வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நம் தமிழ் சினிமா வரலாற்றில் குற்றவுணர்ச்சியைப் பற்றி பேசக்கூடிய படைப்புகள் வெகு குறைவு. சில படங்கள் குற்றவுணர்ச்சியைப் பற்றி பேசினாலும் அவை அந்த உணர்வை மட்டுமே அடிப்படையாக கொண்டு வருவதில்லை. படங்களில் இடம்பெறும் குற்றவுணர்ச்சி காட்சிகளும் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. விதிவிலக்காக சில படங்களும் காட்சிகளும் இருக்கிறது என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே.
அதேநேரம், சமீப காலமாக குற்றவுணர்ச்சியை தழுவி சில படங்களில் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அப்படி வெளிவந்த பாடல்களில் ‘தாய்மடியில்’ என்ற ஒரு பாடலைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான், தாய்மடியில் எனத்தொடங்கும் பாடல். இளையராஜா இசையில், இயக்குநர் மிஷ்கினே பாடல் வரிகளை வடிக்க, கைலாஷ் கேர் இப்பாடலை பாடியுள்ளார்.

கதையின்படி குற்றத்தை உணர்ந்த ஒருவன், அவன் நியாயம் என்று நினைக்கும் ஒன்றை நோக்கி புறப்பட, இப்பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அவனைப் பொறுத்தவரையில் செய்த குற்றத்துக்கான நியாயம் என்பது இப்பூவுலகில் இருந்து விடுபடுதலே. அந்த விடுபடுதலை, விடுதலையை தாயாய் பாவித்து ‘தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்.’ என அவன் நினைப்பது போல பாடல் தொடங்குகிறது.
அவனின் குற்றத்தை, இயலாமை என்று புரிந்துக்கொண்ட ஒருத்தி அவனை குழந்தை என்கிறாள். இதைக் கேட்ட அவனோ, அவளது அன்பின் ஊற்றைத் தாளாது தன் விடுதலை பயணத்தை தொடங்கிவிட, அவனுக்கு அவளின் நிழல் சூழல்களால் கிடைக்கவில்லை. எஞ்சியிருக்கும் அவள் நினைவுகளை போகும் வழிக்கு துணையாக்குகிறான். அதை மிஷ்கின் இப்படி எழுதுகிறார், ‘உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை. போகும் வழிக்கு உன் நினைவே துணை..’
அடுத்ததாக, அவன் தனக்கு யாரும் இல்லாததை உணர்கிறான். அந்த உணர்வை சோகம் தாங்கி, பாரம் இறக்க யாரும் இல்லையே என மிஷ்கின் எழுத கைலாஷ் கேர் அதை நம்மிடம் உணர்வுப்பூர்வமாக கடத்துகிறார்.

தாகம் தீர்க்க, சுணையாய் இங்கு கருணை இல்லையே என அவன் செய்த குற்றத்தை மன்னிக்க, அவனை இயல்பாய் தேற்ற பிறப்பிலிருந்தே ஒரு கருணை இல்லாததை நம்மால் உணர முடியும்.
படத்தில் இப்பாடல் வரும் காட்சியில் இருந்து கொஞ்சம் காலச் சக்கரத்தை சுழற்றினால், ஒரு நபர் மீது அவனுக்கு எழுந்த கோபம் அளப்பறியதாக இருக்கும். அதேநேரம், அந்த கோபத்தின் பின்னும் முன்னும் சரி ஒரு அன்பை, அணைப்பை ஏங்கியபடியே அவனிடத்தில் இருக்க, அது பாடலில், ‘கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலைய…பாசம் நெஞ்சில் கனலாய்…
ஓங்கி ஏங்கி எரிய’ என விரிகிறது.
மனதளவில் தொடர்ந்து இருளிலேயே இருந்தவன், அவளால் ஒளியை அடைகிறான் என்பதை ‘காயம் செய்த மனிதன், இன்று இருளில் கரைகிறேன். நியாயம் செய்த மனதை, நினைத்து ஒளியில் நனைகிறேன்’ என்ற வரியில் நாம் அறியலாம். எல்லாமும் முடிய, வாழ வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இல்லை.

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என தோன்றாத மனிதர்கள் உண்டா என்ன? அவனுக்கும் அப்படி ஒன்று தோன்றுகிறது. அதுதான், ‘காலம் மீண்டும் மாற, மாயம் கையில் இல்லை. ஞாலம் மீண்டும் மாற, பாரம் நெஞ்சில் இல்லை.’ என ஒலிக்கிறது.
அவனது தாயாக அவன் பாவிக்கும் விடுதலை எனும் கருவில் அவன் கலக்கிறான். இளையராஜா எக்காலத்துக்குமான இசைஞானி என்பதை உணர்த்தும் பாடல்களில் ‘தாய்மடியில்’ எப்போதும் இருக்கும் என்றால் அது மிகையாகாது.
- சுரேந்தர் செந்தில்குமார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.