வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
50 பிளஸ்.. மெனோபாஸ்... வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவக்கம். 50 வருட வாழ்க்கையில் பெற்றோர்களுக்கு பயந்து.. புகுந்த வீட்டில் அத்தை மாமாவிற்கு மரியாதை கொடுத்து... கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு பணிவிடை செய்து.. நேரம் போனதே தெரியாமல் ( விளம்பர அம்மாக்களைப் போல் இல்லாமல்) வேலை வேலை வேலை என்று 24 மணி நேரமும் பம்பரம் போல் சுழன்று , மிச்சம் மீதி சாப்பிட்டு தூங்கி எழுந்து மறுநாள் திரும்பவும் இப்படியே... அதே காலை அலாரத்தின் அழைப்பு, பில்டர் காபி, பிள்ளைகளுக்கு டிபன், கணவர் மற்றும் அத்தை மாமாவிற்கு சாப்பாடு கட்டுதல் சமைத்த சுவடேத் தெரியாமல் சமையலறை சுத்தம் செய்தல், பள்ளி மற்றும் அலுவலகம் விட்டு வருபவர்களுக்கு..
மீண்டும் சுட சுட மாலை நேர டிபன், அது முடிந்ததும் இரவு நேர சாப்பாடு(நடுவில் டீச்சர் உத்தியோகம்) சமையலறை சுத்தம் செய்தல்.. இப்படியேத்தான் வாழ்க்கை செக்கு மாடாக போய்க் கொண்டே இருந்தது..

பிடித்த தலைவரின் படம் ரிலீஸ் ஆனால் கணவரிடம் கேட்க பயம் அப்படியே கேட்டாலும் அப்பா அம்மாவிடம் சொல் என்று தான் பதில் வரும். அத்தை மாமாவை கேட்டாலோ...கடந்த வாரம் தானே ஒரு படம் போனாய்! திரும்பவும் இந்த படம் போகணுமா ?யோசித்து முடிவெடு என்று பந்தை என் பக்கமே தள்ளி விட்டு விடுவர். இரண்டு நாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன்னாலேயே திரும்பவும் சாதாரண நிலைக்கு வந்து இருப்போம்.
அதேபோல் தான் சமையலும்.. இன்று தக்காளி ரசம் வைத்து உருளை பட்டாணி வறுத்து விட்டால் போதும் என நினைத்திருப்போம் ...ஆனால் அப்போதுதான் பிள்ளைகள் வந்து இன்று வெஜிடபிள் பிரியாணி / பக்கோடா குருமா தான் வேண்டும் என்று கூற மனசில் யோசித்து வைத்திருந்த ரசத்தை தூக்கி போட்டுவிட்டு (கற்பனையில் சாப்பிட்டு கொள்ளலாம் என்று)குருமாவை வைக்க போனதெல்லாம் ஒரு காலம்.

காலாற ஒரு எட்டு நடந்து வடபழனி முருகரை தரிசித்து விட்டு வரலாம் என நினைத்திருப்போம் .ஆனால் அன்றுதான் கரெக்டாக பிள்ளைகளுக்கு நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திருப்பார்கள்... பிறகு என்ன கண்ணை மூடினால் முருகர்... சரிஆதிரை...என்னை பிறகு பார்க்கலாம்.. முதலில் ஹோம் ஒர்க் முடி என்று சொல்லாமல் சொல்லி புன்னகைப்பார்.. (பக்கத்தில் இருக்கும் வடபழனி முருகருக்கே இந்த நிலைமை என்றால் சற்று தூரத்தில் இருக்கும் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் நிலை...? என்னவென்று சொல்வது? உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்...)
ஆனால் இந்த 50 பிளஸ் இல்..
நான் "ஒரு வாரமாக நிறைய வேலை செய்து விட்டேன் ". இன்று நான் சினிமாவிற்கு போக வேண்டும் அதனால் தயவு செய்து இரண்டு டிக்கெட்டை ரிசர்வ் செய்துதாருங்கள் நானும் என் தோழியும் சென்று வருகிறோம் என்று சொல்லி சினிமா பார்க்க முடிகிறது.

ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரை மட்டுமல்ல ...கூட மயிலாப்பூர் கபாலீஸ்வரர்அப்பாவையும் சேர்த்து வணங்கி விட்டு ..கற்பகாம்பாள் மெஸ்ஸில்..சுட சுட ஊத்தப்பம், ஜில்லுனு தயிர் வடை ,ரோஸ் மில்க் என சாப்பிட்டு வர முடிகிறது . எல்லாவற்றிக்கும் மேலாக மனதில் நினைத்த / பிடித்த சமையலை சுட சுட செய்து சாப்பிட முடிகிறது.
திருமண நாள் ,பிறந்தநாள், மற்றும் பண்டிகை தினங்களில் 10 பேருக்கு நம்மால் முடிந்த அளவு சமைத்து பரிமாற முடிகிறது...

வீட்டு வேலைகள் செய்து மிச்சமிருக்கும் எஞ்சிய நேரங்களில் இலவசமாக திருமணத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளுக்கு நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது...
மொத்தத்தில்" ஐம்பதிலும் ஆசை வரும்" .. ஆசையை நினைத்தவுடன் செய்து முடிக்க உதவி செய்யும் ஆஞ்சநேயருக்கு இத்தருணத்தில் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.