Published:Updated:

குழந்தைகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறுவோரின் 5 அடையாளங்கள்!

குழந்தையை முற்றிலுமாக தன் ஆளுமைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருவது. அதாவது, அந்தக் குழந்தைக்கு யாருடைய உதவியும் கிடைக்காத அளவுக்குத் தனிமைப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள்.

பாலியல்
பாலியல்

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான குழந்தைகளிடம் பல பெற்றோரும் கேட்கும் கேள்வி இது... 'அவன் இவ்வளவு தூரம் உன்கிட்ட தப்பா நடந்துக்கிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தே... ஆரம்பத்திலேயே எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல?'

மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால், பாலியல் வன்முறையாளர்கள் அப்படியெல்லாம் முதல் சந்திப்பிலேயே தங்கள் உண்மை முகத்தை யாருக்கும் காட்டுவதில்லை. குறிவைக்கப்பட்ட குழந்தைகளிடம்தாம் நினைத்ததைச் செயல்படுத்தி முடிப்பதைப் பற்றிய இவர்களது ப்ளூ பிரின்ட் 'வேற லெவ'லில் இருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. கயவர்களைக் கண்டுபிடிப்பதொன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல... கவனித்தால் மாட்டிக்கொள்வார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2KuAJw7

குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்து மீறுபவர்களைச் சில அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அவற்றை விவரிக்கிறார், பாலியல் மருத்துவர் காமராஜ்.

'பிரிடேட்டர்' எனப்படும் இந்த நபர் முதல் கட்டமாக யாரை சுலபமாக அணுக முடியும் என்பதை அறிய முயல்வார். பெற்றோரிடம் நல்ல உறவுமுறையில் இருக்கும், புத்திசாலியான குழந்தையை அணுகுவது இவர்களுக்குச் சிரமம். பெற்றோரால் ஒதுக்கப்படுகிற குழந்தைகள், பெற்றோரின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படும் குழந்தைகள் போன்றோரை அணுகுவது சுலபம். ஏற்கெனவே அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற குழந்தைகள் இந்த அரக்கர்களிடம் எளிதில் ஒட்டிக்கொள்வார்கள். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் இருப்ப வர்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், மூத்த மாணவர்கள் என இவர்கள் யாராகவும் இருக்கலாம். இவர்களிடம் சில பொதுவான குணாதிசயங்களைப் பார்க்கலாம்.

1. நட்பும் இரக்கமும்

குழந்தைகளிடம் மிகவும் நட்பாக நடந்துகொள்வார்கள். குழந்தைகளின் குறைகளைக் கேட்டு இரக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இத்தகைய பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதிலும் பெண் குழந்தைகளுக்கு இது இன்னும் அதிகம். அதைப்போல உடல்நலம் குன்றி, தன்னைக் கவனித்துக்கொள்ள இயலாத குழந்தைகளையும் எளிதில் நெருங்கிவிடுவார்கள்.

குழந்தையை டெஸ்ட் செய்வார்கள்; தயார்படுத்துவார்கள். குழந்தை தான் சொன்னபடி செய்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்வார்கள். இதெல்லாம் சரியாக நடந்தால் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள்.

'யாரேனும் தவறாக நெருங்கினாலோ தவறாகத் தொட முயன்றாலோ 'நோ' சொல்ல வேண்டும்' எனக் குழந்தைகளுக்கு ஏற்கெனவே கற்றுக்கொடுத்திருந்தால், இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது குழந்தையிடம் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்க முடியும். இப்படி எதுவுமே கற்றுக்கொடுக்கப்படாத குழந்தைகள் பாலியல் வன்முறையாளர்களிடம் எளிதில் சிக்கிக்கொள்வார்கள்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

2. நெருங்குதல்

சம்பந்தப்பட்ட நபர் தன் இலக்கு யார் என்பதை முடிவுசெய்துவிட்டு அந்தக் குழந்தையை நெருங்குவார். அந்தக் குழந்தையைப் பலவிதங்களில் கவர முயற்சி செய்வார். குழந்தையிடம் 'நீதான் என் பெஸ்ட் ஃபிரெண்டு' என்று அடிக்கடி சொல்வார். குழந்தைகள் ஆசைப்படுகிற விஷயங்களை நிறைவேற்றுவார். குழந்தைகளுடன் விளையாடுவார். இதற்கு ஏராளமான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். தன்னைவிட வயதில் பெரியவர் தனக்காக இத்தனை விஷயங்களைச் செய்கிறாரே என்று அந்தக் குழந்தை சந்தோஷப்படும்.

பல நேரங்களில் பல பெற்றோர்கள் தம் குழந்தையை யாரோ ஒருவர் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாக நினைத்து இதன் பின்னாலுள்ள பயங்கரத்தை கவனிக்கத் தவறிவிடுவார்கள். மற்ற குழந்தைகள் விளையாட்டுத் துணைக்காக இந்தக் குழந்தையைத் தேடுவார்கள். ஆனால், அந்தக் குழந்தை, வயதில் பெரிய ஒருவருடன் இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களும் அந்தக் குழந்தையைத் தவிர்த்துவிட்டு விளையாட்டைத் தொடர ஆரம்பிப்பார்கள்.

3. ஆளுமைக்குள் கொண்டுவருதல்

குழந்தையை முற்றிலுமாக தன் ஆளுமைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருவது. அதாவது, அந்தக் குழந்தைக்கு யாருடைய உதவியும் கிடைக்காத அளவுக்குத் தனிமைப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். அந்தக் குழந்தையிடம் தவறாக நடந்துகொள்ளும்போது அதற்கு யாருடைய உதவியும் கிடைக்காமல் இருக்க முன்கூட்டியே திட்டமிட்டு இதைச் செய்வார்கள். பெற்றோர்களிடமும் அந்தக் குழந்தையைத் தேடுபவர்களிடமும் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி விடுவார்கள்.

குழந்தைகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறுவோரின் 5 அடையாளங்கள்!

4. தேவைகளை நிறைவேற்றுதல்

குழந்தைக்கு விலையுயர்ந்த அன்பளிப்பு களை வாங்கித் தருவது, ஸ்பெஷலான இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள். இவையெல்லாம் அந்தக் குழந்தையிடம் உடல் மற்றும் மனரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி குழந்தை தன் தேவைகளுக்காக தொடர்ந்து தன்னைச் சார்ந்திருக்கும் நிலையையும் ஏற்படுத்துவார்கள்.

5. ரகசியம் காக்கப் பழக்குதல்

ரகசியத்தைப் பாதுகாக்க குழந்தைகளைப் பழகுவார்கள். நடப்பதைக் குழந்தை தன் பெற்றோரிடம் அப்படியே சொன்னால் பிரச்னையாகிவிடும் என்பதால், 'நான் உனக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கிறேன். அதை யாரிடமும் சொல்லாதே' என்ற மாதிரி சில விஷயங்களைச் செய்து, குழந்தையை டெஸ்ட் செய்வார்கள்; தயார்படுத்துவார்கள். குழந்தை தான் சொன்னபடி செய்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்வார்கள். இதெல்லாம் சரியாக நடந்தால் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள்.

இந்த நிலையில் குழந்தைகள் பெரும்பான்மை நேரத்தை இந்த நபர்களுடன் செலவழிப்பார்கள். அவர்கள் தவறாக நடந்துகொள்ளும்போது குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும். பெற்றோரிடம் சொல்லவும் பயமாக இருக்கும். பெற்றோரோ, வேறு யாருமோ இதைப் பற்றியெல்லாம் முன்கூட்டியே சொல்லிக் கொடுக்காததால் அந்தக் குழந்தையும் பாலியல் வன்முறையாளர் சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்துவிடும். அந்த நபர்கள் சில நேரங்களில் குழந்தைகளை மிரட்டவும் ஆரம்பிப்பார்கள்

'இதை நீ வெளியில் சொன்னால் நீ இறந்து விடுவாய்... உன் பெற்றோர் இறந்து விடுவார்கள்... நான் இறந்து விடுவேன்' என்றெல்லாம் மிரட்டுவார்கள். அதாவது, அந்தக் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தும் விஷயங்களை மிரட்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கெனவே ரகசியத்தைக் காப்பாற்ற, குழந்தையைப் பழக்கியுள்ள நிலையில், மீறி வெளியில் சொன்னால் ஆபத்து ஏற்படும் என்று மிரட்டுவார்கள். குழந்தையுடனான தவறான உறவை நீண்டகாலத்துக்குத் தொடர இது அவர்களுக்கு உதவும். இதனால் அந்தக் குழந்தைகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்.

- பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான குழந்தைகளிடம் காணப்படும் சில பொதுவான அறிகுறிகள் பெற்றோருக்கு குறிப்புகள் கொடுக்கும். வயதுவாரியாக அந்த அறிகுறிகள் வேறுபடும். அவற்றை முழுமையாக அவள் விகடன் இதழ் தொடரில் அறிய > மனம் திறந்து பேசுங்கள்! - பாலியல் மருத்துவர் காமராஜ் https://www.vikatan.com/news/women/dr-kamaraj-advised-to-parents

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo