
வாழ்தல் இனிது
‘எனக்குப் பாடத் தெரியும். ஓவியங்கள் வரைவேன். வயலின் வாசிப்பேன். காலேஜ்ல செகண்டு இயர் போகப்போறேன்.
நேரம் கிடைக்கும்போது கேன்சர் பேஷன்ட்டுகளுக்கு வாலன்ட்டியரா சர்வீஸ் பண்றேன்... இந்த எல்லா விஷயங்களையும் சந்தோஷமா செய்யறேன்...’’ - 18 வயதில் ஒரு பெண் இப்படிச் சொல்வதற்கும், கேரளாவைச் சேர்ந்த நூர் ஜலீலா சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
ஜலீலாக்கும் 18 வயதுதான். ஆனால், கைகளும் கால்களின் கீழ்ப்பகுதிகளும் இல்லாமல் பிறந்தவர். அந்த நிலையில்தான் இத்தனை விஷயங்களையும் செய்கிறார். கோழிக்கோடு செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ எகனாமிக்ஸ் முதல் வருடம் படிக்கிற நூர் ஜலீலாவுடன் பேசினால் உச்சி முதல் பாதம் வரை பாசிட்டிவிட்டி பரவுகிறது.
``அப்பா எலெக்ட்ரிகல் கான்ட்ராக்ட்டர். அம்மா ஹவுஸ்வொயிஃப். அக்கா எர்ணா குளத்துல பல் மருத்துவரா இருக்காங்க.கேலிகட் ஆஸ்பத்திரியில கைகளும் மூட்டு களுக்குக் கீழே கால்களும் இல்லாத நிலையில் பிறந்திருந்த என்னைப் பார்த்ததும் டாக்டர்ஸுக்கே ஷாக். எங்கப்பாகிட்ட அதைச் சொல்லி, ‘நீங்க உங்க குழந்தையைப் பார்த்தே ஆகணுமா’ன்னு கேட்டிருக்காங்க. ‘எப்படி இருந்தாலும் அவ என் குழந்தை’னு சொன்ன அப்பா அந்த நிமிஷத்துலேருந்து என்னைத் தாங்க ஆரம்பிச்சார். நான் ஏன் இப்படிப் பிறந்தேன்னு இதுவரைக்கும் யாருக்கும் காரணம் தெரியலை...’’ - வாழ்க்கைப் பாதையை நூர் விவரிக்க, அந்த வலி நமக்குள் ஊடுருவுகிறது.

``எப்படியாவது எங்கேயாவது என் பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சிடாதான்னு அம்மாவும் அப்பாவும் தவிச்சாங்க. ஏராள மான மருத்துவர்களைச் சந்திச்ச பிறகு, என் விஷயத்துல உறுப்புதானம் சரியா வராதுங்கிற யதார்த்தத்தையும் புரிஞ்சுக்கிட்டாங்க. என் உடல் இருந்த நிலைமையில அந்நியப் பொருளை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. அதனால செயற்கை உறுப்புதான் ஒரே தீர்வுன்னும் சொன்னாங்க.
அதற்காக என்னை கேலிகட் மெடிக்கல் காலேஜ்ல பிசிகல் மெடிசின் சிகிச்சைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே பலருக்கும் எனக்கிருக்கிற அளவுகூட உறுப்புகள் இல்லாத நிலையைப் பார்த்தேன். நிறைய பேர் மனநலமும் பாதிக்கப்பட்டிருந்தாங்க. ‘என் மகள் எவ்வளவோ அதிர்ஷ்டசாலி’ங்கிற எண்ணம் எங்கம்மா அப்பாவுக்கு ஏற்பட்டது’’ - வார்த்தைகளின் வலியைப் புன்னகையால் மறைத்துத் தொடர்கிறார்.
என் அம்மாவும் அப்பாவும் அக்காவும் ‘உன்னால இது முடியாது’ என்ற வார்த்தையை ஒருநாள்கூட சொன்னதில்லை. ‘நீ ட்ரை பண்ணு... உன்னால முடியும்’னு சொல்வாங்க...நூர் ஜலீலா
``நான் குழந்தையா இருந்தபோது அப்பா எனக்கு நிறைய பேப்பர் கட்டிங்ஸ் கொடுப்பார். நிக் வுஜிசிக் மாதிரியான மாற்றுத்திறனாளிகளின் வெற்றிக் கதைகளை எனக்குப் படிச்சுக் காட்டுவார். உடல் குறை பாடுகளை வென்று இந்த உலகத்துக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவங்களை எல்லாம் எனக்குக் காட்டி, ‘நீ நினைக்கிற மாதிரி இது அவ்வளவு பெரிய குறையில்லை’னு உணரவெச்சார்.
எங்கேயாவது வெளியில போகிறபோது என்னை ஏலியன் மாதிரி பார்ப்பாங்க.சின்னக்குழந்தைங்க என்னைப் பார்த்து பயப்படுவாங்க. நாளாக ஆக எனக்கு யதார்த்தம் புரிஞ்சது. `இதுதான் நான்... என் கைகளும் கால்களும் ஒருபோதும் வளரப்போறதில்லை'னு மனசைத் தேத்திக்கிட்டேன். இல்லாததை நினைச்சு அழறதோ, வருத்தப்படறதோ தேவையில்லாததுன்னு புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை ஏத்துக்கப் பழகினேன். என்னால என்னவெல்லாம் பண்ண முடியும்னு யோசிச்சேன்’’ என்கிறவரின் தேடல்களும் திறமைகளுமே இன்று அவரின் அடையாளங்கள்.

``என் அம்மாவும் அப்பாவும் அக்காவும் ‘உன்னால இது முடியாது’ என்ற வார்த்தையை ஒருநாள்கூட சொன்னதில்லை. ‘நீ ட்ரை பண்ணு... உன்னால முடியும்’னு சொல்வாங்க. நல்ல குடும்பம் அமைஞ்சதால என்னால சமுதாயத்தின் கிண்டல், கேலிகள், விமர்சனங்கள்லேருந்து சுலபமா வெளியில வர முடிஞ்சது. இப்போதும் என்னைப் பார்க்கிறவங்க என் கதை முழுக்க கேட்பாங்க. அப்புறமும் ‘உன்னால எப்படி எழுத முடியுது’னு கேட்பாங்க. எழுத முடியாமல் போயிருந்தா நான் எப்படி டென்த், ப்ளஸ் டூ எல்லாம் பாஸ் பண்ணியிருப்பேன்னு கேட்கத் தோணும். ஆரம்பகாலத்துல இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொண்டபோது கோபம் வந்திருக்கு. போகப்போக இந்த மாதிரி மனுஷங்களையும் சகிச்சுக்கிட்டுதான் இந்த உலகத்துல வாழணும்கிறது புரிஞ்சது’’ - மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களையும் புரிந்துகொள்ளப் பழகிய பெருந்தன்மையே நூர் ஜலீலாவை உயரே அழைத்துச்சென்றிருக்கிறது.
``செயற்கைக் கால்கள் பொருத்திக்கிட்ட புதுசுல அதை ஏத்துக்க ரொம்பவே சிரமப் பட்டேன். நான் வளர வளர அந்தச் செயற்கை உறுப்புகள் பொருத்தமில்லாமல் போயிருக்கு. புதுசா இன்னொண்ணுக்குப் பழகணும். அது இன்னும் வலிக்கும். என்னுடைய மென்ட்டார் டாக்டர் அன்வர் சொன்னதன்பேரில் போன நவம்பர் மாசம் ஓட்டோபோக்னு ஒரு ஜெர்மன் கம்பெனியின் ஆர்ட்டிஃபிஷியல் லிம்ப்ஸ் பத்தி கேள்விப்பட்டு ஆர்டர் கொடுத்தோம். எர்ணாகுளத்துக்குப் போய் ரெண்டு வாரங்கள் தங்கியிருந்து எனக்கான கஸ்டமைஸ்டு ஆர்ட்டிஃபிஷியல் கால்களை வாங்கிட்டு வந்தோம். அதைப் பொருத்திய பிறகுதான் எனக்கு கால்கள் எப்படியிருக்கும்னே உணர முடிஞ்சது.
எர்ணாகுளத்தில் கால்களை இழந்த ஒருத்தரை சந்திச்சேன். திடீர்னு இப்படி உறுப்புகளை இழக்கறவங்களுக்கு அதை ஏத்துக்கிறது அவ்வளவு சாதாரண காரியமா இருக்காதுன்னு அவர் சொன்னதைக் கேட்டேன். காலை இழந்தநிலையிலும் அதை மனசு நம்பாம பல நேரங்களில் நடக்க முயன்று இடறி விழுந்த சம்பவங்கள் நடக்குமாம். அவங்களோடு ஒப்பிடும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்தானே’’ - அவருக்குக் கண்களும் நமக்கு நெஞ்ச மும் கலங்குகின்றன.
இத்தனை சிரமங்கள், சவால்களுக்கு இடையிலும் நூரின் மனிதநேயமிக்க செயல்கள் பிரமிக்கவைக்கின்றன. கேரளாவின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேலியேட்டிவ் மெடிசினில் தன்னார்வலராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் நூர்.

``இப்போ இந்த இடம்தான் எனக்கு ரெண்டாவது வீடு. இதன் இயக்குநர் டாக்டர் அன்வர்தான் எனக்கு மென்ட்டார், கைடு எல்லாம். இங்கே கேன்சர் நோயாளிகள் நிறைய பேர் இருப்பாங்க. கேன்சரின் நாலாவது ஸ்டேஜ்ல உள்ள பேஷன்ட்ஸால நடக்க முடியாது. அவங்க உடம்பு முழுக்க கேன்சர் செல் பரவியிருக்கும். அவங்களோடு பேசி, அவங்களுக்காகப் பாடி, கதைகள் சொல்லி சந்தோஷப்படுத்துவோம். வீல்சேரில் நாள்களை எண்ணிக்கிட்டிருக்கும் அவங்களுக்கு அந்த கேம்பஸைச் சுற்றிக் காட்டுவோம். அவங்ககூட நாங்க செலவிடற சிலமணி நேரத்துல அவங்க முகத்துல ஒரு புன்னகையையும் சந்தோஷத்தையும் பார்ப்பேன். அது வேற லெவல் ஃபீலிங்’’ - உருக வைப்பவர் ஓவியங்கள் வரைவதிலும் பாடுவதிலும் வயலின் இசைப்பதிலும் நிபுணி.
‘`என்னுடைய டிஸ்எபிலிட்டி சர்ட்டிஃபி கேட்டில் நான் 90 சதவிகிதம் டிஸேபிள்டு, 10 சதவிகிதம்தான் நார்மல்னு இருக்கு. ஆனா, என்னால பல விஷயங்களைச் செய்ய முடியும். நான் வரைவேன். வயலின் வாசிப்பேன். கைவினைப் பொருள்கள் செய்வேன். அதுக்குத் தேவையான பொருள்களை நானே கத்தரிப்பேன். 90 சதவிகிதம் டிஸேபிள்டுனு குறிப்பிட்டதால என்னால பல வேலைகளுக்கு அப்ளை பண்ண முடியாது. அதுக்கெல்லாம் நான் தகுதியற்றவள்னு சொல்லுது இந்த சர்ட்டிஃபிகேட். வேடிக்கையா இருக்கில்லே!
ஏழாவது படிக்கிறதுலேருந்து வயலின் வாசிக்கிறேன். என்னால மத்தவங்களைப் போல வாசிக்க முடியாது. ஆனா, எனக்கு முடிஞ்ச என் ஸ்டைல்ல வாசிக்கப் பழகினேன். யாராவது என்கிட்ட ‘உன்னால இதையெல்லாம் பண்ண முடியாது’ன்னு சொன்னாங்கன்னா அதை என் ஸ்டைல்ல எப்படிப் பண்ண முடியும்னு யோசிப்பேன். முயற்சி பண்ணி அதை எப்படியாவது நிரூபிச்சிடுவேன்’’ - சவால்களுக்கே சவால் விடுபவர், இரண்டு மியூசிகல் பேண்டுகளில் பிரதான பாடகி!
இன்று பள்ளி, கல்லூரிகளில் மோட்டி வேஷனல் ஸ்பீக்கராக அழைக்கப்படுகிற நூர் ஜலீலா, ஒரு காலத்தில் பள்ளியில் சேர அனுமதி மறுக்கப்பட்டவர்.
``அப்பா வேலை பார்த்த அதே ஸ்கூல்ல அட்மிஷன் கேட்டார். ஆனா, என் நிலையைப் பார்த்துட்டு அது ஸ்கூல்ல படிக்கிற மற்ற பிள்ளைங்களைப் பாதிக்கும்னு சொல்லி அட்மிஷன் தர மறுத்துட்டாங்க. காது கேட்காதவங்களுக்கும் பேச முடியாதவங்களுக்கும் நிறைய ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் இருக்கு. ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படி இல்லை. ரெகுலர் ஸ்கூல்ல எங்களுக்கு இடம் தர மறுக்கிறாங்க. கடைசியா எனக்கு கிறிஸ்டியன் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ல அட்மிஷன் கொடுத்தாங்க. அங்கே எனக்குக் கிடைச்ச ஊக்கமும் கவனிப்பும் என் தன்னம்பிக்கையை வளரவெச்சதுன்னு சொல்லலாம். இப்போ சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்காக தயாராகிட்டிருக்கேன். எனக்கு வரலாறும் அகழ்வாராய்ச்சிகளும் பிடிக்கும். அது தொடர்பான செய்திகளைச் சேகரிச்சு வெச்சிருக்கேன். வரலாற்றுச் செய்திகளைப் படிக்கிறதுல தனி ஆர்வம் உண்டு. சில நேரம் என் கற்பனையில் வரலாற்றுக் காலத்துக்கே போய், ராஜா, ராணி காலத்துல என்னைப் பொருத்திப் பார்க்கிறதெல்லாம் நடக்கும்!’’ - கபடமற்ற சிரிப்பில் மனத்தில் நிறைகிறார் நூர்.
நிகழ்காலத்திலும் நீங்கள் இளவரசிதான் நூர்!