக்கு மீட்டுத்தர வேண்டிய உரிமைகள் நிறைய உள்ளன. அவர்களுக்காகப் போராடி வெற்றி பெற்றதும் ஒரு மன நிறைவு வருமே... அதுதான் என் நிம்மதி யான சுவாசம் என்று கருதுகிறேன்.

என் தாய்மாமன்தான் எனக்கு வாசமல்லி எனப் பெயர் வைத்தார். மலரைப்போலப் பிறருக்கு பலன் தந்துவிட்டே சாக வேண்டும்... அதுவே என் பெருங்கனவு” - வாசமல்லி சொல்லிமுடிக்க நம்பிக்கையின் மணம் பரவத்தொடங்குகிறது!