Published:Updated:

கிட்ஸ் டைம்... இந்தியப் பெற்றோருக்கு முதலிடம்! #VikatanInfographics

பெ.மதலை ஆரோன்

உலகளவில் அதிகபட்சமாக இந்தியாவில் வாரத்துக்கு 12 மணி நேரம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காகப் பெற்றோர்கள் நேரம் செலவிடுகின்றனர்.

வீட்டுப்பாடம் செய்ய உதவும் பெற்றோர்
வீட்டுப்பாடம் செய்ய உதவும் பெற்றோர்

சுயநலத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகம் யாருக்காகவும் நிற்பதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். காரணம் 2 வயதுக் குழந்தையுடன் ஒரு நாளுக்கு 5 மணி நேரம் செலவிடக்கூட அதிக தயக்கம் காட்டுகின்றனர் பெற்றோர்கள். குழந்தையின் எதிர்காலம், கடமை, வேலை.. என ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு, தங்களின் குழந்தையுடன் செலவிட நேரம் இருப்பதில்லை. இதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் குழந்தைகள்.

Home Work
Home Work

இதனால் இவர்களின் ஒரு நாளானது 70 சதவிகிதம் பள்ளியிலும், 20 சதவிகிதம் டியூஷன் என்று படிப்பிலேயே கழிகிறது. எந்தச் செயலையும் துணிச்சலுடன் செய்து பார்ப்பதில் குழந்தைகளுக்கு நிகர் யாருமில்லை எனலாம். பலவற்றை ஆர்வத்துடன் செய்யும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்றால் மட்டும் பாகற்காயாய் கசக்கும். இதுவே, வீட்டுப்பாடம் செய்ய உடன் இருந்து உதவி செய்தால்தான் அதை மகிழ்ச்சியாகவே செய்வார்கள். ஆனால், இதற்கு பல பெற்றோர்களின் பதில் `நேரம் இல்லை' என்பதாகவே இருக்கிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கிற நேரத்திலாவது பெற்றோர் குழந்தைகளுடன், பேசிக்கொண்டும் உதவி செய்துகொண்டும் இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் நாள்களைக் கழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்ட `Varkey Foundation' என்ற தொண்டு நிறுவனம் 29 நாடுகளில் 27,500 பெற்றோர்களிடம், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க `வாரத்துக்குச் செலவிடப்படும் நேரம்' குறித்து 4 முதல் 18 வயது வரையான குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், அதிகபட்சமாக இந்தியாவில் வாரத்துக்கு 12 மணி நேரம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காகப் பெற்றோர்கள் நேரம் செலவிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து வியட்நாம் 10.2 மணி நேரமும், துருக்கி மற்றும் கொலம்பியா 8.7 மணி நேரமும், இந்தோனேசியா 8.6 மணி நேரமும் செலவிடுகின்றனர். உலகளவில் சராசரியாக ஒரு வாரத்துக்கு 6.7 மணி நேரம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். குறைந்தபட்சமாக ஜப்பான் பெற்றோர்கள் வாரத்துக்கு 2.6 மணி நேரமே செலவிடுகின்றனர்.

Vikatan Infographics
Vikatan Infographics

இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 12 மணி நேரம் செலவிட்டாலும், அதில் குறிப்பிட்டுச் சொன்னால், 7 மணி நேரத்துக்கும் மேல் நேரம் செலவிடுபவர்கள் 62 சதவிகிதம் பெற்றோர் மட்டுமே. 4 முதல் 7 மணி நேரத்தைச் செலவிடுகிறவர்கள் 19 சதவிகிதம்தான். மேலும், 5 சதவிகிதம் பேர் குழந்தைகளுக்கு உதவியே செய்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள பெற்றோர்கள், குழந்தைகள் மீது காட்டும் அக்கறையைவிட இந்தியப் பெற்றோர்கள் 2 மடங்கு அதிகமாக அக்கறைக் காட்டுகிறார்கள். அதேபோல், குழந்தைகள் சிறப்பான கல்வியைப் பெற ஆசிரியர்களைவிடப் பெற்றோர்களே அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.

Home Work
Home Work

பள்ளியைவிட்டு வீடு திரும்பியதும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேட்கும்போது குழந்தைகள் ஆர்வமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டுப்பாடத்துடன், படம் வரைதல், புதிர்கள் சொல்லிக்கொடுப்பது என பல்வேறு பொழுதுபோக்கு செய்முறைகளையும் கற்றுக்கொடுத்து வந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு படிப்பில் அதிக ஆர்வத்தையும் உண்டாக்கும். குழந்தைகளின் தேவைகளைத் தெரிந்துகொண்டு அவர்களை மகிழ்வுடனே வைத்திருக்கலாம்.

இரண்டாம் வகுப்புவரை பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது எனக் கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.