Published:Updated:

கிச்சன் முதல் பீச் வரை... உங்கள் குழந்தைகளோடு கொண்டாட சன்டே டைம் பேபிள்!

உங்கள் பிள்ளைகளிடம் சொல்லி, ஒரு டைம் டேபிள் தயார்பண்ணச் சொல்லுங்கள். அந்த டைம் டேபிளில், காலை முதல் மாலை வரை வெவ்வேறு விஷயங்கள் வரவேண்டும்.

டைம் டேபிள்
டைம் டேபிள் ( pixabay )

ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம்தான். நமக்கு அலுவலகப் பரபரப்பிலிருந்து ஓய்வு, நம்ம குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திடமிருந்து விடுதலை. அதற்காக, ஞாயிறை முழுக்க முழுக்க அவரவர் தனித்தனியாக ஆர்ப்பாட்டம், அரட்டையிலே கழிப்பதை விடலாமா? நம் பிள்ளைகளுடன் இருக்க கிடைக்கும் இந்த நேரத்தை, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மட்டுமின்றி, சில நல்ல பண்புகளை அவர்களுக்குள் உருவாக்கவும் அழகாகத் திட்டமிட்டு, வெவ்வேறு வகையில் பயன்படுத்தலாமே...

போடலாம் ஒரு டைம் டேபிள்

டைம் டேபிள்
டைம் டேபிள்
pixabay

உங்க பிள்ளைகளிடம் சொல்லி, ஒரு டைம் டேபிள் தயார் பண்ணச் சொல்லுங்கள். அந்த டைம் டேபிளில், காலை முதல் மாலை வரை வெவ்வேறு விஷயங்கள் வரவேண்டும். அந்த டைம் டேபிளில் விளையாட்டு, வீட்டுக்கு உபயோகமானது, ஒரு புதிய விஷயம் அறிந்துகொள்வது, வெளியே உபயோகமாக ஒரு விஷயத்தைச் செய்வது என்று கலவையாக இருக்க வேண்டும். பெற்றோருடன் சேர்ந்து செய்வது, தனியாகச் செய்வது என ஒவ்வொன்றுக்கும் ஒரு டார்கெட் டைம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள்.

உதாரணமாக, காலையில் வீட்டுக்குள் ஆளுக்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுத்தம்செய்வது. ஒருவர் அலமாரி, இன்னொருவர் டைனிங் டேபிள், இன்னொருவர் அறை, இன்னொருவர் மின்விசிறி மற்றும் விளக்கு போன்றவற்றை சுத்தம் செய்வது.

"இதைச் செய்யும்போது ஜாலியாக இருக்க, அவங்கவங்க அந்தந்த இடத்திலிருந்தே அந்தாக்‌ஷரி விளையாடலாம்'' என்றும் சொல்லுங்கள்.

நம்ம கண்ணாடி எதைப் பிரதிபலிக்கணும்? - குழந்தைகள் முன்பு தவிர்க்கவேண்டியவை!

சத்தமாக பாடிக்கொண்டே வேலையையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். ஒருவர் சுத்தம் செய்த இடத்தை இன்னொருவர் பார்வையிட்டு மதிப்பெண் போடுவது போன்ற சின்னச் சின்ன சுவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த வேலையை முடித்ததும், அனைவரும் சேர்ந்து மூளைக்கு வேலை தரும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். அது, சதுரங்கமாக இருக்கலாம் அல்லது வேறு விளையாட்டாக இருக்கலாம்.

கிச்சனில் உதவி

அன்றைய மதிய உணவை எல்லோரும் சேர்ந்து செய்வதுதான் டைம் டேபிளின் அடுத்த திட்டம். ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்துக்கொண்டு செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, ஒவ்வொருவரும் அவர்களின் அலுவலகத்தில், பள்ளியில் அவர்களுக்குப் பிடித்த பெஸ்ட் ஃப்ரெண்டு பற்றியும் அவரை எதனால் பிடிக்கும் என்பது பற்றியும் சொல்ல வேண்டும். அல்லது இதுவரை மற்றவர்களுக்குத் தெரியாத தன்னைப் பற்றிய சம்பவம் ஒன்றைச் சொல்ல வேண்டும் என முடிவுசெய்து, அது விஷயமாகப் பேசியவாறு சமையல் வேலையை முடியுங்கள்.

இந்த மாதிரி சமயத்தில், ஆண்-பெண் சமத்துவம், பல்வேறு வேலைகள், அதில் இருக்கும் சிரமங்கள், மனிதர்கள் பற்றியும் பிள்ளைகளுக்குப் புரியும் வகையில் எளிமையாகப் பேசி விவாதிக்கலாம்.

kids
kids
pixabay

ஓய்வாக ஒரு விஷயம்

உணவு வேலை முடிந்த பின்னர், நிச்சயம் மந்தமாக இருக்கும். இந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரம் வரை தூங்குவது அல்லது அமைதியாக உட்கார்ந்த இடத்தில் கலைத்திறனுடன் ஏதாவது செய்வது எனத் திட்டமிடுங்கள். ஓவியம் வரைவது, ஒரிகாமி என்று எதுவாகவும் இருக்கலாம். அதை முடிக்கும் வரை யாரும் பேசக் கூடாது. சத்தம் ஏதும் வரக்கூடாது என்று நிபந்தனை போடுங்கள்.

"பேச்சும் விவாதமும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மெளனமும் முக்கியம். நம்மால் எவ்வளவு நேரம் பேசாமல் கட்டுப்பாடாக இருக்க முடியும் எனப் பார்க்கலாம்'' என்பதை ஒரு சவாலாகவே எடுத்துச் செய்ய வையுங்கள்.

பின்னர், பிள்ளைகள் செய்த கலைத்திறனை, செயல்பாட்டை வைத்து ஜாலியாகப் பேசி, சிறிய பரிசு கொடுங்கள்.

சுற்றமும் செய்கையும்

அடுத்ததாக, வெளிநபர் யாருக்காவது ஏதாவது ஒரு வகையில் உதவுவது. இதற்காக, ஆதரவற்றோர் இல்லம்தான் செல்ல வேண்டும் என்றில்லை. உங்கள் பக்கத்து வீட்டிலேயே இருக்கும் தாத்தா, பாட்டியையோ, அருகில் இருக்கும் எளிய மனிதர்களையோ சந்தித்து, பிள்ளைகளுடன் சேர்ந்து உரையாடுங்கள். அவர்களுக்குத் தேவைப்படும் சிறிய உதவியைச் செய்யுங்கள். அதை ஒவ்வொருமுறையும் பொறுப்பேற்று செய்ய, பிள்ளைகள் மூலம் உறுதிகொடுங்கள். அவர்களுக்கு, குழந்தைகள் செய்த ஓவியம் போன்றவற்ரையும் பரிசாக அளித்து, அன்பையும் சக மனிதர்கள் மீதான அக்கறையையும் உணர்த்தலாம்.

பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாகக் கொண்டாட சூப்பர் ப்ளான்!

பின்னர், பூங்கா அல்லது கடற்கரை என்று அழைத்துச்சென்று, ஓடியாடி உற்சாகமாக விளையாடுங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் நண்பர்களைச் சேர்த்து, அவர்களின் விளையாட்டை அமர்ந்து ரசியுங்கள். முடிந்தால், அந்த விளையாட்டில் பங்குபெறுங்கள். அல்லது அவர்களின் நண்பர்களுடன் குறிப்பிட்ட நேரம் தனியாகச் செலவழித்துவிட்டு வர விரும்பினால், அப்படியே விடுங்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ப வீட்டிலும் வெளியிலும் கலகலப்பாக இணையும் வகையில், ஒரு விடுமுறை நாளை செலவிட்டுப்பாருங்கள்!