` ``அவ வீட்டுக்காரர்கூட துபாய் போயிட்டா தெரியும்ல?', `அவளுக்கு என்ன குறைச்சல்... கல்யாணமாகி அமெரிக்காவுல இருக்கா!', `கனடால இருக்கா... இன்ஸ்டால அவ போடுற போஸ்ட்ஸ், அவ போட்டிருக்கிற டிரெஸ் எல்லாம் வேற லெவல்!'
- இப்டிதானே நீங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற பொண்ணுங்களைப் பேசுவீங்க? அவங்கயெல்லாம் ரொம்ப சந்தோஷமா, ஆடம்பரமா, வெஸ்டர்னைஸ்டு வாழ்க்கையில இருக்கிறதா நினைப்பீங்க? என் கதையக் கொஞ்சம் கேளுங்க.

கணவருக்கு அமெரிக்காவுல ஒரு ஐடி நிறுவனத்துல வேலை கிடைக்க, திருச்சியிலயிருந்து இங்க வந்து செட்டில் ஆகிட்டோம். 5 வயசுல ஒரு பையன், ஸ்கூல் போறான். அமெரிக்காவுல வீடு வாங்கிட்டோம், கார் வாங்கிட்டோம். `அப்புறம் என்னயிருக்கு புலம்ப...?'னு தோணுதுதானே? சொல்றேன்.
என்னோட ஒரு நாள் எப்படி போகுதுனு கொஞ்சம் கேளுங்க. காலையில எழுந்ததுலயிருந்து சமையல் வேலைகளை முடிச்சு, பையனை ஸ்கூல் பஸ்ல ஏத்திவிட்டு வந்து, கணவருக்கு லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணி ஆஃபீஸ் அனுப்பிட்டு, வாஷிங் மெஷின்ல துணி போட்டு, டிஷ் வாஷர்ல பாத்திரம் கழுவி, ஃப்ளோர்க்கு மாப் போட்டு, சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வந்து, பாத்ரூம் எல்லாம் க்ளீன் பண்ணி, துணி மடிச்சு, அயர்ன் செய்து, முதுகு நிமிர்ந்திருக்காது... பையன் ஸ்கூல்லயிருந்து வந்துடுவான். அவன் ஹோம்வொர்க் பண்ண உட்கார்ந்து, மறுபடியும் டின்னர் வேலையை ஆரம்பிச்சு, என் கை, கால் எல்லாம் இதுக்கு மேல எங்களால முடியாதுனு கெஞ்சுனதுக்கு அப்புறமும் நைட் கிச்சனை க்ளீன் பண்ணி... இப்டிதான் போகுது தினமும்.

அமெரிக்காவுல வேலைக்கு எல்லாம் ஆள் வைக்க முடியாது. எல்லா வேலைகளையும் நாமதான் செய்யணும். இப்டி நாள் முழுக்க உழைக்கிறது ஒரு பிரச்னைனா, அமெரிக்காவுல மாசம் மூணு லட்சம் சம்பாதிச்சாலும், அந்தக் காசை இந்திய ரூபாய்கூட ஒப்பிட்டு ஒப்பிட்டு செலவழிக்கிற என் கணவர் அடுத்த பிரச்னை.
`காளானா... அய்யய்யோ காஸ்ட்லி வெச்சிடு...'
`அவுட்டிங் போறதா... அதுக்கெல்லாம் எவ்ளோ செலவாகும் தெரியுமா...?'
`இங்க ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட நாம பரம்பரை அமெரிக்க பணக்காரனாதான் இருக்கணும்...'
`தியேட்டர்லாம் நெனச்சுகூடப் பார்க்கக்கூடாது... டிவியில போடுற படத்தை பார்த்தா போதாதா?'
`ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் இன்ஷூரன்ஸ் இல்லாம போனா இதுவரை சம்பாதிச்சதை அவனுக்குக் கொடுத்துட்டு வரவேண்டியதுதான்'
`இண்டியன் மில்க் ஸ்வீட்லாம் அமெரிக்கால என்ன விலை தெரியுமா? வீட்டுலேயே செஞ்சிடு'

அப்புறம் எப்படி வீடு, கார்னு கேட்குறீங்களா? இல்லைன்னா இங்க வாடகை கொடுத்து, ட்ரான்ஸ்போர்ட்டுக்கு செலவழிச்சு மாளாதே. அதனால லோனைப் போட்டு வாங்கிட்டோம். காசெல்லாம் இ.எம்.ஐ-க்குப் போக, வாழ்க்கை வறுமையில போகுது. `அமெரிக்காவுல வீடு, காருனு இருந்துட்டு வறுமையா?'னு கேட்கத் தோணுதில்ல. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில என் சந்தோஷமும், நிம்மதியும்கூட வறுமையிலதான் இருக்குங்க.
எங்க வீட்டுல நானும் என் தங்கச்சியும்னு ரெண்டு பொண்ணுங்க. மிடில் க்ளாஸ் குடும்பம். ஆனாலும் ரெண்டு பேரையும் நல்லா படிக்கவெச்சார் அப்பா. இன்ஜீனியரிங் படிச்சிருக்கேன். அமெரிக்காவுல வீடு, குழந்தைனு 24*7 ஹோம் மேக்கரா இருக்கிறதால, வேலை பத்தியெல்லாம் யோசிக்க முடியல. ஆனாலும், தங்கை கல்யாணத்துக்கு நான் ஏதாச்சும் உதவணுமேனு, இங்க தெரிஞ்ச சில குடும்பங்களுக்கு ஆர்டர் எடுத்து சமைச்சுக் கொடுப்பேன். சமையல் வீடியோஸ் போடுற யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். இன்ஜினீயரிங் படிச்சிட்டு, இப்டி சமைச்சுக் கொடுத்துட்டு இருக்கிறேனேனு நான் நினைச்சதில்ல. ஏன்னா, நேர்மையா பண்ணுற எல்லா வேலையும் நல்ல வேலைதானே? ஆனா... அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறம் என்னோட அந்த நிம்மதியும் போயிடுச்சு.
அன்னைக்கு, எங்க வீட்டுக்கு என் கணவரோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்திருந்தாங்க. பேச்சுவாக்குல என் கணவர், `என் பொண்டாட்டி திருச்சியில 25,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போயிட்டிருந்தா. நான் ஆபீஸ் விட்டு வந்ததும்தான் அவ வருவா. எரிச்சலா இருக்கும். வேலைக்குப் போகாதேனு சொல்லிப் பார்த்தும் கேக்கல. நான் அமெரிக்கா வந்ததுக்கே அதுதான் முக்கிய காரணம். இங்க அவளால எந்த வேலைக்குப் போக முடியும்? வீட்டுவேலை முடிக்கவே நாள் முடிஞ்சுபோயிடும்ல! எப்டி என் ஐடியா?'னு அவர் தன் நண்பர்களிடம் சொல்லிச் சிரிக்க, கிச்சன்ல இருந்த என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியல.

ஆணாதிக்க கணவரோட ஈகோவுக்கு என் கரியரை என்னையும் அறியாமல் பலிகொடுத்துட்டு, இப்படி அமெரிக்காவுல கூண்டுக்கிளியா கிடக்குறேன். `அமெரிக்கா வேணாம்... இந்தியாவுல சம்பாதிக்கிறதே போதும். வாங்க போயிடலாம். இல்லைன்னா, என்னையாச்சும் அனுப்பிவெச்சிடுங்க'னு கணவர்கிட்ட சொல்றதையெல்லாம் அவர் காதுலேயே வாங்குறதில்ல.
காதுகுத்து, கல்யாணம், தேர், திருவிழானு ஊருல வளர்ந்தவ நான். இங்க கெட்-டுகெதர் பார்ட்டினு இந்தியர்கள், தமிழர்கள் அப்பப்போ கூடுவாங்க. ஆனா அங்க உண்மையான, மனசுவிட்டுப் பேசுற, சிரிக்கிற மனுஷங்க எல்லாம் கிடைக்கமாட்டாங்க. என்னதான் ஜாலியா இருந்தாலும் ஒரு ஸ்டேட்டஸ் மனப்பான்மை எல்லாருக்கும் நடுவுல இருந்துட்டேதான் இருக்கும். நம்புங்க மக்களே... சாதி முதல் சம்பளம் வரை எல்லா பாகுபாடுகளும் அமெரிக்க பார்ட்டிகள்ல உண்டு.
கல்லூரி வாட்ஸ்ஆப் குரூப்ல, ஊருல இருக்கிற தோழிகள் எல்லாம் `சினிமாவுக்குப் போனோம்', `ஹோட்டலுக்குப் போனோம்'னு போடுற சாதாரண மெசேஜ்களைகூட ஏக்கமா பார்க்கிறது, நான் மட்டுமில்ல. கணவர் வேலை காரணமா வெளிநாட்டுல வசிக்கிற மற்ற தோழிகளின் கதையும் கிட்டத்தட்ட என் கதையாதான் இருக்கு.
மொத்தத்துல, நம்ம ஊரு மிடில் க்ளாஸ், லோயர் மிடில் க்ளாஸ் பொண்ணுங்க வாழ்க்கையில இருக்கிற ஓய்வு, சந்தோஷம், உரிமையெல்லாம் அமெரிக்காவுல இருந்தாலும் எனக்கு இல்ல. அவங்களும் எல்லா வீட்டு வேலைகளையும் பார்ப்பாங்கதான்னாலும் இன்னொரு பக்கம் சினிமா, விழா விசேஷங்கள், உறவினர்கள், தோழிகள்னு நிறைய மகிழ்ச்சி அவங்க வாழ்க்கையில இருக்கும்தானே? ஆனா நான்..?

சம்பளம் இல்லாத வேலைக்காரியா நாள் முழுக்க வேலைபார்க்கிறேன். பொழுதுபோக்குக்கு வழியில்ல. காளான், முருங்கைக்காய்லாம் இங்க காஸ்ட்லி உணவு. காய்ச்சல்னா டாக்டர்கிட்ட போகமுடியாது. உண்மையா பழக நாலு மனுஷங்க இல்ல. சந்தோஷமா இருக்க, வாய்விட்டு சிரிக்கனு எந்தத் தருணங்களும் இல்ல.
இந்த தங்கக் கூண்டு விடுதலைக்கு என்னதான் வழி?
- ஒருத்தி
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.