வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பேய்க்கும் பிசாசுக்கும் பயப்படாதவங்க யாரும் உண்டோ! அது எந்த வயதானாலும் சரி. அதிலும் இருட்டுக்கே பயப்படும் சிறு வயதில் கேட்கவா வேண்டும்? ஒரே ஒரு குண்டு பல்பு மஞ்சள் ஒளியை மினுக் மினுக்கென்று மந்தமாக உமிழும் தெருவிளக்கு மட்டும் உள்ள, கோடை விடுமுறைக்கு செல்லும் பாட்டியின் கிராமம். அந்த தெருவில் எங்கள் பாட்டி வீட்டில் மட்டும் தான் மின் இணைப்பு வந்திருந்த காலக்கட்டம். அதுவும் நாலு கட்டு வீடு முழுவதும் நடு வீட்டில் ஒரே ஒரு பல்பு தான் அதே குண்டு பல்பு. மஞ்சள் வெளிச்சம். அதுவே சூழலில் ஒரு அமானுஷ்யத்தைக் கொண்டு வந்து விடும்.
எங்கள் வீட்டுக்கு எதிரே, ஆளுயர, ஆடாதொடை, கள்ளிச்செடி வேலிக்குள், மிகவும் உள்ளே ஒரு ஓட்டு வீடு. அங்கே ஒரு வயதான பாட்டியும் அவள் வளர்க்கும் ஆடும் மட்டும் தான் உண்டு. எங்க வீட்டுக்கு அந்த பாட்டிக்கும் ஏதோ சண்டை போல. அதனால் அங்கே போக எங்களுக்கு அனுமதியில்லை. வெளியூரிலிருந்து அதுவும் டவுனிலிருந்து போயிருக்கும் எங்களுக்கு இரு வீட்டு சண்டையின் வீரியம் தெரியாதல்லவா! சொன்னா கேக்கணும் என்று பெரியவர்கள் நல்லதனமா சொன்னாலும் கேக்காமல் பாட்டி வீட்டுக்கு போனால் என்ன என்று எதிர் கேள்வி கேட்பேன் நான். அதனால் எங்க மாமா மகள் மல்லிகா, பேய் கதை சொல்வதில் மன்னி, ஒரு கதையை அவிழ்த்து விட்டிருந்தாள். அந்த கிழவி ராத்திரியில் சூனியக்காரக் கிழவியாக மாறி விடுவாள்.
நாம் அங்கே போனால் நம்மைப் பிடித்து வாணலியில் போட்டு வறுத்து தின்று விடுவாள் என்று. பகலெல்லாம் நல்லாத் தானே இருக்காங்க அந்த பாட்டி என்று கேட்டால் ராத்திரி மட்டும் தான் சூனியக்காரி ஆகி விடுவாள் என்று அதற்கும் பதில் சொல்வாள் மல்லிகா. இத்தனைக்கு அப்புறமும் பேய்க்கும் சூனியக்காரக் கிழவிக்கும் பயப்படாமல் இருந்து விட முடியுமா? சூனியக்காரிக்கு பயப்பட மாட்டேன் என்றால் அடுத்தடுத்து மாந்திரிகக் கதைகள் சொல்லி அஸ்தியில் ஆட்டம் காண வைத்து விடுவாளே.

ஏழு மணிக்கே, களத்து மேட்டில், நிலவு வெளிச்சத்தில், நிலவில்லாத நாட்களில் கண் சிமிட்டும் விண்மீன்கள் வெளிச்சத்தில் சித்தி கையில் உருட்டிப் போடும் சாப்பாட்டை உண்டு முடித்து விட்டு, பின்னாலிருக்கும் வைக்கப்போர் தாண்டி செங்கல் சூளைப் பக்கம் ஒதுங்க போகும் போது காற்றுக்கு ஆடும் மரக்கிளைகளையும் இலைகளையும் கண்டு பேய் என்று பயந்ததுண்டு. எலந்தவடைக்கும் மாங்கா பத்தைக்கும் சண்டையிட்டு காலையிலிருந்து பேசாமல் இருக்கும் சித்தி மகள் பாமா காலில் கையில் விழுந்து துணைக்கு அழைத்துப் போவதுண்டு.
என் சிறு வயதில் துப்பறியும் கதைகள் என்றால் தமிழ்வாணன், பேய்க்கதைகள் என்றால் பி. டி. சாமி. மாந்திரீக கதைகள் என்றால் ஜாவர் சீதாராமன் கதைகள் பிரசித்தம்.

ஜாவர் சீதாராமனின் ’மின்னல் மழை மோகினி’ ஒரு புதுமையான தலைப்பு கொண்ட நாவல். இது மாந்ரீகத்தை பின்னணியில் கொண்ட கதை. கதை லேசாக நினைவுள்ளது. ஆனால் படித்து விட்டு ஒரு வாரம் பயந்தது இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.
இவர் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் அதை விட அவர் நடிப்பு சூப்பர் . அந்த நாள் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் அழகும் சரி, பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக அவர் நடித்த காட்சிகளும் சரி, வெகு நேர்த்தி. பல்கலை வித்தகர். இவருடைய பணம் பெண் பாசம், வெகு த்ரில்லிங்கான கதை திரைப்படமாக வந்தது. இதுவும் மாந்திரீகம் முன்ஜன்மம் அப்படித் தான் போகும். ஜாவர் சீதாராமனின் கதைகள் நல்ல குளிரில் போர்திக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப் போல பயந்து கொண்டே படித்தேன். அல்லது படித்து விட்டு பயந்தேன்.
7ஆம் அறிவில் நோக்கு வர்மம் வருமே. ஹிப்னாடிசம். இதன் பின்னணியில் எத்தனை கதைகள். சமீபத்தில் நானி சாய்பல்லவி நடித்த ஷ்யாம் சிங்கா ராய் என்னும் தெலுங்கு படம் பார்த்தேன். தேவதாசியான காதலி தன் காதலின் கைகளில் தான் இறப்பேன் என்று வைராக்கியமாக அவனுக்காக காத்திருப்பாள். ஆனால் உயர்குடி காதலன் வீட்டில் அவளை விட்டு விட்டு வர மறுக்கும் அவனை கொன்று விடுவர். இந்த ஜென்மத்தில் காதலன் ஹிப்னாடிசத்தின் உதவியால் அவளைக் கண்டுபிடித்து இரு காதலர்கள் ஒன்று சேர்வர்.

ஆனால் எப்பேர்ப்பட்ட மாந்திரீகமாக இருந்தாலும் ஹிப்னாடிசமாக இருந்தாலும் கடலின் ஆழத்தை அறியலாம். ஆனால் எத்தனை தான் முயன்றாலும் பெண்களின் மனதிலிருக்கும் ரகசியங்களையும் எண்ணங்களையும் அறிய முடியாது என்று சொல்வார்களே. அது சரி தானோ!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.